Thursday, March 24, 2022

life lesson

 


மனதில் பதியட்டும்  - 5.       நங்கநல்லூர்  J K  SIVAN


பழைய   காலத்திலும் பள்ளிக்கூடங்கள் இருந்தன. இப்போது போல்  கான்க்ரீட் கட்டிடங்களோ மேஜை நாற்காலி, மின் விசிறி, சீருடை, பீஸ், போக வர  பஸ் எல்லாம் கிடையாது. வாத்தியார் ஊரில் ஒருவர் இருவர்  இருந்தார்கள், அவர்கள் வீட்டு திண்ணை தான் பள்ளிக்கூடம், அதற்கும் முன்னாள்  ரிஷிகள் காட்டில் தவம் செய்து கொண்டு  ஆஸ்ரமம் எனும்  பர்ணசாலை களில் இருந்தார்கள்,  மாணவர்கள் ஐந்து வயது முதல் குருவின் வீட்டிலேயே  வாசம் செய்தார்கள். 15 வயது வயது வரை குருகுலவாசம் . அங்கே ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும்? எல்லாவற்றையும் முன்னோர் வகுத்த நீதிநூல்கள் வகைப்படுத்தி வைத்திருக் கிறது.  மாணவர்கள் குருவுக்கு அடங்கி, பிரம்மச்சாரியாக  வாழவேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது.  சிஷ்யன் அன்றாடம்  பகவன் நாமாவை  சொல்லிக்கொண்டு  வீடு வீடாக  சென்று  பிக்ஷை  எடுத்து  குருபத்னியிடம் சேர்த்து,  அவள் எல்லோருக்கும் உணவளிப்பாள் . அதனால் அவனுக்கு அகங்காரம் கரைந்து வினயம் ஏற்பட்டது. குருவுடனேயே இருந்ததால், அவரிடம் உண்மையான பிரியம் ஏற்பட்டது. அவருக்கும் இவனிடம் இயல்பாகவே பிரியம் ஏற்பட்டது.

குரு என்றால் கனமானது, பெரியது, அதாவது பெருமை உடையவர். மகிமை பொருந்தியவர் என்று பொருள். பெரியவர்களை 'மஹாகனம் பொருந்திய' என்று சொல்கிறோம். கனமென்றால் வெயிட் weight  அதிக மென்றா அர்த்தம்? உள்ளுக்குள்ளேயே அறிவாலோ, அனுபவத்தாலோ, அருளாலோ பெருமை பெற்றவர் என்று அர்த்தம். ஆசிரியர் என்பவர் படிப்பிலே பெரியவர். நடத்தையால் வழிகாட்டுவதில் சிறந்தவர். குரு என்றால் இருட்டைப் போக்குபவர் என்றும்  சொல்வதுண்டு.  குருவிடமிருந்து புறப்பட்டு , சீடனுக்குள்ளே புகுந்து, அவனை ஒரு   தர்ம  மார்க்கத்தில் தீவிரமாகத் தூண்டிச் செலு த்துவது தான்  'தீக்ஷை'  எனப்படும்.  


பெண் தெய்வங்களை தாயாக  போற்றி  வழிபடுகிறோம்,  காமாக்ஷி, மீனாட்சி, விசாலாக்ஷி, என்று எண்ணற்றவர்கள்.   மீனாட்சி என்ற பெயரிலேயே மீன் இருக்கிறது. இதனால் அவள்  கடாக்ஷத்தா லேயே ஞான தீட்சை தந்துவிடும் குரு  என்று  அறிவோம்.  இது மத்ஸ்ய தீக்ஷை எனப்படும்.  காமாட்சி பக்தனை ஸ்பரிசித்து, அவன் தலையிலே பாதத்தை வைத்து ஞானியாக்கி விடுபவள். ஞானகுரு ரூபிணியாகவே அம்பாளைப் பாவித்துத் திருவடி தீட்சை வேண்டுகிறோம்.

நாம்  ஒருவருக்கு  உதவும்போது, நாம் பெருமைக்காக  அதைச்  செய்வது,  நாம்  தான் கருணை காட்டுகிறோம் என்ற எண்ணத்தோடு செய்யும்போது ,  அந்த  உபகாரம் அசுத்தமாகி விடுகிறது. நமக்கு வேண்டியவர்கள் என்று சிலரை நினைத்துக்கொண்டு அன்பு செலுத்துகிறோம். இந்த வேண்டியவர்களை நம் ஊரார், தேசத்தார், உலகத்தார் என்று மேலே மேலே விஸ்தரித்துக் கொண்டே போனால், அன்பிலிருந்து படிப்படியாக அருள் பிறக்கிறது. 'நம் கடன்பணி செய்து கிடப்பதே' என்பதுதான் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும். கடனை, அதாவது கடமையை அன்போடு, ஆர்வத்தோடு, இதய  பூர்வமாகச் செய்ய வேண்டும்.  பேச்சைக் குறைத்தால் போதும். பாதிக்கு  மேல் புண்யம் சேரும். 

திங்கள், வியாழன், ஏகாதசி முதலிய நாட்களில் ஒன்றில் மவுனம் அனுஷ்டிக்கலாம். சோமவாரம், குருவாரம் ஆபீஸ் செல்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மவுனமிருக்கலாம். பாதி நாளாவது இருக்கலாம்.  

நாம் பலவிதமான பேச்சுக்களைப் பேசி, கெட்ட விஷயங்களை விஸ்தாரம் பண்ணியும், பல பேரைத் திட்டியும், வாக்தேவியான சரஸ்வதிக்கு அபசாரம் பண்ணுகிறோம். இதற்குப் பிராயச்சித்தமாக சரஸ்வதியின் நட்சத்திரமான மூலத்தில் மவுனம் இருப்பதுண்டு. தினமும் அரைமணியாவது மவுனமாக தியானம் செய்ய வேண்டும்.

தெய்வத்தின் கருணை நமக்கு தெரியாது. நமக்கு நல்லது வந்தாலும் கெட்டது வந்தாலும் இரண்டுக்கும் மூலம் அம்பாளுடைய அருள்தான். நல்லது காரணம் இல்லாத அருள். கஷ்டம் ஒரு காரணத்துக்காக ஏற்படுகிற அருள். நல்லது வந்தாலும் கெட்டது வந்தாலும் அவளுடைய அருள் என்று சமமாக  ஏற்றுக் கொள்ளும்  பக்குவம் மனதுக்கு வர வேண்டும்.

நாம் எல்லோரும் ஏதாவது ஒரு திருப்பணியில் ஈடுபட்டுத் தர்மம் செய்ய வேண்டும். சேதுவில் அணைக்கட்டும் ராமனுக்கு அணில் செய்த உதவிபோல.

மனிதனாகும் போது கடவுள் மனம் என்ற ஒன்றைக் கொடுத்து அதைப் பாவ புண்ணியங்களில் ஈடுபடுத்திப் பலனை அனுபவிக்க வைக்கிறார். கஷ்டங்களைக் கண்ட இடத்தில் போய்ச் சொல்வதற்குப் பதிலாக பகவானிடம் சொல்லிக் கொள்ளலாம்.

ஜகன்மாதாவைத் தெரிந்து கொள்கிற   வரையில்  தான் துவேஷம், விரோதம், வெறுப்பு எல்லாம் இருக்கும். அவளைத் தெரிந்து கொண்டபின் இவை எல்லாம் மறைந்து எல்லோரும் சகோதரர்கள் என்ற அன்பு வந்துவிடும்.

தேகம், மனம், சாஸ்திரம், க்ஷேத்திரம், தீர்த்தம் முதலிய பல சவுகரியங்கள் இந்த உலகத்தில் தான் நமக்குக் கிடைக்கும். நாம் வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும் பாவம் தினந்தோறும் செய்து  கொண்டே இருக்கிறோம். அந்தப் பாவங்களையெல்லாம், வாக்கு, மனசு, அவயவங்களைக் கொண்டே புண்ணியம் செய்து கரைத்திட வேண்டும்.

எல்லோரும் அவரவர் தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் பயன்படுபவைதாம் ஆசாரங்கள். நமக்கு அர்த்தம் தெரியவில்லை என்பதற்காக அவற்றை விட்டுவிடக் கூடாது. பகுத்தறிவு வாதம் செய் கிறேன் என்று  புரியாததை விளக்க முற்படவேண்டாமே.

நம் துக்கங்களை எல்லாம் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது ஜலத்துக்குள் மூழ்கிய குடம் மாதிரி துக்கம் பரம லேசாகிவிடும்.

'ஏழு அஞ்சில்' என்று ஒரு மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன் பூமியில் விழுந்து உடையும். உடனே உள்ளே இருக்கிற விதைகள் ஏதோ ஒரு ஆகர்ஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து, மறுபடியும் தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும்.   சிங்கப்பெருமாள் கோவிலில்  இந்த  மரம் இருக்கிறது.  இன்னொரு மரம்   திருவள்ளூர் ஜில்லாவில் ஒரு பழைய சிவன் கோவிலில் பார்த்தேன்.  
அதைப் பற்றி  இருக்கிறேன்.    ஒட்டிக்கொண்டபின் மூலமான மரத்துக்குள்ளேயே மறைந்து விடும் என்கிறார்கள். பகவானிடம் இருந்து பிரிந்து வந்திருக்கிற நாமும், இப்படியே அவன் பக்கமாக நகர்ந்துபோய் முடிவில் அவனிடம் ஒட்டிக்கொண்டு ஒன்றாகிவிட வேண்டும்.

நாம் பக்தி பண்ணுகிறோம். ஆனால் எப்படி? கஷ்டம் வந்தால் மட்டும் அது நிவர்த்தியாகப் பெரிய பூஜை, சாந்தி எல்லாம் செய்கிறோம். நிவிர்த்தியானால் அநேகமாகப் பூஜையையும் அதோடு விட்டுவிடுவோம். ஆகாவிட்டாலோ சுவாமியை திட்டுவோம். எனவே, நமக்கு உண்மையான ஞானமும் பக்தியும் வர வேண்டும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...