Friday, March 18, 2022

MY ANCESTORS

 


 

தாத்தாவின்  அரிய  தமிழ்ப் புலமை  -
நங்கநல்லூர்  J K  SIVAN 

என் தாய் வழி தாத்தா  ப்ரம்ம ஸ்ரீ  வசிஷ்ட பாரதிகள்,  புராண சாகரம் என்று மஹா பெரியவாவிடம்  விருது பெற்றவர்.  கம்ப ராமாயணம், புராணங்களில்  தேர்ச்சி பெற்று  ஆராய்ந்து அற்புத பிரசங்கங்கள் நிகழ்த்திய  கண்பார்வை குன்றிய மஹா மேதை.  அவரது சுய சரிதையை  1930களில்  ''ஹிந்து நேசன்'' எனும் தமிழ் சஞ்சிகையில்  வெளியிட்டு வந்ததை என் மாமாக்கள் சிலர்  நகல் எடுத்து பாதுகாத்து வைத்ததன் ஒரு பிரதி எனக்கு கிடைத்தது என் பாக்யம். அதில் சிலவற்றை தொகுத்து ''எங்கள் பாரதி வம்சம்-  புராண சாகர  நினைவலைகள்''  என்ற  இலவச  வெளியீடாக
 நண்பர்கள் உறவினருக்கு அளித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. அந்த புத்தகத்தில்  இடம் பெறாதவை நிறைய உள்ளன.  அதில் ஒரு முத்து இந்த கட்டுரை:

தாத்தா கும்பகோணம் மஹாமஹ வைபவத்தைப் பற்றி சொன்ன சில வார்த்தைகள்:
மஹாமஹம் பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒரு முறை வரும் பெரிய திருவிழா.  கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி  சிந்து, நர்மதா நதிகள் காவேரியில் வந்து கலக்கின்ற நிகழ்ச்சி  மஹாமஹ  தீர்த்தம்.  இது  ஒரு வாவி உருவமாக  குடந்தை எனும் கும்பகோண நகரத்தின் நடுவே,  நாகேஸ்வர சுவாமி கோவிலின் கிழக்கில்,  கோமேசர்  விஸ்வேஸ்வரர்  கோவில்  மேற்கே அமைந்துள்ளது.  மஹா மஹ  ஸ்னானம் செய்ய உலகத்தின் பல பாகங்களிலிருந்தும்  நாட்டின் பல பகுதிகளிலிருந்தும்  பக்தர்கள் வருவது வழக்கம்.

1909ல்  கீலக  தமிழ் வருஷம் மாசி மாதம் மஹா மஹ வைபவம் நிகழ்ந்தது.  அந்த காலகட்டத்தில்  சிறந்த கர்நாடக சங்கீத வித்வான்   பாலக்காடு  ஸ்ரீ  அனந்தராம  பாகவதர்  கும்பகோணத்தில் வாழ்ந்து வந்தார். சென்னை மாநகரை விட்டு  கும்பகோணம் திருவாவடுதுறை ஆதினம்  ஸ்ரீலஸ்ரீ  அம்பலவாண தேசிகரின் பேர் அபிமானத்தைப்  பெற்று கும்பகோணத்தில் காமாக்ஷி ஜோசியர் தெருவில் குடும்பத்தோடு  ஒரு பெரிய  தனியான  கிரகத்தில் சுகமாக  வசித்து வந்தார்.  

மேல் சொன்ன மகாமக வைபவத்திற்காக  ஸ்ரீ அம்பலவாண தேசிகர்  கும்பகோணத்தில்  மஹா தான தெருவில் உள்ள தம்முடைய மடத்துக்கு  விஜயம் செய்தார். மஹாமஹ  வைபவத்தை ஒட்டி  பெரிய பந்தல் கொட்டகை மடத்தை ஒட்டி பெரிதாக அமைத்து முக்யமானவர்களை  அழைத்து விருந்தளித்து, கச்சேரிகள்  சிலவற்றை  நிகழ்த்த   ஏற்பாடு செய்திருந்தார். வித்வான்களுக்கு சிறந்த பரிசுகளும்  நன்கொடையும் அளித்தார்.

அனந்தராம பாகவதரைப் பற்றி சில வார்த்தைகள்.   1867--1919  வரை  அரை நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்ந்த சிறந்த கர்நாடக சங்கீத  வித்வான்.  பாலகாட்டுக் காரர்.  கம்பீரமான குரல். அவருக்கென்று ஒரு தனி பாணி. ஐந்து கட்டையில்  சஞ்சாரம்  சர்வ லகுவாக  கான  மழை பொழிவார். பொய்க்குரல் கிடையாது. ''காயக  சிகாமணி'' என்ற  விருது பெற்றவர்.  கேரளா மைசூர் மகாராஜாக்கள் தர்பார்களை  அலங்கரித்தவர்.  உயரமாக, சிவந்த மேனி. பெரிய  மீசை உண்டு.  அவரது சம காலத்து மஹா வித்வான்கள்   மஹா வைத்யநாத ஐயர் ,  பட்டணம் சுப்ரமணிய ஐயர் , பல்லவி சேஷய்யா, ராமநாதபுரம் ஸ்ரீனிவாச ஐயங்கார், திரு வொற்றியூர்  தியாகையா, வீணை சேஷண்ணா, வீணை தனம்மாள், பிடாரம் கிட்டப்பா ,ஆகியோர் சிலர்.

அனந்தராம  பாகவதர்  தாத்தாவின் நல்ல நண்பர். கும்பகோணத்தில் தாத்தா அவரது இல்லத்தில் மாசி மஹாமஹத்தின் போது  இருந்தார். அம்பலவாண தேசிகர் பாகவதரை கச்சேரி செய்ய அழைத்தபோது, பாகவதர்  தாத்தாவையும் கூட்டிச் சென்று தேசிகருக்கு  அறிமுகப்படுத்தினார்.

வசிஷ்ட பாரதிகளைப் பார்த்த தேசிகர் வணங்கி  பாகவதரிடம் '' இவர் யாரென்று அறிமுகப்படுத் துங்கள்'' என்கிறார்.

''இவர்  தான் ஸ்ரீ வசிஷ்ட பாரதியார். எனக்கு தமிழ் போதித்தவர். அப்பர் ஸ்வாமிகள் சரித்த்ரம் போல சில  புராணங்களை இவர் மூலம் தான் நான் அறிந்து  நான் ஹரிகதா  செய்தேன்.  இவர் என் குரு. கம்ப ராமாயத்தில் ரொம்ப ப்ரஸித்தர்.  சன்னிதானம்  பத்ரிகைகளில் இவர் பிரசங்கம் பற்றி வருவதையெல்லாம் பார்த்திருக்கலாமே ''

தேசிகர்:  ''ஆம். ஆம்.  கவனித்திருக்கிறேன்..'' என்றவர்  தாத்தா பக்கம் திரும்பி  உங்களுக்கு  ''....எண்ணுதற்காக்கரிது''.... தெரியுமோ?''  என்று கேட்டார்.

தாத்தா:  ''இது கம்ப ராமாயணத்தில் பாலகண்டத்தில்  வேள்விப்படலத்தில் வரும் கம்பநாட்டாழ்வாரின் செய்யுள் .

எண்ணுதற் காக்கரி திரண்டு மூன்றுநாள்
விண்ணவர்க் காக்கிய முனிவன் வேள்வியை
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்
கண்ணினைக் காக்கின்ற விமையிற் காத்தனர்'

 இதன் அர்த்தம் : பிரம்மாவால் கூட நினைக்கவோ செய்யவோ அரிதானது. இது யாகத்தின் பெருமையை குறிப்பதல்ல.  அது நிகழாமைக்குரிய அரக்கர் கொடுமையை குறிப்பதாகும்  என    உம்மைத்  தொகை விளக்குவதாகும்.  ஆக்கரிது என்ற அளவே போதும். எண்ணுதற்கரிது என்பது என்னை. ஆக்குதல் வெளிப்படை.  அது அரக்கர்கள் அறியக்கூடும். எண்ணுதல் உட்கிடை. அது அறிய வொண்ணாதது.  இதை அரக்கர்கள் எங்ஙனம்  அறிவார்கள்? எனில் இது தான்  அம் முனிவர்கள்  இருப்பிடமும் செயலும்  நன்குணர்ந்து அதனையே தொலைப்பது தொழிலாகக் கொண்ட அவுணர்கள் குறிப்பினால் அறிந்துகொண்டு நலிவார்கள்  என்பதாம். இது மனோ உணர்ச்சி. Thought  reading, mind  reading,   அக்காலத்தில் வயர்லெஸ் டெலி மெசேஜ் என்று எடுத்துக் கொள்ளலாம்.

இந்த செய்யுளில் வரும்  '' இரண்டு மூன்று ''  என்பதை  சிலர்  அந்த யாகத்திற்கான காலம் என்று பொருள் கொள்வார்கள். 2, 3 என அக்கால அளவை, ஏகதேசத்தால் சிலர் கூறுவார்கள். அன்றியும் முதல் நூலில் அந்த வேள்வி, யாகத்தின் காலம் 5 நாள். பஞ்சராத்ரம், எனவும் அபவிரதம் செய்யும் நாளோடு  6 நாள் (ஷட் ராத்ரம்) எனக்கொண்டு அதனையே  2+3 = 5 எனக் கூட்டி,    2x 3= 6 எனப் பெருக்கியும்  விளக்கலாம்.  இதைத்தவிர இன்னொரு சான்றும் கூட உண்டு. நாள் என்பதை நக்ஷத்ரம் என்று கொள்க. 

அரச மாதவன் யாதி ஐந்து நாள் யாதி எதன்பால் வந்துன் 
புரை விளக்கிடுக வென்னாக்  கடவுளர்  போய பின்னர் 
நிரைதவன் விரைவினேகி நெடுங்கடற் கிறைவன் வைகும்  
உறைவிடம் அதனை நண்ணி உருத்தமுஒற்றுங்காலை ''

என்ற  பாடல் மேற்கோள் காட்டி  விஸ்வாமித்ரர் தனது தவத்தின்  சக்தியால்  வடக்கேயுள்ள ஐந்து நக்ஷத்திரங்கள் அவிட்டம் முதல் ரேவதி வரை  தென்பால்  மாற்றி அமைத்தது பற்றியும் வருகிறது  என்று குறிப்பிட்டார்.

அம்பலவாண தேசிகர், எங்கள் தாத்தா வசிஷ்ட பாரதிகளுடன் அரைமணிக்கும் மேலாக  இந்த  விஷயங்களை அறிந்து மகிழ்ந்தார். 

''ஐயா  இரண்டடிகளே  போதும். கடல் மடை திறந்தால் போல் அல்லவா  உரைக்கிறீர்கள்'. ரொம்ப நன்றாயிருக்கிறது' என்று சொல்லி  அனந்தராம பாகவதரிடம் ''பாகவதரே, ரொம்ப நல்ல சிநேகம் படைத்தீர். இவரிடம் இன்னும்  விஷயங்கள் எல்லாம் நன்றாக அறியலாம்''  என்றார் .  தாத்தாவுக்கு  சன்மானம், ரெண்டு பீதாம்பரம் பரிசாக கௌரவித்தார்''.  

தாத்தா  1872ம் வருஷம்  ஆங்கிரஸ வருஷம் பிறந்தவர்.  1932ல்  ஷஷ்டி அப்த பூர்த்தி தனது புரசைவாக்கம் வீட்டில் கொண்டாடிய சஷ்டியப்த  பூர்த்தி அழைப்பு பத்திரிகை ஒன்று என்னிடம் இன்று அகப்பட்டது. அதை உங்களால் படிக்கமுடிகிறதா என்று பாருங்கள்.



.
 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...