Friday, December 23, 2022

ADHI SANKARAR EKA SLOKI

 ஆதி சங்கரர் -   நங்கநல்லூர்  J K   SIVAN

ஏகஸ்லோகி     ---   '' ஒத்தை ஸ்லோகம்''  

ஒண்ணே  ஒண்ணு அது  ''நான்''  தான்....

ஸ்லோகம் என்றால் நீளமாக  நிறைய பாடல்கள் தொகுப்பு என்று  நாம்  நினைப்பது ஞாயம். எல்லோரும் அப்படித்தான்  எழுதினார்கள், எழுதுகிறார்கள்.   ஆதி சங்கரரும் அப்படித்தான். பாய் பாயாக  நீளமாக  ஸ்லோகங்கள்  எத்தனையோ  ஸ்வாமிகள்  மேல் பாடியவர்.  அவரே ஒரு வித்யாசமான படைப்பும் படைத்துள்ளது  எத்தனை பேருக்கு தெரியும்?

 அது ஒரே ஒரு ஸ்லோகம்,   நாலு  அடியில்  வேதாந்த தத்துவத்தை அப்படியே  அமுக்கி  பிசைந்து, உருட்டி  ஒரே ஒரு சின்ன  மிளகு உருண்டையாகப்  பண்ணி  கையில்   கொடுத்து விட்டார்  ஆதி சங்கரர்.  அதற்கு  ''ஒரே ஸ்லோகம். ஏக ஸ்லோகி '' என்று பெயர்.  அதை மட்டும் இன்று  ரசிப்போம். இதை எனக்கு முன்பு ரசித்து மகிழ்ந்தவர்  சுவாமி விவேகா னந்தர்.   அவரைப் படிக்கும்போது தான் இது என் கண்ணில் பட்டது.

ஆதிசங்கரரைப் பொறுத்தவரை எப்போதுமே வெட்டு  ஒண்ணு  துண்டு ஒண்ணு (ரெண்டு கிடையாது). அத்வைதி என்பதால் எல்லாம்  ஒன்றே தான். ரெண்டே கிடையாது.  நோ டூயலிட்டி.  எல்லாம் ஒண்ணு  தான். அவர் மேல் தப்பு இல்லை,   நாம் தான்  தப்பு செய்பவர்கள்   எல்லாமே  ஒண்ணே  ஒண்ணு தான் என்று புரிந்து விட்டால்  நாம் வேறு சங்கரர்  வேறு இல்லையே.

ஆயிரக்  கணக்கான  ஸ்லோகங்கள் எழுதியிருக்கிறவர் '' ஒரே  ஒரு ஸ்லோகம்'' என்று ஒரு ஸ்லோகம் எழுதியதை தான் இன்று படிக்கிறோம்.  இது தான் அந்த ஒத்தை ஸ்லோகம்:

किं ज्योतिस्तवभानुमानहनि मे रात्रौ प्रदीपादिकं
स्यादेवं रविदीपदर्शनविधौ किं ज्योतिराख्याहि मे ।
चक्षुस्तस्य निमीलनादिसमये किं धीर्धियो दर्शने 
किं  तत्राहमतो भवान्परमकं ज्योतिस्तदस्मि प्रभो ॥

கிம் ஜ்யோதிஸ்தவ  பானுமான ஹனி மே  ராத்ரோவ் ப்ரதிபாதிகம்
ஸ்யா  தேவம் ரவி தர்சன  விதெள  கிம் ஜ்யோதிராக்யாஹி மே
சக்ஷுஸ் த்ஸ்ய நிமிலநாதி சமயே கிம் தீ தியோ தர்சனே
கிம் தத்ராஹம்  அதோ  பவான்பரமகம் ஜ்யோதிஸ்தத ஸ்மி ப்ரபோ:

''ஐயா,  கொஞ்சம் நில்லுங்க. எந்த வெளிச்சம் உங்களுக்கு உதவுது?   யோசிச்சீங்களா? பகலிலே  சூரியன். பொழுது சாய்ஞ்சா  தீபங்கள், விளக்குகள்.? அவ்வளவு தானா?   சூரியனும்  தீபங்களும்  இருந்தா வெளிச்சம் தெரிஞ்சுடுமா?  கண்ணு  வேண்டாமா? சரி கண்ணுலே இருக்கிற  ஒளி இந்த மற்ற  ஒளி யெல்லாம் பார்க்க  உதவுது.  கண்ணை மூடிக்கிட்டா என்ன தெரியும்? நமக்குள்ளே  ஞானம் , அறிவுன்னு ஒண்ணு  இருக்கு இல்லையா? அது ஒளி காட்டுது.  
சரிங்க.  ஞானம் உள்ளே  இருக்குது. ஒளிகாட்டுதுன்னு யார் உணர  முடியும்?எப்படி   தெரியும்? ஆத்மான்னு, உயிர், ஜீவன்  என்று ஒன்று இருந்தாதானே  மத்ததெல்லாம் தெரியும், புரியும். செத்ததுக்கு என்ன தெரியும்?

ஆகவே,   பகவானே  புரிஞ்சுக்கிட்டேன்.  ஆத்மான்னு ஒரே ஒரு ஒளி தான் உள்ளே வெளியே எல்லாம் வெளிச்சம் போடறது.  பிரகாசமானது. நீதான்  பிரம்மமே ,  அந்த ஆத்ம ஒளி. நீ  ஒண்ணு  தான்  எல்லாமே''.

ஆதி சங்கரர் மேற்கண்ட ஒரே ஒரு ஸ்லோகத்தை ‘ஏக ஸ்லோகி’ என்ற ஒத்தை செய்யுளாக வேதாந்தத்தை ஒரு சீடன் கேள்வி கேட்க குரு விளக்குவதாக பேசி புரிந்து கொள்வதைப் போல அல்லவா எழுதியிருக்கிறார்!    சிஷ்யன்  அப்படி என்ன கேட்டான், குரு என்ன பதில் சொன்னார் என்று பார்த்தால் தானே விஷயம் புரியும்?  சுவாமி   விவேகானந்தர் இந்த ஸ்லோகத்தை அப்படித்தான்  பார்த்தார்.  நாமும் பார்ப்போமே.

''சுவாமி , நான் தங்கள் சிஷ்யன்,  எனக்கு நீங்கள்  ஞானம் புகட்டவேண்டும்''
''அது என் கடமையப்பா.  எனக்கு தெரிந்ததை  நான் உன் போன்ற சிஷ்யர்களுக்கு உரைத்து தெளிவிக்க வேண்டும். அவர்கள் பின்னால் அடுத்த தலைமுறைக்கு அதை அளிக்க
வேண்டும் என்பது தான்  பெரியோர்கள்  அனுஷ்டித்த முறை.  இதைத்  தான் கர்ணபரம்பரை என்பார்கள். கர்ணன் என்பவனின் குடும்ப  வாரிசுகள் என்று அர்த்தம் இல்லை. கர்ணம் என்றால் காது.    பெரிய  தவலை , குடம்  மாதிரி  காது இருந்ததால்  ராவணன் தம்பிக்கு கும்பகர்ணன் என்று பெயர்.

வேத காலத்தில் ஸ்லோகங்களை  எல்லாம் குரு சிஷ்யர்களுக்கு போதித்து அவர்கள் மனதில் இருத்தி,  அவர்களை  மனப்பாடம் செய்ய  வைத்து  அழியாமல்  காத்து, அது  தலைமுறை தலை முறையாக ஒவ்வொரு சந்ததிக்கும் போதிக்கப்பட்டது., அதனால்  மாறுதல் இல்லாமல், அடையாளம் இழக்காமல் பாதுகாக்கப்பட்டது.
''புரிகிறது குருநாதா'
''சரி அப்பனே,   நீ  முதலில்  என்  இந்த கேள்விக்கு பதில் சொல் பார்க்கலாம்.  
''நீ எப்படி இந்த உலகத்தை காண்கிறாய்?''
நாம்   அநேகர்  கண்  கெட்டவர்கள்.  எல்லோருமே   மூக்கு கண்ணாடி போட்டுக் கொள்பவர் களாக இருக்கிறோம்  ஆகவே  மூக்கு கண்ணாடியை துடைத்து விட்டுக்கொண்டு  என் மூக்குக் கண்ணாடியால்  பார்க்கிறேன்'' என்று பதில் சொல்கிறவர்கள்.  

இந்த சம்பவத்தில் வரும்  சிஷ்யன் அருமையானவன்.  நல்ல குருவின் சிஷ்யன்  என்பதால் அற்புதமாக ஒரு பதிலைச் சொல்கிறான்

''சுவாமி , நாம் யாருமே  சூரியனின்  ஒளியால் தான் எதையும் காண்கிறோம். நல்ல  பார்வை இருந்தாலும் சூரிய ஒளியின்றி, எதையும்  காணமுடியாது.''
'பகலில்  நீ சொல்வது  சரி.  இரவு வந்தால்  எப்படி  பார்க்கிறாய்?''
'தீபத்தின்  ஒளியால்,  குருநாதா”
 ‘ஓஹோ, . நீ  விளக்கை பார்த்து எடுத்து அதை எண்ணெய் திரி போட்டு ஏற்றியபின் தான்  அது உனக்கு ஒளி கொடுத்தது.  அதை ஏற்றுவதற்கு முன்  விளக்கை எப்படி பார்த்து தெரிந்து கொண்டாய்?”
''குருநாதா,  விளக்கை  என்  அறிவால் , புத்தியால் தான்  அடையாளம் தெரிந்து கொண்டேன் 
”சபாஷ்  சிஷ்யா,  சரியான பதிலை சொன்னாய். உனக்குள் இருக்கும் புத்திக்கு   எத்தனை யோ  பொருள்களுக்கு  இடையே  இது தான்  விளக்கு என்று எது பார்த்து தெரிந்து கொள்ள வைத்தது?'
''நான் அதையும் யோசித்தேன்  குருநாதா. 
”நான்” எனும் ஆன்மா, பிரம்மம் தான் புத்திக்கு  வழி காட்டியது''
”ஆமப்பா, நன்றாக  உணர்ந்தவன் நீ.   நீ தான் அந்த புறவெளியை அடையாளம் காட்டிய ஆன்ம ஒளி”
''சதகோடி  நமஸ்காரம் குருவே. தங்கள் அருளால் ”நான்” யார்? என்று புரிந்துகொண்டேன்.
இது தான் மேலே சொன்ன சின்ன  நாலு அடி  ஸ்லோகத்தின் சாராம்சம். ப்ரம்ம ஞானம் பற்றியது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...