Monday, March 14, 2022

life lessons

 மனதில் பதியட்டும்:     நங்கநல்லூர்  J K  SIVAN


எத்தனையோ மஹான்கள் சொன்னதையெல்லாம் படித்துவிட்டு குறிப்பு எடுத்துக்கொண்டு  எழுதிய இவை நிச்சயம்  உபயோகமாக இருக்கும்:

* நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனம் தான்.  உருவமற்ற இந்த கண்ணுக்கு தெரியாத  மனம் , பெரிய உருவம் படைத்த நம்மை எப்படி யெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்று யோசித்துப் பார்த்தால்  ஆச்சர்யம்.  மனதுடன்
 நடத்தும்   நமது போராட்டம் என்றும் ஓய்வதில்லை. விழிப்பு நிலையில் மட்டுமல்ல, உறக்க நிலையிலும் கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு ஒருபோதும் நீங்குவதில்லை.  அனைத்து சாஸ்திரங்களும், வேதநூல்களும் மனதை அடக்க  வழிகளை  சொன்னாலும்  மனதை அடக்கும் சக்தியை ஆண்டவன் தான் தரவேண்டும். 

* உடலுக்கு கிடைக்கும் இன்பத்தை எவ்வளவு தான் அனுபவித்தாலும் ஒருவனுக்கு நிரந்தரமான திருப்தி கிடைக்கப் போவதில்லை. இருந்தாலும், மனம் அந்த  ஆசையை விடவே  விடாது. 

* காய்ந்த எலும்புத் துண்டைக் கடித்த நாய், தன் வாயிலிருந்து வழிந்த ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக எண்ணி மேலும் அழுத்தமாகக் கடித்து  சுவைத்து துன்பத்தை அடையும். அது  போல் மனிதனும் ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு  தன்னால் விளைந்த  துன்பத்தை அனுபவிக்கிறான்.

* பாலைவனத்தில் தூரத்தில் தெரியும் கானல்நீர் நிஜம் மாதிரி தெரிந்தாலும்  கிட்டே போனால் காணோம்.  மனதினால்   நம்  வாழ்வில் உண்டாகும் இன்பங்களும் நம்மை ஏமாற்றக்  கூடியவையே. நிரந்தரமானதல்ல.

* தந்தைக்குக் கடனைத் தீர்த்து வைப்பதற்கு பிள்ளைகள் இருக்கின்றனர் ஆனால் அறியாமைத் தளையை நீக்க நாமே  தான்  முயற்சி செய்யவேண்டும்.

* சிரத்தையும், பக்தியும், தியானயோகமும் முக்திக்குக் காரணம் என்கிறது வேதம்.  இதை எவன் கடைப்பிடித்து,  விடாமல் அதில் நிலை பெருகிறானோ, அவன் தான் முக்தி அடையமுடியும். வெறுமனே படித்தால் மட்டும் போதாது.

* அம்மா  பார்வதி, ஜெகதீஸ்வரி,  உலகில் எங்கும் என்னைப் போல் பாவம் செய்தவரும் இல்லை. உன்னைப் போல் பாவத்தைப் போக்கும் சக்தி கொண்டவளும் இல்லை. உன் காலை கெட்டியாக பிடித்துவிட்டேன். காப்பாற்று.

* மனிதப்பிறவி, ஞானத்தில் நாட்டம், மகான்களின் தொடர்பு இவை மூன்றும் கிடைப்பது அரிது. தெய்வத்தின் அருள் தான் இவற்றை  பெற வைக்கிறது. 

* பகவத் கீதையைச் சிறிதாவது படிப்பவன், கங்கை நீரை ஒரு துளியாவது பருகியவன், பகவானுக்கு ஒரு முறையாவது பூஜை செய்தவன்... இப்படிப்பட்டவனுக்கு எமபயம் கிடையாது.

* பொருள் தேடி  சேர்த்து வைக்கும் வரை   சுற்றத்தினர் நம் மீது அன்பு வைத்திருப்பார்கள். நோயினால் தளர்ந்து போன பின், கைப்பணம் கரைந்தபின்னர்   யாரும் நம்மைக் கண்டுகொள்ள மாட்டார்கள். 
 பொருள் சேர்ப்பதில் உள்ள ஆசையை விட்டு நல்ல எண்ணங்களை மனத்தில் சிந்தனை செய்வது நல்லது. நம்முடைய நிலைக்கேற்ப பணி செய்து, கிடைக்கின்ற பொருளில் மகிழ்ச்சியாக வாழ்தலே அறிவுடை மையாகும்.

* ஒளியின் உதவியில்லாமல் எதையும் பார்க்க முடியாது. அதுபோல உள்மனதில் தன்னைப் பற்றிய ஆராய்ச்சி யின்றி ஞானத்தை அடைய முடியாது. கண்ணாடி போன்ற தூய்மையான மனதில் ஞானம் தானாகவே விளங்கித் தோன்றும். ஆகையால், நாம் ஒவ்வொருவரும் மனதை பரிசுத்தமாக்குவதில் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

* நெருப்பிலிட்ட தங்கம் அழுக்கு நீங்கி பிரகாசிப்பது போல், ஒரு குருவிடம் உபதேசம், கேள்வி முதலியவற்றைக் கற்றால், மனமும் அழுக்குகள் நீங்கப்பெற்று ஒளியுடன் பிரகாசிக்கும்.

* பகலும், இரவும், மாலையும், காலையும் பருவகாலங்கள்.   இவை  திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு காலம் விளையாடுகிறது.   நமது வயது கழிகிறது. ஆனால், ஆசை மட்டும் மனிதனை விடுவதில்லை.

* மரணவேளை நெருங்கும் போது இலக்கண சூத்திரங்கள் நமக்கு கைகொடுக்காது. ஆகையால், கோவிந்தனைக் கூப்பிடு. கோவிந்தனைப் பாடி வழிபடு  என்கிறது  பஜகோவிந்தம் ஸ்லோகம்.

* பொருள், சுற்றம், இளமை முதலியவற்றில் கர்வம் கொள்ளக்கூடாது. காலம் ஒரு கணத்தில் எல்லாவற்றையும் கொண்டு சென்று விடும். அதனால், மறைகின்ற அனைத்தையும் விட்டு இறைவனின் மீது சிந்தனையை செலுத்துங்கள்.

* எதிரி, நண்பன், மகன், உறவினன் என்று பிரித்துப் பார்க்காமல், யாரிடத்தும் நட்பும் பகையும் கொள்ளாமல் எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும்.

* பகவத்கீதையை சிறிதாவது படிப்பவன், கங்கைநீரை துளியாவது பருகியவன், இறைநாமத்தை உள்ளன்போடு ஒருமுறையாவது சொல்பவன் ஆகியோருக்கு உறுதியாக எமபயம் இல்லை.
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...