Saturday, March 19, 2022

life lesson

 


மனதில் பதியட்டும்  - 3.       நங்கநல்லூர்  J K  SIVAN


நாம்  பணக்கார  குடும்பத்தில் பிறந்திருக்கலாம், பெரிய  மாளிகை வீடு, விலை உயர்ந்த கார்  எல்லாம் இருக்கலாம். ஆனால் ஒரே ஒரு உண்மை மனதில் சதா ஞாபகப்  படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.  அது என்ன? 

 நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று  ஏதோ ஒரு அரிப்பு  சதா  இருக்கிற வரையில் நாம் தரித்திரர்கள்தான்.

கோபம்  எத்தகையது என்பதை ஒரு அற்புதமான  உதாரணத்தோடு விளக்குவதை அறிவோம்.  சுவரில் எறிந்த பந்து  அதே வேகத்தோடு நம் பக்கம்  திரும்புவது போல் நிறைவேறாத ஆசையானது கோபமாகத் திரும்பி வந்து நம்மைப் பாபத்தைச் செய்ய தூண்டுகிறது.

நம்மிடம் உள்ள ஒரு குணம்.  செய்த  பழைய  பாவத்துக்கு எப்போதும்  பரிகாரம் தேடுவது. இதைவிட  இன்னொரு அற்புதமான வழி இருக்கிறதே!  இனி  புதிய சுமை சேராமல், பாவம் பண்ணாமல், வாழ்வதற்கு ஈஸ்வரனைத் துணை கொள்வதே முக்கியம் என்பது இருக்கும் நேரத்தை இனியாவது வீணாக்காமல் பாபம் செய்யாமல் இருக்க உதவுமே.  பழையது  போனது போனபடியே இருக்கட்டுமே.

ஆசைக்கோர்  அளவில்லை அகிலமெல்லாம் கட்டியாளினும் ........  அருமையான ஒரு பாடல்.  அவசியமில்லாமல் ஏராளமாகச் சம்பாதிப்பதும், அவசியமில்லாமல் விரயமாகச் செலவழிப்பதும், அல்லது பூதம் காத்த  மாதிரி பாங்கில் மூட்டை மூட்டையாகப் போட்டு வைப்பதும் பிசகு.

இந்த ஜென்மத்தில் நாம்  ஓடி ஓடிச் சம்பாதிக்கும் ஒரு சல்லிக்  காசு கூட  நாம் இதையெல்லாம் விட்டுச் செல்லும்தோது கூடவே  வராது. மறு உலகத்தில் செலாவணி பகவந்நாமா ஒன்றுதான்.
அதைச் சேர்ப்பதற்கு கஷ்டமே படவேண்டாம்.  காதால்  கேட்டால், வாயால் சொன்னால் போதும். முடிந்தால் பாடலாம். இன்னும் ருசி கூட. 

நாம் அனைவரும் ஒன்றே தான். நிறம், உருவம், அந்தஸ்து குலம் , வயது, அந்தஸ்து இதெல்லாம்  நாமாக  கண்டுபிடித்த  வித்யாசங்கள். ஒவ்வொரு மனிதனிலும் ஈஸ்வரன்தான் குடி இருக்கிறார். ஒருவரை நமஸ்கரிக்கும்போது அந்த ஈஸ்வரனையே வழிபடுவதாகத்தான் அர்த்தம்.  வயதில் இளையவருக்கு கூட  நான்  எப்போதும் நமஸ்காரம் என்று தான் சொல்வேன்.

எங்கே நாம் போனாலும் அங்கே நல்ல தினுசான சந்தோஷத்தை விருத்தி பண்ண வேண்டும். நம்மால் எது முடியுமோ அதை அழகாக செய்வோமே. சிலர் சமைத்து உணவளிப்பார்கள், சிலர் பாடுவார்கள். சிலர் பேசுவார்கள், சிலர்  பரிசுகள் அளிப்பார்கள், சிலர்  சரீர உதவிகள் செய்வார்கள். பிறருக்கு சந்தோஷம் அளிக்கும் எதுவுமே யாகம் தான். 

வெளியே எந்த லாண்டிரியும் இதற்கு கிடையாது. காசும் கொடுக்க வேண்டாம்.  அழுக்கெல்லாம் நீங்கி பளிச்சென்று வெளுப்பாக ஆக்கிவிடும்  வண்ணான் உள்ளே இருக்கிறான்.  ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும் மனத்தின் அசுத்தங்களை அகற்ற முடியும்.

முதியவர்கள்   நாம்  என்ன செய்ய வேண்டும்?
தாயன்பைப் போல கலப்படமே இல்லாத பூரண அன்பை இந்த லோகத்தில் வேறு எங்குமே காணமுடியாது.  பால பிராயத்திலேயே காயத்ரியை ஜபிக்க ஆரம்பித்துவிட்டால் அது பசுமரத்தாணியாக பதியும். காயத்ரியானது முக்கியமான மனோசக்தி, தேஜஸ், ஆரோக்கியம் எல்லாவற்றையும் அபரிமிதமாக தரவல்லது.   நீ பலனை எதிர்பார்க்காமல் தர்மங்களை செய். பலனை கொடுக்க வேண்டியது ஈஸ்வரனின் வேலை என்கிறது உபநிஷதம்.   குடும்ப பொறுப்புக் களை கூடிய விரைவில் முதியவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பதில் பொது ஜனங்களுக்காக பொறுப்பெடுத்துக் கொண்டு புண்ணியம் சம்பாதிக்க வேண்டும். தாங்கள் தங்கள் ஆத்மாவை கவனித்துக் கொள்ள வேண்டும்.  நான்  எல்லாவற்றையும் துறந்து விட்டு நாளெள்ளாம் படிக்கிறேன், படித்ததை அனுபவிக்கிறேன். முடிந்தவரை மற்றவர்க்கும் எடுத்து  என்னால்  முடிந்தவரை  சொல்கிறேன், எழுதுகிறேன்  20-21 மணி நேரம் போதவில்லை. ஆர்வம் குன்றவில்லை. 

 தனக்கென்று எவ்வளவுகுறைவாக செலவழிக்க முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதை தர்மத்திற்கு செலவழிக்க வேண்டும்.

அந்தரங்க சுத்தம் இல்லாமல் செய்கின்ற   எந்த காரியமும்  விழலுக்கிறைத்த நீர். வெட்டி வேலை.  படாடோபம் மட்டுமே  மிஞ்சும்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...