Friday, December 20, 2019

THIRUVEMBAVAI



திருவெம்பாவை - J K SIVAN
5.
சிவனை நினைந்தார் எவர் தாழ்ந்தார்.? பனிமலையில் பல்லை கிட்டிக்க வைக்கும் குளிரில் நாமாக இருந்தால் நம்மை விட கனமான கம்பளியை போர்த்திக் கொண்டிருப்போம். கைகால் வெளியே தெரியாது.
சிவன் அப்படியில்லையே. எப்போதுமே வெற்றுடம்பு., இருக்கும் பனிமலையை தவிர தலையில் இன்னும் ரெண்டு குளிர்ந்த சமாச்சாரங்கள். ஒன்று குளிர்ந்த பால் போல் ஓளி வீசும் தண்ணொளி வெண்ணிலாவான சந்திரன். இன்னொன்று
பனி உருகி நதியான கங்கை. சில்லென்று எலும்பை ஊடுருவும் குளிர்ந்த நதி... உலகத்தின் உயரத்தின் மேல் பனிமலையோடு ஒன்றாக சிவந்த மேனியோடு, பால் போன்ற வெள்ளை வெண்ணீறு பூசி கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்போடு சிவன்....பிரமனும் பெருமாளும் அடிமுடி காணாது வியந்தவன். அக்னிப்பிழம்பாக ஒளிமயமான தாணு. ஆதிஅந்தமில்லாத பழமனாதி. நாம் அவனை இவ்வாறு அறிந்துகொள்வோம். அது போதும். அவனை இதற்கு மேல் அறிவோம் என்ற வார்த்தைக்கு இடமே இல்லை. அறிய வொண்ணா அரன் அவன்.
அடி முடி காணாத ஒளிப்பிழம்பு பரம சிவன். விஷ்ணு பாதாளம் வரை சென்றும் அடியைக் காணமுடியவில்லை. பிரமன் ஹம்சமாக மேலே விண்ணின் உச்சிக்கு பறந்தும் முடி தெரியவில்லை. அந்த அண்ணாமலையை, '' ஓ எனக்குத் தெரியுமே'' என்று, எப்போதும் உன் வாயில் வரும் பொய்களையே கொண்டு சொல்கிறாயா? நீ யார் என்று எங்களுக்கு தெரியாதா? பால் சுரக்கின்ற, தேன்போல இனிக்கும் வாயினையுடைய, வஞ்சகீ, வாயிற்கதவைத் திற. பெண்ணே. மண்ணோரும் விண்ணோரும் இதர லோகத்தினரும் தெரிந்து கொள்ளவேண்டாமா? அவன் சிவன். அவனது அழகை வர்ணிக்க வேண்டாமா? எங்களிடம் இல்லையே. நம்மை ஆட்கொண்டு குறை நீக்கி சீராட்டும் பெருங்குண தயா நிதி. சிவனே! சிவனே!! என்றும் சிவ சிவா என்று வாய் ஓயாமல் கதறினாலும் புரியவில்லையே. உறக்கத்தில் ஆழ்ந்து இருக்கிறாய். இதுதானோ மயிர்ச்சாந்தணிந்த கூந்தலையுடைய உனது தன்மை?'' என்கிறார்கள் எழுப்ப வந்த பெண்கள் ''பெண்ணே தேன் போல், பால் போல் இனிக்க பேசுபவளே, எழுந்திரு. நாங்கள் சிவன் இல்லை. குளிரில் நடுங்குகிறோம். வா, வந்து கதவைத் திற. அவனை நினைவில் மட்டும் நிறைத்து வைத்துக்கொள்வோம். அறிய முடியாததை அறிந்து கொள்ள முயல்வதே நடக்காத காரியம். நமது சிற்றறிவுக்கு எட்டியவரை அவனை புகழ்ந்து போற்றி பாடுவோம். அவனுக்கே நாம் ஆளாவோம். நம்மை அவன் அல்லவோ வழி நடத்தி செல்பவன். கடலில் மிதக்கும் காகித கப்பல் நாம். எந்நேரமும் அழிபவர்கள். நம்மை காப்பாற்றி, சீராக்கி, நல்லொழுக்கம் தருபவன் சிவன். அதற்கு நன்றி சொல்வதற்கே இனி வரும் ஜென்மங்கள் போதாதே. நன்றாக எண்ணெய் தடவி, கம்மென்று வாசனை வீசும் மலர் அணிந்து, கூந்தலை சிங்கரித்துக்கொண்டு சப்ர மஞ்ச கட்டிலில் சாய்ந்திருக்கும் பெண்ணே, வாசலில் சிவனே சிவனே என்று போற்றிக்கொண்டு சிவனே என்று உனக்காக காத்திருக்கும் எங்கள் நினைவு கொஞ்சமும் உண்டா உனக்கு ? சீக்கிரம் எழுந்து வாயேன். கொஞ்சம் சிவ தத்துவம் புரிந்துகொள். வா. முதலில் தமோ குணத்திலிருந்து விடுபடு... மற்றது தானாக விளங்க ஆரம்பிக்கும். மணிவாசகரின் அழகிய பாடலை இனி படியுங்கள் கொஞ்சம் புரியும். ''மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம் போல் அறிவோம் என்று உள்ள பொக்கங்க ளேபேசும் பால்ஊறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே அறிவுஅரியான் கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும் சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று ஓலம் இடினும் உணராய் உணராய் காண் ஏழக் குழலி பரிசு ஏலோர் எம்பாவாய் !! (5) அழகு தமிழை, ஆர்வமுடன், அன்பும் பக்தியும் கலந்து அளித்தவர்கள் ஆழ்வார்களும் சிவனடியார்களும் தான். இவற்றை ஒருவன் ஆழ்ந்து ருசித்து அறிந்தால் வேறெதுவும் கற்க தேவையில்லை. பன்னிரு ஆழ்வார்களும் நான்கு சைவ சமய குரவர்களும் பாடியதை அறிந்து கொண்டாலே வாழ்வின் பெரும்பகுதி பண்பட்டுவிடும். மார்கழி மாதம் முழுதும் இதை முடிந்தவரை அனுபவிக்கிறோம். திருப்பாவையும் திருவெம்பாவையும் சேர்த்து ஒன்றாக தினமு அளிக்க நான் புண்யம் செயதிருக்கவேண்டும். எல்லாமே இறைவன் அருள். எதை எப்போது செய்யவேண்டும் என்பதெல்லாம் அவன் கட்டளை அல்லவா. மொத்தம் 20 பாடல்கள் தான் திருவெம்பாவையில். முப்பது பாசுரங்கள் திருப்பாவையில் இதோ ஐந்து நாட்கள் ஓடிவிட்டதே..

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...