Thursday, December 30, 2021

VARIYAR SWAMIGAL

  குருவின்  அருளாசி   --  நங்கநல்லூர் J K  SIVAN 


சில  மஹான்கள்  வாழ்க்கையில்  நடந்த  சில  சம்பவங்கள்  சம்பந்தப்பட்ட பக்தர்கள் மூலம் தான் நமக்கு தெரியவரும்.  அவர்களன்றி வெளியுலகிற்கு இவை தெரிய  வழியில்லை.

ஸ்ரீ வித்யாசாகர்  ஒரு தனியார் நிறுவன அதிகாரி. மும்பையில் பல வருஷங்களாக வாழ்பவர்.   அவர்கள் குடும்பத்தில் அனைவரும்  வாரியார்  ஸ்வாமிகளை குருநாதராக  போற்றி  வணங்குபவர்கள்.  ஹைதராபாதில்  ஸ்ரீ  வித்யாசாகர்  அவர்களின்  மாமனார்  வசித்தபோது  தொடர்ந்த  குருபக்தி   உறவு,   அவர்   பின்னர் பம்பாய்  சென்று வசித்தபோதும்  தொடர்ந்தது.  பம்பாய்க்கு   வரும்போதெல்லாம்  ஸ்வாமிகள்  ஸ்ரீ வித்யாசாகர்  இல்லத்தில் தான் தங்குவார். பூஜை செய்வார். 

 இத்துடன் இணைத்துள்ள படங்களில்  அவர்  வித்யாசாகர்  அவர்களின்   குமாரி ஐயா  குழந்தையாக  இருந்தபோது மடியில் வைத்துக்கொண்டிருப்பதை காணலாம்.   ஜெயாவிற்கு தமிழ் தெரியாது. ஸ்வாமிகளுக்கு அவளோடு விளையாட பிடிக்கும்.  அவளுக்கு மிகவும் கடினமான  திருப்புகழ்  ''சரண கமலாலயத்தில் '' என்ற பாடலை சொல்லிக்  கொடுத்தார். ஆச்சர்யமாக அந்த குழந்தை அதை உடனே பிடித்துக்கொண்டு  பாடியது.    ஸ்வாமிகளுக்கு மிகவும் பிடித்த  திருப்புகழ் அது   https://youtu.be/YDRgBMU4lFw

ஸ்வாமிகள்  வள்ளி தேவானை சமேத சுப்ரமண்யனுக்கு பூஜை செய்யும் போது அந்த குழந்தை ஜெயா பாடுவதை வீடியோவில் காணலாம்.  ரொம்ப பழைய வீடியோ.     சுவாமிகளது ஆசியால்  ஜெயா இன்று சிறந்த குரல்வளம் கொண்ட பாடகியாக  திகழ்கிறார் என்று அறிந்தேன்.  இது தான் குருவருள்.

வெகு காலமாக  இந்த  குரு சிஷ்ய  பக்தி  தொடர்பு  தொடர்ந்து   ஸ்வாமிகள்   கடைசிமுறையாக  பம்பாய்  செல்லும் வரை  நீடித்தது.    வெளிநாடுகளுக்கு  பம்பாய்  வழியாக  தான் வாரியார் ஸ்வாமிகள் செல்வார். அவருக்கு வேண்டிய  பிரயாண வசதிகளை   ஸ்ரீ வித்யாசாகர் நண்பர் குழாம்  பொறுப்பாக ஏற்பாடு செய்தது.  விமானத்தில் அதிகாரிகள் அனுமதி பெற்று அவரை  சாய்வு நாற்காலியில் வைத்து  விமானத்தில் அமர்த்துவது வரை  அவர்களது  குருபக்தி கைங்கர்யம் தொடர்ந்தது.  

வாரியார்  ஸ்வாமிகள் கைப்பட  50க்கு மேற்பட்ட கடிதங்களை எழுதியிருப்பதை  ஸ்ரீ வித்யாசாகர் காண்பித்தார்.
 பல  அனுபவங்களை  ஸ்ரீ வித்யாசாகர்  சொல்லியபோது  மயிர்க்கூச்செரிந்தது.   ஒரு புத்தகமே  எழுதும் அளவு  அவர்  விஷயங்கள்.  எல்லாமே   ஆச்சர்யம் நிறைந்தவை. ஒரு சிலவற்றை மட்டும் இந்த சிறிய  பதிவில்  சொல்கிறேன்.

''நான்  ஹைதராபாத் நகரத்தில் எனது   மனைவியின்  பெற்றோர் இல்லத்திற்கு சென்றபோது  ஸ்வாமிகள் வந்திருந்தார்,  ஆறு நாட்கள்  அங்கே எங்களுடன் தங்கினார்.  தினமும் பூஜைகள் அற்புதமாக செய்வார்.  ஒவ்வொரு  மாலை வேளையிலும் ஸ்வாமிகளின் உபன்யாசம் எங்காவது நிகழும். '' 

ஸ்வாமிகளிடம்  பூஜையில்  ஸ்படிக லிங்கம்,  பாண லிங்கம்  உண்டு..   அவர்  எங்கு சென்றாலும் ஸ்வாமிகளிடம்  கையில் ஒரு மான்  தோலால் ஆன  கைப் பை  ஒன்று இருக்கும்.  பல க்ஷேத்ரங்களை கண்ட  பை  அது. ஸ்படிக லிங்கத்தை எனக்கும்  (ஸ்ரீ வித்யாசாகரிடமும்)    பாணலிங்கத்தை அவர் மனைவிக்கும் ஆசியோடு  அளித்தார்.இந்த தம்பதிகள்    ரொம்ப பாக்கியசாலிகள்.  கடைசியில் அந்த  மான் தோல் பையும்  ஸ்ரீ வித்யாசாகருக்கே  கொடுத்து விட்டார் ஸ்வாமிகள்.

வாரியார்  ஸ்வாமிகள்  லண்டனுக்கு பயணமான   சமயம்  மிகவும்  குளிர் நிறைந்த காலம்.   அவருக்கு தேவையான  பிரயாண ஏற்பாடுகளை வழக்கம்போல்  ஸ்ரீ வித்யாசாகரும்  மற்ற  நண்பர்களும்  செய்தனர்.  அப்போது ஸ்வாமிகள்   வித்யாசாகரை கூப்பிட்டு  :

'' கல்கி  தீபாவளி மலரில் என்னுடைய படம் வந்ததாமே  நீ பார்த்தாயோ?'' என்று கேட்டார்.

''அப்படியா  தெரியாதே சுவாமி,  ''
 உடனே தீபாவளி மலர் ஒரு பிரதி கிடைக்க ஏற்பாடு  செய்கிறேன் என்று   வித்யாசாகர் தமிழ் அன்பர்களிடம் சொல்லி ஒரு பிரதி பெற்றுக்கொண்டார்.  அதில்  இருந்த வாரியார் படத்தை  சட்டம் போட்டு  லேமினேஷன் செய்து பூஜை அறையில் வைத்து தினமும்  பூஜை செய்வார்.   வாரியார் ஸ்வாமிகள்  வித்யாசாகருக்கு ''ஆனந்தமாய்  வாழ  ஆசார்யாள் வழி முறைகள் ''என்ற  புத்தகத்தை கொடுத்து   ''இதைப் படி '' என்று  ஆசி வழங்கினார். 
 
''நான் அந்த புத்தகத்தை  ரசித்து படிக்கிறேன்''   என்றார் என்னிடம்  ஸ்ரீ வித்யாசாகர்.

வாரியார்  சட்டை போட்டுக் கொள்ளாதவர்.  அவருக்கு  மார்பில்  சளி உபத்திரவம் ஏற்பட்டது  நிமோனியா என்று வைத்த்யர்கள் தீர்மானித்து  மருத்துவ  உதவி அளித்தார்கள்.   நவம்பர்  மாதம்  அவரை திரும்ப  இந்தியாவுக்கு அனுப்ப   பக்தர்கள் வைத்தியர்கள் முடிவு செய்தார்கள்.  அதன்படி  7ம் தேதி நவம்பர் 1993 அன்று  வாரியார்  ஸ்வாமிகள் லண்டனிலிருந்து பம்பாய் வழியாக  ஏர் இந்தியா  விமானத்தில்  சென்னை வந்து கொண்டிருந்தார்.  

விடிகாலை நேரம். ப்ரம்ம முகூர்த்த நேரம்.   விமானம்  திருத்தணி மேல்  சென்னை நோக்கி    பறந்து கொண்டிருக்கும் சமயம்  ஸ்வாமிகள் ஒரு பெருமூச்சு விட்டார்.  அருகில் அமர்ந்திருந்த  பெண்மணி அதை கவனித்தார்.  அதன் பிறகு  ஸ்வாமிகள் தலை குனிந்தவாறு  கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தார்.  அவர்  தூங்குகிறார் என்று அந்த பெண் கருதினாள் .  அரைமணி நேரத்தில்  விமானம்  சென்னையில் தரையிலிறங்கப்போகிறது.

அந்த நேரம்  பம்பாயில் ஸ்ரீ வித்யாசாகர்  பூஜை  செய்து   கொண்டிருக்கிறார்.  ஸ்வாமிகள் படம் எதிரே இருக்கிறது.  வித்யாசாகருக்கு  ஒரே ஆச்சர்யம். 

'' என்ன இது ?  ஸ்வாமிகள் படத்தில் கண் சிமிட்டுகிறாரே''! என்று. 
 உடல் மயிர்க் கூச்செரிந்தது அவருக்கு.  மீண்டும் உற்று பார்த்தார். கண்கள் பழையபடி படத்தில் காட்சி அளித்தன.  அங்கே  விமானத்தில்  கடைசி நேரத்தில்  பூவுலகை விட்டு மறையும் முன்பு தன்னுடைய  பரிசுத்த  சிஷ்யர் வித்யாசாகருக்கு நயன தீக்ஷை அளித்து  கண் சிமிட்டி ,  ஆசி வழங்கி விட்டு சென்றிருக்கிறாரா ஸ்வாமிகள்?    படத்தில்  கண்சிமிட்டிய  நேரத்தில் தான் ஸ்வாமிகள் பூவுலகத்தை விட்டு  கைலாசம் சென்றதாக பின்னர்  டெலிபோன் வாயிலாக செய்தி வந்தது.  அவர்  ஆவி பிரிந்தது  விமானம் திருத்தணி முருகன் கோவில் மேல்   பறந்து கொண்டிருந்த போது .
 
ஸ்வாமிகள்  அதிஷ்டானம்  காங்கேயநல்லூர் என்ற அவர் ஜென்மஸ்தலத்தில் உள்ளது.  

'என்னால் உடனே  செல்லமுடியவில்லை. சில மாதங்கள் கழித்து  தான்  அலுவலத்தில்  லீவு கிடைத்தவு டன்  நேரே  சமாதிக்கு  சென்று வணங்கினேன் '' என்கிறார்  ஸ்ரீ வித்யாசாகர்.  

ஸ்ரீ  வித்யாசாகர்  போன்ற எத்தனையோ  பக்திமான்கள் நம்மிடையே  இருக்கிறார்கள் அவர்கள் தாமாகவே இத்தகைய   அனுபவங்களை சொல்ல முன் வந்தால்   நம்மைப் போன்றவர்களுக்கு  இத்தகைய    ஆன்மீக விருந்தாக தகவல் கிடைக்க வழி உண்டு.   அவருக்கு நன்றி சொல்வோம்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...