Tuesday, December 17, 2019

THIRUVEMBAVAI.

திருவெம்பாவை   2

                         


'' ஆ...   ருத்ரா!!'' 
 
திருவெம்பாவை முதல்  பாடலில்  மணி வாசகர்  துயில் கொண்ட  ஒரு பெண்ணை மற்ற தோழிகள் எழுப்புவதை இப்படி எடுத்துரைத்தார்  அல்லவா:


முதலும் முடிவும் இல்லாத, காணுதற்கு அரிய பெருமையையுடைய ஒளியான சிவபெருமானை நாங்கள் பாடுவதைக்

 கேட்டும், வாள் போன்ற கூரிய , பெரிய கண்களைக் கொண்ட பெண்ணே, இன்னுமா தூங்குகிறாய்? 
உன் காது கேட்காதோ? 
மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை  புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் சப்தம் 
தெருவெல்லாம் எதிரொலிக்கிறது. உன் டமார செவியில் மட்டும் புகவில்லையோ?
இதோ பார் எங்கள் தோழி ஒருத்தி பக்தி மேலீட்டால் பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு அப்படியே ஸ்தம்பித்து சிறிதும் தனது நினைவின்றி கிடக்கிறாள். 
இது என்ன அற்புதமான நிலைமை பார்! என் கண் போன்றவளே , இவளது பக்தியின் பெருமை உணர்வாய்.?

இப்போது திருவெம்பாவையின்  இரண்டாவது பாடலை  பார்ப்போம்:

2. பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போ(தும்) இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய்.

''ஹே பெண்ணே, சிறந்த ஆபரணங்களை உடலில் அணிந்தவளே!   என்னடி எப்போதும் பேசுகிறாயே, யாரைப்பற்றி?'' என்று கேட்பேனே , அப்போது நீ என்ன சொல்வாய்  என்பது ஞாபகமிருக்கிறதா?  

''இரவும் பகலும் நான்  பேசுவது ஒன்று தான். அது தான் எப்போதும் என் உள்ளே நிறைந்திருக்கும் அந்த தில்லை நாதனைப் பற்றி தான். என் அன்பு, ஒருவரிடத்தில் மட்டுமே,அது மேலான ஒளிப் பிழம்பானஅந்த தில்லை நாதனுக்கு மட்டும் தான் மட்டும் தான்'' என்று சொல்வாய்''

அப்படிப்பட்ட நீ ஏன் இப்போது இந்த பட்டு விரித்த படுக்கையிடம் அன்பு வைத்து அதை விட்டு எழுந்திருக்கவே இல்லை! என்கிறார்கள் அந்த தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணிடம் அவள் தோழிகள். 

 நாம் பேசும் பொழுதெல்லாம் அந்த பரமேசன் புகழ் பாடி எங்களோடு இன்பம் துய்த்தாய், பாசம் நேசம் எல்லாம் எல்லாம் படுக்கை மீது விழுந்துவிட்டதா?

அதற்கு அந்த தூங்கிய, அவள் தான் இப்போது விழித்துக் கொண்டு விட்டாளே! என்ன சொல்கிறாள்?

''பெண்களே! சீச்சி . போதுமடி ..... நீங்கள் பேசும் நகை மொழிகளில் இதுவும் ஒன்று , இதைப்போல் பல நான் உங்களிடம் கேட்டிருக்கிறேன். என்னோடு விளையாடி என்னை கேலி செய்ய இது சரியான ஒரு சமயம் என்று முடிவெடுத்து விட்டீர்களா?

தேவர்களும் வழிபடுதற்கு கூச்சப்படும் அழகிய தாமரை மலர் போன்ற தனது திருவடியை அன்பருக்குக் கொடுத்தருள எழுந்தருளும் ஒளி உருவமானவன் என் தெய்வம். தில்லைச் சிற்றம்பலத்தான்.    ஒரு காலைத் தூக்கி நின்றாடும் கண்கண்ட தெய்வம் அந்த சபாபதி மீது அன்பு பொருந்திய நாம்-- அது தான் நானும் நீங்களும்... என்னைப்போய் நீங்கள்.....!! 
அந்த பெண் எழுந்து விரைந்து வாயிலில் காத்திருக்கும் பெண்களோடு சேர்ந்து கொள்கிறாள்

''ரொம்ப நல்லது பெண்ணே.  அப்படி யென்றால் ,உனது எண்ணம் பிடிப்பு, விருப்பு எல்லாமே அந்த சர்வேஸ்வரனின் மேலேயே இருக்கட்டும். ஏன் தெரியுமா? விண்ணவர்களும் மண்ணவர்களும் போற்றி வணங்கும் ஒளியை, , சிவலோக நாதனை, சிற்றம்பலனை, பொன்னம்பலனை,  நாம்  வாஞ்சையுடன்  வணங்கும் விஸ்வேஸ்வரனை நினையா நாளெல்லாம் பிறவா நாளே.

 அவளுக்காக காத்திருக்கிறார்கள் விடியற்காலை எழுந்து நீராட செல்வதற்கு.  

நண்பர்களே,   மாதங்களில் சிறந்தது  இந்த மார்கழி மாதம்.  அதன் ஒரு முக்கிய அம்சம் திருவாதிரைப் பெரு நாள். திருவாதிரையை வட மொழியில் ஆருத்ரா என்பார்கள். அன்று நடராஜனை தரிசனம் செய்ய  கூடுகிற  பக்தர்களின் குரல் விடியற் காலையில் ஓம் நமசிவாய, சிவ சிவ என்று செவிக்கினிய சப்தமாக  எங்கும் ஒலிக்கும். பரமேஸ்வரனுக்கு உகந்த நாள் மார்கழி திருவாதிரை . 

பனி படர்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்க சீரிஷம் எனும் மார்கழி மாதத்தில், ஆர்த்ரா நட்சத்திரம் இணையும் போது “கர்மா தான் பிரதானமே தவிர பகவான் பெரியது இல்லை'' என்று கூறிய சாங்கிய யோகிகளின் அறியாமையை போக்குவதற்கு ஈஸ்வரன் முடிவெடுத்தான். தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையைக் கொன்று அதன் தோலை தன் ஆடையாக்கி, உடுக்கு, அக்னி , அரவம் முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்  தான் மார்கழித் திருவாதிரை.அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம்.

மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜரின் திருநடனம் கண்டால், ஆருத்ரா அன்று ''ஆஹா ...ருத்ரா' என்று, மூக்கில் விரலை வைக்கச் செய்யும் என்பார்கள். என்ன நேர்த்தியான அழகு நடராஜனின் அங்க வளைவு. அத்தகைய அழகு கோலத்தில், அவர் காட்சி தருகிறார்.அவர் இடது காலை, தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்... ஏன் தெரியுமா? மனைவி மேல் கொண்ட பாசத்திற்காக. வாம பாகி அல்லவா அவள். 
'' இடது பதம் தூக்கி ஆடும்.... நடராஜனை.......'' காணக் கண் கோடி வேண்டும்.!

சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில், ஆயுள் முடிந்து விடப் போகிறது. அவரது தந்தை, மிகுந்த வருத்தத்தில் இருந்தார். குறிப்பிட்ட நாளில், எமன் வர, தன் பிரிவால், தந்தை துக்கப்படக் கூடாதே என்பதற்காக, சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவனின் இடது கால், எமனை எட்டி உதைத்தது. மார்க்கண்டேயன் தப்பித்தார்.

அந்த திருவடி பட்டதால், எமனுக்கும் மீண்டும் உயிர் கிடைத்தது.   திருவாதிரைக் களி க்கு   ''திருவாதிரைக்கு ஒருவாய்க்களி’ என்பார்கள்.  எனவேதான் மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி தின்று மகிழ்கின்றனர். திருவாதிரை நாளன்று ஒருவாய் களி தின்றால், அதன்பலன் அளவிடற்கரியது  என்பதால்  சிதம்பரத்தில் அளவற்ற  பக்தர்கள்  கூட்டம் அம்மும்.
திருவண்ணாமலை ஒரு திவ்ய க்ஷேத்ரம். ஒரு முக்தி ஸ்தலம். எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்த, இன்னும் வாழும் மகோன்னத பூமி. நான் நிறைய எழுதுகிறேன் அவர்களை பற்றி. அங்கே மார்கழி அதிகாலை வழக்கம்போல் சில பெண்கள் சிவனைத் துதித்தவாறு மற்ற பெண்களை துயில் எழுப்புவதாக மிக அருமையாக மணி வாசகர் அருளிய திருவெம்பாவை  அவரது திருவாசகத்தில் ஒரு பகுதி. 

மார்கழி குளிருக்கும் பனிக்கும் மகேசனின் பனிமலை வாசத்துக்கும் எவ்வளவு நெருக்கம் பார்த்தீர்களா. பனி குளிர்ச் சியானது. திருவெம்பாவை மனதை குளிர வைக்கிறது. குளிருக்கு எது தேவை?  உஷ்ணம்.   உஷ்ணம் எதிலிருந்து வரும்? அக்னியிலிருந்து.    அக்னி ஸ்தலம் எது ? திருவண்ணாமலை.  பனிமலையிலிருந்து அண்ணாமலைக்கு வந்து விட்டோமே. எல்லாம்  அந்த  ஆடலரசன் திட்டம் .  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...