Saturday, December 24, 2022

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN

 
''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான  கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீர் குரல் பாடல் என்னை சிறுவயதிலேயே கவர்ந்த ஒரு  சினிமா பாட்டு. கர்நாடக சங்கீத கல்யாணி ராக பின்னணி கொண்டது.  1956ம் வருஷம்  சந்தானம் என்ற ஒரு படத்தில் நாகேஸ் வர ராவ் பாடுவதாக ஒரு காட்சி கருப்பு வெளுப்பில்  யு ட்யூபில் பார்த்தேன்.

 நாகேஸ்வர ராவ் அக்கால வழக்கப்படி  ஒரு  பியானோ எதிரில் உட்கார்ந்து அதற்கும் தனக்கு சம்பந்தமே  இல்லாமல் எங்கோ பார்த்துக்கொண்டு வாயசைப்பார், விரலசைப்பார். 

எதிரே சாவித்ரி  குளத்தில்  வாத்து  இறக்கை அடிப்பது போலொரு டான்ஸ் பண்ணிக் கொண்டு தன்னைத் தானே  ப்ரதக்ஷிணம் பண்ணுவார்.  பார்க்க வேடிக்கை யாக இருக்கும்.
 இசை  தக்ஷிணாமூர்த்தி.
மிகச் சின்ன பாட்டு என்றாலும் இன்றும்  என் மனதில் இடம் பெற்று என்னை பாட வைக்கும் சக்தி கொண்டது.

https://youtu.be/q3IBZac0lk8

HANUMAN


 ஹனுமத்  ஸ்மரணாத் பவே   - #நங்கநல்லூர்_J_K_SIVAN

  
நேற்று   மார்கழி மாசம்  அமாவாஸ்யை திதி. ஒரு மார்கழி  மாதம் மூல  நக்ஷத்திரத்தில் அமாவாசை திதி அன்று  அஞ்சனை பெற்றெடுத்த  ஆஞ்சநேயன் என்றும் சிரஞ்சீவியாக  நமக்கு  அருள்  புரிகிற ராம பக்தன். வாயு புத்ரன். அவன் தான் நம்முள்  பிராண வாயு வாக வும் இயக்குபவன்.  பிராண வாயு உயிரைக் காப்பது என்பதால் தானே  சஞ்சீவி மூலிகை மலையையே  பெயர்த்து படுவேகத்தில்  லக்ஷ்மணன் மற்ற வானரர் கள் உயிரைக் காப்பாற்றியவன்.   ப்ராணத்யாகம் செய்யத் துணிந்த  சீதையின் முன் தக்க சமயத்தில் தோன்றி தன்னை  ராம தூதன் என்று அறிமுகப் படுத்திக்கொண்டு அவள் உயிரைக் காப்பாற்றியவன்.  அதே சமயம்  ராவணன் உயிரை  ராமன் வந்து அவன் உடலை கொன்று விளக்குவதற்காக  ''விட்டு வைத்த வன்''.

ராவணனின் உயிரை ராமன் கையால் போக  'விட்டு'  வைத்தவன். கம்பன் ஆஞ்சநேயனை எப்படி அடையா ளம் காட்டுகிறான்?   என்ற அற்புத பாடல் அனைவரும் அறிய வேண்டியஒன்று.   தமிழனுக்கு நாவினிக்க சொல்ல  ஒரு நல்ல கவிதை இது.  எளிமையான கவிதை. எல்லோருக்கும் புரியும் வார்த்தை ஜோடனை.  நீங்களும் மனனம் செய்து குழந்தைகளையும் மனப்பாடம் செய்ய வைக்கலாம்.   

''அஞ்சிலே ஒன்று பெற்றான்
                  அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
                ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே  ஒன்று பெற்ற
              அணங்கைகண்டு  ; அயலான் ஊரில
அஞ்சிலே ஒன்று வைத்தான்
              அவன்  நம்மை அளித்து காப்பான்

கம்பராமாயணத்தில் பால காண்டத்தில் வரும் ஒரு அருமையான பாடல் இது. இது மாதிரி எழுத இன்னொருவன் பிறக்க வேண்டும். ஆஞ்சநேயரை வணங்கி துவங்கிய துதிப்பாடல்.

அஞ்சு என்றால் ஐந்து,  பயம் என்று ஒரு அர்த்தம். அஞ்சு என்றால்  'பஞ்ச'    என்ற சமஸ்க் ரித ஐந்து.  ஏன் ஐந்து?  இந்த  பிரபஞ்சமே  பஞ்ச பூதங்களின் சேர்க்கை.  அப்பு, வாயு, தேயு, ஆகாசம்,  ப்ரித்வி, என்ற   நீர், நெருப்பு, ஆகாயம், மண்,காற்று.   அதில் அனுமன்  வாயு புத்ரன்.  காற்றின்  மைந்தன்.  அஞ்சிலே ஒன்றான வாயு பெற்ற  மகன்..
அனுமன் என்ன செய்தான்?.  ராமனுக்காக இலங்கை யில் சீதையைத் தேட  சமுத்ரத்தை யே தாண்டினான் .வானரம் என்றால் தாண்டியது என்பதை விட ''தாவி யது''  என்று சொல்வது பொருத்தம் என்பதற் காக
  ''அஞ்சிலே ஒன்றைத்  தாவி'' என்று  எழுதி னார் கம்பர். அஞ்சிலே ஒன்று, பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர், சமுத்திரம்.  கடலை ஹனுமார்  தாண்டி இலங்கையை அடைந்ததை சொல்கிறார்.   அடுத்த வரியில் இன் னொரு பஞ்ச பூதத்தை அறிமுகப்படுத்துகிறார்  கம்பர்.  ''அஞ்சிலே ஒன்று ஆறாகி'' ஆறு என்றால்  நம்பர்,  நதி என்ற அர்த்தத்தோடு  ''வழி''  என்றும் அர்த்தம்.  ஆற்றுப்படை என்றால்  ஒரு இடம் செல்ல, ஒருவரை தேடிப்போக  வழி சொல்வது. முருகனைத் தேடிச் சென்று துன்பம் நீக்க போவது நக்கீரர் எழுதிய   திருமுருகாற்றுப்படை,  இங்கே  பஞ்ச பூதங்களில் ஒன்றான  ஆகாயம்  அனுமனுக்கு வழியாக  அமைந்தது. 
 ஹனுமான் வான வீதியில் பறந்து இலங்கை சென்றான் என்கிறார் கம்பர்.

எதற்கு  ஹனுமான்  கடலைத் தாண்டி வானவீதியில் இலங்கைக்கு பறந்தான்?  ''ஆருயிர் காக்க ஏகினான்''. ராமனை  எதிர்பார்த்து அவன் வரவில்லையே. இனி உயிரை விடுவோம் என்று   ப்ராணத்யாகம் செய்ய முடிவெடுத்த  சீதா தேவியின் ஆருயிர் காக்க என்று ஒரு பொருள்.  இன்னொன்று , ராமனின் ஆருயிரான சீதையைக்  காப்பதற்கு என்று ஒருபொருள்  ''அம்மா, உனக்கு இந்த ராவணாதி ராக்ஷசர்களால் ஒரு துயரமும் வராது'' நாங்கள் ராமனோடு வந்து உன்னை மீட்போம் என்று  'புத்துயிர் நம்பிக்கை'  அளிக்க  என்று அருமை யான அர்த்தம் உள்ளே மிளிர்கிறது.

ஏன்  ஹனுமார் பறந்தார்?  ஸ்ரீ ராமனுக்காக.  ''ஆரியர்க் காக''   என்ற சொல் அற்புதமானது. ஆரியன் திராவிடன் என்ற மட்டரக  வித்யாசம் இங்கே வேண்டாம். அதற்கு இங்கே இடமில்லை.  ஆரியன்  என்பது சமஸ்க்ரிதத்தில்  மதிப்பு மிக்க, மரியாதைக்குரிய,  மேதகு,  மேன்மையா ன என்ற பொருள் தரும் சொல். அத்தனைக்கும் பொருத்த மானவன் ராமன் இல்லையா? இலங்கை நம் ஊரல்ல, அயலான் ஊர்.  ராமனின் தர்ம, நியாய ராஜ்ஜியம் அல்ல,  அதற்கு மாறான ராவண தேசம் என்கிறார் கம்பர்.  சீதையை  சாதாரணமாக  பெயரிட் டுச் சொல்லவில்லை  கம்பர்.  அஞ்சிலே ஒன்று பெற்ற  அணங்கு  என்கிறார். என்ன அக்ஷர லக்ஷ வார்த்தை!   பஞ்ச பூதங்களில் ஒன்றான  பூமித்தாய்  பெற்றவள், தந்தவள்,  சீதா தேவி  என்ற  அவள் சரித்திரம் அங்கே பளிச்சிடுகிறது.

சும்மா  போய் பார்த்துவிட்டு வர  ஹனுமான் என்ன  நம்மைப் போன்றவனா? ராவணனுக்கு தான் யார் என்று காட்டுவதன் மூலம் ராமனின் பலத்தை அறிவிக்க  வேண்டாமா? ஒரு சாதாரண தூதுவனாக பணியாள னாக வந்த  எனக்கே எவ்வளவு சக்தி பார்!'' என்று காட்ட  பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பை, தீயை, இலங்கை மாநகரில்  சீதை இருந்த இடத்தைத் தவிர  மற்ற இடங்களில் மூட்டி பரப்பிவிட்டு  ராமனிடம் சீதை இருக்கும் இடத்தைச் சொல்லப்  பறந்தவன் ஹனுமான்.   இலங்காபுரிக்கு அக்னிப்  பரிசை ஹனுமான் தந்ததை
கம்பர்  ''அஞ்சிலே ஒன்றை வைத்தான்'' என்கிறார்.  பஞ்ச பூதங்களில் ஒன்றான  தீயை மூட்டி சேதம் விளைவித்தான் என்கிறார்..

இப்படி  சக்தி கொண்ட  சிரஞ்சீவி ஹனுமா, உன்னை வணங்குகிறோம், எங்களை காத்து ரக்ஷிப்பாயாக
 என்று சாஷ்டாங்க நமஸ்காரம் நம்மை செய்ய வைத்து தானும் வணங்குகிறார் கம்பர்.

GRAND MA ADVICE

 பாட்டி சொல் தட்டாதே..   #நங்கநல்லூர்_J_K_SIVAN

 
மதுரம்  பாட்டியை மறக்க  முடியவில்லை. அம்மாவின்  பெரியம்மா  அவள்.  எனக்கு  ஒன்பது பத்து வயாசாகும் போது அவளுக்கு  75-80 வயது இருக்கலாம்.  நாங்கள் வசித்த  சூளைமேட்டுக்கு  புரசைவாக்கத்திலி ருந்து
நடந்தே வருபவள்.  புரசைவாக்கத்திலிருந்து  பூந்த
 மல்லி  சாலையை கடந்து  இடது பக்கம்  கீழ்ப்பாக்கம்  பெரிய  ஆஸ் பத்திரியை ஒட்டி இறக்கத்தில் சேத்துப் பட்டு ஸ்டேஷன் அருகே ஆற்றின் நடுவே இருந்த  குட்டி  பிரிட்ஜ் மேலே நடந்து  இப்போது நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் இருக்கும் பக்கம்  மறுபடியும் ஆற்றின் மேல் பிரிட்ஜில் நடந்து நேராக   சூளைமேடு சாலைக்கு வந்துவிடுவாள். அங்கிருந்து  கால் மணி நேரம் நடந்து  எங்கள் வீட்டுக்கு நடந்து வருவாள்.   எப்போதும் கையில் ஒரு பித்தளை தூக்கில் தோசை மாவு,  அடை மாவு கொண்டுவருவாள்.  எல்லோருக்கும்  அன்று அருமை யான  கல் தோசை,  மொறுமொறு அடை, தேங்காய் துவையல்  பண்ணி போடுவாள். கொடுக்கும் மனசு அவளுக்கு.  பரம ஏழை. 

வெயில் காலத்தில்  கால் பாதங்களைச்   சுற்றி  தனது  பழைய  காவி நார்மடி  புடவை துணி கிழிசலை  பேண்டேஜ்  மாதிரி சுற்றிக் கொண்டு நடப்பாள். அது தான் அவளுக்கு செருப்பு.  இடுப்பில் கம்பளி மடிசஞ்சி. 

அவளுக்கு தெரியாத விஷயமே கிடையாது. நிரம்ப உலகானுபவம்.  சின்ன வயதிலேயே கணவன் முகம் அதிகம் தெரியாத போதே  விதவையானவள்.
பாட்டி நிறைய பேசுவாள்.  அவள்  சொல்லும் சில விஷயங்கள் அற்புதமானவை.  

'நம்பளை  மதிக்காதவாளை  லக்ஷியம் பண்ணாதே''.  என்பாளே  அது மதியாதார்  வாசல்  மிதிக்கவேண்டாம்  என்ற  அறிவுரையே தான்.
.
''மத்தவா விஷயத்தில் ஏன்  தலையிடறே? எப்பவும் நீ உண்டு உன் வேலையுண்டுன்னு இருக்கணும்.
 ஒருத்தர் வீட்டுக்குப்  போனா  உள்ளே  கண்டதை யெல்லாம்  அனாவசியமா  தொடப் டாது கெட்ட  பழக் கம்''  என்பாள்.

பாட்டி சொன்னது வாஸ்தவம்.   சிலருக்கு மற்றவர்கள் வீட்டில் போனால்  அங்கிருக்கும் அலமாரியில் இருக்கும் வஸ்துக்களை தொட்டு எடுத்துப்  பார்ப்பது, ஏதாவது  லெட்டர்கள் இருந்தால்  எங்கிருந்து வந்தது, யார்  எழுதியது என்று படிப்பது, இது என்ன அது என்ன என்று கேட்பது, எனக்கு இது பிடிக்கும் என்று சொல்வது, எனக்கு கொடுப்பாயா என்று கேட்பது. சமையல் அறைக்குள் சென்று மூடியிருக்கும்  பாத்திரங்களை திறந்து பார்ப்பது,  பிரிட்ஜை திறந்து உள்ளே  என்ன இருக்கிறது என்று நோட்டம் விடுவது ---  இந்த  பழக்கம் எல்லாம் உண்டு. மதுரம் பாட்டி சொல்வது ரொம்ப கரெக்ட்.

''ஆரையும்  அனாவசியமா போய் அகாலத்திலே கதவை தட்டப்படாது''  என்பாளே  அதற்கு என்ன அர்த்தம் என்றால்,  நன்றாக யோசித்துப் பார்த்தால்  இப்போது புரிகிறது.  இப்போது நம்   ஒவ்வொருத்தரிடமும்  மொபைல் போன் இருக்கிறது.  அதுவும்  வாட்ஸாப்ப் இல்லாத போனே  கிடையாது. வாட்ஸாப்ப்  செய்தி கண்ட நேரத்தில் அனுப்புவது கூட  பரவாயில்லை.  நாமாக  திறந்து பார்த்தால் தான் அவற்றால் தொந்தரவு. ஆனால் நம்மை வாட்ஸாப்பில்  அல்லது டெலிபோனில் நடு ராத்திரி, அல்லது நன்றாக தூங்கும்போது விடியற் காலையில்  ராத்திரி கூப்பிடுவார்கள். பேசுவதற்கு அல்ல,  நமது  வாட்ஸாப்  நம்பரை தெரியாமல்  தொடுவதால் நம்மை அது எழுப்புகிறது.   ''ஸாரி , தப்பாக கூப்பிட்டு விட்டேன், மறக்கவும் மன்னிக் கவும்'' என்று  செய்தியும்  கிடையாது.   

மறுநாள் நாம் அவர்களை கூப்பிட்டு  ''நேற்று ராத்திரி  கூப்பிட்டீர்களே  ஏதாவது அர்ஜன்ட் விஷயம் உண்டா?''  என்று கேட்கும்போது 

 ''இல்லையே , எனக்கே தெரியாம உங்களை  தப்பா  கூப்பிட்டுட்டேன்  போல  இருக்கு''  என்ற பதில் கிடைக் கும்போது எவ்வளவு கோபம் வரும் என்று அவர்களுக்கு  புரியாது.  நாமும் அதே தப்பை பண்ணுகிறோமே .

ராத்திரி  10 மணிக்கு  முன்னறிவிப்பு, ஒப்புதல்,  இல்லாமல் எவரையும் டெலிபோனில் கூப்பிடக்
கூடாது. தூங்கும் நேரம்.

''யாராத்துக்கும்  கூப்பிடாம சாப்பிட போறது  நமக்கு   கௌரதை , மதிப்பு மரியாதை  இல்லை ''என்பாள்  பாட்டி.  
பாட்டி சொல்வது ரொம்ப சரி.  சாப்பிடும் நேரத்தில் எவரையும் அவர்கள் வீட்டில் சென்று அவர்களை போய் தொந்தரவு பண்ணக்கூடாது.  கூப்பிடாமல் சாப்பிட  உட்கா ரக்கூடாது. என்ன இருக்கு சாப்பிட  என்று கேட்பது ரொம்ப  தவறு. சங்கடப்படுவார்கள்.

சிலர்  அடுத்தவர் வீட்டுக்குப் போனால்  அவர்கள் படுக்கை அறைக்குள் போய் கட்டிலில் சாய்ந்து கொள்வார்கள், படுத்துக் கொள்வார்கள்.  ரொம்ப தப்பு இது.   முதலாவது  மற்றவர்  படுக்கை அறைக்குள் போகக்கூடாது. ரெண்டாவது அவர்களே  சொல்லாமல் அவர்கள் கட்டிலில் போய் உட்காருவது படுப்பது  அநாகரீகம்.

75 வருஷம் ஆனாலும்  மதுரம் பாட்டி சொன்னது இன்றும் ரொம்ப பொருத்தமாக இருக்கிறது.  நல்ல பழக்கங்கள்  பழசாவதில்லை. அவற்றுக்கு  வயசாவதுமில்லை. 
 

Friday, December 23, 2022

ADHI SANKARAR EKA SLOKI

 ஆதி சங்கரர் -   நங்கநல்லூர்  J K   SIVAN

ஏகஸ்லோகி     ---   '' ஒத்தை ஸ்லோகம்''  

ஒண்ணே  ஒண்ணு அது  ''நான்''  தான்....

ஸ்லோகம் என்றால் நீளமாக  நிறைய பாடல்கள் தொகுப்பு என்று  நாம்  நினைப்பது ஞாயம். எல்லோரும் அப்படித்தான்  எழுதினார்கள், எழுதுகிறார்கள்.   ஆதி சங்கரரும் அப்படித்தான். பாய் பாயாக  நீளமாக  ஸ்லோகங்கள்  எத்தனையோ  ஸ்வாமிகள்  மேல் பாடியவர்.  அவரே ஒரு வித்யாசமான படைப்பும் படைத்துள்ளது  எத்தனை பேருக்கு தெரியும்?

 அது ஒரே ஒரு ஸ்லோகம்,   நாலு  அடியில்  வேதாந்த தத்துவத்தை அப்படியே  அமுக்கி  பிசைந்து, உருட்டி  ஒரே ஒரு சின்ன  மிளகு உருண்டையாகப்  பண்ணி  கையில்   கொடுத்து விட்டார்  ஆதி சங்கரர்.  அதற்கு  ''ஒரே ஸ்லோகம். ஏக ஸ்லோகி '' என்று பெயர்.  அதை மட்டும் இன்று  ரசிப்போம். இதை எனக்கு முன்பு ரசித்து மகிழ்ந்தவர்  சுவாமி விவேகா னந்தர்.   அவரைப் படிக்கும்போது தான் இது என் கண்ணில் பட்டது.

ஆதிசங்கரரைப் பொறுத்தவரை எப்போதுமே வெட்டு  ஒண்ணு  துண்டு ஒண்ணு (ரெண்டு கிடையாது). அத்வைதி என்பதால் எல்லாம்  ஒன்றே தான். ரெண்டே கிடையாது.  நோ டூயலிட்டி.  எல்லாம் ஒண்ணு  தான். அவர் மேல் தப்பு இல்லை,   நாம் தான்  தப்பு செய்பவர்கள்   எல்லாமே  ஒண்ணே  ஒண்ணு தான் என்று புரிந்து விட்டால்  நாம் வேறு சங்கரர்  வேறு இல்லையே.

ஆயிரக்  கணக்கான  ஸ்லோகங்கள் எழுதியிருக்கிறவர் '' ஒரே  ஒரு ஸ்லோகம்'' என்று ஒரு ஸ்லோகம் எழுதியதை தான் இன்று படிக்கிறோம்.  இது தான் அந்த ஒத்தை ஸ்லோகம்:

किं ज्योतिस्तवभानुमानहनि मे रात्रौ प्रदीपादिकं
स्यादेवं रविदीपदर्शनविधौ किं ज्योतिराख्याहि मे ।
चक्षुस्तस्य निमीलनादिसमये किं धीर्धियो दर्शने 
किं  तत्राहमतो भवान्परमकं ज्योतिस्तदस्मि प्रभो ॥

கிம் ஜ்யோதிஸ்தவ  பானுமான ஹனி மே  ராத்ரோவ் ப்ரதிபாதிகம்
ஸ்யா  தேவம் ரவி தர்சன  விதெள  கிம் ஜ்யோதிராக்யாஹி மே
சக்ஷுஸ் த்ஸ்ய நிமிலநாதி சமயே கிம் தீ தியோ தர்சனே
கிம் தத்ராஹம்  அதோ  பவான்பரமகம் ஜ்யோதிஸ்தத ஸ்மி ப்ரபோ:

''ஐயா,  கொஞ்சம் நில்லுங்க. எந்த வெளிச்சம் உங்களுக்கு உதவுது?   யோசிச்சீங்களா? பகலிலே  சூரியன். பொழுது சாய்ஞ்சா  தீபங்கள், விளக்குகள்.? அவ்வளவு தானா?   சூரியனும்  தீபங்களும்  இருந்தா வெளிச்சம் தெரிஞ்சுடுமா?  கண்ணு  வேண்டாமா? சரி கண்ணுலே இருக்கிற  ஒளி இந்த மற்ற  ஒளி யெல்லாம் பார்க்க  உதவுது.  கண்ணை மூடிக்கிட்டா என்ன தெரியும்? நமக்குள்ளே  ஞானம் , அறிவுன்னு ஒண்ணு  இருக்கு இல்லையா? அது ஒளி காட்டுது.  
சரிங்க.  ஞானம் உள்ளே  இருக்குது. ஒளிகாட்டுதுன்னு யார் உணர  முடியும்?எப்படி   தெரியும்? ஆத்மான்னு, உயிர், ஜீவன்  என்று ஒன்று இருந்தாதானே  மத்ததெல்லாம் தெரியும், புரியும். செத்ததுக்கு என்ன தெரியும்?

ஆகவே,   பகவானே  புரிஞ்சுக்கிட்டேன்.  ஆத்மான்னு ஒரே ஒரு ஒளி தான் உள்ளே வெளியே எல்லாம் வெளிச்சம் போடறது.  பிரகாசமானது. நீதான்  பிரம்மமே ,  அந்த ஆத்ம ஒளி. நீ  ஒண்ணு  தான்  எல்லாமே''.

ஆதி சங்கரர் மேற்கண்ட ஒரே ஒரு ஸ்லோகத்தை ‘ஏக ஸ்லோகி’ என்ற ஒத்தை செய்யுளாக வேதாந்தத்தை ஒரு சீடன் கேள்வி கேட்க குரு விளக்குவதாக பேசி புரிந்து கொள்வதைப் போல அல்லவா எழுதியிருக்கிறார்!    சிஷ்யன்  அப்படி என்ன கேட்டான், குரு என்ன பதில் சொன்னார் என்று பார்த்தால் தானே விஷயம் புரியும்?  சுவாமி   விவேகானந்தர் இந்த ஸ்லோகத்தை அப்படித்தான்  பார்த்தார்.  நாமும் பார்ப்போமே.

''சுவாமி , நான் தங்கள் சிஷ்யன்,  எனக்கு நீங்கள்  ஞானம் புகட்டவேண்டும்''
''அது என் கடமையப்பா.  எனக்கு தெரிந்ததை  நான் உன் போன்ற சிஷ்யர்களுக்கு உரைத்து தெளிவிக்க வேண்டும். அவர்கள் பின்னால் அடுத்த தலைமுறைக்கு அதை அளிக்க
வேண்டும் என்பது தான்  பெரியோர்கள்  அனுஷ்டித்த முறை.  இதைத்  தான் கர்ணபரம்பரை என்பார்கள். கர்ணன் என்பவனின் குடும்ப  வாரிசுகள் என்று அர்த்தம் இல்லை. கர்ணம் என்றால் காது.    பெரிய  தவலை , குடம்  மாதிரி  காது இருந்ததால்  ராவணன் தம்பிக்கு கும்பகர்ணன் என்று பெயர்.

வேத காலத்தில் ஸ்லோகங்களை  எல்லாம் குரு சிஷ்யர்களுக்கு போதித்து அவர்கள் மனதில் இருத்தி,  அவர்களை  மனப்பாடம் செய்ய  வைத்து  அழியாமல்  காத்து, அது  தலைமுறை தலை முறையாக ஒவ்வொரு சந்ததிக்கும் போதிக்கப்பட்டது., அதனால்  மாறுதல் இல்லாமல், அடையாளம் இழக்காமல் பாதுகாக்கப்பட்டது.
''புரிகிறது குருநாதா'
''சரி அப்பனே,   நீ  முதலில்  என்  இந்த கேள்விக்கு பதில் சொல் பார்க்கலாம்.  
''நீ எப்படி இந்த உலகத்தை காண்கிறாய்?''
நாம்   அநேகர்  கண்  கெட்டவர்கள்.  எல்லோருமே   மூக்கு கண்ணாடி போட்டுக் கொள்பவர் களாக இருக்கிறோம்  ஆகவே  மூக்கு கண்ணாடியை துடைத்து விட்டுக்கொண்டு  என் மூக்குக் கண்ணாடியால்  பார்க்கிறேன்'' என்று பதில் சொல்கிறவர்கள்.  

இந்த சம்பவத்தில் வரும்  சிஷ்யன் அருமையானவன்.  நல்ல குருவின் சிஷ்யன்  என்பதால் அற்புதமாக ஒரு பதிலைச் சொல்கிறான்

''சுவாமி , நாம் யாருமே  சூரியனின்  ஒளியால் தான் எதையும் காண்கிறோம். நல்ல  பார்வை இருந்தாலும் சூரிய ஒளியின்றி, எதையும்  காணமுடியாது.''
'பகலில்  நீ சொல்வது  சரி.  இரவு வந்தால்  எப்படி  பார்க்கிறாய்?''
'தீபத்தின்  ஒளியால்,  குருநாதா”
 ‘ஓஹோ, . நீ  விளக்கை பார்த்து எடுத்து அதை எண்ணெய் திரி போட்டு ஏற்றியபின் தான்  அது உனக்கு ஒளி கொடுத்தது.  அதை ஏற்றுவதற்கு முன்  விளக்கை எப்படி பார்த்து தெரிந்து கொண்டாய்?”
''குருநாதா,  விளக்கை  என்  அறிவால் , புத்தியால் தான்  அடையாளம் தெரிந்து கொண்டேன் 
”சபாஷ்  சிஷ்யா,  சரியான பதிலை சொன்னாய். உனக்குள் இருக்கும் புத்திக்கு   எத்தனை யோ  பொருள்களுக்கு  இடையே  இது தான்  விளக்கு என்று எது பார்த்து தெரிந்து கொள்ள வைத்தது?'
''நான் அதையும் யோசித்தேன்  குருநாதா. 
”நான்” எனும் ஆன்மா, பிரம்மம் தான் புத்திக்கு  வழி காட்டியது''
”ஆமப்பா, நன்றாக  உணர்ந்தவன் நீ.   நீ தான் அந்த புறவெளியை அடையாளம் காட்டிய ஆன்ம ஒளி”
''சதகோடி  நமஸ்காரம் குருவே. தங்கள் அருளால் ”நான்” யார்? என்று புரிந்துகொண்டேன்.
இது தான் மேலே சொன்ன சின்ன  நாலு அடி  ஸ்லோகத்தின் சாராம்சம். ப்ரம்ம ஞானம் பற்றியது.

Wednesday, December 21, 2022

DEVOTION TOWARDS PARENTS

 

பெற்றோர் மேல் பக்தி: நங்கநல்லூர் J K SIVAN

ஏழிசை மன்னன் என்று கொடிகட்டி பரந்த சூப்பர் ஸ்டார் M .K தியாகராஜ பாகவதர். ஹரி தாஸ் என்ற படம் மூன்று தீபவளைகளை கண்ட அற்புத படம். படம் முழுக்க வாயை திறந்தாலே ஹீரோ ஹீரோயின் பாட்டுகள் தான். 75-80 வருஷங்களுக்கு முன்பு கருப்பு வெளுப்பு படங்கள் பூரா பாட்டுக்காகவே ஓடியவை. மூன்று நான்கு மணி நேர படங்கள் . இப்போது நம்மால் பொறுமையாக உட்கார்ந்து பார்க்கவோ, அந்த டயலாக் கேட்கவோ இயலாது. நெளிவோம். பாகவதர் அந்த படத்தில் ஒரு யதுகுல காம்போதி, அடாணா ராக பாடல் ஒன்று பாடிக்கொண்டே இடுப்புக்கு கீழே கோணியைக் கட்டிக்கொண்டு முடமாக நகர்ந்து வருவார். இதைப் பார்த்து அழாத ரசிகர்களே கிடையாது. அவரது பாடல் அக்கால தமிழர்களை, இசை விரும்பிகளை காந்தமென கவர்ந்தது . நானும் அந்த பாடலை 84 ல் பாடிப் பார்க்கிறேன்.

https://youtu.be/hc_djgOEYTo

diplomacy

 ராஜ தந்திரம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 


 இப்போது   நடப்பதெல்லாம்  அப்போதே நடந்தது தான்.   துர்யோதனன்  ராஜ சபை  நமது சட்டசபை மாதிரி அமளி துமளியாக  உரத்த குரலில் சப்தங்களோடு ஒலித்தது.  ஆமாம் ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்னால்.

ஆம்  கிருஷ்ணன் த்வாரகையிலிருந்து  பாண்டவர்களுக்காக சமாதான  தூது பேச வந்திருக்கிறான். அவர்கள் உரிமையை யுத்தமில்லாமலே, சமாதானமாக  பெற  முயற்சிக்கிறான்.   பிரச்னை   தீரவில்லை.  யுத்தம் ஒன்று தான்  முடிவு என்று ஆகி விட்டது.  ஆகவே   கிருஷ்ணன்  தூது  தோல்வியடைந்தது என்று சொல்லலாமா?

அங்கேதான்  சூக்ஷ்மம் இருக்கிறது. கிருஷ்ணன் சமாதான தூதுக்கு  வந்தானே தவிர  இந்த யுத்தம் நடைபெற வேண்டும் அதில் பாண்டவர்கள் வெற்றி பெற்று  தர்மம் நீதி  நிலைக்க வேண்டும் என்பது தானே அவன் நோக்கம். அதற்குத்தான் அவன் அவதாரமும் எடுத்தான்.

கிருஷ்ணன் தூது   தோல்வியில்  முடிந்த உடன் பாண்டவர்கள் ஆவலாக  முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும்  விராட நகருக்கு திரும்புகிறான்.   

கிருஷ்ணனின்  தேரோட்டி  தாருகன்  கிருஷ்ணனை நன்றாக அறிந்தவன் அல்லவா?   தேரை கடகடவென்று  வேகமாக  ஓட்டிக்கொண்டே  கிருஷ்ணனிடம் பேச்சு கொடுக்கிறான்.   

"பிரபு,  நீங்கள்  துரியோதனன்  அரண்மனையில் தங்காமல் விதுரனை முதலில் சந்தித்து அவர்  ஆஸ்ரமத் தில் தங்கியதால்  கௌரவர்கள்  கொந்தளித்துள்ளார்கள் என்பதை கவனித்தேன்.  நிறைய பேர்  இதைப் பற்றி பேசுவதைக் கேட்டேன்.   கௌரவர்கள்  இதை  சபையில்  உங்களிடம்  வெளிப்படுத்தினார்களா?
கிருஷ்ணன் முகத்தில் புன்னகை.   

''ஆம் தாருகா, நான் எதிர்பார்த்தபடியே அவர்களுக்கு என் செய்கையில்  ரொம்ப ஆத்திரம்''

''நீங்கள் ஏன் அவ்வாறு செயதீர்கள்?.  உங்களுக்கு தான் துரியோதனன் அவன் அரண்மனையிலேயே   வசதியாக தங்க  நல்ல ஏற்பாடுகள்   செய்திருந்தானே.  

''தாருகா, நான் யோசிக்காமல்  எதையாவது செய்வேனா? 

''என்ன காரணம் பிரபு,எனக்கும் சொல்லுங்களேன்''

''ஒரே கல்லில் ரெண்டு  மாங்காய் விஷயம்  தான் அது"

"கிருஷ்ணா  நான்  உங்களைப்  போல் ஞானி அல்ல.  எனக்கும் புரியும்படியாகவே சொல்லலாமே."

"சில  காரியங்கள் எப்போதும் தக்க காலம் வரும்போது தான் புரியும். நீயும் பொறுத்திரு, காத்திரு"

துரியோதனன் ராஜசபையில்  கிருஷ்ணனின்  சமாதான தூது தோல்வி அடைந்து கிருஷ்ணன் சென்ற பிறகு  காரசாரமாக  விவாதம் தொடர்ந்தது.
துரியோதனன்  எப்போதுமே   எல்லோரையும் விட  அதிக  பொறாமையும் சந்தேகமும் கொண்டவன் ஆயிற்றே.  அதிலும் கிருஷ்ணன் விதுரனின்  எளிய  குடிலில் ஒரு இரவு  தங்கி  அவனுடன்   இரவெல்லாம் பேசிக்கொண்டிருந்தான் என்று ஒற்றர்கள் மூலம்  கேள்விப்பட்டான் .
வழக்கம் போலவே  அதனால்  ரெண்டும் ரெண்டும்  நாலு  அல்ல நாப்பது என்று  கணக்கு போட்டு  விதுரன் பாண்டவர்களுக்கு எப்படி  யெல்லாம்  வெற்றி கிடைக்க வழியோ அதெல்லாம் கிருஷ்ணனுடன்  பேசி முடித்து விட்டான்  என்று சந்தேகப்பட்டான்.  விதுரன் பச்சை துரோகி என்ற பட்டம் கொடுத்தான்.

பாண்டவருடன் யுத்தம் நிச்சயம் என்று தான் ஆகிவிட்டதே!!. யார்  யார்  என்ன  என்ன பதவியில்  எப்படி போர் புரிய வேண்டும்? எவர் எவர்  தலைமையில்? என்று காரசாரமான  விவாதம் நடந்தது.

துரியோதனன் கடும்  கோபத்தில் இருந்தான்  விதுரன் மேல்.  துரோணர், கர்ணன்,  பீஷ்மன்  கிருபர் ஆகியோருக் கெல்லாம் யுத்தத்தில் தலைமைப் பதவி அளிப்பு நடந்து கொண்டிருந்தது. 

பீஷ்மர்  '' துரியோதனா , பீஷ்மரை விட்டுவிட்டாயே?  அவர் பராக்ரமம் பிரசித்தம். மஹா வீரர்.  அவர் தலைமை யை அறிவுரைகளை  யுத்தத்தில் சரியானபடி  பயன்படுத்திக் கொள். மிகவும் உங்களுக்கு உதவும்'' என்று விவரித்தார்.

“தாத்தா,  போதும்,  நிறுத்துங்கள்”. விதுரருக்கு எந்த தலைமை பொறுப்பும் கிடையாது.'

''துரியோதனா, என்னை புண்படுத்துவதில் உனக்கு தனி சந்தோஷம் எப்போதுமே.  நீ கொடுத்தாலும் எந்த பொறுப்பையும் நான் ஏற்றுக்  கொள்ளப்  போவதில்லை.  என்னையும்  என்  வீரத்தையும்   நன்றியுணர்ச்சியும்  அவமானபடுத்திய  உனக்காக  நான்  போர்  புரிய மாட்டேன். இது சத்யம்''  

விதுரன்   ராஜசபையில் எழுந்து சபதம் செய்த  போது  சபையில் எல்லோரும் திடுக்கிட்டார்கள்.   தொடர்ந்து  'படார் ''என்று பெரிதாக ஒரு சப்தம் கேட்டது. தன்னுடைய பெரிய  வில்லையும் அங்கேயே  உடைத்து   கீழே எறிந்து விட்டு   விதுரன் வெளியே நடந்தார். 
பீஷ்மன் துடித்து போனார்.
“ முட்டாளே துரியோதனா,  என்ன  காரியம் செய்துவிட்டாய்? எவ்வளவு புரிய நஷ்டத்தை விலை கொடுத்து  வாங்கிவிட்டாய்.  உன்னுடைய பலத்தில்  பெரும்பங்கை  உன் அறியாமையால்  இழந்துவிட்டாயே.''
''தாத்தா, என்ன சொல்கிறீர்கள் நீங்கள் ?'' உறுமினான்  துரியோதனன்.
'' ஆமாம், நீ முட்டாள் என்று நிரூபித்து விட்டாயே.  மாயாவி கிருஷ்ணன் போட்ட திட்டத்தில்  வகையாக  சிக்கி  பாண்டவர்களுக்கு   லட்டு மாதிரி உதவி விட்டாய்”  என்றார்  பீஷ்மர் .
"என்ன தாத்தா புதிர் போடுகிறீர்கள்,  கிருஷ்ணன்  போட்ட திட்டமா?  அது என்ன தாத்தா  ஏதோ கிளப்பி விடுகிறீர்கள்?" 
''ஆமாம் தாத்தா, அந்த கிழ விதுரன் போர்புரியாவிட்டால் அப்படி என்ன  பெரிய நஷ்டம் நமக்கு ?'' என்று சிரித்தான் கர்ணன். 

ஒரு பழங்கதையை  தெரிந்து கொள்வது  இப்போது அவசியமாகிவிட்டதே.
மாண்டவ்ய ரிஷி  தான்  செய்யாத பாபத்திற்கு தர்ம தேவதை  தண்டனை கொடுத்தது  என்று கோபித்து தர்ம தேவதைக்கே ஒரு சாபமிட்டார்
"தர்ம தேவா,  நீ பூமியில்  மனிதனாக  பிறந்து  நீ செய்யாதவற்றுக்கெல்லாம்  பழி ஏற்று தவிப்பாயாக" 

 தர்மதேவதை விதுரனாக பிறந்தான். சிறந்த வீரன்,  வில் வித்தையில்  நிபுணன்.  அவனை எதிர்கொள்வது  மிகவும் கடினம். இதை உணர்ந்த கிருஷ்ணன் துரியோதனனுக்கு விதுரன் மீது சந்தேகம் ஏற்பட விதுரன் வீட்டில் தங்கி அவன் அளித்த உணவை உண்டான்.  அதனால் கிருஷ்ணன் எதிர்பார்த்தபடியே துரியோதனன் விதுரனை சந்தேகித்து அவன் துரோகி என்று முடிவு கட்டி  போரில் அவனுக்கு  மரியாதை கிடையாது என்று சபையில் அனைவர் முன்னிலையில் அவமதித்தான்.  விதுரன் தான் ஒரு தவறும் துரோகமும் செய்யாதபோதே  இந்த அவச்சொல் அவமரியாதை தனக்கு நேர்ந்ததால்  போரில் பங்கேற்க மாட்டேன் என்று சபதம் செய்தான், எவரும் எதிர்த்து வெல்லமுடியாத  வில்லையும் உடைத்ததெரிந்தான்.  அது பாண்டவர்களுக்கு ரொம்பவும் சாதகமாக போய்விட்டது.  

இதைத் தான் தாருகனுக்கு கிருஷ்ணன் "காலம் சொல்லும் பொறுத்திரு" என்று சுட்டிக்  காட்டினானோ?


Tuesday, December 20, 2022

RAMA NAMA

  ''ஸ்ரீ ராம ஜெயம்'' ...நங்கநல்லூர்  J K  SIVAN


மதுராந்தகத்தில்  ஸ்ரீ  ரகுவீர பட்டாச்சாரியார் ராம ஜெயம் எழுத பலரை தூண்டி ஊக்குவிப்பதை  அறிந்தபோது  மட்டும் அல்லாமல் அவரது வீட்டிலேயே  2 கோடி ராமநாமாவை சேகரித்து  பிரதிஷ்டை செய்து  அதன் மேல் ஒரு சிறு பீடம் அமைத்து கோதண்டராமர் பாதம், படம் வைத்திருக்கிறார் என்பதை  பார்த்து வணங்கியபோது ராம ஜயம் பற்றி   அன்பர்களே உங்களுக்குச் சொல்லவேண்டும் என்று தோன்றியது. 

ராம நாமம் எழுதுவது  உலக இன்பங்கள் மட்டுமல்லாமல்  ஆத்ம திருப்தி என்ற முக்கிய காரணத்துக்காகவும்  மிகவும் பயன்படும் மின்றி,   ராம  என்பது தாரக மந்திரம். இதை திரும்ப திரும்ப ஜெபிப்பதன் மூலம்,  எழுதுவதன் மூலம்  உள்ளே கிடக்கும்  தீய   குணங் களையும், எண்ணங்கள்  அழியும்.  வெளியே  இருந்து தீய சக்திகள் நம்மை நெருங்காமல்  அரணாக  பாதுகாக்கும். இது போதுமே.

‘ராம” என்ற மந்திரத்துக்கு எத்தனையோ  அர்த்தங்கள் உண்டு.  ‘மரா” என்று  விடாமல் சொல்ல என்று வால்மீகிக்கு  நாரதர் உபதேசித்தார்.  நமக்கு ராமாயணம் கிடைத்தது.  சீதைக்கு ஒரு பெயர்  ரமா. ராமனுக்குள் சீதை எனும் லக்ஷ்மி தேவி  அடக்கம்.  ஆகவே  ராம  என்று ஜபித்தால்  எழுதினால்  லக்ஷ்மி  கடாக்ஷம் பெறுகும் .  எடுத்த காரியம் யாவினும் வெற்றி.  கற்போர்க்கும், கேட்போர்க்கும், கற்பிப்போர்க்கும்  இவ்வாறு பெறும்  பயன் தரும்.  ஜெய்ராம் சீதாராம் என்று சொல்லிக்கொண்டே  எழுந்திருப்போர், உட்காருவோர்,  சாப்பிடுவோர்  தூங்குவோர் கோடானுகோடி ஹிந்துக்கள்.   மஹாத்மா  காந்தியின் கடைசி வார்த்தை   ''ஹே  ராம்'', என்  தாய் வழி  தாத்தா ப்ரம்ம ஸ்ரீ  வசிஷ்ட பாரதியார்  ''ஜெய்ராம் ஸ்ரீ ராம்''  என்று சொல்லாத  நேரமே கிடையாது.  ராமனைப் பற்றியே  பாடிய, பேசிய, வம்சம். எல்லோருக்கும் குடும்பத்தில் 
ஜெயராமன், சீதா ராமன், ரகு  ராமன், வெங்கட்ராமன் போன்று   ராமன் அடைமொழி நிச்சயம் உண்டு. 

‘ரா” என்றால் ‘இல்லை”  என்று அர்த்தம்.  ‘மன்’ என்றால் ‘தலைவன்’.  ராமனைப் போல ஒரு தலைவன்  இல்லை என்று பொருள் போடும் நாமம்  ராமனுக்கு.    மஹா பெரியவா கூட  முடிந்த போதெல்லாம் ''சிவ சிவா  ராம ராமா''என்று சொல்லுங்கள் என்று உபதேசித்தவர்.

ராம ராவண  யுத்தம் முடிந்தது.   ராவணனை ராமன்  கொன்றுவிட்டான்.  இந்த செய்தி  சீதைக்கு எப்படி தெரிந்தது? காற்றைக்  காட்டிலும் வேகமாக பறக்கும் ஹனுமான் தான்  சீதையிடம் சென்று  சொன்னது.   சந்தோஷத்தில்  ஹநுமானுக்கு  எப்படி  சீதையிடம்  ராமனின்  ஜெயத்தைப் பற்றி சொல்வது என்று  தெரியாமல்  பேச நா வரவில்லை.  சட்டென்று  சீதையை எதிரில் தரையில் மண்ணில்  பெரிதாக  ''ஸ்ரீ ராம ஜெயம்'' என்று சுருக்கமாக  எழுதினர்.  சொல்லின் செல்வன் அல்லவா?

ஆகவே முதன் முதலாக  ராம ஜெயம்  எழுதியவர் மாருதி தான்.   ராவணனுடன் யுத்தத்தில் ராமனுக்கு ஜெயம் என்று சீதைக்கு அதால் தெரிந்தது.  ஆகவே அன்று முதல்  ஸ்ரீ ராமஜெயம் எழுத ஆரம்பித்தார்கள்.  எழுதியவர்  படிப்பவர்  அனைவருக்குமே  ஆனந்தம். 

ராம  பாணம்,  ராமனின் அம்பு, வில்லில் இருந்து புறப்பட்டு சென்றால்,  இலக்கை அழித்துவிட்டு தான் திரும்பும்.  அது போல் ராம நாமம்  எனும்  ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும்  எப்போதும்  ஜெயத்தையே  தருவது.

லங்கை சென்று திரும்பிய ஹனுமானிடம்  ராமர்  ''சீதை  எப்படி இருக்கிறாள்?'' என்று கேட்டபோது,  ''ப்ரபோ,  சீதா தேவி  துளியும்  கஷ்டப்படுவதாக எண்ணி நீங்கள் கவலைப் படாதீர்கள்.  ராம நாமத்தை ஜபித்துக்  கொண்டே இருக்கிறார்.    ராம  நாமத்தை மறப்போருக்கு தான்  துன்பமும் கஷ்டமும்'' என்றான் ஹனுமன் ..

ராமநாமத்தை  கோடிக்கணக்கான  ஜபித்தவர்  ஸ்ரீ  தியாகராஜ ஸ்வாமிகள்.  ராமர் ப்ரத்யக்ஷமாக அவருக்கு தரிசனம் கொடுத்தார்.

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் பார்வதி தேவியிடம் ஸ்ரீ  பரமேஸ்வரன்  ஸ்ரீ ராமா என்று மூன்று தடவை சொன்னாலே போதும் விஷ்ணுவின் சஹஸ்ரநாமங்களை சொல்வதற்கு ஈடு  என்கிறார்.

 செல்வம் பெருக, கடன் தீர, உத்யோக முன்னேற்றம், தொழில் முன்னேற்றம், வியாபார முன்னேற்றம், பணபிரச்னை நீங்க, திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, நோய் விலக, ஆரோக்யம், மனநிம்மதி, குடும்ப ஒற்றுமை கூட, கண் த்ருஷ்டி நீங்க, தம்பதி அன்யோன்யம் கிடைக்க,  சனி தோஷம், தசா புத்தி தோஷம், நவக்ரஹ தோஷம் விலக, வழக்கில் வெற்றி பெற, எதிரி தொல்லைகள் நீங்க, செய்வினை விலக, கல்வியில் தேர்ச்சி பெற, ஞாபக சக்தி அதிகரிக்க,  மனத்தில் பயம் நீங்க, திக்கு வாய் நீங்க, சிறந்த பேச்சு திறமை, லக்ஷ்மி கடாக்ஷம், ஐஸ்வர்யம், வீடு, வாகனம், ஆபரணம் சேர, தீர்க்க சுமங்கலித்வம்  கிடைக்க,  எதிலும் வெற்றி அடைய, அரசு வேலை, அரசியலில் வெற்றி, வாக்கு பலிதம்  ஆக, கணவன் மனைவி சேர, மனோ தைரியம் பெருக, இவை அனைத்தும் ஹனுமனை துதித்து ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவதால் ஏற்படும் நன்மைகள். இன்னொரு விஷயம்  நான் கொடுத்த லிஸ்டில் இல்லாத விஷயங்களும்  ராமஜெயம்  எழுதுவதால்  பெறலாம்.

 ஒவ்வொரு குடும்பமும் எப்படியும் 1008 முறையாவது ஸ்ரீ ராம ஜெயம் எழுத வேண்டும். எந்த மொழியிலும் எழுதலாம். ஒரு நாளைக்கு 108 முறை மட்டுமே ஸ்ரீ ராம ஜெயம் என்று சொல்லி கொண்டே எழுத வேண்டும்.  தெரிந்தவர்களுக்கும் எடுத்து சொல்லி ஸ்ரீ ராம ஜெயம் எழுத சொல்லி, அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வழி காட்டலாம்..அவர்களும் இதை எழுதும் போதும், திருப்பணி கைங்கர்யம் செய்யும் போதும் அந்த புண்ணியம்  அதைச் சொன்னவர்களும்  வந்து சேரும். இதை  சேங்காலிபுரம்  அனந்த ராம தீக்ஷிதர் சொல்லி கேட்டிருக்கிறேன். 

ஒரு சிலர்  ஆச்சர்யமாக, அனால்  துரதிர்ஷ்டவசமாக,   ராம நாமம் எழுதினால்  வீட்டில்  கஷ்டங்கள் ஏற்படும்,   ராமன்  துன்பப்பட்டவன், சீதையை  பிரிந்தவன்,  ஆகவே  எழுத கூடாது என்று பிரச்சாரம் செய்வது நம்பியார் வீரப்பா  வேலை. அப்படி நினைப்பதே  மஹா பாபம்.  ராமஜெயம் எழுதி துன்பங்கள் அனுபவித்தவர் எவரும் இல்லை.  பூர்வ ஜென்ம பாபங்கள் ராம ஜபத்தால் தீரும் போது ராம நாமம் எழுதினால் சொன்னால் எப்படி பாபங்கள் சேரும்.?  நல்ல காரியங்களுக்கு தடை சொல்வது ரொம்ப தவறு.   அப்படி யாராவது சொல்வதை  ஏற்றுக் கொள்ளாமல் நீங்களே சிந்தித்து பார்க்கவேண்டும்.   கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்று சொல்வது போல் இருக்கிறது இது. பக்தர்கள் இதை நம்புகிறீர்களா?

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...