Tuesday, December 10, 2019

HOLED POT



 என்ன பிரயோஜனம்?  J K SIVAN 

தமிழகத்தில்  எங்கோ  ஒரு மூலையில்  ஒரு சின்ன  கிராமம். அதில் ஊர்க் கோடியில்  தூரத்தில்  ஒரே  ஒரு கிணறு.  அதிலிருந்து ஒரு கிராமவாசி தண்ணீர் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வருவான். அவனிடம் இருந்தது ரெண்டு பானைகள்.  ஒரு மூங்கில் கழியின் இரு முனைகளிலும் தண்ணீர்​  பானைகளை கட்டி நிரப்பி  தோளில் தூக்கி வருவது வழக்கம். 

​ஒரு பானையில் சின்ன ஓட்டை.  ஆகவே  அந்த பானையில் இருக்கும் நீர் வழியெல்லாம் சொட்டி   வீட்டுக்கு வரும்போது, பானையில் நீர் அளவு குறைந்திருக்கும். தினமும் இப்படி ஒரு முழுப் பானை  ஒரு முக்கால் பானை நீரே அவனுக்கு வீட்டுக்கு கிடைக்கும். 

​அந்த ரெண்டு பானைகளும் நமது கதையில் வாய் உள்ளவை. நன்றாக நம்மை போலவே பேசும். முழுதும் நீருள்ள பானை மற்றதை பார்த்து கேலி செய்தது. 

''ஏய் ஓட்டை பானை, என்னைப் பார்த்தாயா, எஜமான் கொண்டுவந்த எல்லா தண்ணீரையும் நான் ஜாக்கிரதையாக கொண்டு வருகிறேன். நீயும் இருக்கிறாயே. தண்டம், அவனுக்கு துரோகம் செயகிறாய். உன்னால்  யாருக்கு என்ன பிரயோஜனம்?''  என்று ஏசியது.'
''என்ன பண்றது. என்னை தான்  உடைச்சு வச்சிருக்கே''''  என்று மட்டுமே  நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டு  ஓட்டை பானை  பொறுத்துக்கொண்டு முணுமுணுக்கும். கோபிக்காது. 

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக்​ கூறி ​ கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

​கொஞ்ச காலம் ஓடிவிட்டது  இப்படியே தினமும்  கேலியும் கிண்டலும் அதிகமாக  அதிகமாக  ஒருநாள் ஓட்டை பானைக்கு துக்கம் தொண்டை அடைத்து அழ ஆரம்பித்தது. 

ஓட்டை பானை அழுவதை பார்த்த கிராமவாசி  ''ஏன் நீ அழுகிறாய். கொஞ்ச நாளாகவே உன் கண்ணீர் தெரிகிறதே? என்ன காரணம் சொல்?'' என்று  அதை கேட்டான் 

"ஐயா! என் குறையை நினைத்து நான் ​ ரொம்ப நொந்து கொள்கிறேன். பாவம் நீங்கள் என்னை முழுதும் நிரப்பி நீர் சுமந்து வருகிறீர்கள்.  நானோ அதில் கால் பாகத்தை தரையில் சிந்தி விடுகிறேன். என்னால் உங்களுக்கு கஷ்டம், நஷ்டம் இரண்டுமே கொடுக்கிறேனே. அதை நினைத்து அழுதேன்' முடிந்தால்  என்  மேல் உள்ள  சிறு விரிசலை, ஓட்டையை அடைத்து விடுங்களேன். நானும் உங்களுக்கு மற்ற பானையை போல்  உதவுவேனே'' என்றது. 

​கிராமவாசி  விவேகமானவன். சிரித்தான்.  

''ஓட்டைப் பானையே! நீ ஒன்று கவனித்தாயா​ நாம்  தினமும்  ஊர் கிணற்றிலிருந்து வரும் ஒத்தையடிப் பாதையில்   நீ  உள்ள பக்கம் மட்டும் அழகான பூச்செடிகள் மலர்வதை பார்க்கவில்லையா?

ஒருநாள் நீ  சிறு ஓட்டை வழியாக  நீரை சொட்டுவதை கவனித்து நம் வீட்டிலிருந்து ஊர் கிணறு வரை வழி நெடுக ​தரையை கொத்தி, ​பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் ​முளைத்து ​இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்​டில் கிருஷ்ணனை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்​. நீ  ஓட்டைப் பானையாக இருப்பதால் எனக்கு ரெட்டை லாபம்.  வீட்டிலும் தண்ணீர் கிடைக்கிறது. பூக்களும் நீ சிந்திய நீரால் எனக்கு கிடைத்து பூவை விற்று பணமும் சம்பாதிக்கிறேன்.  ஆகவே  நீ எனக்கு இப்படியே  இருந்தால் மிக்க மகிழ்ச்சி என்பதால் உன் ஓட்டையை நான் அடைக்கவில்லை.'' 

இதைக் கேட்ட​ ஓட்டை பானை ​ அழுகையை நிறுத்தி சிரித்தது.  இதை கேட்டுக்கொண்டிருந்த மற்ற பானை  தலையை குனிந்து ''சே  நாம்  அந்த ஓட்டை பானையாக இல்லாமல் போய்விட்டோமே. எஜமானனுக்கு  திருப்தி அளிக்க முடியவில்லையே. என்று அன்றுமுதல் ஓட்டை பானையை மதிப்போடும் மரியாதையோடும் நடத்தியது.  திருந்தியது.

இதில்  உள்ளடங்கி இருக்கும் நீதிகள் என்னவென்பதை வரிசையாக  செடிகள் போல்  நீங்கள் எடுத்து சொல்லுங்கள் நான் கேட்கிறேன். அரசியலை மட்டும் உள்ளே கொண்டு வரவேண்டாம். 





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...