Monday, December 23, 2019

AARAYANAMAN

ஸ்ரீ  விஷ்ணு ஸஹஸ்ரநாமம்   J K  SIVAN 

              ஆயிர நாமன்     (361-376)

361. லக்ஷ்மீவான் : லட்சுமி மணாளன். ஸ்ரீயப்பதி .

362. சமிதிஞ்சயா: எதிலும் எப்போதும் வெற்றியடைபவர். அதர்மத்தோடு, அநீதியோடு, கொடுமையோடு
அக்கிரமம் செய்பவர்களை எதிர்த்து யுத்தங்களில் வெற்றியே கொள்பவர்.

40. விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர் தாமோதரஸ் ஸஹ: |
மஹீதரோ மஹாபாகோ வேகவா நமிதாஸந: ||

363. விக்ஷரா: க்ஷரம் என்றால் அழிதல் . விக்ஷரா என்றால் அழிவற்றவர். பிரபஞ்சத்தில் எதுவுமே காலத்தில் அழியக்கூடியது. விஷ்ணு காலம் கடந்த அழிவற்றவர்.

364. ரோஹிதோ:   மத்ஸ்ய ரூபம். ஸ்ரீமந்  நாராயணன்  முதல் அவதாரமான மத்ஸ்யாவதாரத்தை குறிக்கும் நாமம். 
365. மார்கா: பாதை, நாம ரூபமற்ற பரம்பொருளை அடையும் முன்பு ஆதாரமாக ஒரு பிடிப்பு வேண்டும். அது தான் விஷ்ணு ஸ்வரூபம் நாம் விரும்பியபடி.

366. ஹேது : காரண பூதம். அகில புவனத்துக்கும் ஆதி காரணன் விஷ்ணு. உபாதான காரணன், அவனே நிமித்த காரணன்.

367. தாமோதரன்: மஹா பாரதத்தில் ''அவனை தாமோதரன் என்கிறோம் ஏன் என்றால் '' தமம்'' எனும் தன்னடக்கம் நிறைந்த பரிசுத்த மனத்தினன் '' என்று வருகிறது. வயிற்றிலே கயிற்றினால் கட்டப்பட்டவன் என்று ப்ரம்ம புராணத்தில் ஒரு சம்பவம் இதை குறிக்கிறது.  அப்படியும் ஒரு அர்த்தம் உண்டு.

368. சஹா: சகித்துக் கொள்பவர். பொறுமையே பூஷணமானவர். மன்னித்தருள்பவர்.

369. மஹீதரா : பூமியை தாங்குபவர். எப்படி தங்கமானது அதனால் செய்யப்பட நகைகளுக்கு ஆதாரமோ, எப்படி சமுத்திரம் அலைகளை  தாங்குகிறதோ, பஞ்சு ஆடையைத் தாங்குகிறதோ அது போல் இந்த ப்ரபஞ்சத்துக்கே விஷ்ணு ஆதார காரணமானவர்.

370. மஹா பாகா: உன்னத அழகு கொண்ட அவயவங்களை உடையவர். இன்னொரு அர்த்தம் எந்த வித யாகத்திலும் பெரும் பங்கு, பாகம் கொண்டவர்.

371. வேகவான்: மின்னல் வேக இயக்கம் கொண்டவர். ஹரி, ஆதிமூலமே என்று குரல் கொடுத்த அடுத்த கணத்திலேயே அங்கே தோன்றி பக்தர்களை காப்பவர். அவருக்கு ஈடே சொல்லமுடியாது. ''மனசோஜவீயா'' என்று ஈஸாவாஸியோபனிஷத் சொல்கிறதே அதற்கு என்ன அர்த்தம் என்றால் ''மனசைக்காட்டிலும் அதி வேகமான'' விஷ்ணு.

372. அமிதாசனா: தீராத பசியுடையவர். உணவு சம்பந்தப் பட்டதில்லை இது. மனதில் உருவாகும் உலகத்தின் சகல எண்ணங்களிலும் மனசு குவிந்து அதில் அடங்கி விடுகிறதை தான் பசியோடு சாப்பிடுவது என்று எடுத்துக் கொள்ளவேண்டும். ஆத்ம விசாரத்தை  பசியாக கொண்ட ஞானம் தேடல்.
.
41. உத்பவ: க்ஷோபணோ தேவஸ் ஸ்ரீகர்ப்ப: பரமேஸ்வர:|
கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா கஹநோ குஹ: ||

373. உத்பவா: மூல காரணன். இந்த பிரபஞ்சமே தோன்ற விஷ்ணுவே ஆதி காரணன். பல முறை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் இதை. அப்போது ல்தான் மனதில் பதியும்.

374. க்ஷோபனா: செயல்படும் கருவிகளில் இருந்து செயல்படுத்துபவர். ப்ரக்ருதியில் புருஷனாக இருந்து செயல் படுத்துபவர்.

375. தேவா: ஜெய விஜயீபவன் தான் வெற்றி பெரும் தேவன். விஷ்ணு. முத்தொழிலான சிருஷ்டி ஸ்திதி, சம்ஹார காரணன்.   எதிர்க்கும் அரக்கர்களை, ராக்ஷஸர்களை, சாதுக்களை வதைக்கும் துஷ்டர்களை வென்று கொன்று காக்கும் விஷ்ணு ஒருவன் தான் தேவன் என்று ஸ்வேதாஸ்வதர உபநிஷத் கூறுகிறது.


376. ஸ்ரீ கர்பா: தன்னுள் அனைத்து பெருமைகளும் பொதிந்தவன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...