Tuesday, March 29, 2022

maharishi ramana

 மஹரிஷி ரமணர் --   நங்கநல்லூர்  J.K. SIVAN


''1950  ஏப்ரல் 14  இரவு  8.47 மணி.''

திருவண்ணாமலை சென்னையிலிருந்து 120 மைல் தூரம். திருவண்ணாமலை ரயில் நிலையத் திலிருந்து 3 கி.மீ. ரமணாஸ்ரமம் என்ற பேர் தாங்கி ஒரு வளைவு. அதில் அநேக மரங்கள். ஒன்று 400 வயது இலுப்பை மரம்.    ஆலயத்தை ஒட்டி கிரி வல பாதையில் அக்னி லிங்கம் கடந்து இடது பக்கம் ரமணரின் ஆஸ்ரமம். அதை ஒட்டி சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆஸ்ரமம்.  அங்கே  நடக்கும்போது என் மனதில் எங்கிருந்தோ ஒரு ஆனந்த அமைதி ஓடிவந்து நிரம்பியது.

ரமணாஸ்ரமத்தில் அநேக குரங்குகள், மயில்கள், வெள்ளைக்கார ஆண்கள் பெண்கள், இந்தியாவின் பல பகுதி மக்கள்,    ரமணர் சிலையோடு ஒரு பெரிய நிசப்தமான தியான மண்டபம். ரமணர் அறைகள். சில குரங்குகள் என் கையிலிருந்து வேர்க்கடலை பெற்றுக் கொண்டன, சிலது என் கையில் வாயை வைத்து தின்றன. பயம் எனக்கோ குரங்குகளுக்கோ துளியும் இல்லை. மயிலிடம் நான் இந்த விளையாட்டை வைத்துக் கொள்ளவில்லை. வேர்க்கடலை கொத்தும்போது கையில் துளை போட்டுவிடும். கூரான பலமிக்க அலகுகள். எனவே அவை என்னருகே சுவர்  மேடையில்  வைத்த  வேர்க்கடலையை   ஏற்றுக் கொண்டன.

வெள்ளைக்காரர் ஒருவர் கட்டு  குடுமியோடு வேஷ்டி ஜிப்பாவுடன் நெற்றியில் குங்குமத்தோடு பளிச்சென்று ஒரு ஜன்னல் மேல் அமர்ந்து கொண்டு கண்ணை மூடி சிலையாக தியானத்திலும், ஒரு பெண் காட்டன் புடவையில் எளிமையோடு கால் நீட்டி மடியில் ஒரு உபநிஷத் புஸ்தகத்தை வைத்து படித்துக் கொண்டும் வெகுநேரம் தென்பட்டார்கள்.

வரும்போது எப்படி பார்த்தேனோ அப்படியே நான் திரும்பும்போதும் அவர்கள் அவ்வாறே. யார் வாந்தாலும் போனாலும் கவனம் சிதறாது அவர்கள் கருமமே கண்ணாயிருந்தது மிக்க ஆச்சரியம். . மற்றும் சிலர் சௌகர்யமாக கால் மடித்து உட்கார்ந்து யோகிகள் போல் கண்ணை மூடி தியானத்தில் இருந்த காட்சியை படம் பிடிக்க மனம் இடம் கொடுக்க வில்லை.

ரமணரின் தாய் அதிஷ்டானம் ஒரு சிவலிங்கத்தோடு ஒரு கோயிலாக உள்ளது. மாத்ரு பூதேஸ்வரர் ஆலயம் என்று பெயர் அதற்கு.

 ரமணரின் அதிஷ்டானம் மற்றொரு ஆலயமாக வழிபாட்டுக்கு எண்ணற்றோரை வரவேற்கிறது. அவர் மீது பாசம் கொண்ட பசு லக்ஷ்மிக்கு ஒரு சிலை. அழகாக நிற்கிறது. ஆலயமாக. லக்ஷ்மியைப் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேனே.

என் மனத்திரையில்  காட்சிகள் படபடவென்று கருப்பு வெளுப்பாக  ஓடியதைச்  சொல்கிறேன்: 

1948ல் மகரிஷி ரமணரின் இடது கையில் ஒரு புற்றுநோய் கட்டி. ஆபரேஷன் செய் கட்டியை அறுத்து  எடுத்தார்கள். 1949ல் ரேடியம் சிகிச்சை செய்தார்கள். அவர் லக்ஷ்யமே பண்ணவில்லை. யாருக்கோ எங்கோ ஏதோ நடப்பது போல் தான் இருந்தார். தோளிலிருந்து வலது கையை எடுத்தால் உயிர் தப்பலாம் என்கிறார் டாக்டர். அவசியமே இல்லை. தேவையற்ற வேலை என்றார் மகரிஷி. ஆகவே மீண்டும் ரெண்டு மூணு ஆபரேஷன் செயது பார்த்தார்கள். மருந்துகள் அவரை உடல் வலிமையற்ற வராகச் செய்தது தான் மிச்சம்.

'' நீங்களே ஏன் உங்களை பாதிக்கும் கட்டியை புற்றுநோயை போக்கிக் கொள்ளக் கூடாது'' என்று கெஞ்சிய பக்தர்களை மகரிஷி வேடிக்கையாக சிரிப்புடன் நோக்கி 

''இந்த உடல் மேல் அவ்வளவு அக்கறையா? தேவையா?'' நான் எங்கே போகப் போகிறேன். இங்கே தானே இருப்பேன், நான் இந்த  உடல் என்றா  நீங்கள் இன்னும் நினைத்துக் கொண்டிருக்க்கிறீர்கள்?' என்றார்.

ஒரு பூட்டிய சிறிய அறையில் ( நிர்வாண அறை என்று பெயரோடு) அவர் வாழ்ந்த போது கடைசியாக எப்படி இருந்ததோ அப்படியே வைத்திருக்கி றார்கள். கமண்டலம், திருவோடு, ஒரு கட்டில் அருகே ஒரு அலமாரியில் பழைய அலாரம் டைம் பீஸ். அது காட்டும் நேரம் 8.47 இரவு. ஆம் அன்று 14.4.1950 மகரிஷி ரமணர் நிர்வாணம் அடைந்த நேரம்.

பகவான் ரமண மஹரிஷி  தனது  இடது முழங்கையை தேய்த்துக்கொண்டு ஒருநாள்  1948 கடைசி யிலோ 1949  ஆரம்பத்திலோ  தனது  தேகத்தை விட்டு  விலகுவது பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.  அவர் இடது முழங்கை பகுதியில் ஒரு வேர்க்கடலை அளவு ஒரு கட்டி , கொப்புளமாக இருந்த காலம் அது. கொஞ்சம் கொஞ்சமாக அது வளர்ந்தது. வலியும்  அதோடு கூடியது.   ரமண ரிஷி வெளியே இருந்து எந்த  டாக்டரையும் கூப்பிடவில்லை.  ஆஸ்ரமத்திலிருந்த, தனக்கு அடிக்கடி மருத்துவம் செய்யும் ஒரு டாக்டரிடம் ''இதை வெட்டி விடுங்களேன்'' என்று சொல்லியிருக்கிறார்.

ஒருநாள் காலை அவர்  உணவு உட்கொள்ளும் முன்  குளியறையில் அந்த கட்டியை டாக்டர் வெட்டி எடுத்தார்.  கையில் கட்டு போட்டால்  பக்தர்கள் மனது சங்கடப்படுமே என்று  ஒரு துணியை அதன் மேல் சுற்றி இருந்தார்.

'' சுவாமி  கையில் என்ன  துணி சுற்றி இருக்கிறீர்கள் ''என்று அனைவரும் கேட்க ஆரம்பிக்க சிரித்துக் கொண்டே 
''இதுவா, அது ஒரு  கங்கணம்.  என் முழங்கையில் ஒரு சிவலிங்கம் ஸ்வயம்புவாக வளர்ந்து வருகிறதே'' என்பார்.  சில  மாதங்களில்  அந்த  முழங்கை கட்டி  ரத்தக்கட்டி  tumour  என்று உறுதி யானது.  அதை ஆபரேஷன் செய்ததும் காயம்  ரணம்   ஆச்சர்யமாக  சில  வாரங்களில் குணமா கியது.   பக்தர்கள் மனம் மகிழ்ந்தது.  ரமணரை பொறுத்தவரை  கட்டியோ, அதன் வலியோ  மனதில் பதியவில்லை.
ஒரு மாதகாலம்  சென்றபின்  மீண்டும் கட்டி தலை தூக்கியது.  மறுபடியும்  ஆபரேஷன் செய்தவர்கள்.  அதை சோதனை செய்தபோது அது புற்று நோய்க்  கட்டி என்று தெரிந்தது.  ரேடியம் சிகிச்சை துவங்கினார்கள்.  ரணம் இந்த முறை  ஆறுவதாக இல்லை.  அவரது கையை  துண்டிக்கவேண்டும் என்ற நிலை வந்தது.

''அதெல்லாம் எதற்கு?  இந்த உடம்பே ஒரு வியாதி பிண்டம்.  அதுவாக இருக்கும் வரை இருந்து விட்டு போகட்டுமே'' அதை எதற்காக துண்டிக்கவேண்டும்?  அந்த இடத்தை  சுத்தம் செய்து கட்டுப்போட்டு வையுங்கள்  அது போதும் என்றார்.  கட்டியை ஆபரேஷன் செய் து  மருந்து வைத்து கட்டுப்போட் டார்கள். அவர் கட்டியையோ அதன் வலியையோ அறியவில்லை.

சூரிய வெளிச்சம் கொஞ்சம் உதவும் என்று டாக்டர்கள் சொல்ல  ரமணர் தினமும்  கோசாலையில் மாட்டுக்கொட்டில் பின்னால் கட்டவிழ்த்து  காயம் சூரிய ஒளியில் பட உட்கார்வார்.   ரத்த கட்டியை பார்த்து ஆஹா  என் உடலில் விலையுயர்ந்த  பவழமும்  இருக்கிறதே.   சூரிய ஒளியில் எப்படி தகதக வென்று ஜொலிக்கிறது   என்று கேலியாக சொல்லி சிரிப்பார். எனக்கு இப்படி ஒரு விலையுயர்ந்த ஆபரணமா?''  என்பார்.

புற்றுநோய்  தனது வேலையை அதிவேகமாக தொடங்கிற்று. அவரது உடலின் ரத்தக்குழாய்களில் பரவ ஆரம்பித்தது.  ஆபரேஷன் பண்ண பண்ண  மீண்டும் மீண்டும்  ராவணனாக தலை முளைத்தது.

மூன்றாவது ஆப்பரேஷன் ஆயிற்று. அது முடிந்த சில மணி நேரங்களில் மகரிஷி  ஏராளமான  பக்தர்களின்  விருப்பத்துக்  கிணங்கி  தரிசனம் கொடுத்தார்.

மறுநாள்  டாக்டர்கள்  திரும்பினார்கள் .  ரமண மஹரிஷி தரிசன மண்டபத்துக்கு வந்தார். யாரையும் காக்க வைக்க விரும்பவில்லை.

1949 டிசம்பர்  இன்னொரு  ஆபரேஷன் நடந்தது.   அதனால் குணமடைவதற்கு பதிலாக  புற்றுநோய் வலுவடைந்தது.

ஆங்கில வைத்தியம் தவிர   ஹோமியோபதி, ஆயுர்வேத   சிகிச்சை முறைகளும் பின்பற்றினார்கள்.   தினமும்  சாயந்திர வேளையில்  நடை உண்டு.   அப்படி ஒருநாள்  நடக்கும்போது  ஜுரத்தில் உடல் நடுக்கம் கண்டது.  நடக்க முடியவில்லை.  அவரது  சாய்மானமான ஆசனத்தில்  அமர்ந்து விட்டார். உடம்பில் நடக்க சக்தி இல்லை.  பக்தர்கள் வருந்தினார்கள்.

உடல்நிலையை பற்றி யாராவது கேட்டால் ''அதற்கு என்ன? அதற்கு தேவை உள்ளே இருக்கும் உயிர். அதான் இன்னும் இருக்கிறதே. அது எல்லோருக்கும் திருப்தி தானே?  இன்று கொஞ்சம்  நடராஜா  டான்ஸ்  ஆடுகிறது தெரிகிறது   எப்போதும் உள்ளேயே  ஆடுவது இன்று தாண்டவ தரிசனம்  கொஞ்சம் வெளியேயும் தெரிகிறது. அதெல்லாம் பற்றி துளியும் கவலை படாதீர்கள்'' என்கிறார்.
 
நாட்கள் நகர்ந்தன. ஒருநாள்  குளியலறை செல்ல மெதுவாக நடக்கிறார்.  உள்ளே நுழையும் முன்பு கால் தடுமாறுகிறது. விழுகிறார்.  இடுப்பு, கால்களில் பலத்த அடி . துளியும் லக்ஷியம் செய்யாமல் யார் உதவியும் தேடாமல் தானே  மெதுவாக எழுகிறார். நிற்கிறார்.  உடலில் ஆடையெல்லாம் சிகப்பாக ரத்த வெள்ளம்.  எலும்பு முறிந்துவிட்டது.  அவரிடம் எந்த  பாதிப்பும் இல்லை.  கொஞ்சமும் சத்தமே இல்லை.
செய்தி பரவியது.  அவர் விழுந்ததை எலும்பு முறிவை பிரகடனப்படுத்த வேண்டாம் என்று சொல்லி விட்டார்.   விழுந்ததால்,  எலும்பு முறிவால் உண்டான வலியையும், ஏற்கனவே பலமுறை ஆபரேஷன் செய்து வலிக்கும் புற்று நோய் கட்டியால் உண்டாகும் வலியையும்,   கொஞ்சமும் பொருட்படுத்தாமல் எல்லோருக்கும்  விடி காலை யிலிருந்தே  தரிசனம் கொடுக்கிறார்.   யாருக்கும் நடந்ததே தெரியாத படி அவரிடம் எந்த வித்தியாசமும் இல்லை.

இப்போதெல்லாம் அவரால்  படிகள் ஏறி நடக்க  முடியவில்லை.  தினமும்  கிழக்கு வாசல் வழியாக வருவது இப்போது முடியாமல்  நின்றுவிட்டது.  அங்கே  கொஞ்சம் படிகள் உண்டு. எனவே வடக்கு வாசல் வழியாக  மண்டபம்  வாருங்கள் என்று சொல்கிறார்கள்.  

 ''அதெல்லாம் வேண்டாம். வடக்கு வாசல் பெண்  பக்தர்கள்  உபயோகிக்கும் பிரத்யேக வழி. அதை யெல்லாம் மாற்றவேண்டாம்.   தரிசன மண்டபம் வர  முடியாத போது  கிழக்கு வாசல் அருகே இருக்கும்  தன்னுடைய  சிறிய அறையில்  இருப்பார்.  அதை தான்  'நிர்வாண  அறை''  என்கிறார்கள்.  அங்கே தான் மகரிஷி தேக வியோகம் அடைந்தார். இன்றும் ரமணாஸ்ரமத்தில் அந்த அறையை பார்க்கும்போது  என்னை அறியாமல் கண்களில் நீர் வடிகிறது.

காலம்  யாருக்கும் காத்திருக்க வில்லை. 1950ம் வருஷம்  ஏப்ரல் மாதம் ஆரம்பத்திலேயே  இனி பகவான் ரமண மகரிஷி அதிக காலம்  தேஹத்தோடு  காட்சி தரப்போவதில்லை என்று ஊர்ஜிதமாகி விட்டது.    ஆனால்  அவரோ தொடர்ந்து வழக்கம் போல  தரிசன மண்டபம் மெதுவாக வந்து கஷ்டப்பட்டு சாய்வு நாற்காலி சோபாவில் உட்காருவார்.  நமது அருமை குரு இன்னும் அதிக காலம் நமக்கு கிடைக்க மாட்டார் என்று பக்தர்கள் அறிந்து வாடினார்கள். கூட்டம் கூட்டமாக அவரது தரிசனம் பெற ஓடி வந்தார்கள். அவர் உடல்  கொஞ்சம் கொஞ்சமாக மரணித்துக் கொண்டிருந் தாலும்  அவர் உடலில் ஒரு அபூர்வ ஒளி வீசியது.  அவரது சிரமத்தை பார்த்து  யாராவது கண்ணீர் விட்டால்  அவர்  பொறுக்க மாட்டார்.

''ஏன் நான் இறப்பதை பற்றி  உங்களுக்கு வருத்தம்.  நான் எங்கே போய்விட்டேன்? எங்குமே போகவில் லையே.  எங்கே போவேன் நான்?  எப்போதும் இங்கேயே தான் இருக்கிறேன்'' என்று சமாதானம் சொல்வார்.

1950  ஏப்ரல்  10 - அதிகமான பக்தர்கள் கூட்டம் பெருகியது.   இப்படி தரிசனம் தருவது மகரிஷிக்கு  ரொம்ப கடினம், கஷ்டம் தான்.  உடல் ரீதியாக கொஞ்சம் கூட முடியவில்லை.  என்றாலும்  அளவற்ற இரக்கம் கருணை கொண்டவர் என்பதால்  முடியாத போதும்  முகத்தை பக்தர்கள் பக்கமே,   தரிசன நேரம் முழுதும்,   திருப்பி வைத்துக் கொள்வார். அதில் அவர்  அனுபவிக்கும் எந்த  உபாதையின் அடையாளமும் தெரியாது. அவரது  ஆசனம் கிழக்கு மேற்காக .  அந்த சின்ன அறையின் வாசல் தெற்கு பக்கம்.   அறையின் கதவு திறந்திருக்கும். அந்த பக்கத்தை  நோக்கியே  ஒருமணி நேரத் துக்கும்  மேலாக  அசையாமல்  முகத்தை திருப்பி வைத்துக் கொண்டு தரிசனம் தருவார். அதனால் கழுத்து வலி உண்டாகும். அவர் அதை லக்ஷியம் பண்ணுவதில்லை.  அவரது உடல் நிலைக்கு இதெல் லாம் ரொம்ப சித்ரவதை தான்.  அவர் தான் எதையுமே பொருட்படுத்து வதில்லையே.  தரிசனம் கொடுப்பதை நிறுத்தவில்லை. நேரத்தையும் குறைத்துக் கொள்ளவில்லை.
கொஞ்சம்  பழச்சாறு,  இளநீர் க்ளுகோஸ் கலந்து, தக்காளி சாறு மட்டுமே கொடுத்து வந்தார்கள்.

1950  ஏப்ரல் 12   தனது சோபாவில்  sofa  முழு நீளமாக படுத்திருந்தார். குழி விழுந்த கண்கள். தொங்கிய கன்னங்கள், வெளிறிய முகம்,  ஒளி குன்றிய தேகம் ....  அவரது சக்தி குறைந்து கொண்டே வருவதை உணர்த்தியது.  தீபம்  அணையப்போகிறது . சுடர் பிரகாசம் இன்னும்  அடங்கவில்லை.  
மூன்று பக்தர்கள் கால்களை அமுக்கி விட்டார்கள்.  இடுப்புக்கு மேல் வலி ஜாஸ்தியாக இருக்கும் என்று  அவர்கள் அறிந்து அதை தொடுவதில்லை. அவரும் ஒன்றும் சொல்வதில்லை.  காலை ஒன்பது மணிக்கு   அரை மணி நேர தரிசனம் கொடுத்து வந்தார்.   சில சமயம் மட்டுமே  முகத்தை  தெற்கு பக்கம் வலியோடு திருப்ப முடிந்தது.  அவரது நினைவு அடிக்கடி தப்பியது.  டாக்டர்கள் பக்தர்களை அங்கிருந்து விலக்கினார்கள்  அவரை மேற்கொண்டு  மருத்துவ  சோதனைகளுக்கு ஆளாக்க வில்லை.
உடல் கொஞ்சம் கொஞ்சமாக பயனற்றதாக  நிலைமை மோசமாகியது.  சாறுகள் நீர் கூட இப்போது உள்ளே செல்லவில்லை.  மலஜலம் நின்றுவிட்டது.  நாடி ரொம்ப ரொம்ப தளர்ந்து விட்டது. ரத்த அழுத்தம் குறைந்து  விட்டது.  இதயம் துவண்டது.  ஜுரம்  அதிகமாகியது.  விக்கல் அதிகரித்தது.  

சாயங்காலம் மகரிஷி ஹீன ஸ்வரத்தில்  ''காலம்பற ரொம்ப பேர்  வரிசையாக காத்திருந்தாளா?'' என்று கேட்டார். அவர் கவனம் அப்போதும் பக்தர்கள் மேல் தான்.

''இல்லை குருநாதா, நாங்கள் தரிசனத்தை நிறுத்திவிட்டோம்''

''பக்தர்கள் தரிசனம் காண வந்தபோது தடுத்தால்  நான் இனி ஒரு துளி ஜலமும் பருகமாட்டேன்'' என்று ஆணையிட்டார்..
          
ரமணாஸ்ரமத்தில் எவர் முகத்திலும் ல் சந்தோஷம் இல்லை. எத்தனையோ கண்கள் குளமாக காட்சி அளித்தன.

1950  ஏப்ரல்  13ம் தேதி..  மகரிஷிக்கு நுரையீரல் அடைப்பு.  மருந்துகள் கொடுத்து ஸ்வாசம் சரியாக டாக்டர்  அருகே செல்கிறார்.  
''ஒண்ணும்  பண்ண வேண்டாம்.  இன்னும் ரெண்டு நாள்  தான் இருக்கு. எல்லாம் சரியா போயிடும்''   மகரிஷி டாக்டரை மருந்து கொடுக்க அனுமதிக்கவில்லை. .
சில மணி நேரங்கள் நகர்ந்தன.   மகரிஷி  ஒருவரை கூப்பிட்டு  எல்லோரையும்  அங்கிருந்து போக சொல்லிவிட்டார்.
''நான் தனியாக இருக்கவேண்டும். எல்லோரையும்  இங்கிருந்து போகச்சொல்லுங்கள்''  அவருக்கு பணிவிடை செய்யும்  ரங்கசாமி நகரவில்லை. அவர் காலடியிலேயே உட்கார்ந்திருந்தார்.  

காலையில்  ரங்கசாமியை ஜாடை காட்டி  அழைத்து மகரிஷி அவரிடம்  ''தேங்க்ஸ் '' என்று ஆங்கிலத்தில் சொன்னார். ரெங்கசாமிக்கு இங்கிலிஷ் தெரியாது. விழித்தார்.  மகரிஷி சிரித்துக் கொண்டு  ''ஆங்கிலத்தில்  தேங்க்ஸ்  என்று ஒரு வார்த்தை உண்டு '' நமக்கு  அதற்கு சரியாக ஒரு வார்த்தை  சொல்ல வேண்டும் என்றால் ''சந்தோஷம் '' என்கிறார் .

காலையிலிருந்து  மதியம் வரை பக்தர்கள் திறந்திருந்த  மஹரிஷியின் சின்ன அறையை  எட்டிப் பார்த்த வண்ணம் இருந்தார்கள்.  குருவை தரிசிக்க  தீராத  ஆர்வம்  ஆசை.   மஹரிஷியின் தேகம் ரொம்ப க்ஷீணமாகி விட்டது. எடை அதிகம் குறைந்துவிட்டது. விலா  எலும்புகள் வெளியே சருமத்தை பிளந்து வெளியே வரும்போல் தோன்றின.  மஹரிஷியின் உடல் கருத்து விட்டது.  அவரை இந்த நிலையில் பார்த்த பக்தர்கள் கதறினார்கள்.

ஞானிகளுக்கு  வலிக்காது என்று தப்புக்  கணக்கு போடுகிறோம்.  ரமணருக்கு  கடுமையான வலி இருந்தது.  தனியே  இரவில் அவர்  துன்பத்தால் வாடுவது தெரிந்தது.  பிறர்  கவனிக்காத போது தான் அவர் தனது உபாதைகளை, வலிகளை  வெளிப்படுத்தினார்.   சோபாவில் படுத்தவாறு முனகுவது தெரிந்தது. வலி ஏற்படுவது உடலுக்கு  இயற்கை யானது என்பார்.   சாதாரண மானவனாக இருந்தாலும்  சன்யாசிகளில் ராஜாவாக இருந்தாலும்  உடலை கத்தியால் வெட்டினால் ரத்தம் பீறிடும்.  வலி பெருகும்.  ஆனால் அந்த உடலின் அவஸ்தையை எப்படி உணர்கிறோம்,  வெளிப் படுத்துகிறோம் என்பதில் தான் வேறுபாடு உள்ளது.

எவ்வளவு வலி, கஷ்டம், உடல் பாதிப்பு இருந்தபோதிலும்  ரமண  மகரிஷி கடைசிவரை பக்தர்கள் தரிசனம் செய்ய வருவதை தடுக்க   வில்லை.   அவர்கள் மேல் அவரது த்ரிஷ்டி,  கருணையோடு அன்போடு,   படிந்து  கொண்டே இருந்தது.   ஆஸ்ரமத்தில் வாழ்ந்த  இதர ஜீவன்கள் , பறவைகள், மிருகங்கள் மீது அதிக அக்கறையோடு கடைசிவரை  அவரது பாசமும் நேசமும் நிறைந்திருந்தது.

அவர் மறையும்  சில மணி நேரங்கள் முன்பு  ஆஸ்ரமத்தில் அனைத்து மயில்களும் உரக்க கத்தின. அருகில் இருந்தவரை  மெதுவாக  கையசைத்து  கூப்பிட்டு  ஈனஸ்வரத்தில்   ''மயிலுக்கு  எல்லாம்  ஆகாரம் போட்டாச்சா?'' என்று கேட்டார்.  அவை  அவரது அறையைச்  சுற்றி சுற்றி வந்தன.  பசுக்கள், நாய்கள், குரங்குகள் எல்லாமே  நிம்மதியின்றி  அமைதியின்றி இருப்பது தெரிந்தது.  எஜமானனுக்கு உடல் நிலை ஆபத்தான நிலையில் உள்ளதை அறிந்து  செய்வதறியாது திகைத்தன.   ஒரு வெள்ளை மயில் அடிக்கடி மஹரிஷியின் அருகே நிற்கும்.    அது விடாமல் அவர் இருந்த நிர்வாண அறையின் கூரையில்  ஏறி நின்று வாய் ஓயாமல் கத்தியது.
எத்தனையோ பக்தர்களின்  குரல்கள்  ''பகவானே எங்களை விட்டு போக எப்படி மனம் துணிந்தது?'' என்று கதறியபோது  
''எதற்கு இத்தனை முக்யத்வம் இந்த தேகத்துக்கு கொடுக்கிறீர்கள்?  உங்கள் குரு இந்த தேகம் இல்லை.  இந்த தேகம் இல்லாவிட்டாலும் கூட உங்கள் குரு உங்களை விட்டு போகமாட்டார். உங்களில் நான் உண்டு, என்னில்  நீங்கள் உண்டு. சந்தோஷமாக சென்று வாருங்கள்'' 
என்று   சமாதானம் செய்து  அனுப்பினார்.  என்னுடைய  பக்தன் என்ற நினைப்பே வேண்டாம்.  அழுகை துக்கம் ஒன்றுமே வேண்டாம். மேலும் மேலும் துன்பப்படுவதற்கு இந்தமாதிரி ஒரு காரணம் வேண்டவே வேண்டாம்.  உங்களால் எனக்கு எதையும் தரவும் இயலாது.  நானும் பெற முடியாது.  அமைதியாக அமர்ந்து ; எனது அன்பை அனுபவியுங்கள். உங்கள் மேல் எனக்குண்டான ஆர்வம், நேசம் அதை உணருங்கள்.  அது சந்தோஷத்தோடு என்னை உங்களோடு பிணைக்கும்.. வேறெதுவும் வேண்டாம் ''
1950  ஏப்ரல் 14ம் தேதி.   சாயந்திரம்.  எந்த கணமும்  பகவான் இந்த பூத உடலில் இருந்து புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  பெரிய  தலையணைகளில் அவர் சாய்ந்து கொண்டிருந்தார். உட்கார்ந்தவாறு  அவர் தலையை பின்புறம் சாய்த்து அதில் அமர்ந்திருந்தார்.  வாய் திறந்திருந்தது. ஸ்வாசம்  சிரமமாக இருந்தது.  சில நிமிஷ நேரங்கள்  அவருக்கு பிராணவாயு செலுத்தினார்கள். அதால் பயனில்லை.. அதை யெல்லாம் எடுத்து  விடுங்கள் என்று சைகை காட்டினார்.

கடைசி நிமிஷங்களில்  ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ( தமிழக முதல்வராக இருந்தவர்)  மகரிஷி  கூட  இருந்தார்.   அவர் படும் சிரமத்தை பார்த்து ஒரு திரை போட்டு  தரிசனம் வேண்டாம் என்று  தரிசன கூட்டத்தை விலக்கினார்.  மகரிஷி படும் அவஸ்தையை அவரும் கண்ணால் காண இஷ்டப்படவில்லை.  

மகரிஷி தன்னை நிமிர்த்தி உட்கார வைக்கச்  சொன்னார்.   'அருணால சிவா...'' என்று அருகிலிருந் தோர்  தியான பாராயணம் செய்தார்கள் .  மகரிஷி காதால் அதை சந்தோஷமாக கேட்டார்.  கண்களை அகல திறந்து நோக்கினார்.  கண்கள் ஒளி வீசின.  புன்னகைத்தார்.  கண்களில் நீர் பெருகி  ஒட்டிய கன்னத்தில் வழிந்தது.  பத்மாசனத்தில் அமர்ந்தார். ஒரு பெருமூச்சு  விட்டார் . பிறகு அசைவில்லை.  அப்போது நேரம்  இரவு 8.47. 
அவருக்கு விசிறிக் கொண்டிருந்தவர்கள் நிறுத்தினர்.  வெளியே  விசிறும் சப்தம் கேட்கவில்லை என்பதிலிருந்தே திரைக்கு வெளியே இருந்த பக்தர்கள் புரிந்து கொண்டார்கள்.   பகவான்  ரமண  மகரிஷி இனி பூதவுடலில் இல்லை.  உடைந்து போன இதயங்கள் வெகுநேரம் அழுதன.

 அன்றிரவு  8.47க்கு   விண்ணில் ஒரு  வால்  நக்ஷத்ரம்  பளிச்சென்று மின்னி   விரைந்து சென்று அருணாசல மலைகள்  மேல் பறந்து சிகரத்தின் பின் மறைந்ததை  பார்த்ததாக பல பத்திரிகைகள் மறுநாள் எழுதின.
ஹென்றி கார்டியர் ப்ரெஸ்ஸன்  என்கிற  பிரெஞ்சுக்காரர் புகைப்பட நிபுணர்,   ரமண  பக்தர்  திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் வசித்தவர் என்ன சொல்கிறார்  :

'' நான் என் வீட்டின் வெளியே  அப்போது இருந்தேன். என்னோடு இருந்த நண்பர்கள்  ''அதோ பார் ஒளிவீசி வானில் ஏதோ ஒரு நக்ஷத்திரம் வால்  நீண்டு பறக்கிறது ''என்று என்னை கூப்பிட்டு காட்டினார்கள். அது மாதிரி நான் பார்த்தது இல்லை.  கடிகாரம் அப்போது இரவு  8.47 என்று காட்டியது. ஆஸ்ரமத்துக்கு ஒடினோம். எங்கள் மனதிலிருந்த பயம்  உறுதியாகியது.  அங்கே  அந்த குறிப்பிட்ட நேரத்தில் பகவான் மஹா நிர்வாணம் அடைந்தார் என்று அறிந்து கொண்டோம்.''
 

 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...