Thursday, December 16, 2021

BEST PRIZE

 நங்கநல்லூர் J.K. SIVAN


சிறந்த பரிசு

அதற்கு பண்டீரவனம் என்று பெயர். மரங்களின் கிளைகள் குடை பிடித்த மாதிரி வெயிலே தெரியாது. சில்லென்ற காற்று யமுனை நதியிலிருந்து வரும். மரங்கள் நறுமண மலர்கள் தருபவை. குளிர்ந்த காற்றில் அற்புத நறுமணம் கமழ்ந்து கிறங்க வைக்கும். இதற்கு பின்னணி சங்கீதம் பறவைகளின் இன்னிசை குரல்கள். மயில்களின் நடனம்.

யமுனை நதிக்கரையில் எத்தனையோ எண்ணமுடியாத மரங்கள். யார் இவ்வளவையும் நட்டது. ஓடிப்பிடிக்க இடம் விட்டு கிருஷ்ணாவும் நண்பர்களும் கோபியரும் சுற்றி சுற்றி வர சௌகரியமான இடம். பிருந்தாவனத்தில் இது வைகுண்டம். நந்தகுமாரனின் பிருந்தாவனம். எப்போது ராதா வருவாள், என்ன செய்வாள் என்று கிருஷ்ணனுக்கு தெரியாது. ஏன் ராதைக்கே தெரியாது.
வழக்கம்போலவே ஆநிரைகளுடன் கிளம்பிய கிருஷ்ணன் பசுக்களை யமுனையில் அதிக ஆழமில்லாத இடத்தில் அவற்றை குளிக்க வைத்தான். கன்றுக் குட்டிகளுடன் விளையாடிக்கொண்டே, அவற்றை குளிப்பாட்ட சுகமாக அரைத் தூக்கத்தில் அவை அம்மா என்று குரல் கொடுக்கும்.
கிருஷ்ணனைச் சுற்றி கன்றுக்குட்டிகள் வெல்லத்தை ஈ மொய்ப்பது போல் வளைய வரும். . வாயில் பால் நுரை கலையாத அம்மாவிடம் பால் குடித்துக் கொண்டிருந்த குட்டிகள். அவன் அழகாக அவற்றை தேய்த்து குளிப்பாட்ட காத்திருந்தன. நான் முதலில் நீ முதலில் என்று அவற்றுக்குள் போட்டி வேறு.

தூரத்தில் இருந்தே அம்மா பசுக்களின் கண்கள் இந்த குட்டிகள் மேலே தான். இருந்தும் அதில் ஒரு நிறைவு. ''என்னைக்காட்டிலும் என் குழந்தையை இந்த கிருஷ்ணன் நன்றாகவே பாதுகாப்பவன் '' என்ற சந்தோஷம்.
ஒரு பசுவின் கண்ணில் இந்த உணர்ச்சியை கண்ட இன்னொரு பசு கண்ணாலேயே பதில் சொல்லியது.

''என்னடி லட்சுமி இப்படி சொல்றே. உன்னைக்காட்டிலும் ''பாதுகாப்பவன்'' என்கிறாயே. உன் குட்டியை கேள் என் குட்டியை போலவே அதுவும் பதில் சொல்லும் ''
''என்ன சொல்லும் ?''
''எனக்கு நீ அம்மா வேண்டாம். கிருஷ்ணன் தான் என் அம்மா '' என்று சொல்லும்.
'' ம்ம்.. ஒரு விதத்தில் அதுவும் நியாயம் தானே '' என்று முதல் பசு தலையாட்டும்.

''கலீர் கலீர்'' என்று கை வளைகள், கால் தண்டை சிலம்பு மட்டும் அல்ல, சிரிப்பும் அங்கே ஒலிக்கும். ஒரே சந்தோஷமயமாக கோபியர்கள் கண்ணனை சூழ்ந்து கொண்டு பேசுவார்கள், ஆடுவார்கள்,பாடுவார்கள். வேடிக்கையாக இருக்கும் இதெல்லாம் பார்க்க அந்த பசுக்களுக்கு.

ஒவ்வொருவரும் ஏதாவது தின் பண்டம் வீட்டிலிருந்து கிருஷ்ணனுக்கென்று பிரத்தியேகமாக பண்ணிக் கொண்டு வந்து கொடுப்பார்கள்.

''வேண்டாம் போதும் போதும் '' என்று அகன் சொன்னாலும் விடமாட்டார்கள். சாப்பிடாவிட்டால் ஊட்டி விட்டுவிட்டு தான் நகர்வார்கள்.''
அன்றும் அது போலவே. ராதை ஒரு சிறு பொட்டலம் கொண்டுவந்தாள் .
''என்ன ராதா இது?''
''ஒன்றும் கேட்காதே பேசாமல் வாயில் போட்டு விழுங்கு''
கண்ணன் பொட்டலத்தை பிரித்தான்
சுக்கு வெல்லம். '' என்ன ராதா இது ஒரு பக்ஷணமா?''
''ஆமாம் உனக்கு இது தான் அவசியம் தேவை. கண்டதை எல்லாம் உன்னை சாப்பிட வைக்கிறார்கள் . ஜீரணம் ஆக உனக்கு இது தான் தேவை. உன் உடல் நன்றாக இருக்க வேண்டுமே என்று எனக்கு கவலை. அதனால் தான் இது உனக்கு அவசியம்.''
''சரி'' என்று அதை விழுங்கினான் சர்வேஸ்வரன்.
அன்று விளையாட்டில் ஒரு போட்டி.
''கண்ணனுக்கு நாளைக்கு எல்லோரும் ஒரு பரிசு கொண்டு வந்து கொடுக்க வேண்டும். எது சிறந்தது என்று அவனே தேர்ந்தெடுத்து சொல்லட்டும்.'' இவ்வாறு கோபியர்கள் எல்லோரும் தீர்மானித்தார்கள். தீர்மானம் முடிவாகியது.

எல்லா கோபியர்களும் மறுநாள் சின்னதும் பெரிதுமாக டப்பாக்கள் , பொட்டலங்கள், ஜாடிகள் பைகள் என்று எதெல்லாமோ பரிசுகள், பொருள்கள் நிரப்பி வழக்கமான மது வனத்தில் காத்திருந்தார்கள்.

''கண்ணனைக்கண்டாயோ மல்லிக்கொடியே''. என்று ஒருத்தி பாடினாள்.

ஏன் கிருஷ்ணன் இன்னும் வரவில்லை. நேரம் ஓடிக்கொண்டிருந்தது. பசுக்கள் வந்து விட்டன. கோ தூளி காற்றில் புகையிட்டது. மஞ்சள் வஸ்திரம் தூரத்தில் தெரிந்தது. கண்ணன் வந்துவிட்டான்.

''என்ன இதெல்லாம்? என்று கேட்டான் அந்த பொருள்களை பார்த்துவிட்டு கிருஷ்ணன்.
''கண்ணா உனக்கு எங்கள் பரிசுகள்''
''எதற்கு ?
''எந்த பரிசு சிறந்தது என்று நீ பார்த்து சொல்லவேண்டும். அதற்காக ''
''ஓ'' என்றான் கண்ணன்.
ராதை வரவில்லை. கண்ணன் குழல் ஊதினான். மகுடி கேட்ட நாகம் போல் எங்கிருந்தோ வந்து அங்கே ராதை தோன்றினாள்.
அவள் கையில் ஒரு மூடிய மண் ஜாடி. அதை அவனுக்கு பிடித்த நீல துணியால், தனது புடவையை கிழித்த ஒரு துண்டால், சுற்றி கொண்டு வந்து அவன் கையில் கொடுத்தாள் .
கண்ணன் கோபியர்கள் கொண்டு வந்ததெல்லாம் ஒவ்வொரு பரிசாக எடுத்து பார்த்தான். ''நன்றாக இருக்கிறது'' என்று மட்டுமே எல்லாவற்றிற்கும் சொன்னான்.
ராதை கொடுத்த மூட்டையை பிரித்தான். நீலத்துணி போர்த்திய சிறிய மண் ஜாடி முடியோடு.. திறந்தான். அதில்....
.... ஒன்றுமே இல்லை.......
எல்லோரும் சிரித்தார்கள். ராதைக்கு வெட்கமாக போய்விட்டது. மரத்தின் பின்னே ஒளிந்து கொண்டாள் .
கண்ணன் சிரித்துக் கொண்டே பேசினான்.''ஆஹா இது தான் மிகச் சிறந்த பரிசு, எனக்கு ரொம்ப பிடித்தது''என்று அந்த ஜாடிக்குள் முகம் கவிழ்த்து நிறைய முத்தமிட்டான்..''

''கிருஷ்ணா போதும் உன் விளையாட்டு... எதற்கு இந்த காலி மண் ஜாடியை சிறந்த பரிசு என்று சொல்லி எங்களை பைத்தியமாக்குகிறாய். உனக்கு கிறுக்கு பிடித்து விட்டதா ?''''

''யார் சொன்னது இது காலி என்று... அதில் ராதா எனக்கு பிடித்ததை நிறைய நிரப்பி மூடி போட்டு அனுப்பியது உங்களுக்கு தெரியவில்லை. நான் என்ன செய்யட்டும்'' என்றான் சிரித்துக்கொண்டே கிருஷ்ணன்.

ஒன்றும் புரியாமல் எல்லோரும் மயங்கி நிற்க ஒருத்தி சொன்னாள் :

''ஆமாம். இன்று காலை ராதா வீட்டுக்கு போனபோது நீ என்ன பரிசு கொடுக்கப்போகிறாய் என்று கேட்டேன் . இது தான் என்னிடம் இருக்கிறது என்று கையில் வைத்திருந்த இந்த ஜாடிக்குள் நிறைய முத்தமிட்டதை பார்த்து சிரித்தேன்'' . அது எப்படி கிருஷ்ணனுக்கு தெரிந்தது என்று தான் ஆச்சர்யமாக இருக்கிறது '' என்றாள் அந்த பெண்.
''நான் அந்த ஜாடிக்குள் இருந்த பரிசுக்கு தக்க பதில் மரியாதை பரிசு (return gift) கொடுத்தேன் '' என்று சிரித்தான் கிருஷ்ணன்,
அனைவரும் அசந்து நிற்க ராதை ஓடிவந்து கண்ணனை அணைத்துக் கொண்டாள்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...