Wednesday, December 25, 2019

MARGAZHI VIRUNDHU




மார்கழி விருந்து      J K SIVAN            
                                                             
          10.   நாற்றத் துழாய் முடி நாராயணன்

சரியான,  துடிப்பான, பெண் அந்த ஆண்டாள். விடாப்பிடியாக ஒவ்வொன்றையும் நினைத்தபடி  சாதிப்பவளாயிற்றே. முடியாதது என்று ஒன்றில்லை அவளை பொறுத்தவரையில். மனத்தில் உறுதி இருந்தால் எதுவும் நினைப்பதாகவே நிகழும். கிருஷ்ணனை தரிசிக்க வேண்டும். அவன் அருளினால் வேண்டியதைப் பெறவேண்டும். அதற்கு அவனை விடாது நினைத்து விரதம் இருக்க வேண்டும் என்று  அவள் முனைந்தாள். மற்ற பெண்களையும் அவ்வாறே அவன் அருள் பெற வழிகாட்டிய பெருந்தகை அந்தச் சிறு பெண்.  மனமுருக வேண்டினால் மாதவன் ஏற்பான் , ஏமாற்றமில்லை என ஆண்டாளுக்கு தெரியும்.

''மார்கழி பத்தாவது நாள்  அல்லவா இன்று.   வாருங்கள் பெண்களே, செல்வோம் உடனே யமுனைக்கு.. இன்றும் விடப் போவதில்லை, வழக்கம் போல் கதவைப் பிளப்போம். துயில் கொண்ட பெண்களை எழுப்பி விரதத்தில் பங்கேற்க வைப்போம்'' என்று ஆண்டாள் முழங்க,  மற்ற ஆயர்குடி சிறுமிகளும் ஆண்டாளுடன் வீடு வீடாக சென்றனர்.

''ஆண்டாள் இன்று எங்களுக்கு நீ இயற்றிய பாடலைச் சொல்கிறாயா?

''ஆஹா சொல்கிறேனே. பெண்களே முதலில் சொல்லுங்கள்,  உங்களுக்கு ராமனைத் தெரியுமா?

''ரொம்பத் தெரியாதும்மா ஆண்டாள்? எங்க பாட்டி சொல்வாள் ஒரு கதை. அதில் வருகிற ராமன் தானே? கோவிலில் வில் வைத்துக்கொண்டு நிற்கிறவர்? ''

' சரி நிறுத்து உன் கதையை.    நானே சொல்கிறேன் கேளுங்கள். போன ஜன்ம புண்யத்தாலே நாம் பாவை நோன்பிலே புகழ்ந்து பாடும் கிருஷ்ணனாக வந்த நாராயணன் அதற்கு முன்னாலே ராமனாக  ஒரு தடவை வந்து ஒரு நல்ல வேலை செய்தார் . என்ன தெரியுமா? ராவணன் என்கிற அரக்கனை கொல்வதற்கு முன்னால் ராமனோடு சண்டை போட அவனது தம்பி கும்பகர்ணன் என்கிற பலம் கொண்ட அரக்கன் கோபத்தோடு வந்தான். ஆனால் அவன் ஒரு வரத்தைத் தப்பாக கேட்டு அதனால் எப்போதும் மீளாத் தூக்கத்தில் மாட்டிக்கொண்டான். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் அந்த வீராதி வீரன், பொல்லாத ராமன், தன்னிடம் சண்டையிட்டு கும்பர்கணன் இறந்துபோவதற்கு முன்னால் அவனுடைய மீளா தூக்கத்தை இந்த வீட்டில் இருக்கும் நமது தோழியிடம் பரிசாக கொடுக்க வைத்தான் பார்!! 

சில பெண்கள் இன்னும் தூங்குவதை வேடிக்கையாக இவ்வாறு ஆண்டாள் கேலி செய்வது, கூட இருந்த பெண்களை கலீர் என்று சிரிக்க வைத்தது. ஆண்டாள் கதவைத் தட்டி உள்ளே தூங்கியவளை எழுப்பினாள் :

''சீக்கிரம் எழுந்து ஓடி வந்து கதவைத் திற. உன் வீட்டு வாசலில் நின்று நின்று பொழுது விடிந்து நாளை மார்கழி 11ம் நாள் வந்துடும் போல இருக்கிறது.!'' என்றாள் ஆண்டாள்..

இதைக்கேட்டு இதுவரை தூங்கிய அந்தப் பெண்ணும் வெட்கப்பட்டுக் கொண்டு எழுந்து வெளியே வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.

அனைவரும் யமுனையில் நீராடி, அந்த மாய கிருஷ்ணனை, வாயாரப்பாடி புகழ்ந்தனர்.

''துழாய் என்றால் துளசி. துளசிக்கு தனி வாசம் உண்டு. மணம் கமகமக்க, மாலையை போட்டுக்கொண்டு, நாம் பாடும் அவன் நாமங்களை நம் வாயாலே கேட்பதற்கு காத்துக்  கொண் டிருக்கிறான் பார்த்தீர்களா அந்த கிருஷ்ணன் !. இன்னிக்கு உண்டான பாவை நோன்பை சீக்கிரம் முடிப்போம்.''

உற்சாகம் பொங்க அவர்கள் வழக்கம்போலவே அந்த விடியற் காலையில் யமுனையின் குளிர்ந்த நீரில் நீராடி நோன்பை முடித்து வீடு திரும்பினர். ஆயர்பாடியை விட்டு நாமும் வில்லிப்புத்தூருக்கு  வழக்கம் போல் நடையைக் கட்டுவோம்.

ஆண்டாளும் அவளது தோழியரும் எப்படி அந்த உறக்கம் பிடித்த பெண்ணை எழுப்பினர், என்பதை எவ்வளவு அழகாக தனது ஈடிணையற்ற தமிழில் எளிய நடையில் கோதை பாசுரமாக எழுதியுள்ளாள், என்று வியக்கும் விஷ்ணு சித்தரோடு சேர்ந்து ரசித்து நாமும் பலத்த கரக்கம்பமும் சிரக்கம்பமும் செய்வோம். இது அவள் சிறப்பாக இயற்றிய, ஈடிணையற்ற , என்றும் பெருமையுடன், கோடானு கோடி மக்கள் பூஜித்து பாடிய, பாடும் திருப்பாவை பாசுரம்

' நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய்.''

விஷ்ணு சித்தர் பூஜா விக்ரஹங்களுக்கு அபிஷேகம் செய்து கொண்டே மேற்கண்ட பாசுரத்தை தனக்குள் ஒரு முறை பாடினார்.

சொல்லாமல் சொல்லி, ஆண்டாளாக மாறி, கோதை எதை விளக்கினாள் என்று அவர் மனம் உள்ளே ஆராய்ந்து கொண்டிருந்தது

''சுவர்க்கம்'' என்று சொல்வது அந்த நாராயணனோடு ஒன்று கூடுவது.

''அருங்கலமே'' என்று எதை கோதை குறிப்பிடுகிறாள்? கலம் என்றால் பாத்திரம். ஒருவேளை, மனித இந்த உடலே ஒரு எளிதில் கிடைக்காக அரிய பாத்திரம். அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது என்று சொல்கிறாளா? அதில் அந்த நாராயணனை நிரப்பவேண்டும் என்பதற்காகவா?

நாம் உடுத்துகின்ற உடைக்கும் 'கலம்' என்று ஒரு பொருள் உண்டே . எது உடை? நாராயணன் என்கிற அந்த கிருஷ்ணனின், ரங்கனின் பெருமைகளை வாய் எப்போதும் சொல்வது தான் இந்த உடலுக்கு உடையோ ? சிறந்த ஆடையோ? அவனை சுற்றி வந்து சரண் புகுவது தான் இந்த உடலுக்கு உடையோ? ஆபரணமோ?

விஷ்ணு சித்தரின் கேள்விக்கு 'ஆமாம் ஆமாம்' என்று மலர்கள் நந்தவனத்தில் தென்றல் காற்றில் பதிலாக தலையாட்டின. MLV அவர்களின்  தேன்  குரலில் இந்த பாசுரம் கேட்க : https://youtu.be/ZVA9z3euWb4  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...