Friday, December 24, 2021

SOOR DAS

 ஸூர்தாஸ்  - நங்கநல்லூர்   J K  SIVAN 


1  ''இணையற்ற  ஒரு கிருஷ்ண பக்தர் 

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் நிறுவனம் துவங்கி நிகழ்ச்சிகள்  நடத்துவதன் மூலம் ஸ்ரீ ஸ்ரீமதி பார்வதி  &  ஸ்ரீ முத்துஸ்வாமி மோகன்  என்பவரது  குடும்பம் எனக்கு பரிச்சயமானது.   பழக்கமானது. அந்த குடும்பத்தினர் அனைவருமே   அற்புத ஞானி  ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் பக்தர்கள். அவர்களால் தான் ''ஒரு அற்புத ஞானி'' என்று அந்த   மஹானின்  சரித்திரத்தை புத்தமாக்கினேன்.   அந்த புத்தகம் வெளியிடும் விழாவில் ஸ்ரீ ''கிருஷ்ண குமார்''என்ற அந்த குடும்ப அன்பர் ஒரு அன்புக்கட்டளை எனக்கு இட்டார்.

''நீங்கள் பக்த சூர் தாஸ் பற்றி எழுதவேண்டும். அதை புத்தகமாக்க என்ன செலவானாலும் நான் தருகிறேன். இதோ பிடியுங்கள் அட்வான்ஸ் ரூபாய் இருபதாயிரம்.....''

ரூபாயை  முதலில் வாங்கி வைத்துக்  கொண்டால் போதுமா? எழுதவேண்டாமா? அதற்கு நிறைய படிக்க வேண்டாமா? ''கன்னாபின்னா''   விஷயமா இது?   ''கண்ணா,  என் மன்னா''   உன் சமாச்சாரம் ஆச்சே ? அன்றிரவே கிருஷ்ணன் கட்டளையாக  தலைமேற்கொண்டு  சிரத்தையாக அதை தொடங்க முடிவெடுத்தேன். மோகன் குடும்பத்தைத் தெரிந்த அளவு  ஸூரதாஸ்  எனக்கு பழக்கமில்லையே.  பேர் மட்டும்  கேள்விப்பட்ட பெயர். அவ்வளவு தான்.  அவரைத் தேட ஆரம்பித்தேன்.  ஆஹா  எப்பேர்ப்பட்ட  கிருஷ்ண பக்தர் என்பது புரிந்தது.  அப்படி  நான் சேகரித்த  எண்ண  முத்துக்கள் இனி தொடராக வரும்.

அது இருக்கட்டும்.  முதலில் உங்களில் யாருக்காவது ஸூர் தாஸை தெரியாமல் இருந்தால் இதோ அறிமுகம் செய்விக்கிறேன். தெரிந்து கொள்ளுங்கள் அந்த அபூர்வரை .

16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு விழியற்ற கிருஷ்ண பக்தர்  ஸூர்தாஸ். இது அவர் பெயர் அல்ல. ''ஸூர் '' என்றால் அவர் பேசிய  பாஷையில் குருடன் என்று அர்த்தமாம்.  அவர் ஒரு பிறவிக்குருடர்.  யாரும் அவரை லக்ஷியம் பண்ணாமல்  அவரை வீட்டை விட்டு அனுப்பி விட்டார்கள்.   ஆறு வயதில் உலகில் தள்ளப்பட்ட  கண்ணற்ற  ஸூர் தாஸ் மெதுவாக நடந்து ப்ரஜ் என்கிற உ.பி. தேசத்தில் வாழ்ந்தார். கண்ணன் பிறந்த மதுரா அருகில் உள்ளது இந்த ப்ரஜ் கிராமம்.

ஹிந்தியில் கவிதைகளை ப்ரஜ் பாஷா எனும் அந்த ஊர் ஹிந்தி பாஷையில் தான் பாடினார். நம்மூரில் கொங்கு தமிழ், திருநெல்வேலி தமிழ், மெட்ராஸ் டமில் என்று இருப்பதை போல. ஸூர் தாஸ் கிருஷ்ணனை பற்றி ப்ரஜ் பாஷை ஹிந்தியில் தான்  பாடினார்.    'எழுதினார்' என்று  படிப்பில்லாதவர்,  பார்வை யற்றவரைப் பற்றி எப்படி சொல்ல முடியும்.

ஸூர் தாஸ் பாடிய கண்ணன் பாடல்களை ஸூர் சாகர் ( கிருஷ்ண சமுத்திரம்) என்று சொல்வார்கள். எல்லாமே குழந்தை கண்ணனை பற்றியே என்றால் எவ்வளவு சுகம்!

வழக்கம் போலவே ஸூர்தாஸ் எப்போது  பிறந்தார் என்பதில் ஏதாவது  தகராறு இருப்பின் அது நமக்கு தேவையற்ற சமாச்சாரம்.  வேண்டவே வேண்டாம்.  ஸூர் தாஸ் தான் இன்னும் இருக்கிறாரே  ''ஸூர் சாகரி'' ல், அவரது அற்புத  கவிதைகளில்.    அது போதும். சரித்திரம் நமக்கு வேண்டாம். அது தப்பைக்கூட நிஜமாக்கிவிடும்.

''ராதா--  கிருஷ்ணா''    என்று இரு பெயர்களை நினைத்தாலே   போதும்.  பக்தி கடல் போல பொங்கி  கற்பனை சம்பவங்கள்  வெள்ளமாக  கவிதையாக  ஓடிவரும்  ஸூர் தாஸ் என்ற பிறவிக் குருடருக்கு.     இதயம் நிரம்பிய  அந்த அமுத பிரவாஹத்தை  மனம்  அனுபவிக்கும் போது   புறத்தில் கண் விழி இருந்தென்ன இல்லாதென்ன.?  

ஒரு லக்ஷத்துக்கும் மேலே கண்ணன் பாட்டுகள்.... யாரையா அதையெல்லாம் பாதுகாத்து அச்சடித்து புத்தகமாக இலவசமாக செய்யமுடியும். ? கிருஷ்ணார்ப்பணம் சேவா ட்ரஸ்ட்டா  இருந்தது அப்போது? எவ்வளவோ நமக்கு கிடைக்காமல் போய் விட்டதே!!! எவ்வளவு பெரிய துர்பாக்கியம். ஏதோ அவர் எழுதியதாக ஒரு 8000 பாடல்கள்   மிஞ்சி இருக்கிறது. தெற்கே தான் அபாக்யசாலிகள்  நிறைய  என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வடக்கேயுமா? நல்ல விஷயங் களை கோட்டை  விடுவதில் நாம்  மன்னர்கள்,  நாடெங்குமா?

ஸூர் தாஸ் வாழ்ந்த  காலத்தில்  நமது பாரதத்தை அப்போது முகலாய பேரரசன் அக்பர் ஆண்ட சமயம். அவன் ஸூர்  தாஸ் கவிதை ரசிகன்.

ஒருநாள்  காட்டு வழியாக கண்ணற்ற ஸூர் தாஸ் நடந்து செல்லும்போது  தரையோடு தரையாக இருந்த பெரிய கிணறு ஒன்றில் விழுந்து விட்டார். கண்ணன் காப்பாற்றினான்.   கிருஷ்ணனுக்கு தன்னைப் பாட  ஸூர்  தாஸ்  வேண்டாமா?    அதனால் அவர்  அவனுக்காகவும் நமக்காகவும் கிடைத்தார். இந்த கதை அப்புறம் சொல்கிறேன்.

வழக்கமாக  உட்கார்ந்து பாடும்  கிருஷ்ணன் கோவிலில் ஒருநாள்   ராதையின் கொலுசை பிடித்து இழுத்து வைத்துக்கொண்டு ''அவனை வரச்சொல்லு'' என்று சொல்லி அவள் கிருஷ்ணனை கூப்பிட்டுக்கொண்டு வர ....... இது ஒரு கதையும் இருக்கிறது சொல்கிறேன்.

சிறு வயதில் பெற்றோராலும் மற்றோராலும் புறக்கணிக்கப்பட்ட ஸூர் தாஸ் தனிமையில் தான் வளர்ந்தார். ஒரு நாள் அவர் உட்கார்ந்த திண்ணை அருகே தெருவில் சிலர் கிருஷ்ண பஜனை செய்து கொண்டு சென்றது காதில் விழுந்தது. '

'ஆஹா எனக்கும் கிருஷ்ணன் மேல் பாட  வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?  ஏன் முடியாது? ஒருநாள் என்னையும்  கிருஷ்ணன் பாட வைப்பான்'' என்ற நம்பிக்கையோடு  மெதுவாக அந்த கூட்டத்தோடு சேர்ந்து கொண்டார்.
கூட்டத்தில் ஒருவன் ''டேய் ஏன் எங்களை தொடர்ந்து வருகிறாய்?""

'கிருஷ்ணன் பாட்டு நீங்கள் பாடுவது பிடிக்கிறது. எனக்கும் உங்களை மாதிரி பாட ஆசையா இருக்கு''
''சரி வா''
இரவு வந்தது. சாப்பிட ஆகாரம் கொடுத்தார்கள். எதற்கு இந்த குருட்டு பையனை அழைத்து போகவேண்டும். அவனால் உபத்திரவம் தானே வந்து சேரும்'' 

இந்த முடிவை  ஸூர் தாஸிடம் சொல்லாமலேயே அந்த பக்தர் கூட்டம் மறுநாள் காலை   அவரை அங்கேயே  விட்டு விட்டு  சென்றது.  பகவானே  நீயே  துணை  என்று  ஸூர்  தாஸ்  அவன் மேல் நம்பிக்கையோடு அங்கேயே இருந்து  கண்ணன்  அருளால் கிடைத்ததை  உண்டு  அவன் நினைவாகவே  வாழ்ந்தார்.

தொடரும் 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...