Monday, March 14, 2022

VAINAVA VINNOLI

 வைணவ விண்ணொளி  -  நங்கநல்லூர்  J K  SIVAN 


''வில்லியை விழுங்கிய  விழிகள்''

ஒருவனை யாரும் மறக்கவில்லை என்றால் அவனிடம் ஒரு அபூர்வ  சக்தி, குணம், பண்பு, இருக்கவேண்டும். சிலர் பிறவியிலிருந்தே நல்லவர்கள் என பேர் எடுத்தவர்கள். சிலர்  கெட்டவர்களாக இருந்து திடீரென்று நல்லவர்களாக மாறுவதும் உண்டு.   சிலருக்கு மஹான்களின் யோகிகளின் சத் புருஷர்களின்  அனுக்ரஹத்தால்  தேடாமலேயே இப்படிப்பட்ட மாறுதல்கள் ஏற்படும்.  அப்படிப்பட்ட  மாறுதலைப் பெற்று புகழ் எய்தியவர்களில் ஒருவர்  கதை இது.  கதை என்று சொல்வதை விட  வைணவர்கள்  புகழும்  ஒரு மஹா  புருஷரின் சரித்திரம் என்று சொல்லலாம்.
                                       
தம்முடைய  தேகத்தை   யோகிகள், ஞானிகள் லக்ஷியம் பண்ணமாட்டார்கள் என்றால் அதை சீர் குலைப்பார்கள் என்று அர்த்தம் இல்லை.   ஆத்மா  தங்குவதற்கு அவசியமாக  உடல் எப்படி எந்த அளவுக்கு பாதுகாக்கப்  பட வேண்டுமோ அந்த அளவுக்கு மட்டும் அதை பற்றிய சிந்தனை இருக்கும்.

சிலர்  இரவும் பகலும் உடல் பலத்தை வளர்ப்பார்கள் அது தான் சாஸ்வதம் என்று கருதுவார்கள்.  அதன் போஷாக்கையே  லட்சியமாக கொண்டு வாழ்வார்கள். உடலைப் பற்றியே எப்போதும் சிந்தனை. அதுவே அவர்களுக்கு ஆத்மா.  சிறந்த மல்லர்கள்  அப்படி தங்கள் தேக   பலத்தை வளர்க்க இரவும் பகலும்  பாடுபடுவார்கள். மற்றவர்களை மல்யுத்தத்தில் ஜெயித்து தன்னிகரில்லாதவன் என்று காட்டிக்  கொள்ள ப்ரம்ம பிரயத்தனம் செய்பவர்கள்.   இளம் வயதில்  கிங்  காங், தாராசிங், போன்றவர்கள்  எவ்வளவு சாப்பிடுவார்கள் என்ன என்ன சாப்பிடுவார்கள் என்பது பற்றி நிறைய செய்திகள்  கல்கண்டு பத்திரிகையில்  படித்திருக்கிறேன். கிங் காங் என்பவர்  ஒரு மாமிச மலை என்று போட்டிருக்கும். அவர் படம் பார்க்கவே  எனக்கு பயமாக இருக்கும்.

அப்படி ஒருவன் சோழ நாட்டில் வாழ்ந்தான்.  அவன் பெயர்  தனுர் தாசன். சோழராஜா அரண்மனையில்  சிறந்த மல்லன். அப்போது  சோழநாட்டின் தலைநகர்  உறையூர். தனுர் தாசன்  மனைவி அழகி. பொன்னாச்சி. அவள் தான் அவனுக்கு தெய்வம். அவள் கண்கள் உலகிலேயே அழகானவை.   அவள் அவனைப் பொறுத்தவரை கிளியோபாட்ரா. வசீகரி. அவன் புஜபல பராக்ரமம், வீரம் அவனுக்கு ராஜாவிடம் இருந்து பெரும் செல்வத்தை பெற்று தந்தது.

ஒருமுறை ராமானுஜர் சிஷ்ய   கோடிகளுடன்  ஸ்ரீரங்கம் ரங்கநாத தரிசனம் பெற சென்றார்.  நல்ல வெயில் நேரம். கால் மணலில்  அப்பளமாகிக்  கொண்டிருந்தது.  அவர் அதை லக்ஷியம் பண்ணவில்லை.   சற்று தூரத்தில் அவருக்கு முன்னால்  ஒரு சிறு கூட்டம்  போய்க் கொண்டிருந்தது.  யாரோ  ஒரு தடியன், ஒரு கையில் பெரிய  குடையை பிடித்துக்  கொண்டு ஒரு பெண்ணை வெயிலிலிருந்து பாதுகாத்தவாறு, அவள் நடக்க  பட்டுத் துணிகளை அவளுக்கு முன்பாக  தரையில்  விரித்துக் கொண்டு அவள் பாதங்கள் வெயிலில் சுடாமல்  நடக்க  செய்து கொண்டு சென்றான்.  

துறவி ராமானுஜருக்கு இதைக் கண்டதும் சிரிப்பு வந்தது.  என்ன அவ்வளவு பரிவு பாசம் அந்த பெண் மேல் அவனுக்கு?. தனது பாதங்கள், உடல் வெயிலில் சூடு கண்டாலும் அதை பொருட்படுத்தாமல் அவளுக்கு சிச்ருஷை செயகிறானே யார் அவன்?  ஆர்வத்தோடு அவனைக் கூப்பிட்டார்.

''அப்பனே  இங்கே வா அப்பா?   நீ யார்?

''சாமி,   நான்  தனுர்தாசன், சோழ ராஜா  அரண்மனையில்  மல்யுத்த வீரன். மல்லன். வில்லிகள்  எனப்படும்  அரசனின்  மெய்காப்பாளர் தலைவன். கரம்பனுரில் இருந்து  இங்கே  சித்திரை உத்சவம் பெருமாள்  தரிசனத்துக்கு வந்தேன்.''
''அது யார் ?''
''என் மனைவி பொன்னாச்சி''
''ஏன் அவள் மேல் அத்தனை கரிசனமாக  கால் சுடாமல்   நடக்க  வஸ்திரம்  விரித்து  அவள்  உடலில் சித்திரை மாச  கொளுத்தும் வெயில் படாமல், கொள்ளிடம் மண்ணில்  காலுக்கு சூடு தெரியாமல் ஒரு குடை வேறு பெரிதாக  அவள் தலைக்கு மேல்  பிடித்து  சேவை செயகிறாய்?''

''சாமி,  என் மனசுலே இருக்கிறதை சொல்றேங்க.   என்  பொஞ்சாதி கண்கள் விலை மதிப்பில்லாத அழகுங்க.   சூரிய வெளிச்சத்தில் கண்ணு கூசி,   அவள் முகம் கருகி அழகு குன்றி விடுமே  என்கிற கவலை எனக்கு. அவள்  கண்களின், உடலின்  அழகுக்கு நான் அடிமை. அவள் அழகை பாதுகாக்க நான் எதுவும் தியாகம் செய்வேன்' ஐயா''

ராமானுஜர்  அவனை   ஏற  இறங்க  பார்க்கும்போதே  தனுர்தாசன் ஒரு சாதாரண மனிதன் அல்ல,   ஸ்ரீ வைஷ்ணவ சேவைக் கென்று அவதரித்த  ஒரு  ஜீவன். அஞ்ஞானத்தில் உழல்கிறான், தூசு தட்டவேண்டிய கண்ணாடி என்று புரிந்துவிட்டது.  

''தனுர்தாசா , உன் பொன்னாச்சியின் கண்களை விட அழகான கண்கள் இந்த உலகில் கிடையாது என்கிறாயே, எனக்கு இதைவிட அழகிய  கண்கள்  இருக்கிறது  என்று தோன்றுகிறதே.''

''சாமி, அப்படி இல்லீங்க.  நான்  எத்தனையோ ஊர்கள் சென்றவன், எத்தனையோ பெண்களின் கண்களை பார்த்தவன். எங்குமே இது போன்ற அழகிய கண்கள் கிடையாதுன்னு  சொல்வேன்  ஐயா.

''உனக்கு  பொன்னாச்சியின் கண்களைவிட அழகான கண்களை காட்டுகிறேன், பார்க்கிறாயா?

''சுவாமி, அப்படி ஒரு ஜோடி அழகிய கண்கள் இருக்குமானால்  அதற்கு உடனே  அடிமையாகிடறேன்  ஐயா.   எனக்கு தெரியும்   என் மனைவி கண்களை விட வேறெவர்க்கும்  இவ்வளவு அழகிய கண்கள் இருக்கமுடியாது.''

''வா  என் பின்னாடி,  உனக்கு  காட்டுகிறேன்.  பார்த்துவிட்டு பிறகு சொல்  யார் கண்கள் அழகானவை என்று, சரியா?''  என்று அவனை ஈர்த்தார் உடையவர். நாம் இருவருமே  சேர்ந்து  உலகிலேயே  மிக அழகான  கண்களைப்  பார்ப்போம்'' 

தனுர் தாசனின்  கையைப் பிடித்து   அரங்கன் ஆலயத்தின் உள்ளே அழைத்துச் சென்றார் ராமானுஜர். இருவரும் ஸ்ரீரங்கம் கோயிலை அடைந்து, பாம்பணையில் பள்ளிகொண்டிருக்கும்  ஆதி  புருஷனான ஸ்ரீரங்க ராஜனின் எதிரில் நின்றபோது

"அழகிய மணவாளா,   திருப்பாணாழ்வார் போல  சிலருக்குக் காட்டிய  உன்  கண்ணழகை, இதோ வந்திருக்கும் இந்த வில்லிக்கும் நீ காட்டி அருள வேண்டும் " ---  ராமானுஜர் மனம்  பிரார்த்தித்தது.

என்ன கண்கொள்ளாக் காட்சி.  முழந்தாள் வரை நீண்ட திருக்கைகளை உடையவராய் தாமரையிதழ் போல் நீண்டு பரந்த திருக்கண்களை உடையவனாய், புன்முறுவலோடு மிக இனிய மிருதுவான கன்னங்களை உடையவராய்,  மாணிக்கங்கள் பதித்த  திருவாபரணங்களால் அலங்கரிக்கப் பெற்றவராய், அழகிய திருமேனியை உடைய வனான , ரங்கநாதனான விஷ்ணுவின் கண்கள்  தனுர் தாசனின் கண்களை காந்த சக்தியோடு கவர்ந்தன.

''கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரிய வாய  கண்களை " அரங்கன் காட்ட......

''அப்பா , தனுர்தாஸா, ! இவரே உலகுக்குத் தலைவனான, லக்ஷ்மி நாதனான ஸ்ரீரங்கநாதன்; இவரது ஒப்பற்ற கண்களின் பரப்பை  நீ நன்றாக நேரில் பார்த்தாயா?  . கண்களை ஏன் அங்கு இங்கு திருப்பாமல் அவற்றையே பார்த்துக்  கொண்டிருக்கிறாய்? என்னையும் சற்று பாரேன்?'' என்றார் ராமானுஜர்.

தனுர் தாசன் இந்த  உலகத்திலேயே இல்லை.

கண் அழகன்  கண்ணனின் அருள் நோக்கில் அகப்பட்ட மல்லன் மெய் மறந்து , மனம் ஒடுங்கி, ஆவி குளிர்ந்து " என் அமுதினைக்கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே " என்ற நிலையை  தனுர்தசன் எய்தி விட்டான். ஆனந்தக் கண்ணீர் பெருக மெய் சிலிர்த்து நின்றான்.''

அரங்கனின்  அருளா? ஆசார்யனின் அநுக்ரஹமா?    காமம் முதலான உட்பகைகள் நீங்கப் பெற்ற மல்லன் தனுர் தாசன் இனி எம்பெருமானையே எல்லாமாகக் கொண்ட மஹாத்மா.    உடையவர்  வில்லி தனுர்தாசனுக்கும் அவன் மனைவி  பொன்னாச்சிக்கும்  திரு இலச்சினை அளிக்க,  உடையவருக்கு அடியவனாகி , அரங்கனின் கண் அழகுக்கு பாதுகாவலனாகி, உடைவாளை உருவி எடுத்துக் கையில் பிடித்த வண்ணம்  இனி  தனுர்தசன் வைணவ நூல்களில்  பக்தர்கள் போற்றும்  உறங்கா வில்லி தாசன்.  இதோ விஷ்ணு  பகவத் கைங்கர்யத்தில்  ஈடுபட்டுவிட்டான். 
 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...