Thursday, March 24, 2022

sundaramurthy nayanar

 தம்பிரான் தோழர்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 


சிவன் எனும் கல்யாண தரகன் 

சென்னையில் உள்ளவர்களுக்கு  ஒரு  அதிர்ஷ்டம்.  செங்கல்பட்டு போகும் வழியில்  இருக்கும்  திருக்கச்சூர் எனும் ஒரு  அமைதியான  சிவஸ்தலம் உள்ளது.   நான்  அநேக முறை  சென்று தரிசனம் செய்திருக்கிறேன்.  கடைசியாக சென்றது ஒரு சிவராத்திரி அன்று    மூன்று நான்கு வருஷங்களுக்கு முன்பு.  சிவன் பெயர் இங்கே   கச்சபேஸ்வரர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயம். ஆலயத்தில் சண்டேஸ்வரர் நான்கு முகத்துடன் காட்சி தருகிறார். அந்தணர் வேடத்தில் வந்து இறைவன், சுந்தரரின் பசி தீர்த்தமை மற்றும் திருமால் கச்சப (ஆமை) வடிவில் இருந்து வழிபட்டார்  என்று  ஐதிகம்.   இங்கே  ரெண்டு சிவன் கோயில்கள்.  திருக்கச்சூர் ஊருக்கு  நடுவில்  உள்ளது  கச்சபேசம் திருக்கோயிலுக்கு இன்னொரு பெயர்  ஆலக்கோயில்.

இங்கே  தியாகராஜரை அமிர்த தியாகேசர் என்கிறார்கள்.  தேவர்களும் , அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடையும் போது மத்தாக விளங்கிய மந்தர மலையைத் தாங்கும் சக்தியைப் பெற திருமால் இவ்வாலயத்தில் சிவபெருமானை வழிபட்டார் (கச்சபம் என்றால் ஆமை) என்பதால் , இவ்வூர் கச்சூர் எனும் பெயர் பெற்றது.

இவ்வூரில் அமைந்துள்ள மலைக்கு ஔஷத கிரி எனும் பெயருண்டு.  இத்தலத்தில்  சிவன் பிக்ஷாடனர். பிச்சையேற்று உணவு கொணர்ந்து தமது அடியாரின் பசியாற்றிய தலம். இத்தலத்தில் கொடி மரத்தின் கீழுள்ள திருமண், திருநீற்றுத் தன்மை கொண்டது.
 
ஒரு தடவை  சுந்தரர்  திருக்கச்சூர்  என்ற ஸ்தலத்துக்கு சிஷ்யர்கள் புடை சூழ நடந்து சென்றார். சிவ தர்சனம் அபூர்வமாக இருந்து தன்னை இழந்தார்.  நீண்ட தூரம் நடந்த களைப்போடு  நல்ல பசியும் சேர்ந்துகொண்டு   திருக்கச்சூர் கோவில் வாசலிலே அமர்ந்தார்கள்.  சிவன் கோயில் சென்றால் சிறிது அமராமல் திரும்பக் கூடாது. உச்சி வெய்யில் நேரம்.  அந்த வேளையில் அங்கே   ஒரு பிராமணர் வந்தார்.

 ''என்ன சிவடியார்களே, நீங்கள்  இந்த ஊருக்கு புதுசு போல  இருக்கிறதே. எந்த ஊர் ? களைத்துப் போய்  உட்கார்ந்துட் டீர்கள். போஜனம் ஆயிட்டுதா? இல்லேன்னா எங்க கிரஹத்துக்கு வரணும்.

''ஐயா  உங்களுக்கு புண்யமாக போகட்டும்.  நாங்கள்  க்ஷேத்ராடனம் செல்பவர்கள்.

''இவர் யார்?' ரொம்ப  இளம் வயது அழகு மிகுந்த  வாலிபராக  தேஜஸ் ஒளிவீசும் முகத்தினராக இருக்கிறாரே.''

''இவர் தான்  சுந்தரமூர்த்தி நாயனார் சிவன் மீது பக்தி  பாடல்கள் இயற்றுபவர் எங்கள் தலைவர். ''

''அடடா, என்ன தேஜஸ் பொருந்திய முகம்.  பேருக்கேற்ற சுந்தரராகவே இருக்கிறாரே.   ரொம்ப சந்தோஷம். இவர் தான் நம்பி ஆரூரன் என்கிற  சிவபக்தரோ? அவரைப் பற்றி கேள்விப்பட் டிருக்கிறேன் சிறந்த சிவபக்தர் என்று.''

''அடியேன்  அடியார்க்கு அடியான். சுந்தரன்.இவர்களுக்கு போஜனம்  ஏற்பாடு செய்யுங்கள் ''

 '' ஆஹா.  எங்கள் க்ரஹம்  சற்று  தூரம்.  எங்கும்  போக  வேண்டாம்,   இங்கேயே இருங்கள் . அனைவருக்கும்   போஜனம்  ஏற்பாடு பண்ணி எடுத்துக்கொண்டு சீக்கிரமாக வருகிறேன்.  ''

 சுந்தரரின் பதிலுக்கு காத்திராமல் அந்த பிராமணர் சென்றார். அந்த உஞ்ச வ்ருத்தி  பிராமணர் பல வீடுகளில் சென்று உணவு சேகரித்து சுந்தரரையும் அவர் சிஷ்யர்களையும்  அன்று   பசியாற செய்தார்.  அவர்கள் பசியாறி முடியும் சமயம் அந்த  பிராமணர் மறைந்து  விட்டார்.  இதைப் பற்றியும் சுந்தரர் அற்புதமாக ஒரு பாடல் இயற்றியுள்ளார். அதில் சிவனின் கருணை கொப்புளிக்காமல் என்ன செய்யும்?

 சுந்தரரின்  திருக்கச்சூர்  தேவாரம் பதிகம்  

முது வாய் ஓரி கதற, முதுகாட்டு எரி கொண்டு ஆடல் முயல்வானே!
மது வார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள் தன் மணவாளா!
கதுவாய்த் தலையில் பலி நீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே?
அதுவே ஆம் ஆறு இதுவோ? கச்சூர் ஆலக்கோயில் அம்மானே! .

சுந்தரர்  திக்  விஜயம் செய்ய  நமது திருவொற்றியூர்  பாக்யம் செய்திருக்கிறதே.  சிலகாலம் இங்கே வசித்தார். பார்வதியின் தோழி ஒருவள் கைலாசத்தில்  ஹாலால சுந்தரர் மீது மையல் கொண்டு அவரை மணக்க விரும்பி பரமேஸ்வரன் அவளை பூமியில் பிறக்க கட்டளை யிட்டு அவள் இங்கே வந்து பிறந்தாள்.  அவள் பெயர் இப்போது சங்கிலி.   சுந்தரருடன் தொடர்பு சங்கிலி போல் இருந்ததால் இப்படி ஒரு பெயரா?

ஞாயிறு என்று ஒரு ஊர்  இருக்கிறது.  நான் அங்கே சென்றிருக்கிறேன்.  ரெட் ஹில்ஸ் என்று சொல்கிறோமே  செங்குன்றம் அதற்கு போகும் வழியில் ஒரு சிறு கிராமம் அது.  அங்கே தான் ஞாயிறு கிழார் என்கிற வேளாளரின் பெண் சங்கிலி. கோவூர் கிழார், சேக்கிழார், என்று கிழார் என்ற பெயர் வழக்கத்தில் இருந்த காலம்    தூய சிவபக்தரான  அவர் பெண் சங்கிலியும் சிவ  பக்தையாக இருந்ததில் ஆச்சர்யமில்லை.  கல்யாணம் என்றாலே பிடிக்காது. அவளை கல்யாணம் சம்பந்தம்  செய்ய வந்த சில வேளாளர்கள் குடும்பம் உடனே மரணமடைந்தது.  அதற்கப்புறம் கிழார் அவள் திருமணம் பேச்சே எடுப்பதில்லை. திருவொற்றியூரில் ஒரு இடம் பிடித்து அங்கே ஆஸ்ரமத்தில் தங்கினாள் .

தினமும் நிறைய மலர்கள் தொடுத்து திருவொற்றியூர்  தியாகராஜனுக்கு மலர் மாலை சூட்டுவது  சங்கிலிக்கு  பிடித்த வேலை.  ஒருநாள் சிவனுக்கு மாலை சூட்ட ஆலயம் வந்தவள் அங்கே சுந்தரரை பார்க்கிறாள்.  சுந்தரரும்  அவளை கண்ணிமைக்காமல் சிலையாக நின்று பார்க்கிறார்..... எங்கேயோ பார்த்த முகம்.... இருவருக்கும்  மனதில் சுனாமி... கைலாச தொடர்பு மெதுவாக தலையெடுக்கிறது.

''தியாகராஜா,   இவளே நான் விரும்பும் மனைவி. உன்னருளால் அது நிறைவேற வேண்டும்.''  பரமேஸ்வரனுக்கு தரகர் வேலை நிச்சயமாகி விட்டது.
அன்றிரவு சங்கிலி கனவு கண்டாள் :

''பெண்ணே, என்  சிறந்த பக்தன் சுந்தரன். உனக்கு ஏற்றவன். என் தோழன். உன்னை மணக்க அவனுக்கும் விருப்பம் என தெரிவித்தான். நீ அவனை மணக்க வேண்டும்.உன்னை விட்டு பிரியமாட்டேன் என்று அவனிடம் வாக்குறுதி பெற்றுக் கொள்  ''

''அவ்வாறே'' என சிவனின் கட்டளையை மீறாமல் சங்கிலி ஏற்கிறாள்.

சிவன் சுந்தரரின் கனவிலும்'' சுந்தரா, இந்த சங்கிலியை நீ பிரியக் கூடாது.'' என்கிறார்.  
''பரமேஸ்வரா, நான் உன்னை எந்தெந்த ஊரிலோ எல்லாம் சென்று தரிசிக்கும் யாத்ரீகன். ஒரு இடத்தில் எப்படி இருப்பேன்.   நீ எனக்கு ஒரு வாக்கு தருகிறாயா?   நீ லிங்கத்திலிருந்து விடுபட்டு  என்னெதிரில்  இருக்கும் ஒரு மரத்தில் உன் தரிசனத்தை தருவாயா. நான் இங்கேயே இருக்கிறேன்.''
'சரி'' என்கிறான் சர்வேஸ்வரன்
தரகன் தியாகராஜன்  மீண்டும் சங்கிலியிடம் சென்று ''இதோ பார் சங்கிலி,  சுந்தரனிடம் சென்று உன்னை மணக்க ஏற்பாடு பண்ணி விட்டேன்.  அவன்  உனக்கு உன்னை விட்டு பிரியமாட்டேன் என்று சத்யம் செய்வான்.  நீ அப்போது  சிவலிங்கம் சாட்சியாக என்று சொல்லாதே. இதோ இந்த மரத்தில் சிவன் சாட்சி சொல்லட்டும் என்று அவன் எதிரில் நிற்கும் ஒரு மரத்தை காட்டி சத்தியம் செய்யச் சொல்''  என்று  அறிவுரை கூறுகிறார்.
அடுத்த நாள் வழக்கம்போல் சங்கிலி திருவொற்றியூர் தியாகராஜன் சந்நிதியில் நிற்கிறாள்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...