Sunday, December 19, 2021

SIVA PANCHAKSHARA SLOKAM


 ஆதி சங்கரர்--  நங்கநல்லூர் J K  SIVAN 

               
1 சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்ரம்

ஐந்தே  ஐந்து ஸ்லோகங்கள்  தான்  என்றாலும்  எனக்கு  முதலில்  இந்த  ஐந்து ஸ்லோகங்களில்  ஒரு பிடிப்பு உண்டானது MSS  பாடிய  ராக  மாலிகையைக்  கேட்ட பிறகு.  அதை மீண்டும்  மீண்டும்  எத்தனை தடவை கேட்டிருக்கிறேன் என்று கணக்கில்லை.  

நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம் தான்  ஸமஸ்க்ரிதத்தில் பஞ்சாக்ஷரம்.  '' ந ம சி வா  ய''   எனும்  ஒவ்வொரு எழுததுக்கும்  லக்ஷம் பக்கங்கள் அர்த்தம் எழுதுபவர்கள் இருக்கிறார்கள்.   ஒரே  ஒரு முறை  மனம் திறந்து அதை கண்மூடி ரமித்து  உச்சரித்தால் கண்ணில் நீர் பெருகும்.  பக்தி பிரவாகம் அது.  

என் தந்தை  J K ஐயர் இதை தினமும் பாராயணம் பண்ணி சின்ன வயதில்  நான்  கேட்க  நேர்ந்ததால்  தான் ஒரு ஈர்ப்பு உண்டாயிற்று.  குழந்தைகள் பெற்றோரிடமிருந்து தான்  நல்லது கெட்டது  எல்லாமே கற்றுக் கொள்கிறார்கள். அவசியம் உங்கள் குழந்தைகளுக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுங்கள்.

அர்த்தம்  புரியாமல், தெரியாமல் இசையில் மயங்கிய காலம் அது. அப்புறம்   MSS பாடியதை கேட்டதும்  இன்னும் அதிகம்  ஆர்வம், இனம் புரியாத ஒரு பக்தி என்னுள்ளே  ஏற்பட்டது.  அடிக்கடி இதை கேட்கவேண்டும், மனப்பாடம் செய்ய வேண்டும் என்று  ஒரு  அதிர்வு ஏற்படும்.  அதே போல் கோவில்களில் சென்று பாட வேண்டும் என்றும் தோன்றும்.  அப்படியே செய்தேன்.   அப்புறம் தான் பசு மாடு நிழலில்  அமர்ந்து விச்ராந்தியாக  அசை போட்டது. இது வரை புரியாதது தெளிவாக புரிந்தது.  ஆனந்தம் தந்தது.

அடேயப்பா,   எத்தனை கைகள் இருந்தாலும் போதாது. ஆதி சங்கரரை வணங்க. 32 வயதில் இத்தனை பக்தி ஸ்லோகங்களா!!. கடவுளே மனிதனாக தோன்றினதால் தான் இது சாத்தியமோ?  நம்மால்   ''மனிதனென்பவன் தெய்வமாகலாம்''   பாட்டு மட்டும் தான் பாட முடிகிறது. அப்படி  ஆவதற்கு  பல  ஜென்மங்கள் தேவை போல் தோன்றுகிறது.''

 நமது தேகம் ஐந்து பூதங்களால் உண்டானது. இந்த பஞ்சாக்ஷர மந்திரத்தின் ஐந்து அக்ஷரங்களும் அதை நினைவு படுத்துவன . ந:  மண் எனும்  நிலம்.   ம: நீர்.  சி:  அக்னி;   வா:  வாயு:    ய:  ஆகாசம். இந்த ஐந்தும் தான் மஹாதேவன்.

ஓம்  நமசிவாய  என்பது பஞ்சாக்ஷரம் எனும் ஐந்தெழுத்து மந்திரம். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு ஸ்லோகம் பாடுகிறார் சங்கரர்.

 முதலில்   ந:  

नागेन्द्रहाराय त्रिलोचनायभस्माङ्गरागाय महेश्वराय ।
नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै न_काराय नमः शिवाय ॥१॥

நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய  பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை நகாராய நமசிவாய

என்னப்பா  பரமேஸ்வரா, உன்னுடைய  விசித்திர ஆபரணங்களை, விஷம் கக்கும்  நாகங்களை, எவனும் கொள்ளை  அடிக்கமாட்டான் . அறுத்துக்கொண்டு ஓடமாட்டான்.  அருகில் வந்தால் நாலு  பேருடன் தான் வரவேண்டும். அப்போது தான் அவனை தூக்கிச் செல்லமுடியும்.  விஷம் கக்கும் நாகங்களை ஆபரணமாக பூண்டவனே, கழுத்தில் மாலை, தலையில்  ப்ரோச்.  கையில் வாகு வளையம், கங்கணம், பூணலாக கூட மெல்லிய பாம்பு.  முக்கண்ணா , மூன்றாவதை நீ திறந்தால்  அவ்வளவு தான்.  அதன் பார்வை பட்ட அனைத்தும் சாம்பல்..  உன் பவழம் போல் மேனியில் பால் வெண்ணீறு.  ஆதி அந்தமில்லா அநாதி நாதா,    பரிசுத்தத்தின் உருவமே ,  சாஸ்வதனே,  நான்கு திசைகள்  தான் உன் ஆடைகளா? சிவனே, பரமேஸ்வரனே,  ந என்ற எழுத்தில் மிளிர்பவனே. உன்னை வணங்குகிறேன்.


मन्दाकिनीसलिलचन्दनचर्चिताय   नन्दीश्वरप्रमथनाथमहेश्वराय ।
मन्दारपुष्पबहुपुष्पसुपूजिताय  तस्मै म_काराय नमः शिवाय ॥२॥

மந்தாகினி சலில சந்தன சர்சிதாய  நந்தீச்வர பிரமதநாத மகேஸ்வராய
மந்தார முக்ய பஹுபுஷ்ப சுபூஜிதாய தஸ்மை மகாராய நமசிவாய

வடக்கே ஓடும்  புண்ய நதிகளில் ஒன்று மந்தாகினி. அதன் நீரால்  சிவனுக்கு  சதா  அபிஷேகம் நடக்கிறது.  வாசமிகு சந்தனம் ஏன் உடலெங்கும் பூசிக்கொள்கிறான்.  அவன் அக்னி. எப்போதும்  உஷ்ணம். உள்ளே  ஹாலஹால  விஷம்  பாய்லரில்   வெந்நீர் போல் கொதிக்கிறது.   ஆத்ம ஞானாக்னியின் உஷ்ணம். ருத்ரன் என்பதால் எப்போதும் ரௌத்ரம்.  ஆகவே  அவனை குளிர்ச்சிப்   படுத்த  தலையின் மேல் பனி உருகிய  கங்கை, சில்லென்று வாழைத்தண்டு போல்  நாகம், உஷ்ணத்தை குறைக்கும் ருத்ராக்ஷம்.  குளிர்ந்த பால் போல் வெள்ளையான  சந்திரன், உஷ்ணத்தை உறியும்  விபூதி. சாம்பல். குளிர்ச்சி தரும் மூலிகையான  வில்வ தளங்கள்.  குளிர்ந்த பனி மலை வாசம், உடலெங்கும் சந்தனம். சதா அபிஷேகம்.  சிவன் நந்தி வாஹனன். பைசாசங்களும் சிவகணங்களும் அவன் உதவியாளர்கள். ஸம்ஹார  மூர்த்தி அல்லவா?   மந்தார புஷ்பம், தும்பை கொன்றை    பாரிஜாதம்  போன்ற மலர்களால்  வில்வ இதழ்களால்  பூஜிக்கும்போது மகிழ்ந்து அருள்பவன்.

பரமேஸ்வரா  பஞ்சாக்ஷரத்தில் ரெண்டாம் அக்ஷரம்  '' ம''  எனும்    எழுத்தால் உன்னை வணங்குகிறேன் பரமேஸ்வரா அருள் புரிவாய்.

शिवाय गौरीवदनाब्जवृन्द_  सूर्याय दक्षाध्वरनाशकाय ।
श्रीनीलकण्ठाय वृषध्वजाय तस्मै शि_काराय नमः शिवाय ॥३॥

சிவாய கௌரி வதநாப்ஜ வ்ருந்த சூர்யாய தக்ஷாத்வர நாசகாய
ஸ்ரீ நீலகண்டாய வ்ருஷத்வஜாய தஸ்மை சிகாராய நமசிவாய

ஆதி சிவன்  மங்களகரன் .  கௌரி எனும்  தாமரை முகத்தாளின்  வதனத்தை மலரச்  செய்யும் சூர்யன்.   சிவை இல்லாவிட்டால் சிவன் இல்லை.  காலாக்னி போல் கோபம் கொண்டு தக்ஷ பிரஜாபதியின்  யாகத்தை கலைத்து அவனைக்  கொன்றவன்.   திருப்பாற்கடலில்  அமிர்தம் வரும் முன்பு  வாசுகியால் வெளியேற்றப்பட்ட  ஹாலஹால விஷம் நிரம்பிவிட்டது. அதை என்ன செய்வது என்று தேவர்கள் கலங்கியபோது ஒரு மடக்கில் அப்படியே விழுங்கியதால்  நீல கண்டன் என பெயர் பெற்றவன்.

ரிஷபாரூடா .  பரமசிவா,   உன்னை  பஞ்சாக்ஷர மூன்றாம்  அக்ஷரமான  ''சி''  என்ற  எழுத்தை நினைக்கும்போது தரிசிக்கிறேன். வணங்குகிறேன்.
 
4. वशिष्ठकुम्भोद्भवगौतमार्य_ मूनीन्द्रदेवार्चितशेखराय ।
चन्द्रार्कवैश्वानरलोचनाय तस्मै व_काराय नमः शिवाय ॥४॥

வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய முனீந்தர தேவார்சித்த சேகராய
சந்த்ரார்க்க வைச்வானர லோச்சனாய தஸ்மை வகாராய நமசிவாய

 தேவலோக ரிஷிகளில் முதன்மையான  வசிஷ்டர், கும்பமுனி எனும்  அகஸ்தியர், கௌதமர்  போன்ற மஹரிஷிகள்  சூழ்ந்து கொண்டு  உன்னை வணங்கி  பூஜிக்கிறார்கள்.  அவர்களுக்குப்  பின் எண்ணற்ற  தேவர்கள்  இதர ரிஷிகள், முனிகள், கந்தரவர்கள், கின்னரர்கள், போன்றோர்  துதிக்க, நடுநாயகமாக  பிறைச்சந்திரனை  தலையில் அழகாக கொண்ட பிறை சூடி,   சூர்ய சந்திரர்களை கண்களாக கொண்டவனே,  த்ரிநேத்ரனே ,   பரமேஸ்வரா, உன்னை   பஞ்சாக்ஷரத்தின் நாலாவது அக்ஷரமான  ''வ '  எனும் எழுத்தாக  வணங்குகிறேன்.

यज्ञस्वरूपाय {यक्षस्वरूपाय} जटाधराय पिनाकहस्ताय सनातनाय ।
दिव्याय देवाय दिगम्बराय तस्मै य_काराय नमः शिवाय ॥५॥

யஞ ஸ்வரூபாய ஜடாதராய பினாகஹஸ்தாய சனாதனாய
திவ்யாய தேவாய திகம்பராய..தஸ்மை யகாராய நமசிவாய  

பரமேஸ்வரன்  யாக யஞங்களின்  ஸ்வரூபன்.  பினாகம் எனப்படும் திரிசூல தாரி. சாஸ்வதன் . ஆதி முதல்வன். நாற் திசையும் ஆடையானவன்.  அதாவது எங்கும் காணப்படுபவன். பரமேஸ்வர  ஐந்தாவது பஞ்சக்ஷ்ரமான  ''ய'' எனும் எழுத்தானவனே. உன்னை சாஷ்டாங்கமாக வணங்குகிறேன்.

पञ्चाक्षरमिदं पुण्यं यः पठेच्छिवसंनिधौ । शिवलोकमावाप्नोति शिवेन सह मोदते ॥६॥
 பஞ்சாக்ஷரம் இதம் புண்யம் யப்படேஸ் சிவ சன்னிதெள சிவலோகம்  அவாப்னோதி  ஷிவேனா சக மோததே

சிவன் கோவில் சென்றால் இந்த பஞ்சாக்ஷர ஐந்து ஸ்லோகங்களை எவன் மனதார சொல்கிறானோ அவனுக்கு மோக்ஷம் நிச்சயம் என்று ஆதி சங்கரர்  கடைசியாக பலஸ்ருதியில்  காரண்டீ அளிக்கிறார்.

சுலபமாக  மனதில் ஏறிவிடும்.  மனதை செலுத்தி  மனப்பாடம்  பண்ணலாம்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...