Sunday, December 15, 2019

THIRUK KOLOOR PEN PILLAI



திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் J K SIVAN

25 ''அனு யாத்திரம் செய்தேனோ அணிலங்களைப் போலே''

ஆழ்வார்களின் பக்தி, அதி விசேஷமாக பாராட்டை பெறுவதற்கு ஒரு முக்கிய காரணம், அவர்களின் தீந்தமிழ் பக்தி பாசுரங்கள். அற்புத கற்பனைகளோடு, அழகு தமிழில் அவர்கள் பக்தியை வெளிப் படுத்துவதை மனதில் வாங்கி படிக்கும்போது கண்கள் பனிக்கிறது. வார்த்தைகளின் ஆழமான பொருள் எளிய தமிழில் பரமனை நம் கண்முன்னே பாசுரத்தில் காட்டுகிறது.

தொண்டரடிப்பொடியாழ்வாரின் ஒரு பாசுரம்:

''குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடைக்கல் உற்ற சலம் இலா அணிலும் போலேன்;
மரங்கள் போல் வலிய நெஞ்சு வஞ்சனேன், நெஞ்சு தன்னால்
அரங்கனார்க்கு ஆட் செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே.''

''ஐயோ நான் என்ன பிறவி எடுத்தேன்? வானர சைன்யம் அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக ஓடி ஸ்ரீ ராமன் கடலைக் கடந்து இலங்கை செல்வதற்கு நீலன் நளன் ஆகியோர் கட்டளைப்படி கடலில் கற்களை கொண்டு வீசுகிறது. மலை போல் பெரும் பாறைகள் குவிகின்றன.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த சில அணில்களுக்கு தாமும் ஸ்ரீ ராம காரியத்
தில் ஈடுபடவேண்டும், என்ன செய்ய லாம், நம்மால் முடிந்தது என்ன ? என்று தமக்குள் யோசித்தன. ஆஹா இப்படி பண்ணுவோம், நாமும் கடற்கரை ஓரமாக கடல்நீரில் முங்கி குளிப்போம், நம் மீது ஈரம் படும். அந்த ஈரத்தோடு மணலில் புரண்டு உடல் முழுதும் மண்ணாக்கிக் கொள்வோம்.

ஓடிச்சென்று வானரங்கள் அடுக்கிய பாறைகளின் இடுக்குகளை நமது உடல் மணலால் நிரப்பி பாலத்தை கெட்டிப் படுத்துவோம் '' என்று முடிவெடுத்து விறுவிறுவென அத்தனை அணில்களும் மும்முரமாக இந்த பணியை செய்தன
.
ஸ்ரீ ராமன் லக்ஷ்மணனுடன் கடற்கரை யில் நின்று எதிரே கடலையும், வானரங் கள் கடலில் பாலம் அமைக்க கற்களை அடுக்குவதையும் பார்த்துக் கொண் டிருக்கிறார். அவர் கண்கள் குறுக்கும் நெடுக்கும் ஓடி சில அணில்களும் மணலை உடலில் பூசிக்கொண்டு பாறைகள் இடுக்கில் அந்த மணலை நிரப்பி இடுக்குகளை அடைத்து கெட்டிப்படுத் துவதை பார்க்கிறது். புன்னகைக்கிறார்.

அப்போது சில வானரங்கள் இந்த அணில்கள் செயலை கண்டு சிரித்து கேலி செய்கின்றன. அணில் தலைவன் வானரங்களிடம் ''ஐயா புண்யவான் களே, நாங்கள் உங்கள் போல் பலம் கொண்ட சரீரம் படைத்தவர்கள் இல்லை. எங்கள் மனத்திலும் உங்களைப்போல் ஸ்ரீ ராமனுக்கு சேவை செய்ய எண்ணம் அதிகமாகவே இருப்பதால் எங்களால் இயன்றதை உங்களுக்கு உதவியாக செய்கிறோம் ''என்றது.

இந்த காட்சியை ராமரைப்போல் ஆழ்வாரும் பார்த்து தமது பாசுரத்தில் ரெண்டு வரி கூட சேர்க்கிறார்.

''நான் மஹா பாவி. வைரம் பாய்ந்த நெஞ்சன். குரங்குகள் போலவோ அணில்களைப் போலவோ சேவை செய்யாமல் வெறுமே மரம் போல் ஒன்றும் செய்யாமல் இறுகிய கல் நெஞ்சனாக நிற்கின்றேன். இந்த லக்ஷணத்தில் அரங்கனுக்கு ஒரு சேவையும் செய்யாத போதிலும் அவன் அருள் மட்டும் வேண்டும் என்று கையேந்தி நிற்கின்றேன். என்ன கேவலம் '' என்று அற்புதமாக பாடுகிறார் ஆழ்வார்.

நாம் மீண்டும் ராமனிடம் போவோம். ராமன் அணில்கள் சேவையை மெச்சி பாராட்டி, அந்த தலைவன் அணிலை ஆசையாக கையில் பிடித்து அதன் முதுகில் வாத்சல்யத்தோடு தனது விரல்கலால் தடவிக்கொடுக்கிறார்.

''ஆஹா என்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் சுயநலம் இன்றி சேவை செய்ய முன்வந்த உங்களை எப்படி நன்றியோடு பாராட்டுவேன்'' என்று தடவிக்கொடுக்கிறார். ராமன் கையில் மூன்று விரல்கள் அந்த அணிலின் முதுகில் தலையிலிருந்து படுகிறது. அடுத்த கணமே அந்த அணிலின் உடலில் பொன்னிற மஞ்சளில் மூன்று கோடுகள்.. அணில் மகிழ்ந்தது. இரு கை கூப்பி ராமனை வணங்கியது.

''என்ன என்னிடம் ஏதோ கேட்கப் போகிறாய் போலிருக்கிறதே. சொல் '' என்கிறார் ராமர்.

''ஸ்ரீ ராமா, எனக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பு?. என்போல் உழைத்த அனைத்து என் சகோதர அணில்களுக்கும் இந்த பெருமை வேண்டுமே'' என்றது.

''ஹா ஹா'' என்று சிரித்த ராமர் ''அவ்வாறே'' என்கிறார்.

அன்று முதல் இன்றும் நமது தோட்டத்தில், வீட்டில் மரங்களில், ஓடி ஆடும் அணில்களுக்கும் மூன்று மஞ்சள் கோடுகள் நம் கண்ணை ப்பறிக்கிறது.

நாம் காணும் இந்த அணிலின் முதுகின் மூன்று தங்க நிறக்கோடுகளை எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பு திருக்கோளூரில் நமது கட்டுரையில் வரும் தயிர் மோர் கடைந்து விற்கும் அந்த பெண்ணும் பார்த் திருக்கிறாள். அந்த கோடுகளின் சரித்திரமும் அவளுக்கு பழக்கமானது. அவள் தான் எல்லாம் தெரிந்த கெட்டிக்காரியாயிற்றே. ஆகவே அந்த ஞாபகம் வந்ததால், ஸ்ரீ ராமாநுஜரிடம், ''சுவாமி நான் எவ்வாறு இந்த திவ்ய தேசத்தில் வாழ கொடுத்துவைத்தவள். ஸ்ரீ ராமனுக்கு உதவிய அணில்கள் போலாவது என்றேனும் ஒரு நாளாவது கொஞ்சம் பக்தியுடன் ஏதாவதொரு சேவை பெருமாளுக்கு செய்திருக் கிறேனா? சொல்லுங்கள்?''என்று கேட்கிறாள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...