Saturday, March 5, 2022

vainava vinoli

 வைணவ விண்ணொளி -  நங்கநல்லூர்  J K  SIVAN


ஒரு சிம்ஹாசனாதிபதி கதை 3

நடாதூர் அம்மாள் பல க்ஷேத்ரங்களுக்கு  நடந்தே சென்று  விஜயம் செய்தார்,  பல  வாதங்களில் சைவர்களை மத்வர்களையும் வென்றார்.  சேதுவில் சிவசூலர் என்கிற சைவர்,  சோழ ராஜா அரண் மனையில் அனந்த மாதவாசார்யர், காசி ராஜன் முன்னிலையில் கும்பிசுதன் எனும் தீவிர சைவர்  ஆகியோர் வாதத்தில்  அவரிடம் தோற்றவர்கள்.  காசி ராஜா  நடாதூர்  அம்மாளை,   ஒரு மஹா பண்டிதருக்குரிய  மரியாதை களோடு சாரதா பீடத்தில் அமர்த்தினான்.

க்ஷேத்ராடனம் முடிந்து அம்மாள்  காஞ்சிபுரம்  திரும்பியதும்   ஸ்ரீ பாஷ்ய  உபன்யாசத்தில் ஈடுபட்டார். அவருக்கு மதுரமான  குரல்  தெளிவான உச்சரிப்பு  இருந்ததால்  கேட்பவர்கள் பரவசம் அடைந்தனர்.

ஸ்ரீ  நடாதூர் அம்மாள்  படைத்த காவியங்கள்:  
1.தத்வசாரம் - -  மிகச்சிறந்த நூல். 100 ஸ்லோகங்களைக் கொண்டது. ஸ்ரீ பாஷ்யத்தை சிறப்புற விளக்குகிறது.
2.ப்ரபன்ன பாரிஜாதம்
3.பிரமேய மாலா
4.ஆஹ்னிக சூடாமணி
5 ஆராதனா கிரமம் .
6. பிரமேய சாரம்
7.மங்களா ஸாஸனம்
8.ஞான சாரம்
9.ஜயந்தி நிரூபணம்
10.எதிராஜஸ்தவம்
11.ரஹஸ்ய  ஸங்க்ரஹம்
12.சதுர் லக்ஷண ஸங்க்ரஹம்
13.பர தத்வ நிர்ணயம்
14.த்ரமிடோபநிஷத்  ஸங்க்ரஹம்
15.ஸ்ரீ பாஷ்ய ஸங்க்ரஹம்
16. பரமார்த்த ஸ்லோக த்வயம்
17.யதிலிங்க சமர்த்தனம்  

பிற  நூல்கள்: பரத்வாதி பஞ்சகம்,  கஜேந்திர  மோக்ஷ ஸ்லோக த்வயம்,  சரமோபாய ஸங்க்ரஹம், பிரதரனுசதேய ஸ்லோகம் இன்னும் பிற.

தத்வசாரம் எனும்  நூல்,  அவரது குருவான   எங்களாழ்வான் மீதான  தனியனுடன் துவங்குகிறது.  அந்த முதல் ஸ்லோகம், '' என் மனம்,  என் சுவாமி எங்களாழ்வானின்  திருவடித் தாமரையின் மீதே சரணடைய  லயித்திருக்கிறது. இதைவிட சிறந்ததாக எதுவுமே தோன்றவில்லை. தேவையுமில்லை. இது மட்டும் எனக்கு கிடைக்காமலிருந்தால் அடியேன் ஒரு ஞான சூன்யமாக இருந்திருப்பேன்.  ஸ்ரீ ராமனுஜரின் ஈடிணையற்ற ஆழ்ந்த கருத்துகளை, உபதேசங்களை அடியேனும் புரிந்துகொண்டு மற்றோருக்கும்  எடுத்துச்சொல்லும் பாக்கியம் கிட்டி இருக்காது.''   என்னே  அவரது குருபக்தி !

நடாதூர்  அம்மாளின் சிஷ்யர்களில் பிரதானமாக திகழ்ந்தவர் :  ஸ்ருதப்ரகாசிக பட்டர், (சுதர்சன சூரி என்றும் பெயர்..  இவர் வேத்வ்யாச பட்டரின் பேரன்.  கூரத்தாழ்வானின் கொள்ளுப் பேரன். பின்னர் ஸ்ரீ  பாஷ்யம்,  வேதார்த்த சங்க்ரஹத்துக்கும், சரணாகதி கத்யத்துக்கும் உரை எழுதியவர் ), கிடாம்பி அப்புள்ளார், ஆத்ரேய  ராமானுஜர்  என்றும் பெயர்,  வடக்கு  திருவீதி பிள்ளை, மற்றும் வாக்  விஜயி  பட்டர்..  ஆகியோர் மற்ற  சிஷ்யர்கள்.

 ஸ்ரீ பாஷ்யத்தை ஸ்ரீவைஷ்ணவர்களும்  சிஷ்யர்களும் அம்மாள் சுவாமிகளிடம் பயின்றனர்.  அம்மாள்  தான்   ஸ்ரீ வேதாந்த தேசிகனுக்கும்::
 ஸ்ரீ கடிக சதம்  அம்மாளுக்கும் குருவானவர்.

வார்த்தா மாலை என்ற நூலில்  இருந்து அம்மாள் சுவாமிகள் பற்றியதான சில குறிப்புகள்:

118– அம்மாளின்  ஆச்சார்யர்  ஸ்ரீ  எங்களாழ்வான்  ஒருநாள்  சரம ஸ்லோகத்தை  விளக்கிக் கொண்டிருந்தார். ''சர்வ தர்மான் பரித்யஜ்ய'' என்ற  இடம் வரும்போது,  அம்மாள்  சுவாமிகளுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.  ஏன் எம்பெருமான்  இவ்வளவு ஸ்வதந்திரத்தோடு   சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட  ''எல்லா தர்மங்களையும் (உபாயங்களையும்)''   ஏன்  தியாகம் செய்''  என்கிறார்.  
 இந்த  சந்தேகத்தை  ஆச்சரியனிடம் வினவ எங்களாழ்வான் அவருக்கு ''இது தான் பகவானின் உண்மை ஸ்வரூபம் ,குணம்,   அவர் சர்வ தந்த்ர  ஸ்வதந்திரர், பற்றற்றவர். அதனால்  அவ்வாறு சொல்ல முடிகிறது.   ஜீவாத்மா  பகவானையே லயித்து ஒன்றி இருக்கும் தகைமை கொண்டது, பகவானே  அதன் உபாயம்  எனும்  அதன்  ஸ்வதர்மத் திலிருந்து வேறு எதிலும் ஈடுபடாமல் பகவானையே முழுதும் நாடி நிற்க அவ்வாறு  சொல்கிறார்''  என்று விளக்கினார். 

198 – நடாதூர்  அம்மாளும்   வேறு ஒரு  பிராமணரல்லாத வைஷ்ணவரும்  சேர்ந்து பிரசாதம் அனுபவித்துக் கொண்டிருக்கும்போது  அங்கு வந்த  மற்றொரு  ஸ்ரீவைஷ்ணவர்  பெருங் கூர் பிள்ளான்  என்பவர் சந்தோஷப்பட்டு   “உங்களை  இவ்வாறு  ஸ்ரீ வைஷ்ணவர்களோடு ஒன்றி  பழகுவதை  பார்க்கவில்லையென்றால்  வர்ணாஸ்ரம தர்மத்தை தவறாக புரிந்து  கொண்டிருப்பேன்'' என்று அம்மாளிடம்  விஞாபிக்க சுவாமிகள்  

“ஒரு  ஆச்சர்யனைச் சேர்ந்த  அனைவரும் எவராயினும் அவர்களை அரவணைக்க வேண்டும், இதை அனுஷ்டிப்பது தான் நமது பூர்வாச்சார்யர்கள்  உபதேசித்த  பாகவத தர்மம்''  என்றார்.

 நடாதூர்  ஆழ்வான் ஸ்ரீ ராமானுஜரால் ஸ்ரீ பாஷ்ய பிதா என்று  போற்றப்பட்டவர்.  தனது  ஸ்ரீ பாஷ்ய சிம்ஹாசனத்தை  நடாதூர்  ஆழ்வானுக்கு  அளித்தவர்  ஸ்ரீ ராமானுஜர்.  இதற்கு  ஒப்புதல் அளித்தவர்  காஞ்சி ஸ்ரீ  வரதராஜ பெருமாளே.

1137ல்  தனது குரு  ஸ்ரீ ராமானுஜருக்கு  நடாதூர் ஆழ்வான் அவரது அர்ச்ச விக்ரஹத்தை  வரதராஜ பெருமாள்  ஆலயத்திலேயே  நிறுவினார்  என்று  அறிகிறோம். தந்தையின் வழியே   நடாதூர்  அம்மாள் சுவாமிகளின் தந்தையும்  ஆழ்வானைப் பின்பற்றி  ஸ்ரீவைஷ்ணவத்தை போஷித்து வளர்த்தார்.

ஒரு  கதை சொல்லி நிறுத்துவது தான் வழக்கம்.
மற்ற சிஷ்யர்கள்  நடு நடுவே நடாதூர் அம்மாளிடம் கேள்வி கேட்பார்கள் சந்தேகம் தீர்த்துக் கொள்வார்கள்.  சுதர்சன சூரி மட்டும் ஒன்றுமே  வாயை திறக்கமாட்டார்.  அவர்  கொஞ்சம்  மக்கு பிளாஸ்திரி என்று  மற்றவர்கள் எடை போட்டுவிட்டனர்.  ஒருநாள்  ஸ்ரீ பாஷ்யம் பிரசங்கத்துக்கு  சுதர்சன சூரி  வர  நேரமாயிற்று.  மற்றவர்கள் காத்திருந்தவர்கள்  ஆசார்யனை  பிரசங்கத்தை  ஆரம்பிக்க சொன்னார்கள்.
''இன்னும் சற்று நேரம்  பொறுங்கள்.  சுதர்சன சூரி வரட்டும். பிறகு ஆரம்பிக்கிறேன்''
''சுவாமி சுதர்சனன் தங்களைப் புரிந்து கொள்ள  ஸ்ரமப்படுபவன் என்று நினைக்கிறோம்.  அவன் வந்து என்ன புரிந்து கொள்ளப் போகிறான். தாங்கள்  அடியோங்களுக்குக்காக  ஆரம்பிக்கலாமே''
அம்மாளுக்கு  மன வருத்தம்.  சுதர்சனத்தை இப்படி  அவமதிக் கிறார்களே என்று.   ஒரு நாள்  பாதி பிரசங்கத்தில்  இது வரை சொன்ன ஸ்ரீ பாஷ்ய கருத்துகளை எடுத்துச் சொல்  என்று  சுதர்சனத்தை கேட்டார்.
கடல் மடையாக  அன்று சொன்ன  கருத்துகள், அதற்கு முன் சொன்னவை  என்று  பிரித்து  அழகமாக  அவன்  விவரித்தவுடன் அவர்களுக்கு  ஆச்சர்யமாகி விட்டது. ஆசார்யன் சொன்ன  வியாக்யா
னங்கள் ஒன்று விடாமல்  சுதர்சனம்  விவரித்தான். அம்மாளுக்கே  அதிசயம். வியந்தார்.
''எப்படியப்பா  உன்னால்  இதெயெல்லாம்  நினைவில் கொண்டு வர முடிந்தது?'' என்றார்  அம்மாள் சுவாமிகள்.
''குருநாதா,  அன்றாடம் உங்கள்  உபதேசங்களை  வீட்டுக்குச் சென்றவுடன் ஓலைச்சுவடியில்  பதித்து விடுவேன். மனத்திலும் பதித்துக் கொள்வேன். அதை தங்களிடம் சமர்ப்பிக்கிறேன் என்று  ஓலைச் சுவடிகளை அளித்தார்.  அது வே  ஸ்ருதப்ரகாஸிகா  என்கிற  ஸ்ரீ பாஷ்யத்தின்  பொழிப்புரை. பிற்காலத்தில்  சுதர்சன பட்டர்  இதை விவரித்து  36,000 கிரந்தங்களில் பதிவு செய்தார். காலத்தின் எதிர்ப்புகளுக்கு  ஈடு கொடுத்து இவை காப்பாற்றப் பட்டன . மாலிக் காபூர் படையெடுப்பின் போது  சுவாமி தேசிகன் இந்த கிரந்தங்களை தன்னோடு பிணைத்து  பிணக்குவியலில் இறந்த உடலைப் போல கிடந்து காப்பாற்றியதாக ஒரு செய்தி உலவுகிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...