Friday, March 11, 2022

YATHRA DETAILS

 யாத்ரா விபரம் -  நங்கநல்லூர்  J K  SIVAN 


 மேல கடம்பூர்  அமிர்தகடேஸ்வரர் 
 
வெகு நாட்களாக எழுத முயற்சித்தும்  எழுத நேரம்  கிட்டவில்லை.  ஏன் எதற்கு என்று  எல்லாம் காரணம் தெரியாது.  அது அப்படித்தான்.    
சில  வருஷங்களுக்கு முன்னால்  நான் தரிசித்த ஒரு அற்புதமான ஆலயம்  மேல கடம்பூர் என்கிற ஊரில்  உள்ள  சிவன் கோவில். 6 வதிலிருந்து  19ம் நூற்றாண்டு வரை  அதன் பெயர் திருக்கடம்பூர். 

கடம்பூர்  என்றதும் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் ஞாபகம் வரும்.  அதில்  கடம்பூர் சம்புவரையர், அவர் மகன் கந்தமாறன், மகள் மணிமேகலை மனக் கண் முன் வருவார்கள்.  ஒருநாள்  இரவு அந்த கடம்பூர் மாளிகையில் வல்லவரையன் வந்தியத்தேவன் நள்ளிரவில் திருட்டுத் தனமாக பார்த்த  தேவராளன் தேவராட்டி வெறி நடனம், குரவைக் கூத்து ,  மதுராந்தகன் பங்கேற்பு,  ரகசிய  மந்திராலோசனை கூட்டம்,  அந்த  இருளில் சுவற்றின் மேல் மங்கிய நிலவொளியில் தோன்றி மறைந்த முன் குடுமி  வைணவன் ஆழ்வார்க்கடியான் தலை ,. இதெல்லாம் நிகழ்ந்த  அந்த  கடம்பூரே  தான்.  ஆனால் நான் பார்த்தது மேல கடம்பூர். இங்கே  நான்  கண்ட காட்சிகள்  பொன்னியின் செல்வன் கதையில்  வராதவை. கந்தர்வ லோகத்தில் என்னை கொண்டு  சேர்த்தவை. .  

மேலக் கடம்பூர் செல்ல  சிதம்பரம் - காட்டுமன்னார்குடி வழியாக எய்யலூர் செல்லும் சாலையிலும் செல்லலாம்.  சிதம்பரத்தில் இருந்து தென்மேற்கே 32 கி.மி சென்றாலும்  கடம்பூர் வரும். காட்டுமன்னார்குடி- எய்யலூர்  சாலையில் முதலில் கீழ்க்கடம்பூரும் அதையடுத்து மேலைக்கடம்பூர் உள்ளது. கீழக்கடம்பூர் ஒரு தேவார வைப்புத் தலம். மேலக்கடம்பூரில் உள்ள ஆலயம் தான்  பாடல் பெற்ற தலம். 

இத்தலத்தில் இருந்து தென்கிழக்கே 6.5 கி.மி. தொலைவில் திரு  ஓமாம்புலியூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் உள்ளது.அங்கே போக  எனக்கு நேரம் கிடைக்காமல்  கோட்டை விட்டுவிட்டேன். 
மேலக்  கடம்பூர் ஆலயத்தில் சிவனின் பெயர் அமிர்த கடேஸ்வரர். திருக்கடையூரில் உள்ளது போல. 
இறைவி பெயர்ஜோதிமின்னம்மை, வித்யுத்ஜோதி நாயகி.  காலையில் கலைமகள், மாலையில் அலைமகள், இரவில் மலைமகள்.  

 எனக்கு முன்பே  வழி தெரிந்துகொண்டு  பல நூற்றாண்டுகளுக்கு முன்  இங்கே திருநாவுக்கரசரும்  திருஞான சம்பந்தரும்  அரும்பாக்கம்  ஸ்ரீனிவாசன் காருக்காக காத்திருக்காமல் காலின் உதவியோடு நடந்தே வந்து பாடல்களும் பாடி இருக்கிறார்கள். 

திருப்பாற்கடலில் இருந்து அமிர்தத்தை தேவர்கள் எடுத்துச் சென்றபோது  முதலில்  பிள்ளையாரை வணங்க மறந்து போனார்கள்.  விநாயகர்  இந்திரன் எடுத்துச் சென்ற அமிர்த கலசத்தை பறித்துச் சென்று விட்டார்.    கலசத்தில் இருந்த அமிர்தத்தில் ஒரு துளி  மேலே இருந்து   கீழே  கடம்பூரில் விழ , அதிலிருந்து  சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். அவர் பெயர் அதனால் அமிர்த கடேஸ்வரர் என்று ஒரு  ஐதீகம். புராணம்.

இந்திரனின் தாய் இத்தலத்திறைவனை வழிபட்டு வந்தாள். அவள் முதுமை கருதி, எளிதாக வழிபட இந்திரன் குதிரைகளைப்பூட்டி, இக்கருவறையை இழுத்துச் செல்ல முற்பட்டபோது விநாயகரை வேண்ட  அவனும்  மறந்து போய்விட்டான்.  விநாயகரை வேண்டி தன் காரியத்தில் இறங்காததால், விநாயகர் தேர்ச்சக்கரத்தை தன் காலால் மிதித்துக் கொண்டார். இந்திரன் எவ்வளவோ முயன்றும் கோவிலை ஒரு அடி கூட நகர்த்த முடியவில்லை. 

தன் தவறை உணர்ந்த இந்திரனும், தேவர்களும்    ''கணேசா,   என் தவறை மன்னித்து மீண்டும் எனக்கு அம்ருதத்தை  தந்தருள வேண்டும் ''  என்று வேண்டினான் இந்திரன் தனது தேவர்களுடன்.
''அதோ இருக்கிறாரே  முழு  முதற்கடவுள் சிவன்.  நேராக அவரிடம் சென்று கேளுங்கள் '' என்கிறார் விநாயகர்.
 இந்திரன் சிவனை வேண்டினான்.  இந்திரனுக்கு அமுத கலசத்தை கொடுத்து அமிர்தகடேஸ்வரர் அருள் புரிந்தார்.  

இந்த விநாயகர் சிலையும்   வாதாபியில்  இருந்து  (சாளுக்கியர் தேசம்) நரசிம்ம வர்மன் காலத்தில் அவனது சேனாபதி பரஞ்சோதியால் (பின்னால் சிறுத்தொண்டர் ) கொண்டுவரப்பட்டதாம். 

மேல கடம்பூர்  ஆலயம் சிற்பவேலை அமோகமாக நிறைந்த ஒரு அற்புத க்ஷேத்ரம். தேர் சக்ரங்கள் மண்ணில் புதைந்தது போல் ஆச்சர்யமாக கண்ணைக் கவரும் வண்ணம் சோழ சிற்பிகள் நிர்மாணித்திருக்கிறார்கள். முடிந்தால் அவசியம் ஒருமுறை குடும்பத்தோடு சென்று பார்க்கவும்.

கிழக்கு பார்த்த வாயிலில்  மூன்று  நிலை இராஜகோபுரம். உள்ளே நுழைந்தால் நேரே தெரியும் முன் மண்டபத்தில் நந்தியும், பலிபீடமும் காணலாம்.  இங்கே  கொடிமரமில்லை. முன்மண்டபத்தில் நின்று பார்த்தால் நேரே அமிர்த கடேஸ்வரர் சந்நிதி.  வலப்புறம் தெற்கு நோக்கி அம்பாள்  ஜோதி மின்னம்மை சந்நிதி.   கருவறை தேர் சக்கரங் களுடன் குதிரை இழுப்பதைப் போன்று தேர் வடிவில் அற்புதமாக காணப்படுகிறது.  கருவறை வெளிப்புறம் பூரா வினோத சிற்பங்கள். இந்திரன் கோவிலை இழுத்துச் செல்ல முயற்சி செய்யும் போது விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து இருக்கிறது. கருவறை பின்பக்க சுவரில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில். கையில் சிவலிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது அதிசயம். 

மற்றும் ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர் சந்நிதிகள். எதிரே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். அருணகிரியார் இங்கே வந்து முருகனை பாடி இருப்பதை  திருப்புகழில் படிக்கலாம். கோஷ்ட சுவரிலேயே கங்காதரர், ஆலிங்கனமூர்த்தி ஆகியோரின் சிற்பங்கள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வண்ணம்  காண்கின்றன.  

மூல கருவறை விமானத்தில் தக்ஷிணாமூர்த்தி புல்லாங்குழல், வீணையுடன் இருக்கும்  அபூர்வ காட்சி  கண்ணில் நிற்கிறது. இந்த ஆலய தக்ஷிணாமுர்த்தியின் இடது காது துளை வலது காது துளையுடன் சேர்ந்திருக்கிறது அபூர்வம்.  இதற்கெல்லாம்  தேடிப்பார்த்தால் ஏதாவது ஒரு அர்த்தம், சுவாரஸ்யமான கதை அகப்படலாம். அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்கும். அப்போது சொல்கிறேன்.

தக்ஷிணாமூர்த்தி இங்கு  ரிஷபத்தின் மேல் அமர்ந்து இருக்கிறார். மேலே கல் ஆலமரம். ரொம்ப விசித்திரம்.
கோஷ்ட சுவரில்   பிரம்மா சிவனை பூஜை செயகிறார்.  ரெண்டு பக்கமும் எமதர்மன், சித்திரகுப்தர் ஆகியோர்.
சற்று தள்ளி பதஞ்சலி முனிவர். அவருடைய தலை மீது நடராஜரின் நடனக்கோலம் உள்ளது. வலப்பக்க சுவரில் அர்த்தநாரீஸ்வரர் நந்தியுடன் இருக்க, அவருக்கு கீழே ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் காண்கிறார். 

ஒரு அற்புத சிற்பம் .  அம்பாளைத் தன் தொடை மீது இருத்தியவாறு  ஆலிங்கனம் செய்யும்  சிவன் ஆலிங்கன மூர்த்தியாக  சிற்பி  செதுக்கி இருக்கிறான்.    பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.   இந்த கோவில் தரிசனம் பூரா செய்யவேண்டுமானால் முதலில் நிறைய நேரம் தான் தேவை. 

இன்னொரு அதிசய சிற்ப பொக்கிஷம் தச  புஜ  ரிஷப தாண்டவமூர்த்தி:  நந்தி மீது நடனமாடிய கோலத்தில் 10 கைகளுடன் உற்சவராக பிரதோஷத்தின்போது வெளியே  வந்து சிறப்பு பூஜைகள் பெறுகிறார்.  அவரை படத்தில் தான் பார்க்க முடிந்தது.  பிரதோஷத்தன்று தான்  காட்சி தருவார். ராஜேந்திர சோழன் காலத்தில்  பாலர்களை  போரில் வென்று, இந்த பால வம்சத்தாரிடமிருந்து  இந்த   அபூர்வ சிலையை கொண்டு வந்திருக்கிறான்.

கீழே பீடத்தில் பார்வதி, திருமால், பைரவர், வீரபத்திரர், விநாயகர், நாரதர், நந்திதேவர், பிருங்கி, மிருகண்டு  மகரிஷி, கந்தர்வர் மற்றும் பூதகணங்கள் .

மேலே சொன்னேனே  பிள்ளையார் பற்றி அவருக்கு இந்த ஆலயத்தில் ஒரு விசேஷ இதுவரை கேட்டிராத அதிசய பெயர் ''ஆரவார விநாயகர்'' 

இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகருக்கு தனிச்சன்னதி.அமிர்த கலசத்தை தூக்கிச்சென்றும், தேர் சக்கரத்தை மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இந்த பெயர் வந்ததாம். இவர் தலையை இடதுபுறமாக சாய்த்தபடி கோப முகத்துடன் காட்சிதருகிறார். அற்புதமான சிற்பி இதை செதுக்கியவன்.

இன்னும் இங்கே கண்டு மகிழ்ந்து வணங்க வேண்டியவர்கள்: 
கழுகு வாகனத்தில் மேற்கு நோக்கி தரிசனம் தரும் சனி பகவான் ஒரு புதுமையான சிலாரூபம்.  இராமாயண காலத்திற்கு அப்புறம் தான் சனி பகவான் காகத்தை தேர்வு செய்திருக்கிறார். அதற்கு முன் அவரது வாஹனம் கழுகு.
அங்காரகன் வழிபட்ட செவ்வாய் தோஷ நிவர்த்தி தலம் என்பதால் அங்காரகன்.
சங்கு சக்கரத்துடன் சிம்மவாகினியாகவும், மகிஷாசுரமர்த்தினியாகவும் அருளதரும் துர்க்கை.
அஷ்டமி திதி இரவில் வழிபட வேண்டிய காலபைரவர்.
ஸ்ரீ முருகப் பெருமான் -    சூரனை அழிக்க தவம் செய்து வில் பெற்றதால். 
பிரதோஷ சிறப்பு மிக்க நந்தி ஸ்தலம் இது.  
பிரதோஷ காலத்தில் மட்டும் தரிசனம் தரும்  ,மேலே சொன்ன  ஸ்ரீ தசபுஜ ரிஷப தாண்டவ மூர்த்தி

கி.பி. 1110-ல் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பெற்ற சிற்பக்கலை சிறப்பு மிக்க கரக்கோயில் (தேர் மாதிரி உருவ ஆலயம்).  காவிரி வடகரையில் அமைந்த  அறுபத்து மூன்று  சிவ  ஆலயங்களில் மேலே கடம்பூர் சிவாலயம்  ஒன்று. அஸ்திவாரம் அதிஷ்டானம் என்று பெயர் கொண்டது. பதினெட்டு வரிசைகள் கொண்டது. பத்மக பந்தம், மஞ்ச பத்ரம் என்று பேர்கள் கொண்ட அதிஷ்டானம் என்கிறார்கள்.

குறிப்பிட்ட நாளில் பங்குனியில் சூரிய உதயத்தில் சூரியனின் கிரணங்கள் சிவன் மேல் விழும்படியாக கட்டப் பட்டது. இது போன்று சில கோவில்கள் தமிழ் நாட்டில் உள்ளன.

காட்டு மன்னார்குடி பக்கம் போகிறவர்கள் கட்டாயம் மேல கடம்பூர் செல்லவேண்டும் என்பது  எழுதப்படாத விதி மட்டுமல்ல  என்னுடைய வேண்டுகோளும் கூட. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...