Sunday, December 29, 2019

DHARSANAM



மீண்டும்  தரிசனம்    J  K   SIVAN 
                            
அவன்   சிரஞ்சீவி  அல்லவா?  ராமனோடு இருந்த   த்ரேதா  யுகம் முடிந்தாலும்  தன்  உயிருக்குயிரான  ராமன் மறைந்தாலும் ஆஞ்சநேயன்  ராமனையே  நினைத்து ஜெபத்தில்  தனது வாழ்வின்பெரும்பகுதியை  தனிமையில்  கடத்தினான்.  அடுத்த  யுகமான  துவாபர யுகம் வந்து விட்டது என்பது கூட அவன் நினைவில் இல்லை. அவன் எண்ணமெல்லாம்  ராமன் ராமன் ராமன்  ஒன்றே தான்.  இமயமலையில் எங்கோ ஒரு  தனி இடத்தில்  ஆஞ்சநேயன் ராம த்யானத்தில் இருந்த பொது தான் நாரதன் அவனை சந்தித்தான்.

"ஆஞ்சநேயா   இன்னும்  எத்தனை நாள்  ராமனையே  நினைத்து  ஜபம்  செய்வாய்?"

"நாரதா,  முனீஸ்வரா, என் மூச்சே  ராமன்தான்.  ஆகவே  மூச்சு முடியும் வரை  ராமன் தான்  எனக்கு  எல்லாம்."

நாரதன் சிரித்தான்.

"ஏன்  சிரிக்கிறாய்  நாரதா?"

"நிஜத்தை  விட்டு நிழலையே தேடிக்கொண்டு இருக்கிறாய்'' என்று அறிந்தபோது சிரிப்பு வராதா?"

"என்ன சொல்கிறாய் நாரதா  நிஜமாவது நிழலாவது....எனக்கு புரியவில்லையே""

"எப்படி புரியும். புரிந்து கொள்ள முயற்சித்தால்  அல்லவோ  புரியும்!"

நாரதா  நிஜம்-நிழல்  என்கிறாய்,   என்  ராமனையா   நிழல் என்கிறாய்?"

"ஆம், வேறென்ன.  நாராயணனின்   ராம அவதாரம் முடிந்தவுடன் ராமன் மறைந்தான். இந்த  புது  யுகத்தில் அவன்  வேறு அவதாரம் தொடங்கி விட்டானே உனக்கு தெரியாதா?"

" அட  ... ஆச்சர்யமாக இருக்கிறதே...  என்  ராமன்  என்னவாக  அவதாரம்  எடுத்துள்ளான். இப்போது   எங்கிருக்கிறான். சீக்கிரம்  சொல்." 

"இந்த துவாபர யுகத்தில் அவன்  பெயர்  கிருஷ்ணன்.  த்வாரகையில் உள்ளான்.  சமீபத்தில் அவனிடம் பேசும் போது தான்  உன்னைப்  பற்றியும் பேச்சு வந்தது".

"என் பிரபு என்னை  நினைத்துகொண்டிருக்கிறாரா.  ஹாஹா  நான்  அவரை  பார்க்கவேண்டுமே "

"உனக்கு அவரை பார்க்க வேண்டுமானால்   நீ  ஒரு  மாறு  வேடத்தில்  துவாரகைக்கு  வா.  அங்கு  ராம  நவமி அன்று  அன்னதானம்செய்.  நான்  அப்புறம் உன்னை பார்க்கிறேன்".

நாரதன்  நகர்ந்தான்.

ஆஞ்சநேயன்  ராமனை தரிசிக்க  ராமநவமிக்கு  காத்திருந்து    ஒரு  பிராமணன் வேடத்தில் துவாரகை சென்றான்.    துவாரகையில்  ஸ்ரீ ராம நவமி அன்று அன்னதானம் அளித்தான்  எண்ணற்றவர்களுக்கு தன் கையாலேயே அன்னமிட்டான்.  வரிசை  வரிசையாகஅமர்ந்திருக்கும்  மக்கள் கூட்டத்தில் கொஞ்சமும்  அயராது ஆஞ்சநேயன் குனிந்து ஸ்ரத்தையோடு  அனைவருக்கும்  அவர்கள்  இலையில் நிதானமாக   அன்னமிட்டான்.

"என்ன  இது?    திடீரென்று வானம் சுழன்றது. பூமி  கிடுகிடுவென்று ஆடியது. மரங்கள் செடிகள் அருகில் இருந்தோர் எல்லாருமே ஏன் வேகமாக  சுற்றுகிறார்கள்.....  தலை சுற்றியது    கை  நடுங்கியது. உடலில் பலமெல்லாம்  எங்கே போயிற்று.... ஆஞ்சநேயனுக்கு  அதிர்ச்சியா  ஆச்சர்யமா...!..  

ஒரு வரிசையில்  அன்னதானத்தில் சாப்பிட   கால் மடக்கி  அமர்ந்திருந்த  ஒரு  வயோதிக  பிராமணருக்கு  எதிரில் ஆஞ்சநேயன்  குனிந்து கையில் அன்ன  வட்டிலோடு பரிமாற  குனிந்தவன்  அப்படியே  ஏன்  நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்தான்.

ஏன்?  ஏன் ?  இது எதற்காக?  நான்  என்ன அபசாரம் செய்து விட்டேன்?"

ஆஞ்சநேயன்  கதறினான்.

அந்த   முதியவரின்  கால்கள்  அவனுக்கு நிறைய  பரிச்சயமானவை.  சாக்ஷாத்  ராமனின்  கால்கள். எத்தனை கோடி முறை வணங்கியிருக்கிறான்..

''பிரபு  என்ன இது? .   என்னை  இப்படியாசோதிக்கவேண்டும்?'' அலறினான் ஆஞ்சநேயன்.  பிராமணர் சிரித்தார்.  மெதுவாக எழுந்தார்.  அருகில் அமர்ந்திருந்த  மற்றொரு பிராமணரான நாரதரும்  எழுந்தார். முதியவர் வேடத்தைக்  களைந்து கிருஷ்ணன்  ஆஞ்சநேயனை  அணைத்துகொண்டான்.

 நீண்ட  பிரிவல்லவா?  ஆஞ்சநேயா.  உன் கையால்  சாப்பிட  ஆசை வந்தது.எனவே நானும்  நாரதனும்  உனைக்காண வந்தோம்.''

"பிரபு  எனக்கு  ஒரு வருத்தம்!"

"என்ன  ஆஞ்சநேயா?"

"நான்  உடனே  துவாரகைக்கு  வரவேண்டும் உங்களையும்  என் தாய் சீதா பிராட்டியையும் சேர்த்தே பார்க்கவேண்டும்.. உங்களைத்  தனியாக  பார்த்தால்  எனக்கு  பழைய  வனவாச  ஞாபகங்கள்  வந்து வதைக் கின்றன. இனிமேல் உங்களை சேர்ந்தே பார்க்கவேண்டும்''

"வாயேன்  எங்களோடு"

ஆஞ்சநேயன் கிருஷ்ணனோடு  துவாரகை சென்றான்.   ருக்மிணி என்கிற உருவில் தனது   மாதாவைக்  கண்டான்.  பலராமன்   என்ற உருவில்  லக்ஷ்மணனையும் கண்ணாரகண்டு களித்தான்.

ஆஞ்சநேயனுக்கு  மேலே  பேச  நா  எழவில்லை.   எனக்கும்   இதை  எழுத முடியவில்லை. எண்ணங்களின் வேகத்திற்கு பேச்சும் எழுத்தும்  ஈடு கொடுக்க முடியாது  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...