Tuesday, December 24, 2019

THIRUMOOLAR



திருமூலர்   j k  sivan 

                               இறைவன் யார் தெரியுமா?

திருமூலரைப்போல  பக்தியை  எளிய தீந்தமிழில் சொற்கட்டோடு சொல்பவர்  விரலை விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் தான். ஒளவை, சிவவாக்கியர், கம்பர், பாரதி  நான் வியக்கும்  தமிழ் தூண்கள்  அவர்களில் அடக்கம்.

பிள்ளையாரப்பனை  திருமூலர்  வர்ணிப்பது அவனை எதிரே கண் முன் கொண்டு நிறுத்தும்.

ஐந்து கைகள், ஒன்று அதில் தும்பிக்கை,   முகமோ விசித்திரமானது.  யானையின் அழகு முகம். அர்த்த சந்திரன் போல் வெள்ளை வெளேரென்று வளைந்து இருக்கும் தந்தம். நந்தியின் மகன், ஓங்கார ப்ரணவஸ்வரூபனான அவனைப் போல் ஞானவானைக்  காண முடியாது என்பதால் ஞானக் கொழுந்து  என்கிறார்.  அவனை மனதில் இருத்தி வணங்காமல் வேறென்ன வேலை? என்கிறார்.  எல்லா குழந்தைகளும் மனப்பாடம் செய்து தினமும்  சொல்லவேண்டிய அற்புத பிரார்த்தனை செய்யுள். 

''ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.

இறைவன் யார்?  
ஒரே ஒருவன் சகலத்திலும், சகலமாகவும் இருப்பவன். 
ரெண்டு என்பதும் அவனே. அவனுள் அவள். சக்தியும் சிவனும்சேர்ந்தல்லவோ அருள் பாலிக்கிறார்கள்.
மூன்று என்றாலும் அவன் தான்.  பதி பசு பாச தத்துவம் அவனே அல்லவா?  நேற்று, இன்று நாளை எனும் காலம் கடந்து எங்கும் எப்போதுமானவன்.
நான்கு என்று சொன்னாலும் அது அவனையே. '' வேதத்தின் உட்பொருள் ஆவான்'' அல்லவா? இன்னொரு நான்கு  இச்சா,  கிரியா, ஞான, புருஷா சக்தி அனைத்தும் அவனே என்று குறிக்கும்.
ஐந்து என்றால் ஐம்பொறிகள், ஐம்புலன்கள் அனைத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டவன். பஞ்ச பிராணனாக சகல ஜீவர்களிலும் இருப்பவன்.
ஆறு என்றாலும்  ஷட் சக்ரம் என்று நம் உடலில் ஆட்சி செலுத்தும்  ஆறு நிலைகளை குறிக்கும். மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, சஹஸ்ராரம் எனும் குண்டலினி  பிரயாணம்  செய்யும் ரயில்வே ஸ்டேஷன்கள் அவனே.   
ஏழு என்றாலும் இந்த மேலேழு  கீழெழு, லோகங்களை படைத்து, காத்து நிர்வகிக்கும் அவனே. 
எட்டு என்றாலும் திரும்ப திரும்ப  இந்த பஞ்ச பூதங்கள், ஆன்மா, சூரிய சந்திரர்கள் ஆகிய எட்டும் அவனே என்பதில் துளியும் சந்தேகமே இல்லை. இதை திருமூல தமிழில் எப்படி இருக்கிறது என்று படிப்போமா?

''ஒன்று அவன் தானே, இரண்டு அவன் இன் அருள்,
நின்றனன் மூன்றின் உள், நான்கு உணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழ் உம்பர்ச்
சென்றனன், தான் இருந்தான் உணர்ந்து எட்டே. ''.

நாம்  நல்ல  உயிர்கள் இல்லை என்றால் இனியாவது நல்லுயிராக முயற்சிப்போம். ஏன் என்றால் நம்மில் அவன் இருக்கிறானே? அதற்காகவாவது நாம்  உயரவேண்டாமா? 
நாலு திசைகளிலும் எங்கும் வியாபித்து இருக்கும் பராசக்தியோடு சேர்ந்துள்ள உமா நாதன் இல்லையா அவன்? 
மேலே  சொன்ன நாலு திசையில் தெற்கு ஒன்று என்று தெரியும். தென் திசைக்கதிபதி யமன். மறலியைக் காலால் உதைத்த  கால சம்ஹார மூர்த்தி அல்லவா சிவன்?  காலகாலனை, சர்வேஸ்வரனை தான் நான் இறைவன் என்று போற்றுகிறேன் என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்  திருமூலர் இந்த  பாடலில்:  அது இதோ: 

''இன் உயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கும் நல்ல மாதுக்கு நாதனை
மேல் திசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாம்
கூற்று உதைத்தானை  போற்றி இசைத்து யான் கூறுகின்றேனே''.

அப்பப்போது திருமூலரை சந்தித்து கொஞ்சம் விஷய தானம் பெறுவோம்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...