Thursday, December 26, 2019

THIRUKKOLOOR PEN PILLAI




திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள்  J K SIVAN 
        
     
    32  கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே

நமக்கு  “திருவடி” என்றால்  திருப்பாதம், கடவுளின் தாள் என்று தான் தெரியும்.  வைணவ சம்பிர தாயம்  திருவடி என்பது  நாராயணன் மற்றும் தெய்வங்களின் திருத்தாள் மட்டுமல்ல  மற்றும்  ஸ்ரீமன் நாராயணனின் வாஹனமான  கருடாழ்வரை  பெரிய திருவடி என்றும்  ஸ்ரீ  ஆஞ்சநேயரை  சிறிய திருவடி என்றும்  நமக்கு உணர்த்தும் 

ஸமஸ்க்ரிதத்தில்  ''கருட''  என்றால்  பொதி சுமப்பது, நிரம்ப சுமையை தாங்குவதை குறிக்கும்.  இந்த பிரபஞ்சத்தையே தாங்கி  ரக்ஷிப்பவனையே சுமப்பது எவ்வளவு பெரிய சுமை!!! 

 பெருமாளை  லாவகமாக  தோளில்  அமர்த்தி, அவன் திருவடிகளை இந்த  ''பெரிய திருவடி''  தனது கைககளில் அற்புதமாக  ஏந்தியவாறு  ஒரு காலை மண்டியிட்டு கம்பீரமாக  நமக்கு காட்சி அளிப்பதை  தான் கருடசேவையில்  கண்டு களித்தேன்.  

நாராயணனிடம்  அளவற்ற பக்தி  சரணாகதி கொண்ட முதன்மையான  பக்தன் கருடன். அவனை தன்னுடன் இணைத்துக்  கொள்வதற்காகவே  ஸ்ரீமந் நாராயணன்  தனது வாகனமாக கொண்டுள்ளார்.  கருடாழ்வார் இல்லாத பெருமாள் சந்நிதி பார்க்கவே முடியாது.   

நாச்சியார் கோவில் கல் கருடன் என்னால்   மறக்க முடியாதவர்.  திருநாங்கூர்  எனும் வைணவ திவ்ய தேசத்தில்  மூன்று முறை 11 கருட சேவை பார்த்தேன். சமீபத்தில்  சாம்பவர் வடகரை அக்ரஹாரத்தில் வேதநாராயணர் ஆலயத்தில் கருடசேவை பார்த்தேன். அடிக்கடி இந்த மாதிரி  அதிர்ஷ்டங்கள்  வந்து சேர்வது  எனது பூர்வ ஜென்ம  புண்யம்.  கருட சேவை தரிசித்தவர்களுக்கு  மறுபிறவி கிடையாதாம். அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு நான் எப்படி எழுதுவது???

மற்றொரு திருவடியாகிய   சிறிய திருவடி  தான்  ஆஞ்சநேயர் என்று சொன்னேனே.   அவர்  ஸ்ரீ ராமனையும்   லக்ஷ்மணனையும்  இவ்வாறே   தோளில்  சுமந்து பறந்த மாருதிராயர்.  நேற்று அவருக்கு  ஜெயந்தி. ஹனுமான் தோளில்  அமர்ந்து  போரிட்டு, ராவண வதம்  செய்தார் ஸ்ரீ ராமர்.  ஈகோ EGO எனும்  சுயபுராணம், தற்பெருமை இல்லாதவர்  ஹனுமான். அந்த பெயருக்கு அப்படி ஒரு அர்த்தம்.

இப்படி  பெருமாளை  நாராயணனாகவும்  ராமராகவும்  தாங்கி அவரது திருவடிகளை சுமந்த கருடன் ஆஞ்சநேயர் ஆகியோர்  ''அடி''  என்று சொல்லப்படுகிறார்கள். மரியாதை கலந்து  ''திரு''  சேர்த்து  பெரியவர் சின்னவர் என்று அடையாளம் காட்ட   பெரிய திருவடி, சிறிய திருவடி என்று நாம் கருடாழ்வாரையும்  ஸ்ரீ ஆஞ்சநேயரையும்  வணங்குகிறோம். .

நமது தொடரில் வரும் திருக்கோளூர் பெண்மணி  இவர்களையும் நினைவு கூற தவறவில்லை.  

''ஐயா  ஸ்ரீ ராமானுஜ சுவாமி,   நான் என்ன  “கருடாழ்வாரையும்  ஆஞ்சநேயர் போலவும்  ஸ்ரீமன் நாராயணனின்  திருவடியாக  அவரை சுமந்து ஏதாவது ஒரு சேவை செய்தவளா'' எப்படி  பெருமாளோடு சம்பந்தப் பட்டவள்?   நீங்களே சொல்ளுங்கள். எந்த விதத்தில் நான் இந்த திருக்கோளூரில் வசிக்க தகுதியானவள்?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...