Wednesday, March 16, 2022

avvaiyar

 


ஒளவையார் - நங்கநல்லூர்  J K  SIVAN 

பாட்டி சொல் தட்டாதே.

வாழ்க்கையில் ஒரு சில  ஆசாமிகளை  ஏன்  தெரிந்து கொண்டோம்?  என்று  வருத்தப்பட வேண்டியிருக்கிறது.  இவ்வளவு மோசமாக  கூடவா  ஒருவன் இருக்க முடியும்?. எது எடுத்தாலும் அதில்  ஒரு  தகராறு, பொய், சுயநலம், அடாவடி, லஞ்ச லாவண்யம், இப்படிப்பட்டவனோடு சேருவது  பேசுவது   ஒரு பக்கம்  இருக்கட்டும்.  பார்த்தாலே  போதும்.   நம்மிடம்   அவன்  குணம் ஒட்டிக் கொள்ளும். நினைத்தாலே  நாமும்  அவனாக  மாறிவிடுவோம் என்கிற  பயம்  வரும். இதை  எவ்வளவு  அழகாக  இந்த  சின்ன  நாலு வரி  ஒளவையின் பாடல்  விளக்குகிறது.

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

கண்ணுக்கெட்டியவரை  பச்சைப்  பசேல்  என்று  நெல் மணம்  வீசும்  வயல்.  (இப்போது சில இடங்களில் தான்  காண்கிறோம்) ஒரு  துறவு கிணற்றில்  ஏற்றம் இறைத்து  நீர்  பாய்ச்சுவார்கள், அப்போதெல்லாம்  போர் வெல்  என்கிற  குழாய் கிணறு  கிடையாதே.  ஏற்றமிறைப்பவர்கள்  வாய் விட்டு   தான தன்ன  தன்னான  என்று தெம்மாங்கு பாடல்களை எல்லாம்  உரக்க  பாடுவார்கள்.  நாற்று நடும்  பெண்களின்  நாட்டுப்பாடல்களை  நான் கேட்டிருக்கிறேன்.   இறைக்கும்  நீர்   சிறிய  மண்  கால்வாய்கள்  வழியாக  நிலத்தின்  எல்லா பகுதிகளுக்கும்   சலசல என்று  புள் பூண்டுகளுக்கு நீர் அளித்துக்கொண்டே  வரப்பை ஒட்டி  பரவும். ஆங்காங்கே  புல்லின்  குடும்பம் கூட   நெல்லுக்கு  ஒரு  பக்கமாக  இதனால்  செழித்து வாழ்ந்து வரும். அதற்கு  யார்  வேளா  வேளைக்கு  நீர் பாய்ச்சுவார்கள்?    ஏதோ  நெல் செய்த புண்யத்தில்  தனக்கும் வாழ்க்கை நீடிக்க  நீர்  கிடைக்கிறதே என்று அந்த  புல்   கூட்டம் சந்தோஷம்  கொள்கிறதைப்  பார்க்கும்போது  எது  மனதில்  தோன்றுகிறது  தெரியுமா?  
ஒருவன்  நல்லவன், இந்த  உலகில்  எங்கோ  இன்னும்  இருக்கிறான்,  இறைவன்  அந்த  ஒரு  நல்லவன்  வாழ  அருளும் மழையினால்  மற்ற  புல் ஜென்மங்களான நமக்கும்  மழை கிடைக்கிறதே.

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

நான் கூட தமிழில் தான் எழுதுகிறேன். என்னைப்போல தான் ஆசுகவி காளமேகம், இந்த ஒளவையார் பாட்டி கூட தமிழில் எழுதினாள் . வாஸ்தவம். ஆனால் என் தமிழும் அவர்கள் தமிழும் ஈடாகுமா? நான்கு வரிகள் நானும் ஏதோ ஒரு பாடல் எழுத முடியாதா? சுவாமி,  அப்படி நான் எழுதுவது உண்மையில் ஒரு பாடல் அல்லது கவிதை என்று பெயர் பெறுமா? யாராவது ஒருமுறையாவது, அல்லது நானே இரண்டாவது முறை, அதை படிக்க விரும்புவேனா? இந்த விஷயத்தை தான் ஒளவையார் அற்புதமாக மண்டையில் அடித்தால் போல் ஒரு பாடலில் நச்சென்று ஒரு உதாரணத்தோடு தருகிறாள்.

காட்டில் அநேக பறவைகள் உண்டு. ஒரு மயில் மிக அழகாக தனது பெரிய சிறகை விரித்து ஆனந்த நடனம் புரிகிறது. நிறைய மிருகங்கள், பறவைகள் இதைப்பார்த்து வாயைப் பிளந்து ஆச்சர்யப்படுவதைப் பார்த்து விட்டு பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த ஒரு வான்கோழி சற்று வித்யாசமாக நடந்து கொண்டது. முதலில் தனக்குப் பின்னால் இருக்கும் சிறகைப் பார்கிறது. ''அடேடே, எனக்கும் தான் அந்த மயிலைப் போல பின்னால் ஒரு சிறகு உள்ளது. அப்போது அந்த மயில் மட்டும் தான் ஒசத்தியா? நானும் மயிலும் ஒன்று தானே. நாமும் ஆடுவோம் என்று தனது அரைகுறை அவலக்ஷண சிறகை விரித்துக்கொண்டு ஒரு ஆட்டம் போட்டால், ஏதோ பரத நாட்டிய நிகழ்ச்சி நடக்கும் மேடையில் ஒரு ஓரத்தில் டப்பாங்குத்து தான் இது.
 எப்படி, பாட்டியின் உதாரணம் ? 
தமிழ் தெரிந்தவர்கள் காலம் காலமாக அனுபவித்த அற்புத நாலு வரி பாடல் இது. அழிவற்றதாகி விட்டது வான்கோழி இதன் மூலம்!! காந்தி பெயர் இருக்கும் வரை கோட்ஸே பெயரும் இருப்பது போல்.

''கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து - தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.''

அடுத்தது மரங்களைப் பற்றி ஒரு ஆராய்ச்சி. காடு பெரியது. அடர்ந்து, மெலிந்து, உயர்ந்து, பருத்து, தனித்து, கூட்டமாக, கிளையின்றி, கப்பும் கிளையுமாக எத்தனையோ வித மரங்கள் அதில் உள்ளன. இவை மரங்கள் தான் நம்மைப் பொருத்தவரை. ஆனால் கிழவி நம்மைப்போன்ற பார்வை கொண்டவள் அல்லவே. இதுவா மரம்? சீ சீ. நான் காட்டுகிறேன் பார் என்னுடன் வா என்று அழைத்துப்போகிறாள் நம்மை. ஒரு பெரிய சபை. நிறைய பேர் அமர்ந்திருக்கிறார்கள். அங்கு அனைவரும் படித்தவர்கள், புலவர்கள், ஞானஸ்தர்கள். அவர்களில் ஒருவன். அவனது போறாத காலம், அவைத்தலைவர் அவனை அணுகி, அவர்கள் அலசிக் கொண்டிருந்த ஒரு விஷயம் பற்றிய ஒரு ஓலைச்சுவடியைக் கொடுத்து, ''அய்யா, மற்றவர்கள் எல்லாம் தங்கள் தங்கள் கருத்துகளைச் சொன்னார்கள். எனக்கு என்னவோ அது இன்னும் ஏற்புடையதாகவில்லை. நீங்கள் அமைதியாக இருந்ததைப் பார்த்தேன். நீங்கள் ஒருவேளை ஒரு நல்ல கருத்தைக் கொண்டவராக இருக்கலாம் என்று தோன்றியது. இந்தாருங்கள் இதைப் படித்து உங்கள் அபிப்ராயம் சொல்லுங்கள்'' என்று சொன்னபோது. அவன் திரு திருவென்று விழித்தான். அவன் நின்றுகொண்டிருந் தாலும் அவன் கால் நடுங்கியது. தலை சுற்றியது. வியர்த்தது. நா உலர்ந்தது. ஓலைச்சுவடி அவன் கையில் தலைகீழாக வீற்றிருந்தது. ஏன்? அவன் கல்வியறிவில்லாதவன். தன்னைக் கற்றோரில் ஒருவனாக காட்டிக்கொண்டு எல்லோருடன் அவையில் தானும் நுழைந்தவன். இதோஇப்போது இவன் தான் உண்மையிலேயே நல்ல மரம் என்கிறாள் அந்த பொல்லாத கிழவி.

'' கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம்''

ஒரு நாட்டு வைத்தியன் காட்டுப்பாதையில் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு நடக்கிறான். அந்தக்காலத்தில் வைத்தியர் தான்  வீடு வீடாக செல்வர். அவரது பையிலோ பெட்டியிலோ, நிறைய சூரணங்கள், தைலங்கள், லேஹியங்கள், பொடிகள், திரவங்கள், குளிகைகள், எல்லாம் வைத்திருப்பார்.   நோயாளிகளைத் தேடிச் செல்லும் வைத்தியர் அல்ல.  எந்தவீட்டிலாவது  யாருக்காவது ஏதேனும்  தேக உபாதை இருந்தால் அதற்காக  அவரிடம்  முன்பாகவே  மருந்து மாத்திரை வாங்கி வைத்துக் கொள்வார்கள்.  பத்தியம் சொல்வர். அதன் படி ஜாக்கிரதையாக நடந்துகொண்டு நோயைத் தவிர்ப்பார்கள்.

தெருவில் ஏதோ ஒரு வீட்டின் திண்ணையில்  வைத்தயர் போய் உட்கார்ந்தால் அந்தவீட்டில் இருக்கும் அத்தனை பேர் வியாதிகளுக்கும் அவர் பையிலோ, பெட்டியிலோ மருந்து இருக்கும். தலைவலி, வயிற்றுவலி, பல் வலி, சரும கோளாறு, கண் நோய், காது குத்தல், முடக்கு வலி, வாயு உபத்திரம் எல்லா வற்றிற்குமே ஒரே மாத்திரை குளிகை, தான்  சர்வ ரோக நிவாரணி. 

''இந்தா இதை ரண்டு நாள் சாப்பிடு, வெறும் வயிற்றில் தண்ணியோடு குடி, எண்ணையை சேர்க்காதே, கத்திரிக்கா வேண்டாம்''  போன்ற வைத்தியரின்   கன்சல்டேஷன்  
 நடைபெறும். போகும்போது அரிசி, காய்கறி, துணி, பழங்கள், நெய், போன்றவை அவருக்கு கன்சல்டஷன் பீஸ். அடுத்த மாதம் தான் மீண்டும் வருவார். பல வீடுகளுக்கு இதுபோல் பக்கத்து ஊர்களுக்கும் செல்வதுண்டு. எப்போதுமே பிஸி அவர். அவரோடு அவர் பையன்அல்லது உறவுக்காரன்  ஒருவன்  கூடவே   வருவான் பெட்டி தூக்கிக்கொண்டு. அவன் தான் அடுத்த டாக்டர்.

இப்படிப்பட்ட வைத்தியன்  ஒருவன்  காட்டுக்குள் நடந்து செல்லும்போது வழியில் பட்டை பட்டையாக் பெரிய மஞ்சள், கருப்பு மினு மினுக்க ஒரு புலி. வழியில் குறுக்கே உறுமிக்கொண்டு படுத்திருக்கிறது. தனது முன்னங்கால்களில் ஒன்றை நக்கிக்கொண்டு இருக்கிறது. நகரவில்லை. டாக்டர் பயந்து ஓடவும் வழியில்லை. அது போகட்டும் என்று ஒரு மரத்தின் பின்னே ஒளிந்துகொண்டு நிற்கிறார். மணிக்கணக்காக நின்றும் அது நகரவில்லை. கண்களில் நீர். அவருக்கல்ல, அதற்கு. அதன் சப்தத்தில் ஒரு வலி தெரிகிறது. டாக்டர் பார்க்கிறார். நீண்டு கொண்டிருந்த அதன் முன்னங்காலில் ஒரு பெரிய கம்பி முள் குத்தி அதைச்  சுற்றி சீழும் ரத்தமும் வடிகிறது. ஆஹா, இந்த புலிக்கு வலி இந்த கம்பி முள்ளால் தான். அதை எடுத்து விட்டால் அதன் வலி குறையுமே, அதற்கு காயம்பட்ட இடத்தில் கொஞ்சம் மருந்து வைத்துக் கட்டினால் அது மறுபடி பழைய படி நடக்கமுடியுமே. அவர் டாக்டரல்லவா? . உடனே வைத்திய உதவி செய்ய தோன்றியது. நோயாளியைப் பார்த்து அருகில் சென்று தன் பையிலிருந்து ஒரு குறடை எடுத்து அதன் காலில் இருந்த கம்பி முள்ளை பிடுங்கி எடுத்து, சீழ் ரத்தம் எல்லாம் அகற்றி மருந்து வைத்து கட்டுபோட்டார். என்ன ஆச்சர்யம். வலி போய்விட்டது. புலி அடிபட்ட காலை முன்போல் ஊன்றி வைக்க முடிந்தது. அதன் கண்களில் மலர்ச்சி. எழுந்தது புலி. வைத்தியரிடம் வந்தது. அவரை அணைத்தது. பிறகு....
 வைத்தியரின் தலைப்பாகையும், செருப்பும் பையும் தான் அங்கு இருந்தது. வைத்தியர் பசித்த புலிக்கு அன்றைய ஆகாரமானார்.
இது எது போலவாம்? பாவம் ஏதோ கஷ்டப்படுகிறானே என்று ஒரு நன்றி கெட்டவனுக்கு நாம் நல்ல எண்ணத்தோடு செய்யும் உதவி ஒரு கல்லின் மீது தவறி விழுந்த பானையின் கதிக்கும் மேலே சொன்ன டாக்டரின் கதிக்கும் சமமாகும்  என்று கிழவி புரியவைக்கிறாள்.

''வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல் - பாங்குஅறியாப்
புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம்


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...