Tuesday, December 21, 2021

SRI LALITHA SAHASRANAMAM

  ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் -  நங்கநல்லூர்  J K  SIVAN

ஸ்லோகங்கள் - 125-126   நாமங்கள் 622-636

இதுவரை அம்பாள் ஸ்ரீ லலிதையின் 621 நாமங்கள் அர்த்தத்தோடு அறிந்து கொண்டோம். இனி தொடர்வோம்.

எது எப்போது நடக்கவேண்டும் என்று தீர்மானிப்பது நான் அல்ல. நான் ஒரு இயந்திரம். என்னை அழகாக வேகமாக செலுத்துவது க்ரிஷ்ணனோ, அவனே உருவான அம்பாளோ, சிவனோ தான். சிவை இயக்குகிறாள் சிவன் இயங்குகிறேன்.

क्लींकारी केवला गुह्या कैवल्य-पददायिनी ।
त्रिपुरा त्रिजगद्वन्द्या त्रिमूर्तिस् त्रिदशेश्वरी ॥ १२५॥

Klinkari kevala Guhya kaivalya padadaeini
Tripura trijagadvandya  trimurti stridasheshvari – 125

க்லீம்காரீ, கேவலா,குஹ்யா,கைவல்ய பததாயினீ |
த்ரிபுரா, த்ரிஜகத்வம்த்யா,த்ரிமூர்தி, ஸ்த்ரிதஶேஶ்வரீ || 125 ||

त्र्यक्षरी दिव्य-गन्धाढ्या  सिन्दूर-तिलकाञ्चिता ।
उमा शैलेन्द्रतनया गौरी गन्धर्व-सेविता ॥ १२६॥

Tryakshari divyagandhadya sindura tilakanchita Uma
shailendra tanaya gaori  gandharava sevita -126

த்ரை யாக்ஷரி திவ்யா கந்தாத்யா சிந்தூர திலகாஞ்சித்த உமா
ஷைலேந்திர தனயா கௌரி கந்தர்வ சேவிதா

லலிதா ஸஹஸ்ரநாமம் - (622-636) அர்த்தம்

*622* क्लींकारी  க்ளீம்காரீ,
அம்பாள் ஸ்ரீ லலிதை, காமாக்ஷி. அவளது காம பீஜ அக்ஷர மந்த்ரம் க்ளீம் .அதை மன்மத காம பீஜம் என்று சொல்வதும் உண்டு. க : காமதேவன், ள : இந்திரன் ஈ : திருப்தி, இதன் ஒட்டுமொத்தம் க்ளீம். ஒருவருடைய கர்ம பலனாக விளையும் இன்ப துன்ப காரணம் தான் பிந்து. சக்திக்கு சிவன் அன்போடு உபதேசம் செய்த மந்திரம். திருமகளுக்கு உகந்த மந்திரம் இது. க்ளீம்காரம் என்பதே சிவன் ஸ்வரூபம். க: சிவன் லா: சக்தி. இதையே காமகலா என்று சொல்வது. சிவசக்தி இணைவது தான் க்ளீம் .

*623* 
केवला   கேவலா:
முழுமையானது. குணங்களை கடந்தது. நிர்குண ப்ரம்மம். சிவசூத்ரம் (III.34 இன்ப துன்பம் கடந்த தனித்வ நிலை என்கிறது.

*624* गुह्या :  குஹ்யா
ரஹஸ்யமான,  இருண்ட  குகையில் உள்ள,  என்று பொருள்படுகிறது. ரூபம் நாமம் உருவம் இல்லாதது. தீக்ஷை பெறாதவர்களுக்கு நவாவரண பூஜை செய்ய உரிமை இல்லை . அவளை, அவளது நாமங்கள் மூலம் அறிந்தவர்கள் தக்க குருவின் மூலம் செய்வது அவசியம்.   அமானுஷ்யம் பெற உதவும் மந்திரம். அம்பாள் ஹ்ருதய குகையில் வாசம் செய்யும் ஆத்ம சக்தி. ஐம்புலன்களையும் அடக்கியாளும் பரா சக்தி.

*625*  
कैवल्य-पददायिनी ।  கைவல்ய பததாயினீ --
ஒவ்வொரு ஜீவனின் கடைசி மரணாந்த காலம் தான் கைவல்யம். அந்த நேரம் அவனோடு, அவளோடு, எந்த உறவும், நட்பும் இல்லை. அவன் தனியாக செல்கிறான். அவனது செயல்களும் எண்ணங்களும் தான் அவனை கடத்திச் செல்லும். ஆன்மா அந்த உடலை விட்டு எந்த  விநாடியும் பிரியும். இது தொடர்ந்து கொண்டே போய் ஆன்மா பிரம்மத்தை, பரமாத்மா உடன் சேரும்  வரை நடப்பது. ஆகவே கைவல்யத்தை முக்தி என்றும் சொல்லலாமே. இந்த பிறவாமையை தருபவள் ஸ்ரீ லலிதாம்பாள் என்கிறது இந்த நாமம். கைவல்யம் என்பது நான்கு பதங்களை (சாலோக்ய, சாரூப, சாமீப, சாயுஜ்ய பதங்கள் )தாண்டியது.

*626* 
त्रिपुरा   த்ரிபுரா -
திரிபுரா ரஹஸ்யம் என்று ஒரு வேதாந்த நூல் உண்டு. பார்கவ ரிஷியும் தத்தாத்ரேயர் ரிஷியும் சம்பாஷிப்பது போல் அது புனையப்பட்டுள்ளது. மூன்று பிரிவுகளாக காண்கிறது.   தேவி மஹாத்ம்யம். வழிபாட்டு முறை, சடங்குகள், அவளைப்பற்றிய முழு ஞானம். ஸ்ரீ லலிதையே ப்ரம்மா, விஷ்ணு, ருத்ர மயம் . இச்சா , ஞான, க்ரியா சக்தி ஸ்வரூபம்.

*627* 
 त्रिजगद्वन्द्या    த்ரிஜகத்வம்த்யா-
மூன்று லோகங்களிலும் தொழப்படுபவள் ஸ்ரீ லலிதாம்பாள். பூர் , புவர் , சுவர் லோகங்கள். காயத்ரி மந்த்ரம் இந்த மூன்று லோகங்களையும் ஒன்று சேர்த்து இணைப்பது. உணர்வின் மூன்று நிலைகளை இது குறிக்கும்.

*628* 
 त्रिमूर्तिस्  த்ரிமூர்த்தி --
ப்ரம்மா, விஷ்ணு , சிவன் - அம்பாள் இந்த மூன்று சக்தியின் ஒன்றுபட்ட ஸ்வரூபம். ப்ரம்மா விஷ்ணு சிவன் மூவரும் தங்கள் சக்திகளை  பெரிதாக   எண்ணிக்  கொண்டி ருந்தபோது எதிரே ஒரு சிறுமி, பாலை  காணப்படுகிறாள்.   நீ யார் என்று மூவரும் வினவ, நான் தான் நீங்கள் மூன்று பேருமே என்கிறாள். என் பெயர் சக்தி. திரிபுரா என்கிறாள். அதனால் அவளுக்கு மூன்று நிறம், வெள்ளை, கருப்பு, சிவப்பு. வெள்ளை ப்ரம்மாவை, கருப்பு விஷ்ணுவை, சிவப்பு  பரமேஸ்வன்.   அதனால் தான் கிருஷ்ணன் கருப்பு,   லலிதா  மூன்று குணங்களையும் கடந்தவள் .

*629* 
त्रिदशेश्वरी     ஸ்த்ரிதஶேஶ்வரி -
அம்பாள் ஒருவளே சகல தெய்வங்களுக்கும் ஈஸ்வரி. மனித வாழ்வின் மூன்று நான்கு முக்கிய கட்டங்கள். பால்யம், இளமை, ,நடு வயது, முதுமை. தெய்வங்களுக்கு ஒன்றே தான் நிலை. எப்போதும் யவ்வனம். த்ரி தசா என்றால் 3 x 10+3 : 33 .அதாவது 12ஆதித்யர்கள், 8 வசுக்கள்,11 ருத்ரர்கள், 2 அஸ்வினிகள். இவர்கள் அனைவரும் அம்பாளின் அடக்கம். இந்த 33 தெய்வங்களுக்கும் ஒரு கோடி உதவி தேவதைகள். அதனால் தான் முப்பத்து முக்கோடி தெய்வங்கள் என்று சொல்வது.

*630* 
त्र्यक्षरी  த்ரையக்ஷரீ -
அம்பாள் மூன்று பீஜாக்ஷரங்களால் உபாசிக்கப்படுபவள். ப்ரஹாதாரண்யக உபநிஷத் ஹரிதயம் ஹ்ரி த ய என்ற மூன்று அக்ஷரங்களை கொண்டது என்கிறது. சத்தியமும் அவ்வாறே ச த் ய என்ற ப்ரம்ம த்தை குறிக்கும் அக்ஷரங்களை கொண்டது.

*631*  
दिव्य-गन्धाढ्या     திவ்யகந்தாட்யா -
அம்பாள் தெய்வீக சுகந்தத்தை பரப்புபவள். இவை எங்கிருந்து உருவாகிறது? முதன்மையாக அவளிடமிருந்து உண்டாகும் சுகந்தம். இரண்டாவது அவளை அணுகி இருக்கும் உப தேவதைகளிடமிருந்து. மூன்றாவது பக்தர்கள் சமர்ப்பிக்கும் வாசனாதி த்ரவியங்களிலிருந்து.

*632* 
सिन्दूर-तिलकाञ्चिता ।  ஸிந்தூர திலகாஞ்சிதா -
அவள் பூரண நிலவு போன்ற வதனம் எவ்வளவு ரம்யமாக இருக்கிறது காரணம். நெற்றியில் வகிடு நடுவே அவள் அணிந்துள்ள சிந்தூர திலகம். அவளது கம்பீரத்திற்கு ஏற்றவாறு அவளருகில் பெண் யானைகள்.

*633* 
उमा   உமா -
அம்பாளின் ஒரு அற்புதமான நாமம் உமா. மகேஸ்வரனின் நாயகி. உமா மஹேஸ்வரி. ஹிமவான் புத்ரி.

சிவசூத்ரம் ''இச்சா சக்திர் உமா குமாரி '' என்று போற்றுகிறது. சிவனின் பெருமையும் அழகும் உமா தானே. UMA என்பதே AUM எனும் ஓம் எனும் பிரணவ மந்த்ரம். லிங்க புராணம் உமாவை லோக மாதா என்கிறது. கேனோபநிஷத் ஸ்லோகம் (III.12) bahuśobhamānām umāṁ haimavatīṁ என்கிறது. அதாவது. ஏராளமான கண்ணைப்பறிக்கும் ஆபரணங்களை அணிந்தவள் உமா. அழகுக்கே  அழகா?

*634* 
शैलेन्द्रतनया   ஶைலேந்த்ர தனயா --
ஹிமகிரி தனயே ஹேமலதே ... ஹிமவான் புத்ரி. பரிபூர்ண சைதன்ய ஸ்வரூபி.

*635* 
गौरी    கௌரீ, --
தங்க நிறத்தவள். பொன்மேனி கொண்டவள் .ஸ்ரீ அம்பாள். வெள்ளையும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைக்கும் அற்புத நிறம். ஸ்ரீ லலிதாம்பிகை பிறந்த போது அவள் நிறம் ஒரு அழகிய வெண் சங்கு, வெண்ணிற மல்லிகை, அதோடு பூரண சந்திரன் எல்லாம் ஒன்று சேர்ந்தது போல் இருந்ததாம். எல்லாமே புனித வஸ்துக்கள் தானே. வருண தேவனின் மனைவி பெயரும் கௌரி. ஒரு பத்து வயது பெண்ணை கௌரி என்று சாஸ்திரங்கள் சொல்லும்.

*636* 
 गन्धर्व-सेविता  கந்தர்வ ஸேவிதா -
லிங்க புராணத்தில் விண்ணில் வாழும் பன்னிரண்டு கந்தர்வர்களை பட்டியலிடுகிறது. அற்புதமாக சங்கீதம் பொழிவார்கள். கந்தர்வ கானம் என்கிறோமே அதைத் தான். அவர்கள் பெயர் என்ன தெரியுமா? நாரதர், தும்புரு, ஹாஹா, ஹுஹு, விஸ்வாவஸு, உக்கிரசேனன், சுருகி , பரவாசு, சித்திரசேனன், ஊர்ணாயு, த்ருத ராஷ்ட்ரன் (கண்ணில்லாத , துரியோதனன் அப்பா  இந்த ஆசாமி  இல்லை ), சூர்யா வர்ச்சஸ் .

 சக்தி பீடம்: ப்ரத்யும்ன ஸ்ரீ ஸ்ருங்களா தேவி

இது குஜராத்தில் உள்ள ஒரு சக்தி பீடம். எளிதில் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருக்கிறது என்கிறார்கள். ப்ரபாஸ க்ஷேத்திரத்தில் உள்ளது, அது தான் ப்ரபாஸ பட்டணம். என்றும் சோம்நாத் சிவாலயம் அருகில் தான் எங்கேயோ எனும்போது எங்கேயோவைத் தேடி எங்கே, எப்படி போவது? வெராவல் நகரத்திலிருந்து 5 கி.மீ. ஜூனாகாத்திலிருந்து 79 கிமீ தூரம் தான் என்கிறார்கள். ஒரு இஸ்லாமிய புண்யாத்மா வந்தானே கஜினி முகமது,  அவன் அழித்த கோவில்களில் இதுவும்  ஒன்றாம். ஒரு சிலர்  வழிகேட்டால்,  தப்பாக வழி காட்டுவார்கள்.  
அது போல் அடடா ஸ்ருங்களா தேவி கோவில் கல்கத்தா அருகே அல்லவோ இருக்கிறது எனும்போது இந்தியாவின் மேற்கே இருந்து கிழக்கே போகவேண்டும். 

ஆபிரகாம்  லிங்கனை தெரியுமா?
ஆப்ரஹாம் லிங்கனா? நன்றாகவே தெரியுமே. தினமும் காலை எங்கள் தெருவில் இடியாப்பம் விற்றுக் கொண்டு போவார் அவரைத்தான்  சொல்கிறீர்கள்? என்பது போல் இருக்கிறது. இடியாப்பக்காரருக்கும்  ஆபிரகாம் லிங்கன் என்று தான் பெயர்.

ரெண்டுக்கும் பொதுவாக ஜம்முவிலிருந்து 211 கி.மீ. தூரத்தில் இருக்கும் உதம்பூர் அருகே ஜிந்திரா எனும் கிராமத்தில் இருக்கும் நாபா தேவி கோவில் தான் அந்த சக்தி பீடம் என்கிறார்கள். சிவன் தாக்ஷாயணியின் உடலை சுமந்து தாண்டவமாடும்போது அவள் உடல் சிதறி அவளது தொப்புள் (நாபி) விழுந்த இடம் தான் நாபா.தேவி ஆலயம் உள்ள இடம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...