Thursday, March 10, 2022

SUNDARAMOORTHI NAYANAR

 தம்பிரான் தோழர் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

சுந்தர மூர்த்தி நாயனார்.

4. பொற்காசு தா

சைவ சமய குரவர்களில்  தேவாரம் இசைத்தவர்,  18 வருஷங்களே  வாழ்ந்தவர்,  பரமேஸ்வரனின்  தோழர் சுந்தர மூர்த்தி நாயனார்  பற்றிய மூன்று கட்டுரைகளை இதுவரை வெளியிட்டேன். நண்பர்கள் படித்திருக்கலாம். மறந்தும் போயிருக்கலாம். இன்று நான்காவதாக ஒரு கட்டுரை.  சுந்தரர் சரித்திரத்தை  ''தம்பிரான் தோழர்'' என்ற தலைப்பில் தான் வெளியிட்டு வருகிறேன்.

ஒரு பழமையான ஊர். பேர் வேடிக்கையாக இருக்கிறது.  ''திரு நாட்டியத்தான் குடி''.    நாட்டியத்தான் சிவன் தான். வேறே யார்?.

அந்த ஊருக்கு பெருமை சேர்த்தவர் ஒரு வீர வேளாளர். சோழ ராஜாவின் படைத்தலைவர்களில் முக்கியமானவர். எதிரிகளைக் கண்டால் புலி போல் பாய்ந்து தாக்கிக் கொல்பவர் என்று பட்டம் பெற்றவர். அதே சமயம் சிறந்த சிவ பக்த சிரோமணி. கோட்புலி நாயனார் என்ற பட்டப்பெயர் தான் மிஞ்சியதே தவிர அவரது இயற்பெயர் இன்று காலை  இதை எழுதும் வரை எனக்கு மட்டுமல்ல, வேறே  யாருக்கும் தெரியாது.
                                                                                         
சுந்தரரைப் பற்றி அறிந்து,   கோட்புலி நாயனார் அவர் திருவாரூரில் எங்கே இருக்கிறார் என்று தேடி சென்று பார்த்தார்   சுந்தரரை பற்றி அறிந்து சிவனின் நண்பர், தோழர் என எல்லோரும் சொன்னவுடன்
''ஐயா தாங்கள் எந்தன் இல்லத்திற்கு வந்து பெருமை தரவேண்டும்''  என்று கேட்டுக்கொண்டார்.

சுந்தரர் அவருடன் திருநாட்டியத்தான்குடி சென்றார். உபசாரங்கள் செய்து உணவளித்து அவர் கால்களில் விழுந்தார் கோட்புலி நாயனார்.

''ஒரு வேண்டுகோள் தாங்கள் தட்டாமல் ஏற்க வேண்டும்''

''சிறந்த சிவபக்தர் தங்களின் விருப்பத்தை தட்டுவேனா, என்ன என்று சொல்லுங்கள் '' என்கிறார் சுந்தரர்.

''எனக்கு இரு பெண்கள் இதோ உங்களை வணங்குகிறார்களே இருவரும், ஒருவள் சிங்கடியார், இன்னொருத்தி வனப்பகையார்'. இருவரையும் தாங்கள் மணந்து மனைவிமாராக ஏற்று தங்களது சிவத்தொண்டில் அவர்கள் உதவ வேண்டும்.''

' ஐயா,   இவர்களை என் மகள்களாக ஏற்றுக்கொள்கிறேன். சிவன் சாட்சி. என்று சிவனைப் போற்றி பாடுகிறார்.  அந்த பாடலில்  தன்னை சிங்கடியப்பன் என்று அந்தப்பெண்ணின் தந்தையாக அறிமுகம் செய்து கொள்கிறார். இது தான் அந்த வரி கொண்ட பாடல்:

"கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்கழற் சிங்கடியப்பன் திருவாரூரன் உரைத்த
பாடீராயினும் பாடுமின் தொண்டீர் பாட நும்வினை பற்றறுமே’’
 
பிறகு சுந்தரர் திருவாரூர் திரும்புகிறார்.

சுந்தரர் மனைவி பரவையாருக்கு ஒரு வழக்கம். ஒவ்வொரு பங்குனி உத்திரத்தன்றும் நிறைய பொற்காசுகளையும் பொருள்களையும் தானமாக எல்லோருக்கும் வழங்குவார். ஆகவே சுந்தரரிடம் ''இதோ பங்குனி உத்திரம் வரப்போகிறதே, நிறைய பொற்காசுகள் வேண்டும். கொண்டு வாருங்கள் '' என்று ஆர்டர் போட்டு விட்டார். சுந்தரர் எங்கே போவார் பொற்காசுக்கு?

அப்போது சுந்தரர் திருப்புகலூர் சென்று கொண்டிருந்தார். அங்கே சிவனிடம் வேண்டுகிறார்.

''நிறைய பொற்காசுகள் தா. என் மனைவி தானம் செய்ய வேண்டுமே'' என்று கட்டளையிடுகிறார். அன்றிரவு அங்கேயே ஆலயத்தில் ஒரு ஓரத்தில்   இரண்டு  செங்கல்லை  தலைக்கு உயரமாக தலையணை போல் வைத்துக் கொண்டு தூங்குகிறார். காலையில் எழுந்தவுடன் எதற்கு கண்கள் கூசுகிறது இப்படி? அடே தலைக்கு வைத்திருந்த செங்கல்கள் தங்கப்  பாளங்களாக மாறி இருந்ததே ‘’ பரமேஸ்வரா,  என்னே உன் கருணை’’  என்று பாடுகிறார். திருவாரூர் நோக்கி திரும்புகிறார் தங்கத்தோடு.

வழியில் திருப்பனையூர்.    ஒரு அழகான சிவன் கோவில் அங்கே கண்ணில் பட்டதும் பார்க்காமலா போவார் சுந்தரர்.

நான் சமீபத்தில் திருப்பனையூர் செல்லும் பாக்யம் கிடைத்தது.   சென்று    சிவனை தரிசித்தேன். அதைப் பற்றி எழுதியும் இருக்கிறேன். வழியெல்லாம் தேவாரங்கள் பிறக்கின்றன. திருப் பச்சி லாச்ரமம் என்று ஒரு ஸ்தலம் வந்துவிட்டார். அங்கே சிவனிடம்

'அப்பா,  கையில் இருக்கும் தங்கம் போதாதே. இன்னும் ஒரு தங்கக்காசு கொடுப்பாயா '' என்று ஒரு தேவார வேண்டுதல்.

‘’ஹுஹும். சிவன் காதில் விழவில்லையோ’’

 இன்னொரு பதிகம். அதைக் கேட்டு மகிழ்ந்த சிவன் நிறைய பொற்காசுகளை ஒரு மூட்டையில் நிரப்பி அங்கே சுந்தரருக்கு அளிக்கிறான்.
எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு நேராக விருத்தாச்சலம் நோக்கி நடக்கிறார். வழி நெடுக நிறைய சிவஸ்தலங்கள். ஒன்றுவிடாமல் தரிசித்துவிட்டு பதிகங்கள் பாடி விட்டு திருக்கூடலை
யாரூர்  வருகிறார். அந்த ஊர் வந்ததே ஒரு விசித்திரமான நிகழ்ச்சி. வழியில் ஒரு பிராமணனாக சிவன் அவரை சந்திக்கிறார்.

''ஐயா,  பிராமணரே, விருத்தாசலம் எப்படி போவது' என்று சொல்கிறீர்களா?'' என்கிறார் சுந்தரர்
''என் கூடவே வாருங்கள் வழி காட்டுகிறேன்''
திருக்கூடலையாரூர் வரை வந்த பிராமணரை திடீரென்று காணோம். திருக்கூடலையாரூர் இதுவரை சுந்தரர் சென்றதில்லை. எனவே சிவனை அங்கே தரிசித்து விட்டு அந்த ஆலயத்தை விவரித்து ஒரு சிறப்பு தேவாரம் நமக்கு கிடைத்திருக்கிறது.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...