Wednesday, December 29, 2021

VAINAVA PEROLI


 



வைணவப் பேரொளி -  நங்கநல்லூர்  J K  SIVAN 
ஆண்டாள் 

''உனக்கெனவே  நான் பிறந்தேன்''

ஒரு நிமிஷம் நினைத்துப் பாருங்கள்.  பல நூற்றாண்டுகளுக்கு முன்பு.  எங்கோ தெற்கு கோடியில் ஒரு ஊரில்  ஒரு பெண் ஒரு முதியவரால் கண்டெடுக்கப்பட்டு  வளர்கிறாள்.. அவர்  ஒருவரைத் தவிர அவளுக்கு வேறு யாரும் தெரியாது.  அவருக்கு  ஒரே ஒருவர் மட்டும் தான் சதா  அவர் நெஞ்சிலே, இதயத்திலே,  அது  ரங்கநாதன் எனும் பெருமாள். விஷ்ணு.   இப்படி விஷ்ணுவையே  எப்போதும் நினைத்து மகிழ்ந்த அவருக்கு என்ன பெயர் என்று யாருக்கும் தெரியாது.  காரணப்பெயர்  நிலைத்துவிட்டது?  எப்போதும் விஷ்ணுவையே  சித்தத்தில் கொண்ட அவரை ''விஷ்ணு சித்தர்''  என்று அழைத்தார்கள்.    குழந்தைகள் பெற்றோரை தான் பின் பற்றி மனா வளர்ச்சி அடைகிறார்கள்   children  are  moulded  by parents  .  ஆகவே  கோதையும் ஒரு  விஷ்ணு  ''சித்தள் ''ஆகிவிட்டாள் . அவர்கள் வசித்த இடம் அருகே  ரெங்கமன்னார்  என்ற பெருமாள் கோவில்.  ரெங்கன் கோதை மனதை ஆண்டான்.  அவள் ஆண்டாள்  ஆனாள் .  அவனோடேயே கலந்தாள் .  தெய்வமானாள் .  ஆண்டாள் சந்நிதி இல்லாத  வைணவ ஆலயமே கிடையாது.  அவள் இயற்றிய  திருப்பாவை பாசுரங்கள், நாச்சியார்  திருமொழி,  பொருட்செறிவு, அருள் நிறைந்த எளிய  தமிழ் பொக்கிஷம். நாலாயிர திவ்ய பிரபந்தம் எனும் உயரிய  நூலில் இடம் பெற்றவை. 

ஒரு சேதி இதுவரை தெரியாதிருந்தால் இனி தெரிந்து கொள்ளலாம். பல திவ்ய தேச ஆலயங்களில் வட மேற்கு பகுதியில் ஆண்டாள் சந்நிதியை ஏற்படுத்தியவர் ராமானுஜர். ஆண்டாள் மீது அத்தனை பற்று, பக்தி. அவள் தமிழின் இனிமையில் கட்டுண்டவர். திருமலையில் அடிவாரத்தில் கீழ் திருப்பதியில் ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி சந்நிதியில் பெருமாளுக்கு வலது பாகத்தில் வழக்கமாக அருள் பாலிக்கும் ஸ்ரீ தேவிக்கு பதிலாக ஆண்டாள் சிலையை சாசனம் பண்ணியனார் .ஆண்டாளின் வாக்குக்கு தன்னை அர்ப்பணித்த  ஞானி ராமானுஜர். 

ஆண்டாள் கட்டுக்கதை அல்ல.  நிஜமாகவே வாழ்ந்தவள்.  பரமனைப் பாடியவள். அவனோடு பலர் கண்முன்னே இணைந்தவள். 11 திவ்யதேசங்கள் அவளது மங்களாசாசனம் பெற்றவை. அவை :
ஸ்ரீ ரங்கம், திரு ஆய்ப்பாடி, திருக்கண்ணபுரம், திருக்குடந்தை, துவாரகை, பரமபதம், திருவேங்கடம். திருப்பாற்கடல், திருமாலிருஞ்சோலை, வடமதுரை, ஸ்ரீ வில்லிப்புத்தூர். 

ராமானுஜர் ஆண்டாளின் நாச்சியார் மொழி அருளிச்செயல், திருப்பாவை ஆகியவைகளை பிரசங்கம் உபன்யாசம் எல்லாம் பண்ண தன்னை அருகதையில்லாதவன் என்று சொல்லிக்கொண்டவர் .   அக்காலத்தில்  பெண்களுக்கு  5-6 வயதிலேயே திருமணம் செய்யும் பழக்கம் இருந்தது.   என் அம்மாவுக்கு  10-13   வயதில் திருமணம்  எனும்போது, 7வது 8வது நூற்றாண்டில் என்ன பழக்கமோ?  கோதையின்  குழந்தைப் பருவத்திலேயே  விஷ்ணு சித்தர்  வரன் தேட ஆரம்பித்தார்.

'' என்னப்பா கொஞ்ச நாளாக எங்கெல்லாமோ அலைந்து கொண்டிருக்கிறீர்கள்?''
''என் கடமையை நான் செய்ய வேண்டாமா தாயே?''
''என்னப்பா அப்படி உங்களுக்கு ஒரு முக்கியமான கடமை ?''
''உனக்கு பொருத்தமான ஒரு வரன் தேடுகிறேன் அம்மா ?''
''எதற்கப்பா வீணாக அலைகிறீர்கள் நானே தேடியாச்சே!''
''அடேடே, ஆச்சர்யமாக இருக்கிறதே. யாரம்மா அந்த பாக்யசாலி?''
''உங்களுக்கு தெரிந்தவர் தான் அப்பா"!
''புரியவில்லையே ! விவரமாக சொல்லம்மா "
''நீங்கள் அறிமுகப்படுத்திய அரங்கன் தான் நான் வரித்த மணாளன்"
''ஹா ! என்னம்மா இது'' என்று காதைப் பொத்திக்கொண்டார் விஷ்ணு சித்தர். பகவான் அவன். நாம் எல்லாரும் சாதாரண மனிதர்கள் ஆச்சே. பக்தி ஒன்றுதான் நமது உறவு அவனோடு தாயே!. வாழ்க்கை என்பது நமக்கு நம்முள் ஒருவரோடு அமைவது தான் நியாயமானது. வழக்கமானது அம்மா ''
''அப்பா, உங்கள் மகள் வாழப்போவது அந்த அரங்கன் ஒருவனுடனே தவிர வேறு யாருடனும் கனவிலும் கூட நிச்சய மாக இல்லை. இனி அது பற்றி பேச்சே வேண்டாம். என் சொல் மீறி வேறு ஏற்பாடு ஏதாவது செய்ய முற்பட்டால் இறந்த உங்கள் மகளை வேறு யாருக்காவது திருமணம் செய்து வைக்க வேண்டுமானால் செய்யுங்கள் ''

அந்தக் கணம் முதல் அந்த ஜீவாத்மா பரமாத்மாவுக்கு கைங்கர்யம் இடைவிடாது செய்து பரம புருஷார்த்தம் அடைந்தது.

கோதையை   நினைக்கும்போதே எனக்கு வியப்பு. எப்படி ஒரு சிறு பெண் இப்படி பாசுரங்கள் எழுதினாள் ? உயர்ந்த தத்துவங்களை அந்த சின்ன வயதில் எழுதுவது மனித காரியம்  இல்லையே..  அவளைப்பற்றி ஒரு சிறு புத்தகம் எழுதினேன். 2014 வைகுண்ட  ஏகாதசி அன்று '' பாவையும் பரமனும்'' வெளியாயிற்று.  அதற்குப்பிறகு  2000 பிரதிகள் தீர்ந்துவிட்டது  இப்போது ஒரு பிரதி கூட இல்லை. 

''பாவையும் பரமனும்''   நூலில்  நான் ஆண்டாளை வடக்கே யமுனைக்கரையிலே ஒரு ஆயர்பாடி கோபியாக கிருஷ்ணன் கால துவாபர யுகப்பெண்ணாக உருவமைத்து மற்ற பெண்களோடு மார்கழி முப்பது நாளும் அவர்கள் அவனை அடைய நோன்பு நோற்று அந்த கிருஷ்ணன் வீட்டையே சுற்றி சுற்றி வந்து அவனையே விரத பலனாக அடைவதாகவும், மற்றொரு பெண் கோதை என்பவள் எங்கோ தென் கோடியில் வில்லிப்புத்தூரில் ஒரு காட்டின் மத்தியில் துளசி நந்தவனத்தில் ஒரு சிறு பர்ணசாலையில் தன் வளர்ப்பு தந்தை விஷ்ணு சித்தர் என்கிற விஷ்ணு பக்தரிடம் வளர்வதாகவும், அவரிடம் கல்வி பயின்று பாசுரம் இயற்ற தகுதி பெற்று முப்பது பாசுரங்களை தானே அந்த ஆயர்பாடி ஆண்டாளாக நோன்பு நோற்பதாக கற்பனை செய்து திருப்பாவையாக அளிப்பது பற்றியும், விஷ்ணு சித்தர் நாள்தோறும் காத்திருந்து அன்றைய பாசுரத்தை ஆவலாக படித்து ரசித்து அதிசயித்து பெருமாள் கோவிலில் மற்றவர்களுக்கு திருப்பாவையின் உள்ளர்த்தத்தை எடுத்துரைப்பது போன்ற ஒரே மேடையில் மூன்று காட்சிகளாக அமைத்திருந்தேன் . அதைத்தான்  இப்போது ''கோதையின் கீதை''  என்று  தினமும்  கொஞ்சம் மாற்றி அளிக்கிறேன்.
 இது ஆண்டாளின் அருள் என்று தான் சொல்வேனே தவிர என் முயற்சி என்று சொல்ல இயலாது. 

ஆண்டாள் வாழ்க்கையில் திருப்புமுனை அவள் தன்னை அரங்கனின் மனைவியாக மனதால் வரித்து செயலிலும் அவ்வாறு  காட்டியது. மனத்தை  கொள்ளைகொண்ட அரங்கனுக்கு ஆசையாக மாலை தொடுத்து அதைத் தன் தோளில் சூடி, மாலையும் கழுத்துமாக அழகு பார்த்துவிட்டு '' அரங்கா உனக்கு திருப்தியா?'' என்று கேட்டு அதை தோளிலிருந்து கழற்றி பிறகு அரங்கனுக்கு அது போய் சேர்ந்து ஒருநாள் அந்த மாலையில் கோதையின் தலை முடி இருப்பதைக் கண்ட விஷ்ணு சித்தர், இது மனிதர் உபயோகித்ததாயிற்றே அரங்கனுக்கு உகந்ததாகாதே என்று உணர்ந்து வேறு யாருமே இல்லாததால் அந்த மாலையை கோதை தான் உபயோகித்து இருக்கவேண்டும் என்று அவளை கோபித்து, வேறு மாலை உடனே தயார் செய்து, அரங்கனுக்கு சார்த்த முயல்கையில் அவன் அதை நிராகரித்து கோதை சூடிய மாலையே வேண்டும் என்று சொல்ல,பிறகு தான் விஷ்ணு சித்தர் உணர்கிறார் இவர்கள் இருவருமே ஒருவருக்காக மற்றவர் என்று.

தனது திருமணம் அரங்கனோடு நடந்த வைபவத்தை கனாக் காண்கிறாள் கோதை. ஆண்டாள் என்ற இடை[ப் பெண்ணாக தன்னை பாவித்து மார்கழி மாதம் முழுதும் யமுனையில் விடியற்காலை நீராடி நோன்பு நோர்த்து கன்ணனைத் தேடி அவன் வீட்டை சுற்றி வந்து கடைசியில் அவனை சந்தித்து அவன் அருள் பெறுகிறாள் என்று அவளை காட்டி இருக்கிறேன். ஒரு   சம்பாஷணை :.

''கண்ணா, இந்த மார்கழி முழுதும் பக்தியோடு உன்னை பாடிய இந்த ஆயர்குடி இடைப் பெண்கள் நாங்கள் உன்னிடம் என்ன கேட்கிறோம்? 
நீயார்? எங்களைப்போல் இடையர் குலத்தில் பிறந்தவனல்லவா? அதனால் நாம் எல்லோரும் ஒரே குலம் அன்றோ? ஒரே வித்தியாசம் நமக்குள் என்னவென்றால் நீ ஆண்டான் நான் ஆண்டாள் ஆக இருந்த போதும் உன் அடிமை. எங்களுக்கு நீ அருள வேண்டிய வரம் என்ன தெரியுமா?. 
இனி எங்களுக்கு எத்தனை எத்தனை பிறவி பாக்கியோ அத்தனையிலும் நீ எங்களில் ஒருவன் .  நாங்கள் உன்னுடையவர்கள் புரிகிறதா?
இன்னும்  சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...