Thursday, March 10, 2022

SURDAS

 ஸுர்தாஸ்  -  நங்கநல்லூர்  J K   SIVAN 


குழந்தை பயந்துடும்...!

சில புராண கதைகள் விஷயம்  ஒன்றாகவும் சம்பந்தப்பட்டவர்கள் வேறாகவும் அடிக்கடி  வருவதுண்டு.  உதாரணமாக  சில  ஸ்வயம்பு  சிவலிங்க  ஆலயங்களை பற்றி படிக்கும்போது, எங்கோ ஒரு புற்றின் மேல் பசு  தானாகவே  பால் சுரந்து பொழிந்ததை, ராஜா அந்த இடத்தை தோண்டச்சொல்ல  மண்வெட்டியோ, கடப்பாரையோ உள்ளே புதைந்திருந்த சிவலிங்கம் தலையில் பட்டு ரத்தம் கசிந்ததை படிக்கிறோம்.  இடம் ராஜா தான் வேறு. பசு பால், ரத்தம், லிங்கம், எல்லாம் ஒன்று தான். 

ஒரு  காமந்தகன் கட்டிய மனைவியை விட்டு , வேசியோ, காதலியோ யார் வீட்டுக்கு இரவு ஓடி, வழியில் மழை, இருட்டு,  ஆற்றில் ஏதோ ஒரு கட்டை அதைப் பிடித்து ஆற்றை கடந்து அந்த பெண்ணின் வீடு  பூட்டி  இருக்க  இருளில் மரத்தில் தொங்கிய ஒரு பெரிய கயிற்றை பிடித்துக்கொண்டு தாவி ஏறி உப்பரிகை வழியாக உள்ளே செல்ல, அந்த பெண் திடுக்கிட்டு இவனைப் பார்க்கும்போது உடலெல்லாம் ரத்தம்? மறுநாள் தான் தான் ஆற்றில் பிடித்துக்கொண்டு நீந்திய கட்டை ஒரு  மனித உடல், பெரிய கயிறு தான் ஒரு மலைப்பாம்பு...அந்த பெண் அவனுக்கு இத்தனை ஆபத்தை ஏற்று  அழியும் என் உடல் மேல் கொண்ட  காதலை, ஆர்வத்தை அழியாது, நம்மைக் காக்கும்  பகவான் மேல்  காட்டினால் போகுமிடத்துக்கு புண்ணியம் இல்லையா என்று அறிவுறுத்த ஞானியானவர்கள்  சிலர்.  இதிலும் கதை, பாத்திரங்கள் ஒன்று,  ஆனால்  மனம் மாறியவர்  ஒன்று  ஹரிதாஸ்,   பில்வ மங்கள், இன்னும்  வேறு யார் யாரோ தவிர  துளசி தாசர் பேரும் அடிபடுகிறது.

இந்தமாதிரி கதைகள்  நம்மை நல்வழிப்படுத்த நல்ல எண்ணங்களை கொல்வதற்கு, எப்படி நாம் வாழவேண்டும் என்று உணர்த்த சொல்லப்படுபவை.  சம்பவங்களில் வரும்  கதாநாயகனின்  மனமாற்றம்  நமது மனதில் பதிந்து விடுகிறது.   ஆகவே  இதே  மாதிரி கதையை வேறு ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் இன்னொருவருடைய அனுபவமாக படிக்கும் போதோ, கேட்கும்போதோ, அதன் முடிவு ஒன்றே நம்மை இயக்க வேண்டும்.

துளசி தாசர் விஷயத்தில் கதையில் சிறிய மாற்றம்;
பெண்ணின்பமே பேரின்பம் என வாழ்ந்து கொண்டிருந்தவர் 
ஒருநாள் இரவு வேளை.. தனது அழகிய 
மனைவியின் நினைவுடன்   அவள் வீட்டுக்குச் செல்லும் போது பெருமழை பிடித்துக் கொண்டது. அதைப் பொருட்படுத்தாமல் வீடு நோக்கி நடந்தார். மனம் முழுவதும் அவளது நினைப்பு! அவள் வீட்டுக்குப் போக வேண்டு மானால், இடையிலுள்ள நதியைக்  கடக்க வேண்டும். ஆற்றில் வெள்ளம் வந்ததால், ஓடக்காரன் வீட்டுக்கு போய் விட்டான். இவருக்கோ, எப்படியும் ஆற்றைக் கடந்து வீடு போய் சேர மனம் துடித்தது. ஆற்றில் பாய்ந்தார். ஏதோ ஒன்று கையில் சிக்கியது. கட்டையாக இருக்க வேண்டும்! அதைப் பற்றிக் கொண்டு கரை சேர்ந்து விட்டார். வீடு இருளில் மூழ்கிக் கிடந்தது. விளக்கை அணைத்து விட்டு மனைவி உறங்கி விட்டாள் போலும்! மழையின் சப்தத்தில், அவர் கதவைத் தட்டிய ஒலி அவளுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே மாடிக்கு ஏறுவதற்காக, மாடியில் இருந்து தொங்கிய கயிறைப் பிடித்து ஏறினார். 
ஒரு வழியாக மனைவி தூங்கும் அறைக்குள் நுழைந்தார்.
திடுக்கிட்டு எழுந்த மனைவி, கணவன் அங்கே நிற்பது கண்டு, "நீங்களா! இந்தக் கடும் மழையில் ஆற்றைக் கடந்து எப்படி வந்தீர்கள்? வீடு வேறு பூட்டியிருந்ததே!'' என்றாள்.

நடந்ததைச் சொன்ன கணவர், அவளது ஸ்பரிசத்திற்காக கடலையும் கடப்பேன் என்று மோக வெறியில் ஆசைமொழி பேசினார்.

மறுநாள் விடிந்தது. அவள் மாடிப்படியில் தொங்கிய கயிறைப் பார்த்தாள், அது கயிறல்ல, பாம்பு என்பது தெரியவந்தது. அவரை அழைத்து வந்து காட்டினாள். ஆற்றுக்கு நீராட இருவரும் சென்றார்கள். கரையில் அவர் பிடித்து வந்த கட்டை கிடந்தது. அருகே சென்று பார்த்தபோது, அது கட்டை இல்லை, ஆற்றில் அடித்து வரப்பட்ட பிணம் என்று தெரிந்தது.

''பார்த்தீரா! அழியும் என் உடல் மீது கொண்ட ஆசையில் என்னவெல்லாம் செய்திருக்கிறீர் என்று! இந்த உடல் தரும் சுகம் தற்காலிக மானது தான் இதன்மீது பற்றுக் கொண்டிருப்பதை விட, ராம   நாமத்தின் மீது பற்றுக் கொண்டால், என்றும் நிரந்தர சுகம் தரும் வைகுண்டமே கிடைக்கும்! பிணத்தையும், பாம்பையும் கட்டிக் கொண்டு சுகம் பெற வந்த உம் நிலையை நீரே ஆராய்ந்து பாரும்!'' என்றாள். அவருக்குள் ஏதோ பொறி தட்டியது.
''சே, என்ன காரியம் செய்தேன். ஒரு பெண்ணுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டுமா! அவள் சொன்னது சரிதான்.  மனைவியென்றும் பாராமல் அவள் காலில் விழுந்தார்.

"நீயே என் குரு' என்றார். உடனேயே எழுதுகோலை எடுத்தார். ராமாயணத்தை இந்தியில் மொழி பெயர்த்தார். "ஸ்ரீராமசரித மானஸ்' என்று பெயர் சூட்டினார்.   இந்த துளசி தாசர்  கதையை  ஈ அடிச்சான் காப்பியாக படித்திருக்கிறேன். பில்வ மங்கள் என்ற ஹரிதாஸ் ... அங்கே மனைவிக்கு பதிலாக ஒரு நாட்டிய மாது. பொதுமகள் .

ஒருநாள் யாரோ தெருவில் கிருஷ்ண பஜனை பாடிச் சென்றது   கண்ணற்ற  சிறுவன் சூர்தாஸ் மனதுக்கு பிடித்தது.
''எவரையோ பற்றி உரக்க ''நீங்கள் பாடியது பிடிக்கிறதே. யாரை பற்றி இந்த பாட்டு ?''
''அடே பையா, இது கிருஷ்ண பகவானை பற்றிய பஜனை?''
''யார் கிருஷ்ணன், அவனை பற்றி சொல்லுங்களேன்?''
கிருஷ்ண சரித்திரம் சுருக்கமாக சொல்லக் கேட்டு மனம் பரவசமாகிறது. கிருஷ்ணன் எப்படி இருப்பான் என்று கேட்டு அறிகிறார்?
''அவன் பால கிருஷ்ணன், குழந்தை, புல்லாங்குழல், பசுக்கள், பிருந்தாவனம், கோப கோபியர்கள், வெண்ணை திருடன், நீல வர்ணன், பீதாம்பர வஸ்திரம், யமுனை நதி விளையாட்டு, மயில்தோகை அணிந்தவன், என்றும் புன்னகை தவழும் முகம், அவன் இசையால் புவியே மயங்கும்''' என்று அவனை வர்ணித்த பாகவதர். போய்விட்டார்.  
அன்றுமுதல் ஸூர்தாசர்  மனதில் கண்ணன் உறைந்தான். பாடல்களாகினான். எண்ணற்ற பக்தர்கள் கேட்டு மயங்கினார்கள்

ஆற்றங்கரையில் கண்ணனை தன மனதில் நினைத்து பாடினார். பக்தர்கள் அவர் பசியாற உணவு அளிக்க ஆயிரக்கணக்கான பாடல்களாக சூர் சாகரமாக கிருஷ்ணன் மாறினான்.

இனி ஒரு சுவாரசியமான கதை சொல்லி முடிக்கிறேன்.  ஸூர்தாஸர் துளசி தாசர் காலத்தை சேர்ந்தவர் தான். நண்பர்கள்.   எப்படி பழக்கமாயிற்று என்பது தான் இன்றைய விஷயம்.

ஒருநாள் துளசி தாசர் எங்கோ செல்லும்போது வழியில் ஆற்றங்கரையில் ஸூர் தாசர் வழக்கம்போல  ஒரு மூலையில் அமர்ந்து கிருஷ்ணன் பாடல்களை இயற்றி மனதில் சந்தோஷமாக ரசித்து பாடிக் கொண்டிருந்தார்.  அங்கே வரும்போது ஸூர்தாஸர் பாடல்   துளசிதாஸரை  ஈர்க்கிறது. ருகே செல்கிறார். அமைதியாக கேட்டு தன்னை மறக்கிறார். பிரிந்தாவனத்துக்கே அவரை அழைத்துச் செல்கிறார்  ஸூர்தாஸர். பாட்டு முடியும் வரை சிலையாக நின்று கண்களை மூடி ரசித்த துளசிதாசர்  ஸூர்தாசரை வணங்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

''அடாடா,  என்ன ஆச்சர்யம்,   நீங்கள் துளசிதாசரா. உங்களை பற்றி நிறைய  சொல்வார்கள். அற்புதமான ராம பக்தர். உங்களை தரிசிக்கும் பாக்யம் எனக்கு இல்லை. தொட்டு பார்த்து வணங்குகிறேன்''
''மஹானுபாவா , இனி தொடர்ந்து உங்களோடு நட்பு கொண்டு நான் உங்களோடு இருப்பேன்'' என்கிறார் துளசிதாசர்.
''ஆஹா கிருஷ்ணன் மேல் கீர்த்தனைகள் நிறைய சேர்ந்தே பாடுவோம் '' என்கிறார் உற்சாகமாக ஸூர்தாஸ் .  அப்போது  அந்தப்பக்கமாக  ராஜாவின் பட்டத்து யானைக்கு மதம் பிடித்து தெருவில் ஓடிவருகிறது. கோவில் அருகே ஸூர்தாஸ் துளசிதாஸ் இருவரும் நிற்கிறார்கள். '

''ஓடுங்கள் ஓடுங்கள் யானை வருகிறது. எதிரே யார் இருந்தாலும் கொன்றுவிடும்''   என  யானைப்பாகன் கத்துகிறான். மக்கள் தலைதெறிக்க  நாலாபக்கமும்  ஓடுகிறார்கள்.

''யானை என்பது பெரிய மிருகமாமே, எப்படி இருக்கும் என எனக்கு தெரியாதே என்கிறார் ஸூர் தாஸ் '
''சூரதாஸ் நாம் இருவரும் கவலைப்படவேண்டாம். நம்முள் கிருஷ்ணன் இருக்கிறான் அவன் பார்த்துக் கொள்வான். ஒரு ஓரமாக நிற்போம்''

கிருஷ்ணனை தியானித்து கண்மூடி துளசிதாசர் சிலையாக அமர்ந்திருக்க யானை அருகே வந்துவிட்டது. பார்த்தது. ஒருகணம் நின்றது. மெதுவாக அவர் எதிரில் நின்றது தும்பிக்கையால் அவரை வணங்கியது அமைதியாக அவரை சுற்றி வந்து திரும்பியது. எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்த போது தான் துளசிதாசர் மெதுவாக தியானத்திலிருந்து கண் விழித்தார்.

துளசிதாசருக்கு அப்போது தான் சூர்தாஸ் பற்றி நினைப்பு வந்தது. ''எங்கே சூர்தாஸ் ? காணோமே.'' சற்று தூரத்தில் மரத்தின் பின்னே இரு கைகளாலும் நெஞ்சை மறைத்துக்கொண்டு நடுங்கியபடி ஸூர்தாஸ் நிற்பது தெரிந்து அவரை அழைத்துக் கொண்டு வருகிறார். கண் தெரியாத அவருக்கு எல்லோரும் விஷயம் சொல்கிறார்கள்.

''ஸூர்தாஸ்,  எனக்கு ஒரு சந்தேகம் உங்களை நேரடியாக கேட்டுவிடுகிறேன்?'' ஏன் எல்லாரையும் போல் நீங்களும் யானையை கண்டு பயப்பட்டு நடுங்கினீர்கள்?'' நான் தான் நம்முள் கிருஷ்ணன் இருக்கிறான் பார்த்துக் கொள்வான் என்றேனே ''

''துளசிதாசரே,  நீங்கள் ஒரு உன்னத கிருஷ்ண பக்தர் என அறிவேன். உங்கள் மனதில் இருக்கும் கிருஷ்ணன் நீங்கள் கண்ணை மூடி தியானத்தில் இருக்கும்போது வந்த அந்த பொல்லாத கோபமான யானையை கிருஷ்ணன் விரட்டி விடுவான் என்று தைரியமாக இருந்தீர்கள்.

ஆனால் என் மனதில் இருக்கும் கிருஷ்ணன் ஒரு குட்டிப்  பயல். இதுவரை எனது மனதில் அவனை குழந்தையாகவே நான் அறிவேன். அவனது சிரித்த விளையாட்டு முகம் ஒன்றே நான் அறிந்தது. பல பாடல்கள் அப்படியே அவனைப் பற்றி பாடியுள்ளேன். நீங்கள் சொன்னது போல் யானை மிக பெரிய மிருகம், அதற்கு மதம் என்று ஏதோ சொன்னீர்களே அது பிடித்தால் ரொம்ப ஆத்திரமடைந்து எல்லோரையும் தாக்கி கொன்றுவிடும் என்று சொன்னீர்களே..
ஒருவேளை என் மனதில் உள்ள குழந்தை கிருஷ்ணன் அந்த பெரிய யானையை பார்த்து பயந்து அழுதுவிட்டால்?? நான் எப்படி அவனுக்கு ஆறுதல் சொல்லமுடியும்? எனக்கு சிரிக்கும் கிருஷ்ணன் தான் பிடிக்கும். அழுபவர்களை கண்டாலே பிடிக்காது. ஆகவே என் இரு கைகளாலும் என் நெஞ்சை மூடி மறைத்து கொண்டேன். என் நெஞ்சின் உள்ளே இருக்கும் அவனுக்கு யானை கண்ணில் படாது அல்லவா, அதனால்  யானை பற்றிய  பயம் தோன்றாது அல்லவா, அழுகை வராது அல்லவா? '' என்கிறார் ஸூர்தாஸ்.
இதை கேட்டதும் உங்களுக்கு எப்படி இருக்கிறது?
அப்புறம் துளசிதாசர் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்ததை , அவர்  ஸூர் தாசரின் கிருஷ்ண பக்தியை உணர்ந்ததை, சிலையாக நின்று ரசித்து அவர் பாதங்களில் விழுந்ததை பற்றி  நாமாகவே மனதுள்  நினைப்போம்.  என் எழுத்து வேண்டாம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...