Monday, December 23, 2019

THRUVEMBAVAI



திருவெம்பாவை   J K   SIVAN 


                                           8.  பாவையும்  பரமேஸ்வரனும் 

என்ன தவம் எப்போது செய்தோமோ இப்பிறவியில் மானிடராக பிறந்திருக்கிறோம். தவம் செய்யாவிட்டாலும் தவத்துறை எனும் க்ஷேத்ரமாவது ஒரு வேளை சென்றிருக்கலாம். தவத்துறை என்ற நல்லபெயர். திருமாலை மணக்க வேண்டி சிவனை நோக்கி மஹா லட்சுமி தவமிருந்த தலம் என்பதால்  உண்டானது.   க்ஷேத்ரத்தின்  மரியாதைக்குரிய பெயர்  ''திருத்தவத் துறை''. திருச்சியிலிருந்து 20 கி.மீ. கொள்ளிடக்கரையில் உள்ள அமைதியான  சிற்றூர்.   திருத்தவத்துறை எனும் அற்புதமான பெயர் மறந்து போய்   இப்போது  அது  எப்படி ''சிகப்பு கோவில்'' (லால் குடி) ஆயிற்று ?  

கோவில்களுக்கு செல்லும்   ஹிந்துவை  பக்தன் என்கிறோம்.. ஹிந்து அல்லாத முஸ்லீம் ஒருவனும்  அப்படி நிறைய
ஹிந்து கோவில்களுக்கு சென்றவனை இன்றும் நாம் நினைவில் வைத்திருக்கிறோம். ஒரே வித்யாசம் அவனுக்கும் ஹிந்து பக்தர்களுக்கும் என்னவென்றால், அந்த முஸ்லீம் அநேக ஹிந்து கோவில்களுக்கு நம்மைப்போல எதையாவது இறைவனுக்கு படைக்க செல்லவில்லை.  உடைக்க  சென்றவன். ஸ்தலங்களுக்கு படையெடுத்து பகவானையும் அவன் கோவிலையும் உடைப்பது தான்  லக்ஷியம்.  மாலிக்காபூர் திருத்தவத்துறைக்கு  வழக்கம்போல  சிலை உடைக்க  வந்தான். சிவன் கோவில் கோபுரத்திற்கு சிகப்பு வர்ணம் பூசிக்கொண்டிருந்தார்கள்.

''அது என்ன  சிகப்பு கோவில். ''லால் குடி''  அங்கே போ''  அன்று  பல்லக்கு  தூக்குபவனுக்கு உத்தரவிட்டான்.
அந்த மஹானுபவன்   வாயில்  எந்த வேளை  அந்த  சிகப்பு கோயில்  என்ற பெயர் வந்ததோ   அப்போதிலிருந்து   திருத்தவத்துறை   ''லால் குடி''   ஆயிற்று.

லால்குடி   பரம சிவனுக்கு  சப்தரிஷீஸ்வரர் என்று பெயர், அம்பாள் மஹாசம்பத் கௌரி, இன்னொரு பெயர் சிவகாமசுந்தரி, ஸ்ரீமதி.      சப்த ரிஷிகளும் (வசிஷ்டர், அத்ரி, பிருகு,புலத்தியர், கௌதமர், ஆங்கீரசர்,மரீசி ) வழிபட்ட ஸ்தலம். அப்பர் பாடல் பெற்ற ஆயிர வருஷ சிவ ஸ்தலம். கர்ப்பகிரகத்தின் வெளியே நிறைய கல்வெட்டுகள்
 உள்ளன. தவிர அற்புதமான  யானை - யாளி சிற்பங்கள் வேறு.

தன்னையே பெண்ணாக பாவித்து இறைவனிடம் தனது பக்தியை காதல் ரூபமாக வெளிப்படுத்துவது ஒரு வகை. இப்படி அற்புதமான பக்தியை வெளிப்படுத்தியவர் திருமங்கை ஆழ்வார் , நம்மாழ்வார் மணிவாசகர் பாரதியார் போன்ற உயர்ந்த மனித உருவில் வந்த தெய்வங்கள்.    
திருவெம்பாவையில்  மணிவாசகர் தானே பெண்ணாக வந்து மற்ற பெண்களை துயில் எழுப்புகிறார். இந்த பாடல் என்ன சொல்கிறது அவர் சிவ பக்தியை எப்படி விளக்குகிறது என்று அனுபவித்து ஆனந்திப்போம்.

''கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய். 8

''பார்த்தாயா பெண்ணே, பொழுது விடிந்து விட்டதன் அடையாளமாக வழக்கமான உயிருள்ள கடிகாரம் சேவல் கோழி எங்கும் 'கொக்கரக்கோ ' என எழுப்புகிறது. பறவைகளில் எது கூவினாலும் கோழி கூவுவதற்கு தனி மரியாதை உண்டு
 
மற்ற பறவைகளும் கூடுகளில் இருந்தோ, மரக்கிளைகளில் அமர்ந்தோ சப்த ஸ்வரங்களில் இசை பாடுகின்றனவே. இதெல்லாம் விடடி . நானும் மற்ற பெண்களும் அந்த பரம்பொருள் பரமசிவனை, பல்வேறு ராகங்களில், போற்றி பாடுகிறோமே. அவனை யாருக்கு உவமையாக காட்டுவது என தெரியாமல் திணறுகிறோமே, அவன் கருணை, தயை, வேறு

 ஒப்பற்ற மேலான கருணை யுடைய சிவபெருமானது, நிகரில்லாத உயர்ந்த புகழை நாங்கள் பாடினோம். அவற்றை உன் காது கேட்கவில்லையா? பெண்ணே நீ நன்றாக வாழ்வாயாக; இது எத்தகையதான தூக்கமோ? வாயைத் திறக்க மாட்டேன் என்கிறாயே! பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமால் போல இறைவனிடத்தில் அன்புடையவளான உன் தகைமையும் திறமும் இப்படித்தானோ? பேரூழியின் இறுதியில் தலைவனாய் நின்ற ஒருத்தனாகிய உமை பாகனை எங்களோடு சேர்ந்து பாட எழுந்திரு . சீக்கிரம். '' என்று  எழுப்புகிறாள் அந்த ஆண்டாள் மாதிரியான பெண்.
  
திருத்தவத்துறை ஸ்தல புராணம் .சொல்கிறேன். ஒரு தடவை தாரகாசூரனின் தொல்லை தாங்காமல் தேவர்கள், ரிஷிகள் சிவனிடம் முறையிட்டார்கள்.  சூரனின் அட்டகாசத்தை அடக்குவதாக சிவன் வாக்களித்தார்.அதன் பொருட் டுதான் சூரனை அழிக்க முருகன் பிறந்தான்.

ஆலயத்தின் அருகே ஒரு அடர்ந்த வனம். அங்கே அத்ரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர்,மரீ சி ஆகியோர் ஆஸ்ரமம் அமைத்து வாழ்ந்தார்கள். அவர்களிடம் திருவிளையாடல் செய்ய ஈசன், தனது இளைய குமாரன் சுப்பிரமணியனைக்கொண்டு வந்து அந்த ஏழு குடில் பகுதியில் போட்டார். ரிஷிபத்தினிகள் அதிசயமாய் அங்கே கிடைத்த வினோதமான குழந்தையைப் பார்த்தனர். சுப்ரமணியன் லேசாய் அழத்துவங்க ஏழு ரிஷி பத்னிகளும் அவனுக்கு விளையாட்டு காட்டினர். அவனுக்குப் பசி. அழுகை அதிகரித்தது.  அழுகை பலமாகியது.  . ரிஷி பத்தினிகள் உதவ முடியாததால் அங்கே வந்த கார்த்திகைப் பெண்கள், முருகனைத்  தூக்கி பரிவோடு தாலாட்டி பாலூட்டினார்கள். வேள்வி முடித்து வந்த முனிவர்கள் தத்தம் மனைவியர் குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததைக் கேள்விப்பட்டனர். சிவனின் வாரிசுக்கு பால் கொடுத்தால் எவ்வளவு பாக்கியம். காலம் காலமாய் அந்த சந்தோஷத்தில் காலம் கழிக்கலாமே. அந்த நல்ல வாய்ப்பை கெடுத்து, அந்த புகழைக் கார்த்திகை பெண்களுக்கு கொடுத்து விட்டீர்களே என்று சினந்தார்கள். மனைவியரை அடித்து விரட்டினர். முருகப் பெருமான் தன் அவதார காரணத்தை உணர்ந்தார்.

தாரகாசூரனைக் கொன்று, வெற்றியோடு திரும்பும்போது, சப்த ரிஷிகளும் தத்தம் மனைவியரை விரட்டிய விஷயம் கேள்விப்பட்டு கோபித்தார். அத்திரி, பிருகு, புலஸ்தியர்,வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகிய 7 ரிஷிகளுக்கும் சாபமிட்டார். ரிஷிகள் நடுங்கி தங்களது குற்றம் உணர்ந்து நேராகத் திருவையாறு சென்று, சிவனை வணங்கித் தவம் செய்தனர். பலன் கிடைக்கவில்லை. பிறகு லால்குடி (திருவத்துறை)வந்து, சிவனை நினைத்துக் கடும் தவம் புரிந்தனர். சுயம்புலிங்கமான சிவன்,    முனிவர்கள் தவத்தினை ஏற்று, அவர்களுக்கு சாப விமோசனம் தந்தார். தன் தலைப்பகுதி வெடிக்க அதிலே அக்னியை உண்டாக்கி அதன் தீப்பிழம்புகள் ஏழு முனிவர்களையும் உள்  வாங்கிக் கொண்டது. லால்குடி சிவலிங்கத்தின் மேல்பகுதியில் வரிவரியாய் பள்ளம் இருப்பது இந்த சம்பவத்தை குறிக்கிறது



சிவனின் முழு அருளையும் அந்த ஏழு ரிஷிகளும் பெறுகிறார்கள். அன்றுமுதல் சிவனுக்கு இங்கே “சப்தரிஷீஸ்வரர்” என்று பெயர். நுழைவாயில் அருகே இன்றும் அந்த ஏழு ரிஷிகளும் காட்சி தருகிறார்கள். ரெண்டு ஏக்கர் பரப்புள்ள ஆலயம். ஐந்து நிலை கோபுரம்.

மரீசீ மகரிஷியின் பேரன் சூரியன். அத்திரியின் மகன் சந்திரன். சந்திரனின் மகன் புதன். ஆங்கீரசரின் மகன் குரு. வசிஷ்டரின் வழிவந்தவன்  அங்காரகன்  எனும்  செவ்வாய்.எனவே நவக்கிரகங்களால் இன்னல்படுபவர்கள் சப்தரிஷீஸ்வரரை வணங்கினால் இன்னல் தீரும். விஷ்ணுவுக்கு சக்ராயுதம் இங்கே தான் சிவனை துதித்தபிறகு கிடைத்ததாம்.

ரெண்டு சமீப கால உன்னத பெயர்கள் லாகுடியோடு சம்பந்தப்பட்டவை. ஒன்று ஸ்ரீ லால்குடி ஜெயராமன். வயலின் வித்துவான். மற்றவர் லா.ஸ.ரா. எனக்கு பிடித்த அற்புத எழுத்தாளர். லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம். அமரத்துவம் வாய்ந்த எழுத்துக்கு  சொந்தக்காரர்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...