Thursday, December 19, 2019

THIRUVEMBAVAI



திருவெம்பாவை - 4    J K  SIVAN 

                         
    வா, வந்து நீயே  எண்ணு ?

 இப்போது  மணிவாசகரின்  நான்காவது திருவெம்பாவை பாடலை ரசிப்போம்.

மணிவாசகர்  சிறு பெண்  ஆண்டாளைபோலவே மார்கழியில் விருந்தாக நமக்கு திருவெம்பாவையை தந்திருக்கிறார். அவள் தந்தது திருப்பாவை, இவர் தருவது திருவெம்பாவை.  ரெண்டுமே  மார்கழியில் தூக்கத்திலிருந்து நம்மை தட்டி எழுப்புவது. தூக்கம் இங்கே அஞ்ஞானம், அறியாமை.  அங்கே  ஆயப்படியில் துதிப்பது அரங்கனை, இங்கே அண்ணாமலையில் அநங்கனை,  உருவமில்லாத சிவலிங்கத்தை,   இருவர் தமிழும் அற்புதமான சுவையுடையது. விஷ்ணு பக்தர்கள் சிவபக்தர்கள் இரு சாராரும் மகிழ இந்த விருந்து. 

 ''ஒள்நித் தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம்
உள்நெக்கு நின்றுஉருக யாம்மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயில்ஏலோர் எம்பாவாய் !! (4)
திருவெம்பாவையில் தலைவியான பெண் மற்ற பெண்களையும் சேர்த்து சிவனை வணங்கி விரதமெடுக்க விடிகாலையில் இன்னும் வந்து சேராத பெண்களை வீடு சென்று எழுப்பி நீராட அழைத்துக் கொண்டு செல்லும் காட்சி.

 ஜொலிக்கும் முத்தைப்போல வெண்மைநிற முத்துக்களை கோர்த்தது போன்ற பற்களை உடையவளே, இன்னுமா உனக்கு பொழுது விடிந்துவிட்டது தெரியவில்லை.

''என் பல் இருக்கட்டும். அழகிய கிளியைப் போன்று பேசுபவளே, நீ முதலில் எண்ணி ப்பார்த்து சொல் மற்றவர்கள் எல்லோரும் வந்துவிட்டார்களா?'' என்று வீட்டிற்குள்  படுக்கையில்  இருப்பவள் கேட்க,

''நான் எண்ணிச்சொல்வது இருக்கட்டும், அதுவரை நீ சும்மா விருதாவாக படுக்கையில் படுத்து காலத்தை ஓட்டாதே. நினைத்துப்பார் அந்த தேவர்களும் விண்ணுலகோரும் போற்றும் அமிர்த ரூபனை, வேதங்கள் தொழுதேத்தும் ஞான தேசிகனை, கண்ணுக்கினியானை, பரமசிவனை, போற்றி பாடு, மனம் உருக வேண்டுவாயாக.   அதைவிட்டு நான் எண்ணிச் சொல்வதற்குள் நேரத்தை வீணாக்காதே. நீயே வந்து எண்ணிக்கொள். அப்படி யாராவது விட்டுப்போயிருந்தால், அவர்களும் வரும்வரை கிடைக்கும் நேரத்தில் வேண்டுமானால்  மீண்டும் போய் தூங்கு'' என்கிறாள் எழுப்பிய பெண். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...