Saturday, December 25, 2021

OUR BODY

 நம்ம உடம்பு: 4.        நங்கநல்லூர்  J K SIVAN


நமது உடம்பை  பற்றி  என்ன சொல்கிறார்கள்?   காயமே  இது காற்றடைத்த  பையடா.  என்பு தோல் போர்த்த உடம்பு.  அந்த எலும்பு நமது உடம்பில்  எத்தனை இருக்கிறது தெரியுமா?  நம்  உடலில்  சிறப்பான  சில  எலும்புகள்  முள்ளெலும்புகள். அவை   33  உள்ளன.

ஒரு விசித்திரமான  விஷயம் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.  அசகாய சூரர்கள் டாக்டர்கள் நம்மிடையே   இருக்கிறார்கள்  ஸ்ருஷ்டி கர்த்தா  ப்ரம்மாவின் அவதாரங்கள் . நிறைய  காசு கொடுக்க முடிந்தால் நமது உடம்பில்   இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை, முழங்காலை  உடனே  மாற்றிவிடுகிறார்கள். 
ஆனால் இவர்கள்  எவராலும் நம்முடைய  மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம் ஞாபகங்கள், நினைவுகள்.  
எதிர்காலத்தில்  மூளையை  மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன் தான்.   அவன் அந்நியன் தான்.  மற்றவனுடைய நினைவுகள்  நம்முடைய  சொல், செயலின் நினைவுகளாக  எப்படி ஆகமுடியும்?

கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள் தான் நம் வைப்பர்கள்  WIPERS . அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்   சிமிட்டும் போதெல்லாம் கண்விழிகளை   இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் வினியோகம் ஆகிறது. அடேயப்பா,   என் மனைவிக்கு  ரெண்டு கண்ணிலும்  கேட்ராக்ட் CATARACT`   ஆபரேஷன் முடிந்து  இன்று  12 நாட்களாக    எத்தனை  சொட்டுகள்   20 நிமிஷத்துக்கு ஒரு முறை காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கண்ணில்  விட வேண்டி இருக்கிறது.  ஒரு ஆள் நிச்சயம் கூடவே இருக்கவேண்டும். அந்த ஆள்  நான் தான்.

நமது உடலிலுள்ள செல்கள் விசித்திர  தன்மை கொண்டவை.  தானாகவே  இரண்டாக பிரியக்கூடியவை. . ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள் இறந்து புது செல்கள் பிறக்கின்றன  என்று டாக்டர்கள் எண்ணி வைத்திருக்கிறார்கள்.  அடேயப்பா  கிருஷ்ணா, உனக்கு எப்படியப்பா நன்றி சொல்வது?  ஒரு  சல்லிக்  காசு கூட  எதிர் பார்க்காமல் உன்னை சதா திட்டுபவனுக்கும் , பகைவனுக்கும் கூட அருளும் பகவானே..

குழந்தையாக நாம் பிறந்தது முதல்  நமது தலைமுடி 2 வருஷத்திலி ருந்து 4 வருஷம் வரை வளர்கி றது. அதன்பின் 3 மாதம் வளராமல் இருந்து உதிர்கிறது. பிறகு புது கேசம் வளர்கிறது.  என்ன ஆச்சர்யம் இது. பல லக்ஷம் தலை முடிகள்.

 அந்தக்காலத்தில்  கேசவர்தினி என்று  ஒரு  கூந்தல்  தைலம்  பிரபலமாக இருந்தது.    எல்லா  பத்ரிகைகளிலும்  பெண்கள்  உடம்பை விட நீளமான பெரிய  கூந்தலோடு தலை விரித்து படத்தில் அதை தடவிக்கொண்டு நிற்பதை பார்த்திருக்கிறேன்.  கேசவர்தினி பாட்டில் இல்லாத வீடே அப்போதெல்லாம் கிடையாது.

''நடையா  இது நடையா '' என்று நடக்கிறோம்,  நாம்  ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 தசைகள் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும் என்பது தெரியுமா?.

ஏன் யா  இப்படி  இதயமே  இல்லாமல்  இருக்கே?  என்று  எவரையும்  சொல்லாதீர்கள்.  எல்லோருக்கும் இதயம் இருக்கிறது.  அது துடிக்கவும்  செயகிறது.  70 வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது. 
ஒரு  தண்ணீர் குழாயின்  PUMP  செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை, கெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால் போது ம், உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்.  ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு  என்று சொல்வதை விட  ஆயுசும் மட்டு  என்று தாராளமாக  சொல்லலாம்.  கோபத்தில் எப்படி மூச்சு இறைக்கிறது?  இது அவசியமா?

நாம் அதிகம்  நரம்புகளை பற்றி  அறிந்து கொள்வதில்லை.  நமது உடம்பில்  நரம்பு மண்டலம் தான் மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத் திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது. யாராவது இப்படி சுறுசுறுப்பாக  சம்பளமில்லாமல், கிம்பளம் கேட்காமல்  வேலை செய்வார்களா?

எலும்பில் ஆரம்பித்தேன். எலும்பிலேயே இந்த  பதிவை முடிக்கிறேன்.

 நமது உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு தான்.  துரியோதனனின்  இடது தொடையில் தான்  பீமன்  தனது கதாயுதத்தால் தாக்கினான்.   அவன் உயிர்  பிரிந்தது.  தொடையை தட்டுவது அபசகுனம்.  அது பற்றி நிறைய அப்புறம் சொல்கிறேன்.

தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...