Saturday, March 19, 2022

FIRST PRAYER

 ஆதி சங்கரர் --  நங்கநல்லூர்   J K  SIVAN 


த்ரி கரண  அர்ப்பணம்

ஆதி சங்கரரின் ஒரு குட்டி  ஸ்தோத்ரம்  இது.  மூன்றே  மூன்று  ஸ்லோகங்கள்.  மனம் வாக்கு  காயம்  இந்த மூன்றினாலும்  பரமாத்மாவை வேண்டி  வணங்கி அர்ப்பணிப்பது.

ஒரு முக்கியமான விஷயம் சொல்கிறேன். கவனியுங்கள்.  தூங்கி எழுந்தவுடன்  முதலில் நமது மனதில் தோன்றும்  எண்ணம் ,   நாவினால் வெளிவரும்  வாக்கு, உடலில் உண்டாகும் செயல்  இந்த மூன்றுமே  மிகவும்  நம்மை  தன்  வசப்படுத்துபவை.  ஆகவே  அவற்றை  பரமாத்மாவை நினைத்து அவனுக்கு அர்ப்பணித்தால்  அவை புனிதமானதாகிறது.  ஆத்ம ஒளி வீச செய்பவை.  இந்த விடிகாலை  பிரார்த்தனை ஸ்லோகத்தை மனப்பாடம் செய்வது ரொம்ப நல்லது. குழந்தைகளுக்கு கற்று தாருங்கள்.

அத்வைத வேதாந்தம் நிரம்பிய  ஸ்லோகங்கள் இவை.  சச்சிதானந்தத்தை  அடைய  உதவுபவை.  அதை தான் துரீயம்  என்கிறோம்.  மனோ வாக்கு காயம்  அதற்கும் அப்பால்  உள்ள நிலையை உணரச் செய்பவை.  ஏதோ அழகான  எழுத்து என்று இதை  ரசிப்பதோடு நிறுத்த வேண்டாம்.    இதல்ல இதல்ல  என்று ஒவ்வொன்றாக  தவிர்த்துக்கொண்டே  வந்தால் கடைசியில்  இது தான் என்று  அறியப்படும்  பிரம்மத்தை உணர்த்தும்  சக்தி வாய்ந்தவை.  அந்த ப்ரம்மானந்தத்தை, ஆத்மானுபவத்தை,  வார்த்தைகளால், சொல்லால்,  விவரிக்க வர்ணிக்க இயலாது. நம்முள் உறையும் ஜீவன்  எனும் ஜீவாத்மா  பரமாத்மாவின் ஒரு வெளிப்பாடு.  அண்டத்தில் இருப்பதின் பிண்டம். அதை  உடல் என்றும்  மனம் என்றும்  தவறாக  அடையாளம் காணவேண்டாம்.  உலகமும் அதில் காண்பதையும் மாயத் தோற்றங்கள். நிரந்தரமற்றவை.  ஞான ஒளி வீசத்தொடங்கினால் மறைபவை. 

இனி  ஸ்லோகத்திற்குள்  செல்லலாம்:

प्रातः स्मरामि हृदि संस्फुरदात्मतत्त्वं
सच्चित्सुखं परमहंसगतिं तुरीयम् ।
यत्स्वप्नजागरसुषुप्तिमवैति नित्यं
तद्ब्रह्म निष्कलमहं न च भूतसङ्घः ॥१॥

Prátah smarámi hrudi samsphuradátmatattvam
saccitsukham paramahamsagatim turèyam
yatsvapna jágarasussuptamavaiti nityam
tadbrahma niskalamaham na cha bhutasañgha.

ப்ராத:ஸ்மராமி ஹ்ருதி ஸம்ஸ்புரதாத்மதத்வம்
ஸச்சித்ஸுகம் பரமஹம்ஸகதிம்துரீயம்!
ய:ஸ்வப்நஜாகர ஸுஷுப்திமவைதி நித்யம்
தத்ப்ரஹ்ம நிஷ்கலமஹம் நச பூதஸங்க: !! 1 !!

ஆஹா  எவ்வளவு  புத்துணர்ச்சியோடு பொழுது  விடிகிறது.   முதல் நாள் இரவோடு பழையவை கழிந்து  இதோ புத்தம் புது காலை.  இந்த வேளையில் ஆத்மநாதா  உன்னை  நினைக்கிறேன். ஸச்சிதானந்தமாகவும் பரமஹம்ஸர்களால் அடையப்படுவதாகவும், துரியமாகவும், எது கனவு நனவு தூக்கம் இவைகளில் எப்பொழுதும் விளங்கிக் கொண்டிருக்கிறதோ அந்த தூய்மையான பிரம்மமே நான் தான்.  கண்ணால் நான் காணும் இந்த  பஞ்ச பூத  சேர்க்கையால் உருவம் எடுத்த  சிவன், குப்பன், நாராயணன் என்று பேர் மட்டும் கொண்ட  உடல் ''நான்'' அல்ல.  என்னுள் உறையும்  பரமாத்மாவின் அம்சமே,  நீ  மனதிற்கும் வாக்கிற்கும் எட்டாதவன் . உன்னருளால் தான் அனைத்து வாக்குகளும்  வெளி வருபவை.    ஆகமங்கள் இது இல்லை இது இல்லை என்ற வார்த்தைகளால்  எதை  தேடுகிறதோ அது நீ .   தேவாதி தேவா,  தோற்றம் மறைவு எதுவுமற்ற  அழிவில்லாத ஸாஸ்வதமான   முழு முதல் பொருளே,  உன்னை இந்த விடிகாலையில் வணங்குகிறேன்.

இருளகற்றும் சூரியப் பிரகாசத்தை, பூர்ணமானதை, புருஷோத்தமன் என்று பெயரிய என்றுமுள்ள பதத்தை, எந்த இறைவனிடத்தில் இந்த உலகம் முழுவதும் மிச்சமில்லாமல் முழுமையாக கயிற்றில் பாம்புபோல விளங்கிக் கொண்டிருக்கிறதோ (அந்தப் பரம்பொருளை) காலையில் வணங்குகிறேன்.

प्रातर्भजामि मनसा वचसामगम्यं
वाचो विभान्ति निखिला यदनुग्रहेण ।
यन्नेतिनेतिवचनैर्निगमा अवोचं_
स्तं देवदेवमजमच्युतमाहुरग्र्यम् ॥२॥

Pratarbhajámi manasá vacasámagamyam
vacho vibhánti nikhilá yadanugrahena
yanneti neti vacanair nigamá avocam-
stam devadevamajam achyutam áhur agryam.

ப்ராதர்பஜாமி மனஸா வசஸாமகம்யம்
வாசோ விபாந்தி நிகிலா யதனுக்ரஹேண!
யம் நேதி நேதிவசநைர்நிகமா அவோசு:
தம் தேவதேவம் அஜமச்யுதமாஹுரக்ர்யம்! ! 2 !!

வார்த்தைகளால்  வர்ணிக்க முடியாத, விவரிக்க சொல் இல்லாத   உன்னை  எது என்று சொல்லமுடியாததால்  ''அது''  என்று தான் அடையாளம் காண முடிகிறது.  வேறு ஏதாவது தெரிந்ததாக இருந்தால் தானே  அதைப்போல  என்று  உதாரணம் காட்டமுடியும்?  இந்த  ஆனந்த மான  விடிகாலையில் உன்னை மனமார  புகழ்ந்து பாடுகிறேன்.   அதை மனதால் பிடிக்க முடியாது. வார்த்தைகள் கிடையாது. இது இல்லை இது இல்லை  என்று ஒவ்வொரு பற்றாக விலக்கி
னால் கடைசியில்  மிஞ்சுபவனே, தேவாதிதேவா,  உன்னை  மனம் பூரா நிரப்பி ஆனந்தமாக  வணங்குகிறேன். 

प्रातर्नमामि तमसः परमर्कवर्णं
पूर्णं सनातनपदं पुरुषोत्तमाख्यम् ।
यस्मिन्निदं जगदशेषमशेषमूर्तौ
रज्ज्वां भुजङ्गम इव प्रतिभासितं वै ॥३॥

Prátarnamami tamasah paramarkavarnam
pürnam sanátanapadam purushottamaakhyam
yasminnidam jagadaseshamaseshamurtau
rajjvaam bhujamgama iva pratibhasitam vai.

ப்ராதர்நமாமி தமஸ: பரமர்கவர்ணம்
பூர்ணம் ஸநாதனபதம் புருஷோத்தமாக்யம்!
யஸ்மின் இதம் ஜகதசேஷ மசேஷ மூர்த்தௌ
ரஜ்வாம் புஜங்கம இவ ப்ரதிபாஸிதம் வை !! 3 !!

இதை  விடியற்காலையில்  எல்லாவற்றையும் விட  உயர்ந்த உன்னதமான  ஆத்மாவை,  அஞ்ஞான இருளை நீக்குபவனை, பல  கோடி சூரியனின் ஜகஜ்ஜோதி ப்ரகாசனை ,  பூர்ணனை மாயத் தோற்றத்தால்  உலகை   உண்மையிலிருந்து  மாற்றி உணரவைப்பவனை  நமஸ்கரிக்கிறேன்.  பிரபஞ்சத்தில்  மாயையால் அல்லவோ   பழுது பாம்பாக, கானல் நீர்  ஜலமாகவோ  நம்பவைத்து உண்மையை  அறியவொண்ணாமல் தடுக்கிறது.  

श्लोकत्रयमिदं पुण्यं लोकत्रयविभूषणम् ।
प्रातःकाले पठेद्यस्तु स गच्छेत्परमं पदम् ॥४॥

Slokatrayamidam punyam lokatrayavibhusanam
pratahkale pathedyastu sa gacchetparamam padam.

ஸ்லோகத்ரயமிதம்  புண்யம்  லோகத்ரய விபூஷணம்  
ப்ராதக்  காலே  படேத்யஸ்து  ஸ  கச்சேத்பரமம்  பதம். 

பரமனை அடைய அவனை நினைத்தாலே போதும், நாமம் வாக்கு காயம்  மூன்றிலும் அவன் உணர்வு அதிகரிக்க  நாம் பயனுற  இந்த மூன்று ஸ்லோகங்களை விடிகாலை சொல்லலாம்.  அனுபவம் தானே  இதன் பயனாக இன்பத்தை தரும்.  இதை பல ஸ்ருதியாக  ஆதி சங்கரர் வழங்குகிறார். 
இதை எழுதும்போது விடிகாலையில் என் தகப்பனார் குளித்துவிட்டு   இந்த ஸ்லோகங்களை  உரக்க  பாராயணம் செய்வது கண் முன்னே தோன்றுகிறது. 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...