Tuesday, December 21, 2021

human body

 நம்ம உடம்பு -- 2 - நங்கநல்லூர் J K SIVAN


நம்ம உடம்பு  பத்தி  நாம் ஒருவரும்  சரியாகவே  தெரிந்து கொள்வதில்லை..    அதில் எங்காவது சிறிது கோளாறு உள்ளதாக  தோன்றினால், எங்காவது வலித்தால் , காயப்பட்டால்,  எலும்பு முறிந்தால், ஜுரம் ,  வியாதி வந்தால் தான் அதைப் பற்றி கவலைப்படுகிறோம்.  அப்போது கூட  கவலை உடம்பை பற்றி சிறிதும் இல்லை.  டாக்டருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டி இருக்கும். ஆபரேஷன், ஸ்கேன்  எக்ஸ்ரே, ரத்த  பரிசோதனைகள்  இதற்கெல்லாம்  கையிலிருந்து கொடுக்காமல் ஏதாவது இன்சூரன்ஸ் கம்பெனி கொடுக்க வழியுண்டா  என்று தான் அலைகிறோம். டாக்டர்களுக்கும்  இது தெரியும். நமது  கால்  கடைசியில் ஒரு சுண்டு விரலில்  காட்டில் காலில்  இரும்பு பீரோவில், வாசல்படியில்,  இடித்துக் கொண்டால் உடனே  இதயம், மூளை எல்லாம் ஸ்கேன்  எடுக்க வேண்டும். ஆபரேஷன் அவசியமாகலாம்.  குறைந்தது சில லக்ஷங்கள்  ஆகலாம் என்று  வெள்ளைக்கோட்டு  கூசாமல் சொல்லி  விடுகிறது 

உண்மையில்  பகவான் கொடுத்த  இந்த உடல்  அற்புதமாக  ஸ்ரிஷ்டிக்கப்பட்டிருக்கிறது. தனது  குறைகளை தானே  நீக்கிக்கொள்ள வசதி படைத்திருக்கிறான் ப்ரம்மா.  

டாக்டர்  ப்ரம்மாவாகி மூக்கை  நுழைத்தால் தான் மேலே சொன்ன தாறுமாறுகள். மன உளைச்சல். உடலின் ஒரு பகுதியைக் கூட  மனிதனால் அதே போல் மாற்றி  தர முடியாது.  செய்ய முடியாது. அவன் செய்து தரும்  செயற்கை  உறுப்புகள் நிச்சயம்  ஒரிஜினல் உறுப்பின்   கால் தூசுக்கு கூட  சமமாகாது.  காசால் ஒருவன் கிருஷ்ணன் ஆகிவிட முடியாது.
 
எனது முதல் பதிவில் சில  ஆச்சர்யமான நிகழ்வுகளை குறிப்பிட்டிருந்தேன். இந்த பதிவில்  இன்னும் கொஞ்சம் உடம்பு  பற்றி சொல்கிறேன்.

நம் தலைமுடியை  மயிர்  என்கிறோம். அது கெட்டவார்த்தை,  ஒருவரை  உதாசீனமாக பேசும் வார்த்தை என்று இகழ்கிறோம். வார்த்தை யில்தான் இந்த  கோளாறு.  மயிர் என்று சொல்லப்படும்  உறுப்பு  நாம்  வழிபடும்  கடவுளுக்கு கூட  காணிக்கையாக   முடியை  அர்ப்பணிக்கிறோம்.   அவமதிப்பாக இருந்தால் கடவுள் ஏற்பாரா?  உடலுக்கு அழகே முடி தான்.

நமது   தலையில்  வளரும்  முடியின் எண்ணிக்கை 1 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை  கூட  உண்டு  1 மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. உயரம்  வளர்கிறது.  ஆச்சர்யமாக இல்லை?.  

இந்த முடி  உதிர்ந்துவிடுவதால்  லக்ஷக்கணக்கான  ரூபாய்  செலவு செய்து மண்டையில்  செயற்கை   செடி நடுகிறார்கள்.   இது வளராது.  பார்க்கும்போதே  ஒரிஜினல் இல்லை என்று புரிந்து விடும். சிரிப்பு வரும்.  நிச்சயம் அது ஒரிஜினல்  ஆகவே முடியாது.  சவுரி,.  டோபா எல்லாம்  நாடகத்துக்கு தான் லாயக்கு.   நமது  மண்டை  ஓட்டில்  முடி எனும் அற்புத வஸ்து நமக்கு   80 ஆம் வயது வரை வளர்கிறது. கருப்பு  வெள்ளையாகி மதிப்பு கூடுகிறது.

மனித முகங்கள்  ஒருவர் போல்  இன்னொருவர்   இல்லை.  இருந்தாலும் மொத்தம்   மனித முகங்களை  520 வகைகளாக  அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள். 

''எதிர்த்த வீட்டு  சாரதாவுக்கு  நாக்கு நீளம்.''    என்கிறோம்  அந்த நாக்கினால்  அவள் பேசுவது தான்  கொடியது. நீளமானது.  மொத்தத்தில் அவளுக்கும் நமக்கும் எல்லோருக்கும்  நாக்கின் நீளம்  10 செ.மீ  தான்.

நாம்  சுவாசிப்பது  சுத்தமான  ஆக்சிஜன் எனும் பிராண வாயு.  ரொம்ப விலையுயர்ந்த வஸ்து .  இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது.

நாம்  படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9 லிட்டர் பிராணவாயு  தேவை. 

 உட்கார்ந்து  தினத்தந்தி  படிக்கும்போதோ, ஹாலில்  மின் விசிறி கீழே அமர்ந்து பட்டி மன்றம் பார்க்கும்போதோ,   ஒரு நிமிஷத்துக்கு  18  லிட்டர்  பிராணவாயு  தேவைப்படுகிறது. 

நடக்கும்போது  1 நிமிடத்திற்கு 27 லிட்டர்  பிராண வாயு தேவைப்படுகிறது  இப்போது தெரிகிறதா. அதன் மதிப்பு?
அதையே  ஆஸ்பத்திரியில் வாங்கும்போது எவ்வளவு காசு நாம் இழக்கிறோம்.  

மரத்தடியில் உள்ளவன்  மாடிவீட்டில் உள்ளவன் ரெண்டு பேருக்கும் இதே அளவு தான் தேவை.  பகவான் கிருஷ்ணன் எவ்வளவு கருணை உள்ளவன் என்று புரிகிறதா?

கிட்னி  என்கிறோமே  நமது சிறு நீரகம்.   அதில்  பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள் filter கள்   இருக்கின்றன. இவைகள்   ஒழுங்காக வேலை செய்வதை நாம்  எப்படி கெடுக்கிறோம்  தெரியுமா?  நிறைய  தண்ணீர் குடிப்பதை விட்டு, ஊறுகாய், உப்புக்  கருவாடு, ஆல்கஹால்  எனும்  மதுபானம் உட்கொள்வதால்  கெடுக்கிறோம். அவஸ்தைப் படுகிறோம். .

வீட்டுக்கு மந்திரி,  ராணி,சர்வாதிகாரி,   பெண் தான். அவள்  அம்மா, மனைவி, சகோதரி என்று பெயர் உறவு மூலம்  மதிக்கப் படுகிறாள்..  அவள்  புத்திசாலியாக இருந்தாலும்    விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? 

 பெண்களைவிட ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது. பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள் ஆண்கள் மூளையில் அதிகம்  இருக்கிறதாம்.     இருந்து விட்டு  போகட்டுமே  அதால் என்ன பயன்?. பெண்ணைப் போல் நம்மால் சிந்திக்க முடிகிறதா?

40 கிலோ விலிருந்து 100கிலோவுக்கு  மேலாக  நமது உடல்  இருக்கிறது.   அதை  ஆடையால்  போர்த்திக்கொண்டு தூக்கிக்கண்டு  நடக்கிறோம்.   அலைகிறோம்.  இந்த  மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு  skin  எனும்  தோல். அது ரேஷன் போல்  பகவானால் எல்லோருக்கும் சமமாக,  குறைத்துக் கொடுக்கப்படவில்லை. 

''அந்த பயல்  கோபாலுக்கு மண்டை கனம்''  என்று சொல்கிறாயே  மொத்தத்தில் நம்  எல்லோரின்  தலையின் கனம் , எடை என்ன தெரியுமா?  தலையின் எடை 3.175 கிலோ,.

ஒவ்வொருவரின்  மூளையின் உள்ளேயும்   100  கோடி நியூரான்கள்  இலவசமாக  நமக்கு கிருஷ்ணன் கொடுத்து விடுகிறான்.  அதுவும்   நாம் கேட்காமலேயே, நமது  4 வயதுக்குள்  மூளைக்குள்ளே  திணித்து விடுகிறான். கூடவும் இல்லை,  கம்மியும் இல்லை. 

இன்னும்  நிறையவே  சமாச்சாரங்கள் உள்ளன.  அவ்வப்போது சேகரித்து சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...