Saturday, March 19, 2022

arthanareeswari



 அன்னபூரணி அர்த்த நாரீஸ்வரி மாதா - 2

நங்கநல்லூர் J K SIVAN

பார்வதி தேவி காசியிலிருந்து காஞ்சிபுரம் சென்றாள் . அங்கே ஜிலுஜிலுவென்று ஓடிக் கொண்டி ருந்த புண்யநதி கம்பா அவள் மனத்தைக் கவர்ந்தது. அதன் கரையிலேயே தியானம் செய்ய அமர்ந்துவிட்டாள் . தனது ஆபரணங்களை கழற்றி எறிந்து விட்டு ருத்ராக்ஷ மாலைகளை அணிந்தாள் . தனது பளபளக்கும் ஆடைகளை களைந்துவிட்டு மர உரி அணிந்தாள் .தேஹம் பூரா சாம்பலை விபூதியாக அணிந்தாள். புற்கள் சிறு தாவரங்களின் இளம் தளிர்களை மட்டுமே உணவாக கொண்டு '' ஹர ஹர சிவ சிவ ஓம் நமசிவாய'' என்று த்யானத்தில் ஈடுபட்டாள் . மூன்று வேளையிலும் கம்பாநதி ஸ்னானம். அதன் கரை மணலில் சிவலிங்கம் கையால் பிடித்து அர்ச்சித்து வழிபட்டாள் . வில்வதளம் கொன்றை மலர் போன்றவற்றால் அர்ச்சனை. அவள் இருப்பதை உணர்ந்த ரிஷிகள் முனிவர்கள், யோகிகள் எல்லாம் அவளைத் தேடி வந்தபோது அவர்களை உபசரித்து வணங்கினாள் .

எங்கும் வனப்பிரதேசம், வனப்பாக காட்சியளிக்க, அங்கிருந்த மலர்களைப் பறித்தாள் . மணல் லிங்கத்துக்கு அர்ச்சித்து பூஜித்தாள் .
ஒருநாள் கம்பா நதி யில் வெள்ளப் பெருக்கெடுத்தது. இதற்கு முன் இல்லாத பெரிய அளவில் ஹோ வென்று வெள்ளம் உயர்ந்து கரை புரண்டது. ஆக்ரோஷத் தோடு கம்பா ப்ரவாஹமாக ஓடினதைக் கண்டு

''அம்மா, கண் விழியுங்கள் எதிரே பாருங்கள் கம்பாவில் வெள்ளம்'' என்று தோழியர் அவள் தியானத்தை கலைத்தனர்.

''ஆஹா என் தியானத்துக்கு இடையூறா? என் சர்வேசா'' என்று மணல் லிங்கத்தை வெள்ளத்தி லிருந்து காப்பாற்ற இறுக்கி அணைத்துக் கொண்டாள். வெள்ளத்தில் கரைந்து விடுமோ? என பயந்தாள். என் தவமும் தியானமும் தடை படக்கூடாது . என் தர்மத்தை விடாமல் காப்பேன். என் தவ நோக்கம் சிதையாமல் தொடர்வேன். என் தியானலிங்கம் கரைந்து மறைந்தால் நானும் மறைவேன் . இந்த மாபெரும் வெள்ளம் என் பரமேஸ்வரனின் சோதனை. என் தவம் எத்தகையது என்று சோதிக்கவே கம்பா நதி வெள்ளம் என்கிற மாயையை தோற்றுவித்திருக்கிறார். பயத்தை விடுவேன். தவத்தை தொடர்வேன். தோழியரே என்னைத் தனிமையில் விட்டுச் செல்லுங் கள்'' என்று அம்பிகை மணல் லிங்கத்தை அணைத்துக் கொண்டு பேசினாள். வெள்ளம் அவளை சூழ்ந்துகொண்டது. மணல் லிங்கத்தை மார்போடு அணைத்துக்கொன்டு மகாதேவனை மனதார ஏகாக்ர சித்தத்தோடு தியானித்தாள் . வானத்தில் அசரீரி ஒலித்தது அவள் காதில் கேட்டது

''பெண்ணே, வெள்ளம் நின்றுவிட்டது. உன் சிவலிங்கத்தை விடுவி. உன்னால் அணைக்கப்பட்ட இந்த மண் சிவலிங்கம் ப்ரஸித்தமானதாகும். தேவாதி தேவர்கள் விண்ணவர்கள் மண்ணவர்கள் வழிபடும் தெய்வமாகும். கேட்ட வரம் அளிக்கும் கைகண்ட சிவலிங்கமாகும் . உன் தவம் வெற்றிகரமாக நிறைவேறட்டும். தர்மத்தை ரக்ஷிக்க உன்னால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த சிவலிங்கம் பக்தர்களுக்கு அருள் புரிந்து என்றும் சாஸ்வதமாக காக்கும். நானே அருணாசலமாக அண்ணாமலையில் முக்தி அளிப்பேன். பாபங்களை அழிப்பேன். பந்த பாசம் விலக்கி மோக்ஷ பதவி யளிப்பேன். எண்ணற்ற ரிஷிகள், சித்தர்கள் கந்தர்வர்கள், யோகிகள் அங்கே என்னை எப்போதும் சூழ்ந்து கொண்டு வழிபடுவார்கள். கைலாச பர்வதம் மேரு மலையை விட இது எளிதாக அவர்களால் நாடப்படும். நீ அங்கே சென்று கௌதம ரிஷியை சந்தித்து அவரிடம் என்னைப் பற்றி உபதேசம் பெற்று தவத்தை தொடர்வாயாக. என்னை ஜோதி பிழம்பாக அங்கே தரிசிப்பா யாக. சர்வ பாபங்களும் விலகி பூமியில் சுபிக்ஷம் நிலவும்''

பரமேஸ்வரனின் இந்த அருளாசி அசரீரியாக பார்வதிக்கு கேட்டபோது ஆனந்தமடைந்தாள் .
''உங்கள் கட்டளைப்படியே நடக்கிறேன்'' என்று விழுந்து வணங்கினாள். அருணாசலம் நோக்கி நடந்தாள் . அவளைப் பின் தொடர்ந்த ரிஷிகளை, யோகிகளை நோக்கி ''நீங்கள் இங்கேயே கம்பா நதி தீரத்தில் இருங்கள். உங்கள் தவத்தை தியானத்தை தொடர்ந்து புரியுங்கள் '' இந்த லிங்கத்தில் நான் அணைத்த அடையாளம் என்றும் தெரியும். அதை விடாமல் அர்ச்சித்து வழிபடுங்கள். இங்கே காஞ்சிபுரத்தில் வந்து வழிபடும் பக்தர்கள் என்னை காமாக்ஷியாக கண்டு என் அருளாசி பெறுவார்கள். அவர்கள் மனோபீஷ் டத்தை நிறைவேற்றுவேன். வரமருள்வேன்”

அருணாசலத்தில் அம்பாள் சித்தர்கள், ரிஷிகள், தேவர்களை எல்லாம் சந்தித்தாள் . அவர்கள் அவளை தங்களோடு இருந்து அருள் புரிய வேண்டினார்கள்.

''நான் கௌதம ரிஷியை உடனே சந்திக்க வேண் டும் என்று சொன்னதும் அவள் எண்ணத்தை நிறைவேற்ற அவளை கௌதமர் ஆஸ்ரமம் இருந்த பவழக் குன்று அடிவாரத்துக்கு வழி காட்டினார்கள்.

அவளைக் கண்டதும் கௌதம ரிஷியின் மகன் சதானந்தன் ஓடிவந்தான், வணங்கினான்.

''அம்மா, சற்று இங்கே ஓய்வெடுங்கள். நான் காட்டுக்குள் சென்று தர்ப்பை புற்களை எடுத்து வர சென்ற என் பிதா கௌதமரிஷியை அழைத்து வருகிறேன்'' என்று ஓடினான். எதிரே திரும்பி வந்து கொண்டிருந்த ரிஷியிடம்

''அப்பா, அம்பாள் நமது ஆஸ்ரமத்துக்கு வருகை தந்திருக்கிறாள். சீக்கிரம் வாருங்கள்''

என்று படபடவென்று உணர்ச்சி பொங்க கூறினான்.
அம்பாள் காலடி பட்டதும் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வனப்பிரதேசமே பூத்துக் குலுங்கும் புஷ்பங்கள், இலைகள், காய் கனி வகைகள் நிரம்பிய அழகிய நந்தவனமாகிவிட்டது.

''ஆஹா நீ சொல்வது ஆனந்தம் தருகிறதடா மகனே'' என்று மகிழ்ந்தார் மஹரிஷி கௌதமர். எங்கும் தோன்றிய மாற்றம் அவரை வியக்க வைத்தது. வேகமாக ஓடி ஆஸ்ரமம் சென்று அம்பாளை வணங்கினார்.

கௌதமர் சொல்லியபடியே அம்பாளின் தவம் தொடர்ந்தது. மஹாதேவன் மாதா முன் தோன்றினான்.

''தேவி, நீ கேட்டதை அளிப்பேன் கேள்'' என்றபோது

''எனக்கு வேறென்ன வேண்டும் பரமேஸ்வரா, உன்னில் பாதியாக உன்னை இணைபிரியாமல் நான் இருந்தால் அதுவே போதுமே. எனக்கென ஒரு தனி உடல் வேண்டாம் பகவானே. இருந்தால் மீண்டும் ஏதாவது தவறு செய்வேன். எண்ணற்ற காலம் உன்னை தவம் செய்து மீண்டும் அடையவேண்டி வருமே. உனைப் பிரிந்து இருக்க என்னால் முடியாது தெய்வமே'' என்றாள் உமை .

அம்பாள் அர்த்தநாரிஸ்வரியான கதை இது என்று பக்தர்களுக்கும் சிஷ்யர்களுக்கும் சொல்லி முடித்தார் பகவான் ரமண ரிஷி.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...