Thursday, December 26, 2019

THIRUVEMBAVAI

திருவெம்பாவை.  J K  SIVAN 
                             
                                                                     11   பராத்பரா  பரமேஸ்வரா 

வாழ்க்கை  வேறு அரசியல்  வேறு  ஆன்மிகம் வேறு.  ஆன்மிகர்கள் அரசியலில் இருந்தால் அது  வாழ்விற்கு நன்மை பயக்கும்.  தேனோடு கலந்த தெள்ளமுதம்.

திருவெம்பாவையில் முதல் 8 பாடல்கள் விடிகாலை எழுந்து நீராட செல்வது குறித்து. தூங்குபவர்களை தட்டி எழுப்பி ''வா நீராட'' என்று அழைப்பவை.

 மணமாகாத கன்னிப்பெண்கள் காத்யாயினி விரதம் இருந்து , அதிகாலையில் ஒருவரை ஒருவர எழுப்பி, ஒன்றாகக் கூடிக்கொண்டு நீர்த்துறை சென்று நீராடித் தமக்கு இறையன்பு மிக்கவரே கணவராக வாய்க்க வேண்டும் என்று இறைவனை நோக்கிப் பாடியும் வணங்கும் நிகழ்வு.  இன்று 11வது பாடல்..

11. ''மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய். ''

சிவன் சிவன் என்கிறோமே அவன் யார்? நிறைந்த நெருப்புப் போன்ற செந்நிறம் உடையவன். சிவன் எங்க பெயரில் இருந்து தான் ''சிவ''ப்பு வந்ததோ. வெண்மையான திருநீற்றுப் பொடியில் மூழ்கியவனே! ஈசனே! சிற்றிடையையும், மைபொருந்திய பெரிய கண்களையும் உடைய உமையம்மையின் கணவனே! அழகனே! வண்டுகள் மொய்த்தலைப் பொருந்திய அகன்ற தடாகத்தில், ''முகேர்'' என்ற சப்தம் கிளம்புகிறமாதிரி புகுந்து, கையால் குடைந்து குடைந்து மூழ்கி, உன் திருவடியைப் புகழ்ந்து பாடி, பரம்பரை அடிமைகளாகிய நாங்கள், வாழ்ந்தோம்; தலைவனே! நீ எங்களை அடிமை கொண்டருளுகின்ற திருவிளையாட்டினால், துன்பத்தினின்றும் நீங்கி இன்பத்தைப் பெறுபவர்கள் அவற்றைப் பெறும் வகைகளை எல்லாம் யாங்களும் படிமுறையில் பெற்று விட்டோம். இனி, நாங்கள் பிறவியில் இளைக்காதபடி ஈசனே எங்களைக் காத்தருள்வாயாக.  

ஒரு சம்பவம் கண் முன் நிற்கிறது.

''பராத்பரா, பரமேஸ்வரா'' என்று வாசஸ்பதி ராக இசை வெள்ளம் செவியில் மணக்க, கம கமக்க, பக்தியை குழைத்து ஒரு பக்தர் பரமசிவனை வணங்கி பாடுகிறார். குரலில் இனிமை, கண்களில் ஆனந்த பிரவாகம். எதிரே சிவலிங்கம் கர்பகிரஹத்தில். பெரிய உருவம். கரிய கம்பீரத்தில் வெண்மை கீற்றுகள். நாகாபரணம் சார்த்தி இருக்கிறார்கள். எனவே தங்க முலாம் பூசிய அந்த பளபளப்பின் இடையே பச்சை பேசேலென்று வில்வ தளங்கள் லிங்கம் மேல் நிரம்பியிருக்கிறது.

ஆவுடையாரை வளைத்து வெள்ளை வேஷ்டி, ஸம்ப்ரதாய பட்டை காவி கறையோடு அணிவித்திருப்பது எதிரே ஒரு பரப்பிரம்மம் பஞ்சகச்சத்தோடு காட்சி அளிப்பது போல் இருக்கிறது. மேலே உத்தரீயம் நாகாபரணத்தில் நுழைந்து இருபக்கம் விரிசடை போல் தொங்குகிறது. சோம சூர்யாக்னி நேத்ரன் அல்லவா. ஒரு பக்கம் வட்ட சூர்யனும் இன்னொருபக்கம் சந்தனத்தில் குளிர்ந்த சந்திரனும் நடுவே விபூதி பட்டைக்கிடையே அக்னி நேத்ரம்.மேலே பெரிய ருத்திராக்ஷ மண்டபம், சிவன் மேலேயும் ருத்ரக்ஷ மாலை சுற்றியிருக்கிறார்கள். தொங்கும் விளக்கில் தீபம் சன்னமாக ஒளியைக் கூட்டுகிறது. எங்கும் வெளியே இருட்டு. ஏன் உள்ளேயும் மனத்திலே அஞ்ஞான இருட்டு தானே. மெதுவாகத்தான் அதை போக்கவேண்டும் என்று தெளிவிக்க தான் தீபம் மெல்லிய சுடர் விட்டு எரிகிறது.

சொட்டு சொட்டாக தாரா பாத்திரத்திலிருந்து கங்கை நீர் சிவனை குளிர்வித்துக் கொண்டிருக்க பாடல் வராமல் இருக்குமா?.

'...........................பார்வதி பதே ஹர பசுபதே ,....''''ஆதி அந்தமில்லா பழமனாதி'' என்ற அடிகள்  இசைக்கும்போது குரல் இழைகிறது .  அதில் பக்தி சரணாகதி கலந்து  மழைநீர் என தொடர்ந்து  வரும்போது திருவெம்பாவை சொல்வது மனதில் பொடேரென்று  பளிச்சிட்டது.  கணீரென்று திரும்ப திரும்ப அந்த அடிகளை ரசித்து ருசித்து பாடுகிறார். கண்ணை மூடிக் கேட்டால் சிதம்பரத்தில் மணி வாசகர் நிற்பது தெரிகிறது. நடராஜன் முன்பு அந்த சிவபக்த நாயன்மார் பாடுவது தேனாக சுரந்து செவியில் நுழைகிறதே....


பக்தியும் பரவசமும்   பிரிக்க முடியாதவை அல்லவா?   அந்த ஆனந்த அனுபவம் நாமும் பெறுவோம். பெற முயற்சிப்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...