Saturday, December 7, 2019

SENIOR CITIZENS DAY




                        சீனியர்  சிட்டிசன்  தினம்   J K  SIVAN 


இன்னிக்கு  குடுகுடு கிழவர்- கிழவியர் தினமாம்.     வீட்டிலேயே மறந்து போகும்  வகையறாவை உலகில்  இன்று   (எல்லா பெரிசுகளையும் ) நினைக்கிறார்களே! சந்தோஷம்.  81கள்  சார்பில்  என் நன்றி.

என் இனிய  பெரிசுகளே ,  நீங்கள்  60க்கு மேல் இந்த  ''பெரிசு''  குழுவில் இணைய தகுதி பெற்றவர்கள். 

நம்மில்  அநேகர்  கை கால் நடுக்கம்,  காது மந்தம், 32பல்லில் இருப்பது  6 -7 அல்லது அதுவும் இல்லாதது,   தலை வார சீப்பு தேவை இல்லாதது, கண் பார்வை ஐந்தடி தூரத்தில் ஆட்டோ தெரியாதது,   மஞ்சள் துணிப் பை  நிறைய  கலர் கலராக  மாத்திரை மறக்காமல் மூணு வேளை சாப்பிடுவது, ரெண்டு கால் மேல் நம்பிக்கை இல்லாமல்  ஒரு மரக் கம்பின் துணை தேடுவது, உப்பு, சர்க்கரை, அரிசி இல்லாமல் (ஒருகாலத்தில்  பாத்தி கட்டி  சாம்பார் சாதம்  சாப்பிட்டதுகள்), இத்யாதி இத்யாதி,  உங்களுக்கு  ஒரு சில அறிவுரைகள்.

சுவற்றில்  ஒட்டடை அடிக்கிறேன், ஆணி அடிக்கிறேன், மேலே அலமாரியில், பரணில் ஏதோ தேடி எடுக்கிறேன் என்று ஒரு நாற்காலி, ஸ்டூல் மேலே ஏறினால்  கீழே விழ  நூற்றுக்கு ஆயிரம் மடங்கு வாய்ப்பு அதிகம். கால்களை நம்பாதே தம்பி. அப்புறம்  எதிலும் ஏற முடியாது. ஜாக்கிரதை. 


மாடிப்படி ஏறும்போது கைப்பிடியை பிடித்துக்கொண்டு  ஒவ்வொரு படியிலும் ரெண்டு காலை வைத்து ஏறு. மேலே பார்க்காமல் படியை ஒவ்வொன்றாக பார்த்து நடுப்படியில் காலை வை. ஓரத்தில் வேண்டாம்.

டக்கென்று  பின்னால்  திரும்பி பார்க்காதே.  அந்த காலம் மலையேறிவிட்டது. உடம்பையே திருப்பி பார் அல்லது மெதுவாக தலையை திருப்பு.   டாக்டர்  காத்திருக்கிறார் எப்போது நீ வருவாய் என்று. ஜாக்கிரதை.

பெரிய கால் நகத்தையோ,  ஐந்து விரலும் இருக்கிறதா என்று சோதிக்கவோ,  உடனே குனிந்து பார்க்க என்ன அவசரம்? . மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக குனி.  குப்புற தள்ளிவிடும்.ஜாக்கிரதை.

உள்  ஆடை, பேண்ட் அணிகிறேன் என்று நின்றுகொண்டே ஒரு காலை தூக்காதே. உன்னை தூக்க ஆள் வேண்டியிருக்கும். எங்காவது சௌகர்யமாக  உட்கார்ந்து கொண்டு  ஒவ்வொரு காலாக நுழைத்துக் கொள் .

மல்லாக்க படுத்தவன் அப்படியே ஸ்ப்ரிங் மாதிரி எழுந்திருக்காதே.  இடதோ வலதோ பக்கம் திரும்பி மெதுவாக படுக்கையை விடு.

சினிமாவில், டிவியில்  வாட்ஸாப்ப்  முகநூலில் யாரோ செயகிறார்களே என்று நீ உடல் பயிற்சி செய்கிறேன் என்று கையை காலை உடம்பை திருகி முறுக்கிக்  கொள்ளாதே. இப்போது உன் எலும்புகள்  பிஸ்கட் பாக்கெட். நொறுங்கிவிடும்.  உன் பர்ஸ்  சுளுக்கெடுத்துவிடும்  ஜாக்கிரதை. 

பின் பக்கமாக நடை வேண்டாம். அடுத்த  ஜென்மத்தில்  மீண்டும் சிறுவயதில் செய்து கொள்ளலாம். இப்போது என்ன அவசரம்? .  பின்னால் விழ உன்னிடம்  நிறைய பணம் தேவை, கவனித்துக் கொள்ள ஆள் தேவை. இருந்தால் ராஜாவாக  அண்ணாசாலையில் கூட  நீ பின்னாலேயே நடக்கலாம்.

பக்கெட்டில் தண்ணீர் பிடிக்கிறேன் என்று இடுப்பு குனிய  கனமான வஸ்துவை தூக்காதே.  முழங்காலை  மடக்கி தூக்க முடிந்தால் நீ கெட்டிக்காரன். பிழைக்க தெரிந்தவன்.

நீ தான்  ஆபிசுக்கு , வேலைக்கு இப்போது போக வேண்டாமே .  எந்த  பஸ், ட்ரெயின்  பிடிக்க விருட்டென்று படுக்கையை விட்டு எழுந்து ஓடுகிறாய்?    ஐந்தாறு நிமிஷங்கள் அப்படி இப்படி புரண்டு விட்டு ஒருபக்கமாக மெதுவாக எழுந்திரு.
வயிற்றை காலி செய்ய  டாய்லெட்டில்  அவசரம், முக்கல் வேண்டாமய்யா.  கர்ம வினை  போல் வருவது வந்தே தீரும். வரட்டும். வரவழைக்காதே. சதை வெளியே வந்தால் உள்ளே கையால் தள்ள முடியாது. காசு நிறைய வேண்டும். கத்தியால் வெட்ட வேண்டும்.. ஜாக்கிரதை.

இத்தனை வருஷம் பிறருக்காக உழைத்த நீ  இனி உனக்காக எஞ்சிய சில வருஷங்களை  வாழ முயற்சி செய். பரோபகாரமாக ஏதாவது தினமும் செய். நான்  இதை செய்கிறேன்.

கடைசியாக  ஒரே ஒரு வார்த்தை.  உன்னை கிழம் என்று நினைக்கவே நினைக்காதே. நான் நினைப்பதே இல்லை.  அனுபவஸ்தன் என்று சொல்லிக்கொள் .  வியாதி கொண்டாடாதே, நீ ஆரோக்யமாக இருப்பதாகவே உன்னை உணர்ந்துகொண்டு செயல்படு. மரணம் உன் அருகில் இல்லவே இல்லை.  அதன் கைக்கெட்டும் தூரத்தில் தான்  நாம் எல்லோரும் எப்போதும்  இருக்கிறோம். அது அணைக்கும் நேரத்தில் நம்மை அதுவே வந்து அணைத்துக் கொள்ளட்டும்.      26லும்   அகாலமாக அயோக்கியர்கள் ரூபத்தில் ஹைதராபாதில் வருவதும்  கூட அபாயம், அபாக்யம் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...