THIS BLOG REPRESENTS THE SPIRITUAL, EDUCATIONAL, HISTORICAL, NOSTALGIC RECOLLECTIONS OF J.K. SIVAN BESIDES HIS STORIES AND TRAVELLOGUES & PILGRIMAGES AND PICTURES
Wednesday, March 30, 2022
PESUM DEIVAM
SURDAS
அன்பும் எளிமையும் நீ தானடா.
ஒரு காரியம் செய்வோம். உலகத்தில் இருக்கிற எளிமை ,அன்பு, அத்தனையையும் சேகரித்து, இது போல வேறு எங்கும் எதுவும் கிடையாது என்று சொல்லும்படி ஒரு உருவம் அமைத்தால், அதைப் பார்த்து விட்டு எல்லோரும் எப்படி உரக்க கோஷமிட்டு அடையாளம் கண்டு கொள்வார்கள் தெரியுமா? ''ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா ''என்று தான். உலகத்தில் அதிகம் பேசப்படும் ஒரே பெயர் ''கிருஷ்ணன் கிருஷ்ணன் கிருஷ்ணன்'' என்ற ஒன்றே தான். இதில் என்ன சந்தேகம்?
இதை எப்படி நம்பலாம்? அதற்கு ஒரு குட்டி சம்பவம் சொல்லட்டுமா?
கிருஷ்ணன் ஹஸ்தினாபுரம் போனான். பாண்டவர்களுக்காக தூது சென்றான். அவர்களுக்கு ஞாயம் கிடைக்க, கௌரவர்களுக்கு நியாயம் எடுத்து சொல்ல, யுத்தம் வேண்டாம் சமாதானமாக இருவருமே வாழுங்கள் என்று எடுத்துச் சொல்ல... ஆனால் யார் கேட்டார்கள்?
அவன் ஹஸ்தினாபுரம் வந்தபோது ''சரி, ஏதோ கிருஷ்ணன் இங்கே வந்துவிட்டான், என்ன செய்வது?. நமக்கும் வேண்டியவன். ஆகவே அவனுக்கு தங்க ஒரு நல்ல வசதியான அரண்மனை. நல்ல அருமையான சுவையான சாப்பாடு எல்லாம் ஏற்பாடு செய்தான் துரியோதனன்.
கிருஷ்ணன் தேர் ஹஸ்தினாபுரம் வந்தவுடன் ''வரணும். வரணும். எங்கள் ராஜோபசாரத்தை ஏற்று இந்த கௌரவர்களை கௌரவிக்கவேண்டும்'' என்று துரியோதனன் நீலித்தனமாக உபசரித்தான்.
''இல்லை துரியோதனா , நான் விதுரன் குடிசைக்கு செல்கிறேன்'' என்று நிராகரித்து கிருஷ்ணன் விதுரன் ஆஸ்ரமத்துக்குச் சென்று அங்கே அவன் அளித்த காய் கனி கிழங்குகளை, வேர்களை உண்டான். எளிமையான சாத்வீக உணவே போதும் என முடிவெடுத்தான். அவனுக்கு உணவு பெரிதல்ல. யார் எப்படி அதை அளிக்கிறார்கள் என்பது தான் முக்கியம். ஒரு சிறு இலை, ஒரு சொட்டு ஜலம், ஏதாவது காய்ந்த கனியாக இருந்தாலும் அன்பாக பக்தன் எதை கொடுத்தாலும் திருப்தி அடைபவன் அல்லவா?
இந்த எளிமை, பக்தர்களிடம் பூரண அன்பு, கிருஷ்ணனின் இந்த பிறவியில் மட்டும் அல்ல, அதற்கு முந்தைய ராமன் பிறவியிலும் உண்டு. ராமன் தண்டகாரண்யவனத்தில் சபரி எனும் முதிய பக்தையை சந்திக்கிறான். தேவர்கள் முனிவர்கள் தங்களிடம் ''வருவானா என்று காத்திருக்கும்படியான ராமன் என்னிடம் வந்திருக்கிறான் அவனுக்கு என்று நல்ல பழங்களை தரவேண்டும். எப்படி நல்ல சுவையான பழம் என்று கண்டுபிடிப்பது. பார்ப்பதற்கு அழகாக கவரும்படி இருக்கும், ஆனால் கடித்தால் புளிக்கும். ஆகவே நாம் ஒரு ஓரத்தில் துளியூண்டு கடித்து சுவையானதாக இருந்தால் அதை ராமனுக்கு என்று தனியாக எடுத்து வைப்போம் என்று ஒவ்வொரு பழமாக கடித்து சுவைத்து ராமனுக்கு அளித்தாள் சபரி. அது தான் ராமனுக்கு பிடித்தது. அவன் எச்சில் என்று பார்க்கவில்லை. சபரி மேல் கோபம் கொள்ளவில்லை. மோக்ஷம் கொடுத்தான். அத்தனை எளிமை அன்பு....போதுமா"?
கிருஷ்ணனுடைய எளிமைக்கும் அன்புக்கும் இன்னொரு உதாரணமும் தரட்டுமா?
அவன் இப்போது மாடு மேய்க்கும் பிருந்தாவன கோபர்களில் ஒருவன் அல்ல. மதுராபுரி மன்னன். துவாரகை அரசன். பல ராஜ்ஜியங்கள் அவனுடைய ஆளுமைக்கு அடக்கம். மஹா வீரன். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம். மஹா சக்தி வாய்ந்தவன்.
அவன் என்ன செய்தான்?. மஹா பாரத யுத்தத்தில் அவனுடைய வ்ருஷ்ணிகுல யாதவ குல நாரா யணி சைன்யங்களை அப்படியே கௌரவர்களுக்கு கொடுத்துவிட்டு வெறும் கையனாக பாண்ட வர்களுக்கு உதவ வந்தான். அர்ஜுனனுக்கு தெரியும். கிருஷ்ணன் மட்டுமே போதும். அவனுடைய நாராயணி சைன்ய உதவி வேண்டாம் என்று. ஆகவே கிருஷ்ணா, நீ எனக்கு கொஞ்சம் தேர் ஒட்டு அது போதும். நான் உன்னருகே இருந்து கொண்டு உன்னோடு பேசிக் கொண்டு யுத்தம் புரிகிறேன். பார் என் வீரத்தை அப்போது '' என்றான் அர்ஜுனன்.
அவ்வளவு பெரிய மஹாராஜா கிருஷ்ணன், கர்வம் கொள்ளாமல், அகம்பாவம் இன்றி, எளிமையாக அன்பாக, சாதாரண ஒரு தேரோட்டியாக கீழே தேர் தட்டில் அமர்ந்து குதிரை ஓட்டினான்.
இந்த அன்பால் தான் பிரிந்தாவனத்தில் எண்ணற்ற கோபியர்கள் தங்கள் இதயங்களை அவனிடம் பறிகொடுத்தவர்கள்.
ஸூர்தாஸ் இதை தெரிந்து வைத்திருப்பவர். அதனால் தான் தனக்கும் அவன் அன்பில் பங்கு கேட்கிறார். கெட்டிக்காரர். கண் எதற்கு? துரியோதனன் போல் முட்டாள் தனமாக எதையாவது கேட்பதற்கு தான் அது வேண்டும்..
AVVAIYAR
பாட்டி சொல் தட்டாதே - நங்கநல்லூர் J K SIVAN
''செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்!
என் பின்னால் தெரிகிறதே ஒரு பெரிய மலை அது தான் நான் செய்த பாபங்கள். அவற்றை நானே புரிந்து விட்டு பகவானே நீ ஏன் என்னை துன்பத்தில் ஆழ்த்துகிறாய்? என்று கடவுளை நொந்து என்ன பயன்? வாழ்வில் நான் சுகப்படுவதற்கு இனியாமாவது பாபங்களை செய்யாமல் புண்யகாரியங்களில் ஈடுபட வேண்டும். மலையின் உயரம் பருமன் கொஞ்சம் குறையும். வெறும் பானையை நீர் நிரப்பி கொதிக்க வைத்தால் சாதம் கிடைக்குமா? அதில் அரிசி வேண்டாமா சாதமாகி வயிற்றின் பசியை போக்க ? அருமையான கேள்வி கேட்கிறாள் பாட்டி.
உற்றார் உகந்தார் என வேண்டார்-மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர்; இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்.18
அப்பா அம்மாவாகட்டும், கூடப் பிறந்தவர்களாகட்டும், சொந்த பந்தங்கள் யாராக வேண்டு மானாலும் இருக்கட்டும், வேண்டியவன், நண்பன் எவனாக இருந்தாலும் வினர்கள், வேண்டியவர் என்று யாராய் இருந்தாலும், இந்தப் பெருலகில் பெருமை மிக்க நாட்டில் வாழ்பவர் ஆயினும், நச்சரித்து வற்புறுத்தினால்தான் கொடுப்பார்கள். வணங்கி ஐயா சாமி என்று கெஞ்சிக் கேட்டால் தரமாட்டார்கள். எங்காவது பலமாக அடிபட்டால், உதை பட்டால் அந்த இடம் காயம் ஏற்பட்டு ரணமாகிறது. வன்முறையாலும் சில விஷயங்களை பெறலாம் என்பது பாட்டியின் அறிவுரை.
சேவித்தும் சென்று இரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்.19
என் இளவயதில் பஞ்சம் என்றால் என்ன என்று அனுபவித்திருக்கிறேன். ரெண்டாம் உலகமகா யுத்தத்தின் போது அரிசிக்கு தட்டுப்பாடு. பிரேசில் அரிசி என்று ரப்பர் மாதிரி வெள்ளையாக நீள வேகாத ஜவ்வு மாதிரி அரிசி சாதம் ரேஷன் அரிசி அளவு எங்கள் அனைவர்க்கும் போதாமல் கஞ்சியாக காய்ச்சி அம்மா கொடுத்தது ஞாபகம் இருக்கிறது.
அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும்
கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம்-இம்மை
மறுமைக்கும் நன்று அன்று மாநிதியம் போக்கி
வறுமைக்கு வித்தாய் விடும்.20
ஆழமான ஆற்றில் நடந்து அக்கரை அடையமுடியாதே . அதற்கு ஒரு ஓடம் வேண்டும். அம்மிக் கல்லை போட்டு அதன் மேல் ஏறி அக்கரை பெறமுடியுமா? தனது உடலை யார் அதிகம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு என்று ஏலம் போட்டு விற்கும் பரத்தையரைக் கொண்டாடித் துய்க்கும் இன்பம் இவ்வுலக வாழ்க்கைக்கும், மறுபிறவி வாழ்க்கைக் கும் நன்மை பயக்காது. வைத்திருக்கும் பெருஞ் செல்வத்தை அழித்துவிடும். அது ஒரு விதை. கையில் காசில்லாதவனாக்கும் விதையோ வித்தையோ என்னவோ என்கிறார் பாட்டி. என்ன கோவமோ, யார் மேலோ ?
நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும்
பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான்.21
செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் மஹா லக்ஷ்மி, திருமகள், என்ன அருள் புரிவாள் நமக்கு தெரியுமா? வெயிலில் வருந்துபவர்க்கு நீரோடு கூடிய நிழல், நிலமெல்லாம் கட்டுக்கட்டாக நெல், பாரில் எல்லோரும் போற்றும் நல்ல பெயர், புகழ், பெருமையுடன் வாழும் வாழ்வு, நல்ல மக்களை உடைய ஊர், வளரும் செல்வம், ஆகியவற்றை எல்லாம் தருவாள். யாருக்கு என்று கேட்கவேண்டாமா? நெஞ்சில் வஞ்சம் இல்லாதவருக்குத் தான் இதெல்லாம் வழங்குவாள். கொடியவருக்கு அல்ல.
Tuesday, March 29, 2022
vainva vinnoli
வைணவ விண்ணொளி - நங்கநல்லூர் J K SIVAN
" கூரேசா, நீ தான், நான் சொல்ல சொல்ல என்னுடைய பாஷ்யத்தை எழுதணும். நான் எதாவது தடம் மாறி சொன்னா எழுதறதை நிறுத்தணும். உடனே நான் புரிஞ்சிப்பேன்".
இப்படி தான் ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ பாஷ்யம் தோன்றியது. ஒருநாள் ஸ்ரீ ராமானுஜர் ஜீவாத்மா பற்றிய விளக்கம் சொல்லிக் கொண்டு வந்தபோது கூரேசர் எழுதுவதை நிறுத்தினார். குருவை நோக்கி னார். பல நாட்கள் இரவுகள் சிந்தித்த எண்ண ஓட்டம் தடை பட்டதில் ஆசார்யனுக்கு கோபம் வந்தது. வயதாகி விட்டதல்லவா? எழுதுவது நின்றால் சிந்தனை தொடரில் பிசகு என்றல்லவா அர்த்தம்? வெடித்து விட்டார் ஆசார்யன்.
"கூரேசா, என்னைக்காட்டிலும் நீ வியாசரின் சூத்ரத்துக்கு பாஷ்யம் சரியாக எழுதுவதாக நினைத் தால் நீயே எழுது. போ”” என்று கூரேசரை விரட்டினார். மற்ற சீடர்கள், "ஏன் கூரேசா, இவ்வாறு செய்தாய்?" என வினவினர். என்ன விபரீதம் இது என நடுங்கினர். ”நண்பர்களே, கவலை வேண்டாம். நான் ஆசார்யனின் அடிமை. அவர் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், செய்யலாம்."
இதற்கிடையில் கூரேசர் எழுதியிருந்ததைப் படித்த ஸ்ரீ ராமானுஜர் தான் சொல்லிக் கொண்டுவந்த வாசகத்தில் ஓரிடத்தில் முரண்பாடு இருந்ததையும் கூரேசர் அதை சுட்டிக் காட்டியது சரி என்பதையும் உணர்ந்தார். ஜீவாத்மா தனித்வம் கொண்டதாக இருந்தாலும் இறைவனிடம் சேஷத்வம் கொண்டது என்று தான் கூரேசன் திருத்தியபடி இருக்கவேண்டும் என தனது தவறை அறிந்தார். "அடேடே , வெளிச்சத்தை பற்றி சொல்லும்போது அதற்கு காரணமான சூரியனை மறந்து போனேனே" என்று வருந்தினார், மஹா புருஷரல்லவா?.
”என் மகனே, கூரேசா, நீ சுட்டிக் காட்டியது சரி தான். ஜீவாத்மா ஸ்வரூபத்தை நீ விளக்கியவாறே எழுது. மேலே தொடர்வோம்"
இவ்வாறே ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ சம்ப்ரதாயம், ஸ்ரீ பாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த சாரம், வேதார்த்த சங்க்ரஹம், கீதா பாஷ்யம் எல்லாம் உருப் பெற்றது . எங்கேயோ ஒரு நிரடல் ஸ்ரீ ராமானுஜருக்கு. விசிஷ்டாத்வைத சித்தாந்தம் பூரணமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டு மானால் வியாசரின் " போதாயன வ்ருத்தி" என்கிற ஓலை சுவடு நூல் அவசியம். அதிலிருந்து மேற்கோள் காட்ட வேண்டும். அதை எங்கே தேடுவது? காஷ்மீரத்தில் ராஜாவுடைய லைப்ரரியில் கிடைக்குமா ? மற்ற பாஷ்ய காரர்களின் உரை ( குகதேவர், பருசி, தங்கா, திராமிடர்) எல்லாம் கூட ஒரே இடத்தில் காஷ்மீரத்தில் கிடைக்கலாமே.
ஸ்ரீ ராமானுஜர் வயதான காலத்திலும் கால்நடையாக திக்விஜயம் கிளம்பினார். போகுமிடமெல்லாம் விசிஷ்டாத்வைத பிரசாரம்! வழியில் எங்கெங்கெல்லாம் தங்கினாரோ அங்கெல்லாம் ராமானுஜ கூடங்கள், மடங்கள் எல்லாம் உருவாயின. கூரேசன் முதலான சிஷ்ய கோடிகள் ஸ்ரீரங்கத்திலிருந்து அவரைப் பின் தொடர்ந்தனர். காஷ்மீர் ராஜா அவ்வளவு சீக்கிரத்தில் ராமானுஜரையும் விசிஷ்டாத்வைத சித்தாந்தமும் ஏற்றுக் கொள்வானா? நாட்கணக்கில் பண்டிதர்களுடனும், வேதாந்திகளுடனும் விவாதம். முடிவில் ராமனுஜரின் மகிமை பெருமை எல்லாம் ராஜா உணர்ந்தான். கூரேசனுக்கு ராஜாவின் லைப்ரரியில் வேண்டிய ஓலைச் சுவடி தேட அனுமதி கிடைத்தது. தோற்றுப் போன அரண்மனை பண்டிதர்களுக்கு பொறாமை ஞாயம் தானே? போதாயன வ்ருத்தி ஓலைச்சுவடி கிடைக்காதபடி செய்ய எண்ணம் வந்தது. ஓலைச்சுவடி லைப்ரரியை விட்டு வெளியே நகரக்கூடாது. அங்கேயே படிக்கப்பட வேண்டும் என்று ராஜாவின் அனுமதி பெற்றார்கள். ஸ்ரீ ராமானுஜரும் கூரேசரும் அங்கேயே படிக்க ரெடி. ஓலைச்சுவடியிலிருந்து குறிப்பு எடுக்கக் கூடாது என்று மற்றொரு கெடுபிடி. விடுவாரா கூரேசர்?. ஆஹா அப்படியே அன்று முதல் அனைத்து ஓலைச்சுவடிகளையும் மனப்பாடம் செய்ய ஆரம்பித்தனர் இருவரும். வேறு வழியில்லை இந்த இருவரையும் கொல்வது தான் முடிவு என பண்டிதர்கள் தீர்மானிக்க இருவரும் காஷ்மீரை விட்டு வெளியேறினர்.
ஸ்ரீரங்கம் திரும்பியதும் ஸ்ரீ பாஷ்யம் எழுதத் தொடங்கினர். கூரேசரின் அபார ஞாபக சக்தியால் ஓலைச்சுவடியின் அத்தனை விஷயங்களும் எழுத்தில் மிளிர்ந்தது. பல வருஷங்கள் ஆயிற்று இந்த அதிசயத்தை பூர்த்தி செய்ய. ஸ்ரீ ராமானுஜருக்கு பரம திருப்தி. கூரேசனின் புத்தி கூர்மையால் தான் தன் எத்தனையோ வருட கனவு நிறைவேறியது என மன நிறைவு. ஸ்ரீ வைஷ்ணவமும் ராமானுஜ ப்ரபாவமும் நாடெல்லாம் இப்போது பரவியது. அநேக சிஷ்யர்களும் தொண்டர்களும் அவர் பின் இப்போது. ராமானுஜர் வாசம் செய்த ஸ்ரீ ரங்கம் தான் வைஷ்ணவத்தின் தலைநகர் என ஆயிற்று. ஆசார்யனுக்கு தனது குருவுக்கு வாக்களித்ததை நிறைவேற்றியதில் களிப்பு.
maharishi ramana
மஹரிஷி ரமணர் -- நங்கநல்லூர் J.K. SIVAN
வெள்ளைக்காரர் ஒருவர் கட்டு குடுமியோடு வேஷ்டி ஜிப்பாவுடன் நெற்றியில் குங்குமத்தோடு பளிச்சென்று ஒரு ஜன்னல் மேல் அமர்ந்து கொண்டு கண்ணை மூடி சிலையாக தியானத்திலும், ஒரு பெண் காட்டன் புடவையில் எளிமையோடு கால் நீட்டி மடியில் ஒரு உபநிஷத் புஸ்தகத்தை வைத்து படித்துக் கொண்டும் வெகுநேரம் தென்பட்டார்கள்.
வரும்போது எப்படி பார்த்தேனோ அப்படியே நான் திரும்பும்போதும் அவர்கள் அவ்வாறே. யார் வாந்தாலும் போனாலும் கவனம் சிதறாது அவர்கள் கருமமே கண்ணாயிருந்தது மிக்க ஆச்சரியம். . மற்றும் சிலர் சௌகர்யமாக கால் மடித்து உட்கார்ந்து யோகிகள் போல் கண்ணை மூடி தியானத்தில் இருந்த காட்சியை படம் பிடிக்க மனம் இடம் கொடுக்க வில்லை.
ரமணரின் தாய் அதிஷ்டானம் ஒரு சிவலிங்கத்தோடு ஒரு கோயிலாக உள்ளது. மாத்ரு பூதேஸ்வரர் ஆலயம் என்று பெயர் அதற்கு.
1948ல் மகரிஷி ரமணரின் இடது கையில் ஒரு புற்றுநோய் கட்டி. ஆபரேஷன் செய் கட்டியை அறுத்து எடுத்தார்கள். 1949ல் ரேடியம் சிகிச்சை செய்தார்கள். அவர் லக்ஷ்யமே பண்ணவில்லை. யாருக்கோ எங்கோ ஏதோ நடப்பது போல் தான் இருந்தார். தோளிலிருந்து வலது கையை எடுத்தால் உயிர் தப்பலாம் என்கிறார் டாக்டர். அவசியமே இல்லை. தேவையற்ற வேலை என்றார் மகரிஷி. ஆகவே மீண்டும் ரெண்டு மூணு ஆபரேஷன் செயது பார்த்தார்கள். மருந்துகள் அவரை உடல் வலிமையற்ற வராகச் செய்தது தான் மிச்சம்.
'' நீங்களே ஏன் உங்களை பாதிக்கும் கட்டியை புற்றுநோயை போக்கிக் கொள்ளக் கூடாது'' என்று கெஞ்சிய பக்தர்களை மகரிஷி வேடிக்கையாக சிரிப்புடன் நோக்கி
ஒரு பூட்டிய சிறிய அறையில் ( நிர்வாண அறை என்று பெயரோடு) அவர் வாழ்ந்த போது கடைசியாக எப்படி இருந்ததோ அப்படியே வைத்திருக்கி றார்கள். கமண்டலம், திருவோடு, ஒரு கட்டில் அருகே ஒரு அலமாரியில் பழைய அலாரம் டைம் பீஸ். அது காட்டும் நேரம் 8.47 இரவு. ஆம் அன்று 14.4.1950 மகரிஷி ரமணர் நிர்வாணம் அடைந்த நேரம்.
ஒருநாள் காலை அவர் உணவு உட்கொள்ளும் முன் குளியறையில் அந்த கட்டியை டாக்டர் வெட்டி எடுத்தார். கையில் கட்டு போட்டால் பக்தர்கள் மனது சங்கடப்படுமே என்று ஒரு துணியை அதன் மேல் சுற்றி இருந்தார்.
ஒரு மாதகாலம் சென்றபின் மீண்டும் கட்டி தலை தூக்கியது. மறுபடியும் ஆபரேஷன் செய்தவர்கள். அதை சோதனை செய்தபோது அது புற்று நோய்க் கட்டி என்று தெரிந்தது. ரேடியம் சிகிச்சை துவங்கினார்கள். ரணம் இந்த முறை ஆறுவதாக இல்லை. அவரது கையை துண்டிக்கவேண்டும் என்ற நிலை வந்தது.
சூரிய வெளிச்சம் கொஞ்சம் உதவும் என்று டாக்டர்கள் சொல்ல ரமணர் தினமும் கோசாலையில் மாட்டுக்கொட்டில் பின்னால் கட்டவிழ்த்து காயம் சூரிய ஒளியில் பட உட்கார்வார். ரத்த கட்டியை பார்த்து ஆஹா என் உடலில் விலையுயர்ந்த பவழமும் இருக்கிறதே. சூரிய ஒளியில் எப்படி தகதக வென்று ஜொலிக்கிறது என்று கேலியாக சொல்லி சிரிப்பார். எனக்கு இப்படி ஒரு விலையுயர்ந்த ஆபரணமா?'' என்பார்.
புற்றுநோய் தனது வேலையை அதிவேகமாக தொடங்கிற்று. அவரது உடலின் ரத்தக்குழாய்களில் பரவ ஆரம்பித்தது. ஆபரேஷன் பண்ண பண்ண மீண்டும் மீண்டும் ராவணனாக தலை முளைத்தது.
மூன்றாவது ஆப்பரேஷன் ஆயிற்று. அது முடிந்த சில மணி நேரங்களில் மகரிஷி ஏராளமான பக்தர்களின் விருப்பத்துக் கிணங்கி தரிசனம் கொடுத்தார்.
1949 டிசம்பர் இன்னொரு ஆபரேஷன் நடந்தது. அதனால் குணமடைவதற்கு பதிலாக புற்றுநோய் வலுவடைந்தது.
ஆங்கில வைத்தியம் தவிர ஹோமியோபதி, ஆயுர்வேத சிகிச்சை முறைகளும் பின்பற்றினார்கள். தினமும் சாயந்திர வேளையில் நடை உண்டு. அப்படி ஒருநாள் நடக்கும்போது ஜுரத்தில் உடல் நடுக்கம் கண்டது. நடக்க முடியவில்லை. அவரது சாய்மானமான ஆசனத்தில் அமர்ந்து விட்டார். உடம்பில் நடக்க சக்தி இல்லை. பக்தர்கள் வருந்தினார்கள்.
உடல்நிலையை பற்றி யாராவது கேட்டால் ''அதற்கு என்ன? அதற்கு தேவை உள்ளே இருக்கும் உயிர். அதான் இன்னும் இருக்கிறதே. அது எல்லோருக்கும் திருப்தி தானே? இன்று கொஞ்சம் நடராஜா டான்ஸ் ஆடுகிறது தெரிகிறது எப்போதும் உள்ளேயே ஆடுவது இன்று தாண்டவ தரிசனம் கொஞ்சம் வெளியேயும் தெரிகிறது. அதெல்லாம் பற்றி துளியும் கவலை படாதீர்கள்'' என்கிறார்.
நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் குளியலறை செல்ல மெதுவாக நடக்கிறார். உள்ளே நுழையும் முன்பு கால் தடுமாறுகிறது. விழுகிறார். இடுப்பு, கால்களில் பலத்த அடி . துளியும் லக்ஷியம் செய்யாமல் யார் உதவியும் தேடாமல் தானே மெதுவாக எழுகிறார். நிற்கிறார். உடலில் ஆடையெல்லாம் சிகப்பாக ரத்த வெள்ளம். எலும்பு முறிந்துவிட்டது. அவரிடம் எந்த பாதிப்பும் இல்லை. கொஞ்சமும் சத்தமே இல்லை.
செய்தி பரவியது. அவர் விழுந்ததை எலும்பு முறிவை பிரகடனப்படுத்த வேண்டாம் என்று சொல்லி விட்டார். விழுந்ததால், எலும்பு முறிவால் உண்டான வலியையும், ஏற்கனவே பலமுறை ஆபரேஷன் செய்து வலிக்கும் புற்று நோய் கட்டியால் உண்டாகும் வலியையும், கொஞ்சமும் பொருட்படுத்தாமல் எல்லோருக்கும் விடி காலை யிலிருந்தே தரிசனம் கொடுக்கிறார். யாருக்கும் நடந்ததே தெரியாத படி அவரிடம் எந்த வித்தியாசமும் இல்லை.
இப்போதெல்லாம் அவரால் படிகள் ஏறி நடக்க முடியவில்லை. தினமும் கிழக்கு வாசல் வழியாக வருவது இப்போது முடியாமல் நின்றுவிட்டது. அங்கே கொஞ்சம் படிகள் உண்டு. எனவே வடக்கு வாசல் வழியாக மண்டபம் வாருங்கள் என்று சொல்கிறார்கள்.
''அதெல்லாம் வேண்டாம். வடக்கு வாசல் பெண் பக்தர்கள் உபயோகிக்கும் பிரத்யேக வழி. அதை யெல்லாம் மாற்றவேண்டாம். தரிசன மண்டபம் வர முடியாத போது கிழக்கு வாசல் அருகே இருக்கும் தன்னுடைய சிறிய அறையில் இருப்பார். அதை தான் 'நிர்வாண அறை'' என்கிறார்கள். அங்கே தான் மகரிஷி தேக வியோகம் அடைந்தார். இன்றும் ரமணாஸ்ரமத்தில் அந்த அறையை பார்க்கும்போது என்னை அறியாமல் கண்களில் நீர் வடிகிறது.
''ஏன் நான் இறப்பதை பற்றி உங்களுக்கு வருத்தம். நான் எங்கே போய்விட்டேன்? எங்குமே போகவில் லையே. எங்கே போவேன் நான்? எப்போதும் இங்கேயே தான் இருக்கிறேன்'' என்று சமாதானம் சொல்வார்.
1950 ஏப்ரல் 10 - அதிகமான பக்தர்கள் கூட்டம் பெருகியது. இப்படி தரிசனம் தருவது மகரிஷிக்கு ரொம்ப கடினம், கஷ்டம் தான். உடல் ரீதியாக கொஞ்சம் கூட முடியவில்லை. என்றாலும் அளவற்ற இரக்கம் கருணை கொண்டவர் என்பதால் முடியாத போதும் முகத்தை பக்தர்கள் பக்கமே, தரிசன நேரம் முழுதும், திருப்பி வைத்துக் கொள்வார். அதில் அவர் அனுபவிக்கும் எந்த உபாதையின் அடையாளமும் தெரியாது. அவரது ஆசனம் கிழக்கு மேற்காக . அந்த சின்ன அறையின் வாசல் தெற்கு பக்கம். அறையின் கதவு திறந்திருக்கும். அந்த பக்கத்தை நோக்கியே ஒருமணி நேரத் துக்கும் மேலாக அசையாமல் முகத்தை திருப்பி வைத்துக் கொண்டு தரிசனம் தருவார். அதனால் கழுத்து வலி உண்டாகும். அவர் அதை லக்ஷியம் பண்ணுவதில்லை. அவரது உடல் நிலைக்கு இதெல் லாம் ரொம்ப சித்ரவதை தான். அவர் தான் எதையுமே பொருட்படுத்து வதில்லையே. தரிசனம் கொடுப்பதை நிறுத்தவில்லை. நேரத்தையும் குறைத்துக் கொள்ளவில்லை.
கொஞ்சம் பழச்சாறு, இளநீர் க்ளுகோஸ் கலந்து, தக்காளி சாறு மட்டுமே கொடுத்து வந்தார்கள்.
மூன்று பக்தர்கள் கால்களை அமுக்கி விட்டார்கள். இடுப்புக்கு மேல் வலி ஜாஸ்தியாக இருக்கும் என்று அவர்கள் அறிந்து அதை தொடுவதில்லை. அவரும் ஒன்றும் சொல்வதில்லை. காலை ஒன்பது மணிக்கு அரை மணி நேர தரிசனம் கொடுத்து வந்தார். சில சமயம் மட்டுமே முகத்தை தெற்கு பக்கம் வலியோடு திருப்ப முடிந்தது. அவரது நினைவு அடிக்கடி தப்பியது. டாக்டர்கள் பக்தர்களை அங்கிருந்து விலக்கினார்கள் அவரை மேற்கொண்டு மருத்துவ சோதனைகளுக்கு ஆளாக்க வில்லை.
உடல் கொஞ்சம் கொஞ்சமாக பயனற்றதாக நிலைமை மோசமாகியது. சாறுகள் நீர் கூட இப்போது உள்ளே செல்லவில்லை. மலஜலம் நின்றுவிட்டது. நாடி ரொம்ப ரொம்ப தளர்ந்து விட்டது. ரத்த அழுத்தம் குறைந்து விட்டது. இதயம் துவண்டது. ஜுரம் அதிகமாகியது. விக்கல் அதிகரித்தது.
''இல்லை குருநாதா, நாங்கள் தரிசனத்தை நிறுத்திவிட்டோம்''
ரமணாஸ்ரமத்தில் எவர் முகத்திலும் ல் சந்தோஷம் இல்லை. எத்தனையோ கண்கள் குளமாக காட்சி அளித்தன.
1950 ஏப்ரல் 13ம் தேதி.. மகரிஷிக்கு நுரையீரல் அடைப்பு. மருந்துகள் கொடுத்து ஸ்வாசம் சரியாக டாக்டர் அருகே செல்கிறார்.
''ஒண்ணும் பண்ண வேண்டாம். இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு. எல்லாம் சரியா போயிடும்'' மகரிஷி டாக்டரை மருந்து கொடுக்க அனுமதிக்கவில்லை. .
சில மணி நேரங்கள் நகர்ந்தன. மகரிஷி ஒருவரை கூப்பிட்டு எல்லோரையும் அங்கிருந்து போக சொல்லிவிட்டார்.
''நான் தனியாக இருக்கவேண்டும். எல்லோரையும் இங்கிருந்து போகச்சொல்லுங்கள்'' அவருக்கு பணிவிடை செய்யும் ரங்கசாமி நகரவில்லை. அவர் காலடியிலேயே உட்கார்ந்திருந்தார்.
காலையில் ரங்கசாமியை ஜாடை காட்டி அழைத்து மகரிஷி அவரிடம் ''தேங்க்ஸ் '' என்று ஆங்கிலத்தில் சொன்னார். ரெங்கசாமிக்கு இங்கிலிஷ் தெரியாது. விழித்தார். மகரிஷி சிரித்துக் கொண்டு ''ஆங்கிலத்தில் தேங்க்ஸ் என்று ஒரு வார்த்தை உண்டு '' நமக்கு அதற்கு சரியாக ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்றால் ''சந்தோஷம் '' என்கிறார் .
காலையிலிருந்து மதியம் வரை பக்தர்கள் திறந்திருந்த மஹரிஷியின் சின்ன அறையை எட்டிப் பார்த்த வண்ணம் இருந்தார்கள். குருவை தரிசிக்க தீராத ஆர்வம் ஆசை. மஹரிஷியின் தேகம் ரொம்ப க்ஷீணமாகி விட்டது. எடை அதிகம் குறைந்துவிட்டது. விலா எலும்புகள் வெளியே சருமத்தை பிளந்து வெளியே வரும்போல் தோன்றின. மஹரிஷியின் உடல் கருத்து விட்டது. அவரை இந்த நிலையில் பார்த்த பக்தர்கள் கதறினார்கள்.
ஞானிகளுக்கு வலிக்காது என்று தப்புக் கணக்கு போடுகிறோம். ரமணருக்கு கடுமையான வலி இருந்தது. தனியே இரவில் அவர் துன்பத்தால் வாடுவது தெரிந்தது. பிறர் கவனிக்காத போது தான் அவர் தனது உபாதைகளை, வலிகளை வெளிப்படுத்தினார். சோபாவில் படுத்தவாறு முனகுவது தெரிந்தது. வலி ஏற்படுவது உடலுக்கு இயற்கை யானது என்பார். சாதாரண மானவனாக இருந்தாலும் சன்யாசிகளில் ராஜாவாக இருந்தாலும் உடலை கத்தியால் வெட்டினால் ரத்தம் பீறிடும். வலி பெருகும். ஆனால் அந்த உடலின் அவஸ்தையை எப்படி உணர்கிறோம், வெளிப் படுத்துகிறோம் என்பதில் தான் வேறுபாடு உள்ளது.
எவ்வளவு வலி, கஷ்டம், உடல் பாதிப்பு இருந்தபோதிலும் ரமண மகரிஷி கடைசிவரை பக்தர்கள் தரிசனம் செய்ய வருவதை தடுக்க வில்லை. அவர்கள் மேல் அவரது த்ரிஷ்டி, கருணையோடு அன்போடு, படிந்து கொண்டே இருந்தது. ஆஸ்ரமத்தில் வாழ்ந்த இதர ஜீவன்கள் , பறவைகள், மிருகங்கள் மீது அதிக அக்கறையோடு கடைசிவரை அவரது பாசமும் நேசமும் நிறைந்திருந்தது.
எத்தனையோ பக்தர்களின் குரல்கள் ''பகவானே எங்களை விட்டு போக எப்படி மனம் துணிந்தது?'' என்று கதறியபோது
கடைசி நிமிஷங்களில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ( தமிழக முதல்வராக இருந்தவர்) மகரிஷி கூட இருந்தார். அவர் படும் சிரமத்தை பார்த்து ஒரு திரை போட்டு தரிசனம் வேண்டாம் என்று தரிசன கூட்டத்தை விலக்கினார். மகரிஷி படும் அவஸ்தையை அவரும் கண்ணால் காண இஷ்டப்படவில்லை.
மகரிஷி தன்னை நிமிர்த்தி உட்கார வைக்கச் சொன்னார். 'அருணால சிவா...'' என்று அருகிலிருந் தோர் தியான பாராயணம் செய்தார்கள் . மகரிஷி காதால் அதை சந்தோஷமாக கேட்டார். கண்களை அகல திறந்து நோக்கினார். கண்கள் ஒளி வீசின. புன்னகைத்தார். கண்களில் நீர் பெருகி ஒட்டிய கன்னத்தில் வழிந்தது. பத்மாசனத்தில் அமர்ந்தார். ஒரு பெருமூச்சு விட்டார் . பிறகு அசைவில்லை. அப்போது நேரம் இரவு 8.47.
அன்றிரவு 8.47க்கு விண்ணில் ஒரு வால் நக்ஷத்ரம் பளிச்சென்று மின்னி விரைந்து சென்று அருணாசல மலைகள் மேல் பறந்து சிகரத்தின் பின் மறைந்ததை பார்த்ததாக பல பத்திரிகைகள் மறுநாள் எழுதின.
ஹென்றி கார்டியர் ப்ரெஸ்ஸன் என்கிற பிரெஞ்சுக்காரர் புகைப்பட நிபுணர், ரமண பக்தர் திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் வசித்தவர் என்ன சொல்கிறார் :
About Me - YOUR FRIEND
GHANTASALA SONG
கண்டசாலா விருந்து ஒன்று. #நங்கநல்லூர்_J_K_SIVAN ''தண்ணொளி வெண்ணிலவோ'' என்ற அருமையான கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...
-
அங்க சாஸ்திரம் - சாமுத்திரிகா லக்ஷணம் J.K. SIVAN நமது உடல் ஒரு அற்புத அதிசய சுரங்...
-
நீங்கள் என்ன கோத்ரம்? நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வார்த்தையை சரியாக புரிந்து கொள்வதில்லை. சடங்குகளில், ஆல...