Thursday, December 23, 2021

THIRUVEMBAVAI



 திருவெம்பாவை -  நங்கநல்லூர்  J K  SIVAN 

மார்கழி 9ம் நாள்.

9    மறையில் மறைந்தவன்

9. முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்.

''என்ன அழகாக பாடுகிறார் மணிவாசகர். வார்த்தைகள் பரிமளிக்க வேண்டும் என்றால் அவற்றில் உணர்ச்சி ததும்ப வேண்டும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் இதை செய்ய முடியாது. அதோ பாருங்கள் திருவண்ணாமலையில் என்ன நடக்கிறது என்று?

 பெண்கள் கூட்டமாக வீடு வீடாக சென்று மற்ற பெண்களை துயில் எழுப்புகிறார்கள். அவர்கள் பாடுவதை தான் படம் பிடித்து காட்டுகிறார் மணிவாசகர். அவர்  பாடலின் அர்த்தம் எளிதில் புரிந்திருக்குமே. தெள்ளு தமிழில் தெளிவாக தானே எழுதியிருக்கிறார்:  

என்ன சொல்கிறார்கள்  சிவனைப் பற்றி அந்த பெண்கள்:

பரமேஸ்வரன் சிவன் பழமைக்கும் பழமையானவன். அநாதி நாதன்.ஆதி அந்தமில்லா பழம
னாதி.   கல்தோன்றி மண் தோன்றா காலத்துக்கும் முன் தோன்றிய மூத்தவன். முற்பட்டனவாகிய எல்லா பழமையானபொருள்களுக்கும் முற்பட்ட பழமையான பொருல் சிவன்.! பிற்பட்டனவாகிய புதிய பொருள்களுக்குள்  அவன் புத்தம் புதிய பொருளாகி நின்ற அத்தன்மையனே! உன்னை ஆண்டவனாகப் பெற்ற உன் சிறப்பு மிக்க அடிமைகளாகிய நாங்கள் உன் தொண்டர்களின் திருவடிகளை வணங்குவோம்; அங்கே அவர்களுக்கு உரிமை உடையவர்களாக அடிமைகளாக ஆவோம். அவர்களே எங்கள் கணவராவார்கள். அவர்கள் விரும்பிக் கட்டளையிட்ட வண்ணமே, அவர்கட்கு என்றும் நின்று ஏவல் செய்வோம்;

எங்கள் பெருமானே! எங்களுக்கு இந்த பாக்யம் கிடைக்குமாறு அருள் புரிவாயாயின் வேறு என்ன வேண்டும்?. எந்த விதமான குறைபாடும் இல்லாமல் உன் புகழ் பாடி சிவானந்தத்தில் மகிழ்ந்து வாழ்வோம் '. 

சிவன் பெயர் சொல்லி துயில் மட்டும் அல்ல துயரும் நீக்கும் துயில் எழுப்பும் பெண்ணாக தன்னை வர்ணிக்கிறார் மணிவாசகர்.

இப்படி எல்லா மறைகளும் போற்றும் சிவன் மறைந்து மறைந்து தோன்றும் ஒரு க்ஷேத்ரம் இன்றும் இருக்கிறதே தெரியுமா?  சொல்கிறேன் கேளுங்கள்:

சிவன் பஞ்ச பூதங்களின் கலவை. பஞ்ச பூத க்ஷேத்ரங்கள் சென்னையிலும் இருக்கிறது. ஆகாச லிங்கம், அக்னிலிங்கம், ப்ரித்வி லிங்கம், ஜல லிங்கம், வாயு லிங்கம் என்று எத்தனையோ ஆலயங்களில் அருள் பாலிப்பவர். ஆனால் இவை அனைத்திலும் அதிகமாக அவர் காணப் படுவது எந்த ரூபத்தில்? கொஞ்சம் யோசித்தால் உங்களுக்கே தெரியுமே. ஜல லிங்கமாக. சிவன் அபிஷேகப் பிரியர். அவரை ஜலநாதர் , ஜம்புகேஸ்வரர் (ஜம்பு , அப்பு, அம்பா என்றால் நீர்) , தீர்த்த பாலீஸ்வரர் , ஜல கண்டேஸ்வரர் என்று எவ்வளவு அழகாக மனம் ''குளிர' பல ஆலயங்களில் தரிசிக்கிறோம்.

முக்கண்ணன், தீப் பிழம்பான ஸ்வரூபம், கோபக்காரர், அக்னியே உருவானவர் என்று நிறைய கேள்விப் பட்டாலும், அவர் மௌன ஸ்வரூபி.   தக்ஷிணாமூர்த்தி  என்பது  யார்? தென் திசை நோக்கி அமர்ந்த மௌன குரு. தபஸ்வரூபி. அவரே ஜலத்திலே வாசம் பண்ணுபவராகவும் இருக்கிறாரே.

வடக்கே குஜராத்தில்  அரபிக்கடல் கரையில்  ஒரு கோவில். ஒரு அதிசயமான, ஆனால் விரைவில் மறையப்போகும் சிவாலயம்.    சிவன் பெயர் ஸ்தம்பேஸ்வர மகா தேவர் . தெற்கே ஸ்தாணு மாலயன் மாதிரி.    எங்கே இருக்கிறது என்றால் குஜராத் மாநிலத்தில் கவி கம்போய் என்னும் ஊரில். எல்லோரும் ''மறையும் சிவாலயம்'' எங்கே இருக்கிறது என்று கேட்டாலே வழி சொல்வார் கள்? வதோதரா என்கிற ஊருக்கு 40 மைல் தூரத்தில் ஜம்புசார் தாலுக்காவில் இந்த கவி கம்போய் இருக்கிறது.

கம்பத் விரிகுடா அரேபிய கடலில் கலக்கும் இடத்தில் உள்ளது. மேற்கு கடற்கரைகளில் நீர் மட்டம் சில மணி நேரங்கள் குறையும் சில மணி நீர்களில் கடல் நீர் உள்ளே புகும். பல அடி உயரங்கள் அது உள்ளே புகுந்து விடும் நேரத்தில் கப்பல்கள் படகுகள் மட்டுமே கரை சேரும். நீர் மட்டம் விறு விறுவென்று குறைந்து கொண்டே தாழ்ந்து கடல் நீர் கரையை விட்டு கடலில் புகும்போது தான் அங்கே உள்ளவை தெரியும். எனவே இந்த சிவனை தாழ்ந்த நீர் மட்ட நிலையில் மட்டுமே காண முடியும். முக்கால் வாசி நேரங்களில் இந்த சிவன் ஆலயம் நீருக்குள்ளே ஜல வாசம் செய்பவர். எப்போது நீர் மட்டம் வடியும் என்று காத்திருந்து பக்தர்கள் ஓடிச் சென்று இந்த ஸ்தம்பேஸ்வர மகாதேவரை வழிபடுகிறார்கள்.
தாரகாசுரனை வதம் செய்தபிறகு முருகனால் ஸ்தாபிக்கப்பட்ட ஆலயம் இது என்று சொல்வ துண்டு. 150 வருஷங்களுக்கு முன்பு தான் இந்த ஸ்தம்பேஸ்வரர் ஆலயம் இருப்பதையே கண்டு பிடித்தார்கள். கடல் நீர் வற்றி வடியும்போது அங்குலம் அங்குலமாக இந்த ஆலயம் நீரில் இருந்து தோன்றுவது கண்ணை விட்டு நீங்காத ஒரு திவ்ய தரிசனம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது. சிவன் 4 அடி உயரமானவர்.

இந்த சிவனை தரிசிக்க ஒரு நாள் ஒரு இரவு பூரா காத்திருக்க வேண்டும். விடிகாலையில் கரையில் நடந்து ஆலயம் அடைந்து சுற்றிப் பார்த்து, ஓவென்ற கடல் பேரிரைச்சல் நடுவே நிசப்தமாக, நிர்மானுஷ்யமான சிவனை தரிசித்து, அங்கங்கே திடீரென்று முளைக்கும் உணவகங்களில் கிடைப்பதில் தேவையானதை உண்டு, நீர் பருகி, இலவச அன்ன தானமும் உண்டு. ஜாக்ரதையாக கரை சேர்ந்து அங்கிருந்து அங்குலம் அங்குலமாக ஆலயம் நீரில் முழுவதுமாக மறைவதை பார்க்கலாம். இரவின் இருள், அமானுஷ்யமாக அந்த ஆலயத்தை மறைப்பதை நினைத்துப் பார்த்தாலே  பயம் கலந்த பக்தி  என்னவோ போல் இருக்கிறது அல்லவா?

இந்த சிவன் கோவில் மகி சாகர் மற்றும் சபர்மதி நதிகளில் சங்கம க்ஷேத்ரம். இயற்கையின் பரிபூர்ண பிரசாதம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...