Tuesday, December 20, 2022

RAMA NAMA

  ''ஸ்ரீ ராம ஜெயம்'' ...நங்கநல்லூர்  J K  SIVAN


மதுராந்தகத்தில்  ஸ்ரீ  ரகுவீர பட்டாச்சாரியார் ராம ஜெயம் எழுத பலரை தூண்டி ஊக்குவிப்பதை  அறிந்தபோது  மட்டும் அல்லாமல் அவரது வீட்டிலேயே  2 கோடி ராமநாமாவை சேகரித்து  பிரதிஷ்டை செய்து  அதன் மேல் ஒரு சிறு பீடம் அமைத்து கோதண்டராமர் பாதம், படம் வைத்திருக்கிறார் என்பதை  பார்த்து வணங்கியபோது ராம ஜயம் பற்றி   அன்பர்களே உங்களுக்குச் சொல்லவேண்டும் என்று தோன்றியது. 

ராம நாமம் எழுதுவது  உலக இன்பங்கள் மட்டுமல்லாமல்  ஆத்ம திருப்தி என்ற முக்கிய காரணத்துக்காகவும்  மிகவும் பயன்படும் மின்றி,   ராம  என்பது தாரக மந்திரம். இதை திரும்ப திரும்ப ஜெபிப்பதன் மூலம்,  எழுதுவதன் மூலம்  உள்ளே கிடக்கும்  தீய   குணங் களையும், எண்ணங்கள்  அழியும்.  வெளியே  இருந்து தீய சக்திகள் நம்மை நெருங்காமல்  அரணாக  பாதுகாக்கும். இது போதுமே.

‘ராம” என்ற மந்திரத்துக்கு எத்தனையோ  அர்த்தங்கள் உண்டு.  ‘மரா” என்று  விடாமல் சொல்ல என்று வால்மீகிக்கு  நாரதர் உபதேசித்தார்.  நமக்கு ராமாயணம் கிடைத்தது.  சீதைக்கு ஒரு பெயர்  ரமா. ராமனுக்குள் சீதை எனும் லக்ஷ்மி தேவி  அடக்கம்.  ஆகவே  ராம  என்று ஜபித்தால்  எழுதினால்  லக்ஷ்மி  கடாக்ஷம் பெறுகும் .  எடுத்த காரியம் யாவினும் வெற்றி.  கற்போர்க்கும், கேட்போர்க்கும், கற்பிப்போர்க்கும்  இவ்வாறு பெறும்  பயன் தரும்.  ஜெய்ராம் சீதாராம் என்று சொல்லிக்கொண்டே  எழுந்திருப்போர், உட்காருவோர்,  சாப்பிடுவோர்  தூங்குவோர் கோடானுகோடி ஹிந்துக்கள்.   மஹாத்மா  காந்தியின் கடைசி வார்த்தை   ''ஹே  ராம்'', என்  தாய் வழி  தாத்தா ப்ரம்ம ஸ்ரீ  வசிஷ்ட பாரதியார்  ''ஜெய்ராம் ஸ்ரீ ராம்''  என்று சொல்லாத  நேரமே கிடையாது.  ராமனைப் பற்றியே  பாடிய, பேசிய, வம்சம். எல்லோருக்கும் குடும்பத்தில் 
ஜெயராமன், சீதா ராமன், ரகு  ராமன், வெங்கட்ராமன் போன்று   ராமன் அடைமொழி நிச்சயம் உண்டு. 

‘ரா” என்றால் ‘இல்லை”  என்று அர்த்தம்.  ‘மன்’ என்றால் ‘தலைவன்’.  ராமனைப் போல ஒரு தலைவன்  இல்லை என்று பொருள் போடும் நாமம்  ராமனுக்கு.    மஹா பெரியவா கூட  முடிந்த போதெல்லாம் ''சிவ சிவா  ராம ராமா''என்று சொல்லுங்கள் என்று உபதேசித்தவர்.

ராம ராவண  யுத்தம் முடிந்தது.   ராவணனை ராமன்  கொன்றுவிட்டான்.  இந்த செய்தி  சீதைக்கு எப்படி தெரிந்தது? காற்றைக்  காட்டிலும் வேகமாக பறக்கும் ஹனுமான் தான்  சீதையிடம் சென்று  சொன்னது.   சந்தோஷத்தில்  ஹநுமானுக்கு  எப்படி  சீதையிடம்  ராமனின்  ஜெயத்தைப் பற்றி சொல்வது என்று  தெரியாமல்  பேச நா வரவில்லை.  சட்டென்று  சீதையை எதிரில் தரையில் மண்ணில்  பெரிதாக  ''ஸ்ரீ ராம ஜெயம்'' என்று சுருக்கமாக  எழுதினர்.  சொல்லின் செல்வன் அல்லவா?

ஆகவே முதன் முதலாக  ராம ஜெயம்  எழுதியவர் மாருதி தான்.   ராவணனுடன் யுத்தத்தில் ராமனுக்கு ஜெயம் என்று சீதைக்கு அதால் தெரிந்தது.  ஆகவே அன்று முதல்  ஸ்ரீ ராமஜெயம் எழுத ஆரம்பித்தார்கள்.  எழுதியவர்  படிப்பவர்  அனைவருக்குமே  ஆனந்தம். 

ராம  பாணம்,  ராமனின் அம்பு, வில்லில் இருந்து புறப்பட்டு சென்றால்,  இலக்கை அழித்துவிட்டு தான் திரும்பும்.  அது போல் ராம நாமம்  எனும்  ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும்  எப்போதும்  ஜெயத்தையே  தருவது.

லங்கை சென்று திரும்பிய ஹனுமானிடம்  ராமர்  ''சீதை  எப்படி இருக்கிறாள்?'' என்று கேட்டபோது,  ''ப்ரபோ,  சீதா தேவி  துளியும்  கஷ்டப்படுவதாக எண்ணி நீங்கள் கவலைப் படாதீர்கள்.  ராம நாமத்தை ஜபித்துக்  கொண்டே இருக்கிறார்.    ராம  நாமத்தை மறப்போருக்கு தான்  துன்பமும் கஷ்டமும்'' என்றான் ஹனுமன் ..

ராமநாமத்தை  கோடிக்கணக்கான  ஜபித்தவர்  ஸ்ரீ  தியாகராஜ ஸ்வாமிகள்.  ராமர் ப்ரத்யக்ஷமாக அவருக்கு தரிசனம் கொடுத்தார்.

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் பார்வதி தேவியிடம் ஸ்ரீ  பரமேஸ்வரன்  ஸ்ரீ ராமா என்று மூன்று தடவை சொன்னாலே போதும் விஷ்ணுவின் சஹஸ்ரநாமங்களை சொல்வதற்கு ஈடு  என்கிறார்.

 செல்வம் பெருக, கடன் தீர, உத்யோக முன்னேற்றம், தொழில் முன்னேற்றம், வியாபார முன்னேற்றம், பணபிரச்னை நீங்க, திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, நோய் விலக, ஆரோக்யம், மனநிம்மதி, குடும்ப ஒற்றுமை கூட, கண் த்ருஷ்டி நீங்க, தம்பதி அன்யோன்யம் கிடைக்க,  சனி தோஷம், தசா புத்தி தோஷம், நவக்ரஹ தோஷம் விலக, வழக்கில் வெற்றி பெற, எதிரி தொல்லைகள் நீங்க, செய்வினை விலக, கல்வியில் தேர்ச்சி பெற, ஞாபக சக்தி அதிகரிக்க,  மனத்தில் பயம் நீங்க, திக்கு வாய் நீங்க, சிறந்த பேச்சு திறமை, லக்ஷ்மி கடாக்ஷம், ஐஸ்வர்யம், வீடு, வாகனம், ஆபரணம் சேர, தீர்க்க சுமங்கலித்வம்  கிடைக்க,  எதிலும் வெற்றி அடைய, அரசு வேலை, அரசியலில் வெற்றி, வாக்கு பலிதம்  ஆக, கணவன் மனைவி சேர, மனோ தைரியம் பெருக, இவை அனைத்தும் ஹனுமனை துதித்து ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவதால் ஏற்படும் நன்மைகள். இன்னொரு விஷயம்  நான் கொடுத்த லிஸ்டில் இல்லாத விஷயங்களும்  ராமஜெயம்  எழுதுவதால்  பெறலாம்.

 ஒவ்வொரு குடும்பமும் எப்படியும் 1008 முறையாவது ஸ்ரீ ராம ஜெயம் எழுத வேண்டும். எந்த மொழியிலும் எழுதலாம். ஒரு நாளைக்கு 108 முறை மட்டுமே ஸ்ரீ ராம ஜெயம் என்று சொல்லி கொண்டே எழுத வேண்டும்.  தெரிந்தவர்களுக்கும் எடுத்து சொல்லி ஸ்ரீ ராம ஜெயம் எழுத சொல்லி, அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வழி காட்டலாம்..அவர்களும் இதை எழுதும் போதும், திருப்பணி கைங்கர்யம் செய்யும் போதும் அந்த புண்ணியம்  அதைச் சொன்னவர்களும்  வந்து சேரும். இதை  சேங்காலிபுரம்  அனந்த ராம தீக்ஷிதர் சொல்லி கேட்டிருக்கிறேன். 

ஒரு சிலர்  ஆச்சர்யமாக, அனால்  துரதிர்ஷ்டவசமாக,   ராம நாமம் எழுதினால்  வீட்டில்  கஷ்டங்கள் ஏற்படும்,   ராமன்  துன்பப்பட்டவன், சீதையை  பிரிந்தவன்,  ஆகவே  எழுத கூடாது என்று பிரச்சாரம் செய்வது நம்பியார் வீரப்பா  வேலை. அப்படி நினைப்பதே  மஹா பாபம்.  ராமஜெயம் எழுதி துன்பங்கள் அனுபவித்தவர் எவரும் இல்லை.  பூர்வ ஜென்ம பாபங்கள் ராம ஜபத்தால் தீரும் போது ராம நாமம் எழுதினால் சொன்னால் எப்படி பாபங்கள் சேரும்.?  நல்ல காரியங்களுக்கு தடை சொல்வது ரொம்ப தவறு.   அப்படி யாராவது சொல்வதை  ஏற்றுக் கொள்ளாமல் நீங்களே சிந்தித்து பார்க்கவேண்டும்.   கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்று சொல்வது போல் இருக்கிறது இது. பக்தர்கள் இதை நம்புகிறீர்களா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...