Saturday, December 21, 2019

THIRUVEMBAVAI


திருவெம்பாவை       -   J.K. SIVAN 

                 
     6.  இன்னுமா  விடியவில்லை?

6. மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்.

''ஆஹா, அதற்கென்ன, இதோ,  இப்போதே செய்து முடித்துவிடுகிறேன்'' என்று நாம் அடிக்கடி சொல்வோம். அதை கேட்போரும் தலையை ஆட்டி சந்தோஷமாக சிரித்துக்கொண்டு செல்வார்கள். பரிபூர்ணமாக  நம்மை அப்படி  செயது முடிப்பவன் என்று கைதட்டுவார்கள். மறக்காமல் கை கூப்பி வணங்குவார்கள். ஆனால் நமக்கே தெரியும், நாம் அப்படி செய்பவர்கள் இல்லை, நம்மால் முடியாததை முடியும் என்று நம்புபவர்கள். இதை மணிவாசகர் நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறார் அப்போதே. அதாவது பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே.

''நீ தானேடி, நேற்று சொன்னவள். என்ன சொன்னாய் என்பதே மறந்து விட்டதா? '' நாளைக்கு பார் காலையில் நானே வந்து எங்கள் எல்லோரையும் எழுப்புகிறேன்'' என்று. இதோ நாங்கள் உன் வீட்டுக் கதவை தட்டுகிறோம். நீயோ இழுத்துப் போர்த்திக்கொண்டு மார்கழியில் காலையில் இன்னும் தூங்குகிறாய்.  இன்னும் உன்னைப் பொறுத்தவரை பொழுது விடியவில்லையோ?.  நீ இங்கிருக்கிறாயே, நீ சொன்ன பேச்சு எந்த பக்கம் போயிருக்கிறது?      எங்கோ இருக்கும், ஆனால்,  எங்கும் இருக்கும் அந்த மஹாதேவன் தானே வந்து நமக்கு அருள்கிறான் என்பதாவது அறிவாயா?.ஆனந்தமாக அவனைப் போற்றி பாடிக்கொண்டு வருகிறோமே .  அதுவாவது  உன் காதில் விழுகிறதா பெண்ணே? ஆமாம் பெண்களே என்று ஒரு வார்த்தை, படுக்கையிலிருந்து எழுந்து வந்து சொல்லமாட்டாயா?
ஈசன் மேல் பாசம் இல்லையோ பேய்ப் பெண்ணே? சரி உனக்காவது அப்படி இயற்கையாக தோன்றவில்லை என்றால் நாங்கள் வந்து சொல்கிறோமே அதையாவது மனதில் வாங்கிக்கொண்டு  எங்களோடு சேர்ந்து  பரம சிவன் புகழ் பாடமாட்டாயோ? உன் குணமே அலாதி. விசித்ரமானதடி. எழுந்திரு, எங்களுக்காகவாவது பாடு. பரமேஸ்வரா என்று வாய் நிறையச் சொல்.

எங்களுக்கு  நன்றாக தெரியும்.  நீ ஒரு  தூய  சிவ பக்தை. அழகிய புத்திசாலிப் பெண். உன் நெஞ்சம் நெக்குருகி நீலகண்டனை பாடும் என்று எமக்கு தெரியும். எங்கே அதை நிரூபி. பார்க்கலாம்.

விண்ணும் மண்ணும் நிலவுலகும் பிறவுலகமும் அறிதற்கு அரிய எமது சிவன் தானாகவே வலிய வந்து எம்மைக் காத்து அடிமை கொண்டருளுகின்ற நடராஜன், நெடிய கழலணிந்த அவனது பொற்றாமரைத் திருவடியைப் பாடி வருகின்றோமே ஏனம்மா நீ, ''உம்மென்று'' வாய் திறவாது இருக் கின்றாய்? பனிமலை அக்னியில் உருகவேண்டாமா. பரமசிவன் நினைவு உள்ளத்தை உருக்கவேண்டாமா? உடலும் உருகாமல் கல்லாக இருக்கின்றாய். கல் மனம் என்பது உனக்குத்தான் பொருந்தும். நமக்கும் பிறர்க்கும் தலைவனாய் இருப் பவனை ஈசனை எழுந்து வந்து பாடு. சீக்கிரம் வா !


மணிவாசகர்  சற்றும்  ஆண்டாளுக்கு  சளைத்தவரல்ல என்று  தெரிகிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...