Friday, March 25, 2022

PESUM DEIVAM

 


பேசும் தெய்வம் -  நங்கநல்லூர்  J K  SIVAN

121.  இடைவிடாத  புது வருஷ  சுற்றுப்பயணம்.

1935ம்  வருஷம்  அக்டோபர் மாதம்  28ம் தேதி சாயந்திரம்  எல்லோரும் பிரிய மனமில்லாமல் விடைகொடுக்க,  மஹா பெரியவா மிதுனாபூர் விட்டு  கரக்பூர்  சென்றார் அல்லவா?  

கரக்பூர்  ஒரு பெரிய  ரயில்நிலையம்  என்பதால் அங்கு  அலுவலகங்கள் இருந்தன.   நாட்டின் பல பாகங்களில் இருந்து  நிறைய பேர் அங்கே வந்து வசித்து  உத்யோகத்தில் இருந்த  ஒரு பெரிய நகரம் அது.  

அங்கே  10 நாள் முகாம் இருக்க உத்தேசம்.   அந்த நகரத்தில்  ஒரு வாரத்திலேயே  ஒரு விஷ ஜுரம் எங்கும் பரவி விட்டது.  மடத்து சிப்பந்திகளில்  பலருக்கும்  தொழிற்சாலை பணியாளர்கள் பலருக்கும்  அந்த விஷ காய்ச்சல் தொற்றிக்கொண்டுவிட்டது.   அவர்களுக்கு வைத்தியம் செய்து குணமாகி தான் அங்கிருந்து போகவேண்டும் என்ற நிலையில்  இன்னும்  ரெண்டு வாரம் மஹா பெரியவா அங்கே தங்கி இருந்தார்.  

கரக்பூரிலிருந்து  120  மைல்   தூரத்தில்   இன்னொரு பெரிய பட்டணம்  டாடாநகர் . அங்கிருந்த 
ஹிந்துக்கள் மஹா பெரியவாளை தங்கள் ஊருக்கு அழைத்தார்கள். பெரிய இரும்புத் தொழிற் சாலை இயங்கும்  பட்டணம். 

 நவம்பர்  24ம் தேதி  இரவு  மஹா பெரியவா  டாடாநகர்  பயணம் ஆனார்.  வழியில் உள்ள ஊர்கள்  மாணிக்கபர்ஹா, ஜார்க்ராம், பர்ஹிஹார்டி , ஸகூலியா  என்ற ஊர்கள் வழியாக பயணம்.  ஒவ்வொரு இடத்திலும் ஒரு நாள்  வாசம்.  டிஸம்பர் மாதம் 1ம் தேதி   நர்ஸிங் கார்  2ம் தேதி  காட்ஸிலா,  3ம் தேதி மௌபந்தர் , அங்கே  தாமிர சுரங்கம் பிரபலம். 4ம் தேதி கலுதி ,  நிறைய  மார்வாடிகள் வாழும்  ஊர். 

5ம் தேதி டிஸம்பர்  அன்று  சந்திரலேகா என்ற  சிற்றூர் வழியாக  ஸ்வர்ணலேகா நதியைக் கடந்து டாடாநகரை  மஹா பெரியவாளும் அவரை ச்சேர்ந்தவர்களும்  சென்றடைந்தார்கள். 

1936ம் வருஷம்  ஜனவரி மாதம் 27தேதி வரை  டாடாநகரில் முகாம்.     ஆகவே தனுர் மாச பூஜைகள் மகர சங்கராந்தி எல்லாம்  டாக்டநகரிலேயே நிகழ்ந்தது.  டாடா நகரில் 54 நாட்கள்   மஹா பெரியவா இருந்திருக்கிறார்.  குளிர்  ஜாஸ்தி என்பதால்  மடத்து சிப்பந்திகள் மற்றும் டாடாநகரில் வாழ்ந்த தென்னிந்திய  தொழிற்சாலை பணியாட்கள்  சிலரும்  வியாதியுற்றனர்.   இரும்புத் தொழிற்சாலை நிர்வாகம், மற்றும்  அவர்களது  மருத்துவர்கள் அனைவருக்கும் வேண்டிய  மருத்துவ உதவி அளித்தனர். மஹா   பெரியவாளை  தொழிற்சாலைக்கு விஜயம்  செய்ய அழைத்தார்கள். 

சாம்பசிவ தீக்ஷிதர்   என்பவர்  தொழிற்சாலையில்  ஒரு முக்கிய நிர்வாகி.  அவரே  மஹா பெரியவாளை அழைத்துக் கொண்டு எல்லா  மெஷின்களையும்  சுற்றிக்  காட்டி அதன் வேலைப்பாடுகளை  விளக்கினார். சந்திர கிரஹணம் அன்று ஸ்வர்ணலேகா நதியில் மஹா பெரியவா  ஸ்னானம் பண்ணினார்.

ஜனவரி 27, 1936ம்   வருஷம்  ஸ்வாமிகள்  டாடா நகரை விட்டு   பீஹாரைச் சேர்ந்த  சராய்கேளா என்ற  ஒரு குட்டி  ராஜ்யத்துக்கு  விஜயம்  செய்தார்.  அந்த  குட்டி சமஸ்தான  ராஜா  மஹாபெரியவளை அரண்மனைக்கு அழைத்து பாத பூஜை செய்தார். அங்கே நாலு நாள் இருந்தார். அங்கிருந்து  சிங்பூம்   ஜில்லாவைச் சேர்ந்த  ஸைபாசா  கிராமம் சென்றார். அங்கே ரெண்டு நாள் வாசம். 

அடுத்து  12 மைல்  தூரத்தில் இருந்த சக்ரதார்பூரில்  நாலு  நாள்  முகாம் . அங்கிருக்கும்போதே   கர்ஸ்வான் என்ற  குட்டி சுதந்திர ராஜ்ஜியத்தின்  ராஜா  மஹா பெரியவாளை வரவேற்று  உபசரித்தார். அங்கே  மூன்று நாள் தங்கி ராஜாவின் வரவேற்பையும்  பாத பூஜையும்  ஏற்றார் .  ராஜா  ஒரு  நகர்வலம் ஏற்பாடு செய்தார்.  அங்கிருந்து சாய்பாஸா  திரும்பி  வந்து ஒன்பது நாட்கள் அங்கே  முகாமிட்டு  பரமகுரு ஆராதனை நடத்தினார்.

ஸைபாஸா விலிருந்து  அறுபது மைல்  தூரத்தில் உள்ள ராஜ்ஜியம் கியோன்ஜார். காடுகள் மலைகள் நிறைந்த ஊர்.   போகும் வழியில்  மஹா பெரியவா  ஹட்கமேரியா,   சம்புவா,  பலஸ்பங்கா எனும்  ஊர்களில் அன்றாட பூஜைகள் முடித்தார்.  பெப்ரவரி மாதம்  1936ல்  23ம் தேதி அன்று  கியோன்ஜார் அடைந்தார்.  ஊர்  எல்லையைத் தொடுமுன்பே,  ஏராளமானோர் பூர்ண கும்ப மரியாதையோடு வரவேற்றனர்.    மஹா சிவராத்திரி பூஜை,  குரு ஆராதனை பூஜைகள் கியோன்ஜார் கிராமத்தில் நடந்தன. மஹா சிவராத்திரி அன்று இரவு பூரா  பூஜை நாமசங்கீர்த்தனை.  அங்கே இருக்கும் சிவாலயங்களை எல்லாம் தரிசித்தார்.  கோவில்களின் விக்ரஹங்களுக்கு  பீதாம்பர வஸ்திரங்கள் அளித்தார். 

சாசனங்கள் என்று ப்ராமண அக்ரஹாரங்கள் கியோன்ஜாரில் உள்ளன.  காஞ்சிபுரத்திலிருந்து  கியோன்ஜாருக்கு  அம்பாள் விரகம்  ஒன்றை கோவிந்த்  பஞ்ச் தேவ்  என்பவர்  கொண்டு வந்திருந் தார்.  சாஸன அக்ரஹார  பிராமண குடும்பங்களுக்கு  மூன்று  நாளைக்கான ஆகாராதி களை பெரியவாளின்  காஞ்சி காமகோடி பீட மடம்  தானமாக  அளித்தது.  

21ம் தேதி பெப்ரவரி அன்று  ஸைபாசாவுக்கு கியோன்ஜாரிலி ருந்து மஹா பெரியவா திரும்பி வந்து  அங்கிருந்து   மேற்கொண்டு யாத்திரை தொடர்ந்தது. அடுத்து மஹா  பெரியவாளின் விஜயம்  பெற    காத்திருந்த   ஸ்தலம்  மயூர்பன்ச்.  போகும் வழியில் இருந்த ஊர்கள்  பகல்டா, ராய்  ரங்கன்பூர், பிலாய்  இரும்பு சுரங்கங்கள்,  பங்கிரிபோசி  எனும் இடங்கள் . தலைநகர்  பரிபாதா. அதை 7ம் தேதி மார்ச் மாதம் அன்று  அடைந்தார்கள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...