Wednesday, December 21, 2022

diplomacy

 ராஜ தந்திரம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 


 இப்போது   நடப்பதெல்லாம்  அப்போதே நடந்தது தான்.   துர்யோதனன்  ராஜ சபை  நமது சட்டசபை மாதிரி அமளி துமளியாக  உரத்த குரலில் சப்தங்களோடு ஒலித்தது.  ஆமாம் ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்னால்.

ஆம்  கிருஷ்ணன் த்வாரகையிலிருந்து  பாண்டவர்களுக்காக சமாதான  தூது பேச வந்திருக்கிறான். அவர்கள் உரிமையை யுத்தமில்லாமலே, சமாதானமாக  பெற  முயற்சிக்கிறான்.   பிரச்னை   தீரவில்லை.  யுத்தம் ஒன்று தான்  முடிவு என்று ஆகி விட்டது.  ஆகவே   கிருஷ்ணன்  தூது  தோல்வியடைந்தது என்று சொல்லலாமா?

அங்கேதான்  சூக்ஷ்மம் இருக்கிறது. கிருஷ்ணன் சமாதான தூதுக்கு  வந்தானே தவிர  இந்த யுத்தம் நடைபெற வேண்டும் அதில் பாண்டவர்கள் வெற்றி பெற்று  தர்மம் நீதி  நிலைக்க வேண்டும் என்பது தானே அவன் நோக்கம். அதற்குத்தான் அவன் அவதாரமும் எடுத்தான்.

கிருஷ்ணன் தூது   தோல்வியில்  முடிந்த உடன் பாண்டவர்கள் ஆவலாக  முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும்  விராட நகருக்கு திரும்புகிறான்.   

கிருஷ்ணனின்  தேரோட்டி  தாருகன்  கிருஷ்ணனை நன்றாக அறிந்தவன் அல்லவா?   தேரை கடகடவென்று  வேகமாக  ஓட்டிக்கொண்டே  கிருஷ்ணனிடம் பேச்சு கொடுக்கிறான்.   

"பிரபு,  நீங்கள்  துரியோதனன்  அரண்மனையில் தங்காமல் விதுரனை முதலில் சந்தித்து அவர்  ஆஸ்ரமத் தில் தங்கியதால்  கௌரவர்கள்  கொந்தளித்துள்ளார்கள் என்பதை கவனித்தேன்.  நிறைய பேர்  இதைப் பற்றி பேசுவதைக் கேட்டேன்.   கௌரவர்கள்  இதை  சபையில்  உங்களிடம்  வெளிப்படுத்தினார்களா?
கிருஷ்ணன் முகத்தில் புன்னகை.   

''ஆம் தாருகா, நான் எதிர்பார்த்தபடியே அவர்களுக்கு என் செய்கையில்  ரொம்ப ஆத்திரம்''

''நீங்கள் ஏன் அவ்வாறு செயதீர்கள்?.  உங்களுக்கு தான் துரியோதனன் அவன் அரண்மனையிலேயே   வசதியாக தங்க  நல்ல ஏற்பாடுகள்   செய்திருந்தானே.  

''தாருகா, நான் யோசிக்காமல்  எதையாவது செய்வேனா? 

''என்ன காரணம் பிரபு,எனக்கும் சொல்லுங்களேன்''

''ஒரே கல்லில் ரெண்டு  மாங்காய் விஷயம்  தான் அது"

"கிருஷ்ணா  நான்  உங்களைப்  போல் ஞானி அல்ல.  எனக்கும் புரியும்படியாகவே சொல்லலாமே."

"சில  காரியங்கள் எப்போதும் தக்க காலம் வரும்போது தான் புரியும். நீயும் பொறுத்திரு, காத்திரு"

துரியோதனன் ராஜசபையில்  கிருஷ்ணனின்  சமாதான தூது தோல்வி அடைந்து கிருஷ்ணன் சென்ற பிறகு  காரசாரமாக  விவாதம் தொடர்ந்தது.
துரியோதனன்  எப்போதுமே   எல்லோரையும் விட  அதிக  பொறாமையும் சந்தேகமும் கொண்டவன் ஆயிற்றே.  அதிலும் கிருஷ்ணன் விதுரனின்  எளிய  குடிலில் ஒரு இரவு  தங்கி  அவனுடன்   இரவெல்லாம் பேசிக்கொண்டிருந்தான் என்று ஒற்றர்கள் மூலம்  கேள்விப்பட்டான் .
வழக்கம் போலவே  அதனால்  ரெண்டும் ரெண்டும்  நாலு  அல்ல நாப்பது என்று  கணக்கு போட்டு  விதுரன் பாண்டவர்களுக்கு எப்படி  யெல்லாம்  வெற்றி கிடைக்க வழியோ அதெல்லாம் கிருஷ்ணனுடன்  பேசி முடித்து விட்டான்  என்று சந்தேகப்பட்டான்.  விதுரன் பச்சை துரோகி என்ற பட்டம் கொடுத்தான்.

பாண்டவருடன் யுத்தம் நிச்சயம் என்று தான் ஆகிவிட்டதே!!. யார்  யார்  என்ன  என்ன பதவியில்  எப்படி போர் புரிய வேண்டும்? எவர் எவர்  தலைமையில்? என்று காரசாரமான  விவாதம் நடந்தது.

துரியோதனன் கடும்  கோபத்தில் இருந்தான்  விதுரன் மேல்.  துரோணர், கர்ணன்,  பீஷ்மன்  கிருபர் ஆகியோருக் கெல்லாம் யுத்தத்தில் தலைமைப் பதவி அளிப்பு நடந்து கொண்டிருந்தது. 

பீஷ்மர்  '' துரியோதனா , பீஷ்மரை விட்டுவிட்டாயே?  அவர் பராக்ரமம் பிரசித்தம். மஹா வீரர்.  அவர் தலைமை யை அறிவுரைகளை  யுத்தத்தில் சரியானபடி  பயன்படுத்திக் கொள். மிகவும் உங்களுக்கு உதவும்'' என்று விவரித்தார்.

“தாத்தா,  போதும்,  நிறுத்துங்கள்”. விதுரருக்கு எந்த தலைமை பொறுப்பும் கிடையாது.'

''துரியோதனா, என்னை புண்படுத்துவதில் உனக்கு தனி சந்தோஷம் எப்போதுமே.  நீ கொடுத்தாலும் எந்த பொறுப்பையும் நான் ஏற்றுக்  கொள்ளப்  போவதில்லை.  என்னையும்  என்  வீரத்தையும்   நன்றியுணர்ச்சியும்  அவமானபடுத்திய  உனக்காக  நான்  போர்  புரிய மாட்டேன். இது சத்யம்''  

விதுரன்   ராஜசபையில் எழுந்து சபதம் செய்த  போது  சபையில் எல்லோரும் திடுக்கிட்டார்கள்.   தொடர்ந்து  'படார் ''என்று பெரிதாக ஒரு சப்தம் கேட்டது. தன்னுடைய பெரிய  வில்லையும் அங்கேயே  உடைத்து   கீழே எறிந்து விட்டு   விதுரன் வெளியே நடந்தார். 
பீஷ்மன் துடித்து போனார்.
“ முட்டாளே துரியோதனா,  என்ன  காரியம் செய்துவிட்டாய்? எவ்வளவு புரிய நஷ்டத்தை விலை கொடுத்து  வாங்கிவிட்டாய்.  உன்னுடைய பலத்தில்  பெரும்பங்கை  உன் அறியாமையால்  இழந்துவிட்டாயே.''
''தாத்தா, என்ன சொல்கிறீர்கள் நீங்கள் ?'' உறுமினான்  துரியோதனன்.
'' ஆமாம், நீ முட்டாள் என்று நிரூபித்து விட்டாயே.  மாயாவி கிருஷ்ணன் போட்ட திட்டத்தில்  வகையாக  சிக்கி  பாண்டவர்களுக்கு   லட்டு மாதிரி உதவி விட்டாய்”  என்றார்  பீஷ்மர் .
"என்ன தாத்தா புதிர் போடுகிறீர்கள்,  கிருஷ்ணன்  போட்ட திட்டமா?  அது என்ன தாத்தா  ஏதோ கிளப்பி விடுகிறீர்கள்?" 
''ஆமாம் தாத்தா, அந்த கிழ விதுரன் போர்புரியாவிட்டால் அப்படி என்ன  பெரிய நஷ்டம் நமக்கு ?'' என்று சிரித்தான் கர்ணன். 

ஒரு பழங்கதையை  தெரிந்து கொள்வது  இப்போது அவசியமாகிவிட்டதே.
மாண்டவ்ய ரிஷி  தான்  செய்யாத பாபத்திற்கு தர்ம தேவதை  தண்டனை கொடுத்தது  என்று கோபித்து தர்ம தேவதைக்கே ஒரு சாபமிட்டார்
"தர்ம தேவா,  நீ பூமியில்  மனிதனாக  பிறந்து  நீ செய்யாதவற்றுக்கெல்லாம்  பழி ஏற்று தவிப்பாயாக" 

 தர்மதேவதை விதுரனாக பிறந்தான். சிறந்த வீரன்,  வில் வித்தையில்  நிபுணன்.  அவனை எதிர்கொள்வது  மிகவும் கடினம். இதை உணர்ந்த கிருஷ்ணன் துரியோதனனுக்கு விதுரன் மீது சந்தேகம் ஏற்பட விதுரன் வீட்டில் தங்கி அவன் அளித்த உணவை உண்டான்.  அதனால் கிருஷ்ணன் எதிர்பார்த்தபடியே துரியோதனன் விதுரனை சந்தேகித்து அவன் துரோகி என்று முடிவு கட்டி  போரில் அவனுக்கு  மரியாதை கிடையாது என்று சபையில் அனைவர் முன்னிலையில் அவமதித்தான்.  விதுரன் தான் ஒரு தவறும் துரோகமும் செய்யாதபோதே  இந்த அவச்சொல் அவமரியாதை தனக்கு நேர்ந்ததால்  போரில் பங்கேற்க மாட்டேன் என்று சபதம் செய்தான், எவரும் எதிர்த்து வெல்லமுடியாத  வில்லையும் உடைத்ததெரிந்தான்.  அது பாண்டவர்களுக்கு ரொம்பவும் சாதகமாக போய்விட்டது.  

இதைத் தான் தாருகனுக்கு கிருஷ்ணன் "காலம் சொல்லும் பொறுத்திரு" என்று சுட்டிக்  காட்டினானோ?


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...