Friday, December 28, 2018

VIBOOTHI

  நீறில்லா  நெற்றிப்  பாழ்   J.K. SIVAN 




விபூதியை பூசிக்கொள்வது வேறு  இட்டுக்கொள்வது வேறு.  சிலர்  கோணமாணா என்று ஏதோ மாவு   அப்பிக்கொள்வது போல் நெற்றியில் உடம்பில்  எல்லாம் பெயிண்ட் அடித்துக் கொள்வார்கள். விபூதி பவித்ரமானது.  தேவர்கள் அனைவரும், விபூதியை அணிவதன் மூலமே மேன்மை பெறுகின்றனர். விபூதியை பூசுவதால் கிடைக்கும் மகிமையை பற்றி  தெரிந்து கொள்ளவேண்டும்.

விபூதி என்றால் ஐஸ்வர்யம்.  அதனால் தான் விபூதியை, திரு நீறு என்கிறோம். எல்லா  இந்திய மொழிகளிலும்   திருநீற்றின் மகிமை விரிவாக பேசப்படுகிறது.

ஒருசமயம், பார்வதி சிவனிடம் ‘பெருமானே…உங்களுக்கு  விபூதி பூசுவதில்  எதனால் ன விசேஷ விருப்பம்?''
என்கிறாள்.

''உமா, பிருகு வம்சத்தில்  ஒரு வேத  பிராமணர்  கோடை காலத்தில், பஞ்சாக்கினி மத்தியிலும், பனிக்காலத்தில், குளிர்ந்த நீரிலும் மற்றும் மழைக்காலத்தில் ஆகாயத்தை நோக்கி நின்றபடியும் கடும் தவம்   புரிந்து பசித்தபோது    மட்டும் மாலைப் பொழுதில்  சிறிதளவே உணவு உண்டு வந்தார். அவருடைய கடுந்தவத்தை கண்டு, பறவைகள் எல்லாம் பரிவோடு, பழங்களை கொண்டு வந்து, அவர் முன் வைத்தன; சிங்கம் மற்றும் புலி போன்ற கொடிய விலங்குகள் கூட, எவ்விதமான அச்சமுமின்றி, அவர் முன் சஞ்சரித்தன.  நாளாக நாளாக, பழங்களைக் கூட தவிர்த்து, இலைகளை மட்டுமே உண்டார். அதனால், அவருக்கு, பர்ணாதர் என்ற பெயர் உண்டானது. பர்ணம் என்றால், இலை. ஒருநாள், பர்ணாதர், தர்பை புல்லை பறிக்கும் போது, அவருடைய கையிலிருந்து, ரத்தம் ஒழுகத் துவங்கியது. அதைப் பார்த்த பர்ணாதர், ‘ஆஹா… என் தவம் கை கூடியது…’ என்று ஆனந்தக் கூத்தாடினார்.

அதைக்கண்டு, பறவைகளும், விலங்குகளும் பயந்து ஓடின. சிவபெருமான் ஒரு அந்தணரைப் போன்று அவர் முன் சென்று, ‘பர்ணாதா… ஏன் இப்படி குதிக்கிறாய்; தவம் கைகூடிவிட்ட அகங்காரமா… அடக்கத்தினாலேயே பிரம்மா, தவசீலர்களான முனிவர்கள் எல்லாம், பெரும்பேறு பெற்றிருக்கின்றனர் என்பது உனக்கு தெரியாதா…’ என்றார்.

சிவன் வாக்கை, செவியிலேயே வாங்கவில்லை, பர்ணாதர். அதைக்கண்ட சிவபெருமான், தன் திருக் கரங்களால், பர்ணாதரின் கையை தீண்டினார். அடுத்த வினாடி, பர்ணாதரின் கையில் வழிந்த ரத்தம் நின்று, அமிர்தம் வழியத் துவங்கியது; சில வினாடிகளில், அதுவும் நின்று அமிர்தத்திற்கு பதிலாக, திருநீறு வழியத் துவங்கியது.

அந்த அற்புதத்தை கண்டு வியந்து,  பர்ணாதர் அந்தணர் உருவில் வந்த சிவன்  திரு வடிகளில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, ‘சுவாமி… தாங்கள் யார்; தயவுசெய்து உண்மையை கூறுங்கள்…’ என, வேண்டினார். அவருக்கு காட்சியளித்த சிவபெருமான், ‘பர்ணாதா… உன் தவம் கண்டு மகிழ்ந்தேன்; அதன் காரணமாகவே, இவ்வாறு விபூதியை உருவாக்கினேன்; நீ, கணாதிபர்களில் ஒருவனாக ஆவாய்…’ என, வரம் கொடுத்தார்.

இவ்வரலாற்றை, பார்வதிதேவியிடம் விவரித்த சிவபெருமான், ‘தேவி… தேவர்கள் அனைவரும், விபூதியை அணிவதன் மூலமே மேன்மை பெறுகின்றனர். மந்திரமாவது நீறு  என்பது இதன் புனிதம் அறிந்து தான்.  தவம் செய்பவர்களை தேடி, தெய்வம் வந்து அருள் புரியும் என்பதை விளக்கும் கதை மேலே சொன்னது.

விபூதியை பயன்படுத்துவதற்கு பல காரணங்கள் உண்டு.  முக்கியமாக, விபூதி என்பது சக்தியை வழங்குவதற்கு ஏதுவான சாதனம்.  உடலின் சக்தி ஓட்டத்தை வழிநடத்தவும், கட்டுப்படுத்தவும்  விபூதி பயன்படுகிறது.   நமது  உடல் நிலையற்றது என நினைவூட்டுவதற்கு  விபூதி சாம்பலை  அணிகிறோம்.
இந்த உடல் என்பது கடைசியில் சாம்பல் தான்.   யோகிகள் எப்போதும் சுடுகாட்டிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பலைத் தான் பயன்படுத்துவார்கள்.  மகா காளேஸ்வரர் ஆலயத்தில் தினமும் இத்தகைய சாம்பல் அபிஷேகம் நடக்கும். விபூதியின்  அடிப்படைப் பொருள் பசுவின் சாணம்.

மஹா பெரியவா வாக்கு: 


''விறகுக் கட்டையை அக்னியானது பஸ்பமாக்குவது போல், ஞானம் என்கிற அக்னி எல்லாக் கருமங்களையும் பஸ்பமாக்குகிறது” என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். பஸ்பமாகிய விபூதி, இவ்விதம் கர்மங்களை எரிந்தபின் நிற்கும் ஞானத்துக்கே அடையாளமாகும்.

‘விபூதி பூதிரைச்வர்யம்’ எனறு “அமர கோச”த்தில் உள்ளது. அதாவது, விபூதி என்றால்  ஐச்வர்யம், மேலே சொல்லியிருக்கிறேன்.   எந்தப் பொருளையும் தீயிலிட்டால் முதலில் அது கறுப்பாக ஆகும். பிறகு இன்னும் அக்னிபுடம் போட்டால் நீற்றுப் போகும்! சுத்த வெளுப்பாக ஆகிவிடும். அப்புறம் தீயில் போட்டால் அது மாறாது. அதுவே முடிவான நிலை. இப்படி நீற்றுப்போனதே திருநீறு. நீறு பஸ்மம் எனப்படும். ஈசுவரன் மஹா பஸ்பம். எல்லாம் அழிந்த பின்னும் இவற்றை அழித்து விட்டு எஞ்சி நிற்கிற, அழியாத சத்யமான மஹா பஸ்மம் அவன். பஸ்மமாக நீற்று வெளுத்துப்போனதற்கு முந்திய மாறுதல் கறுப்பு. அதுதான் கரி. நிலக்கரிதான் இவ்வுலக ஐச்வரியத்தில் இக்காலத்தில் முதலிடம் பெற்றுள்ளது.   ரொம்பவும் விலைமதிப்பான வைரமும் அதுதான். இந்தக் கரியாக மாறிய பொருளைவிட, மிகவும் உயர்ந்தது நீற்றுப்போன திருநீறு. திருநீற்றுக்கு மேலான பொருளே கிடையாது.

பல வர்ணங்களைக்கொண்ட பொருட்களைக் காண்கிறோம். ஆனால், இந்த வர்ணங்களெல்லாம் வஸ்துவை எரித்தபின் மாறிவிடுகின்றன. எல்லாம் கடைசியில் வெளுத்துப் போய்விடும். நாம் ‘சாயம் வெளுத்துப் போய்விட்டது’ என்கிறோம். சாயம் என்பது வேஷம். வேஷம் போனபின் இருப்பதே மெய். மெய்யான ஆத்மாவின் தூய்மைக்குப் பெரிய அடையாளமாக இருப்பது விபூதியான். இதை இந்தப் பொய்யான மெய் (தேகம்) முழுவதிலும் பூசிக்கொள்ள வேண்டும். எல்லாம் எரிந்தபின் எஞ்சி நிற்பது விபூதியின் வெண்மை ஒன்றுதான். மற்ற சாயமெல்லாம் பொய்; வெண்மையை உண்மை.

ஞானம் என்னும் தீ மூண்டபின், காரியங்கள் எல்லாம் பஸ்பமாகி விடும் என்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா உபதேசித்ததில், ‘பஸ்மமாகிவிடும்’ என்றால் எல்லாம் அழிந்து, புத்தர் சொன்னமாதிரி சூன்யமாகிவிடும் என்று அர்த்தமில்லை. விறகுக் கட்டைகள் தீயில் எரிந்து போனபின் எல்லாமே சூன்யமாகி விடவில்லை.; அப்போது எஞ்சி நிற்பது நீறு. அவ்வாறே ஞானம் என்றும் தீயில் கர்மாக்கள் யாவும் எஞ்சி நிற்கும்; மிகுந்து நிற்பதே ‘மகா பஸ்ம’மான பரமாத்மா.

திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் “முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்” என்று பாடினார்.

விபூதியைத் தேகம் முழுவதும் பூசிக்கொள்ள வேண்டும். விபூதியைத் தரித்துக் கொள்வதினால் ஸகல ஐஸ்வரியங்களையும் அடையலாம். பெரும்பாலான மக்கள் விபூதியை அணிகிறார்கள். திருநீறு என்பதே சாதாரண மக்களால் ''துன்னூறு, துன்னூறு'' எனப்படுகிறது. கோயிலுக்குப் போனாலும் ஏதாவது பீடாபரிகாரமாக வேண்டுமானாலும், “துன்னூறு கொடுங்கள் என்று மக்கள் கேட்பதை நாம் சகஜமாகப் பார்க்கிறோம். பூத, பிரேத, பைசாச சேஷ்டைகளிலிருந்து காப்பாற்றும் பெரிய ரக்ஷையாக இருப்பது விபூதியே.

 திருநீற்றை இட்டுக் கொள்வது  உயர்ந்த தத்துவத்தை  விளக்குகிறது. மன்னனும் மாசறக் கற்றோனும் பிடி சாம்பலாகி விடுகிறார்கள். நாம் கடைசியில் சாம்பலாகத்தான் போகிறோம். இந்த வாழ்க்கை மாயமானது   சாம்பல் மயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. மண்ணிலே பிறந்த நாம் மண்ணிலேதான் மடியப் போகிறோம். மண்ணிலே பிறந்த மரம் கடைசியில் மட்கி அதே மண்ணோடு மண்ணாகத்தானே ஆகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப்போகிற தத்துவம் அதுதான், இதை ஞாபகப் படுத்திக் கொள்ளவே நம்மில் சிலர் திருமண் அணிகிறோம். ஸ்ரீரங்கத்தில் ம்ருத் ஸங்க்ரஹணம் செய்யும்போது வில்வ விருஷ மண்ணை எடுக்கிறார்கள்.

வில்வம் லக்ஷ்மி வசிக்குமிடம். பசுவும் லக்ஷ்மியின் வாச ஸ்தானம். விபூதி, பசுவின் சாணத்தை அக்கினியிலிட்டு பஸ்மமாக்குவதிலிருந்து உண்டாகிறது. பசுவின் சாணம் எல்லாத் துர்நாற்றங்களையும் போக்க உதவுகிறது. மண்ணெண்ணையைக் காட்டிலும் அதிகத் துற்நாற்றம் உள்ள வஸ்து இல்லை எனலாம். அந்த துர்க்கந்தத்தைப் போக்கக்கூட பசுவின் சாணத்தை உபயோகிக்கிறோம். நமது உடல் பல துர்க்கந்தங்களை உடையது. இந்த உடலைச் சுத்தப்படுத்தி, இதனுள் உள்ள ஆத்மாவையும் பரிசுத்தப்படுத்த வல்லது பஸ்மமாகிய திருநீறு. மஹா பஸ்பமான பரமாத்மாவும் விபூதி என்னும் பஸ்மமும் ஒன்றானபடியால் விபூதியை அணிவதனால் ஈச்வர சாக்ஷாத்காரம் ஏற்படும்.

நாம் ஒவ்வொருவரும் குலாசாரத்தை அனுசரித்து திருநீற்றையோ திருமண்ணையோ இடவேண்டும். திருமண் இடுவதற்கு, ‘நாமம் போடுவது’ என்று பெயர். மகாவிஷ்ணுவுக்கு கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ஹ்ருஷீகேச, பத்மநாப, தாமோதர என்று பன்னிரண்டு நாமங்கள் முக்கியம். இந்த துவாதச நாமங்களைச் சொல்லிப் பன்னிரண்டு இடங்களில் திருநாமங்களை இட்டுக் கொள்வார்கள். இப்படி பகவந் நாமத்தைச் சொல்லி போட்டுக் கொள்வதாலேயே ‘நாமம் போடுவது’ என்று பெயர் வந்துவிட்டது.  திருநீறு, திருமண் இவற்றைத் தரி்ப்பது பரமாத்ம ஸ்வரூபத்தின் உண்மையையும், உலகில் உள்ள பொருள்களின் அநித்தியமான நிலையையும் நினைவூட்டுகிறது''

விபூதி கமகமவென  வாசனை அளிக்கும் திரவியம் அல்ல.  வெறும் சாம்பல்.  பன்னீர் கலப்பது வாசனைக்கு.  சுத்தமான விபூதியில் அது  சேராது.  போலி  விபூதி வியாபாரம் நடக்கிறது.  விபூதியை சரியாகத் தயாரிக்காமல், ஏதோ வெள்ளைக் கல்லை பொடியாக அரைத்து, அதை விபூதி என்ற பெயரில் வியாபாரம் செய்கிறார்களாம் .  விபூதியை முறையாகத் தயாரித்து, அதை உடலில் வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால், விபூதி உங்கள் உள்வாங்கும் தன்மையை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், இதை உங்கள் உடலில் நீங்கள் எங்கு வைக்கிறீர்களோ, அவ்விடத்தின் கிரஹிக்கும் திறன் அதிகரித்து, நீங்கள் உயர்ந்த பரிமாணத்தை நோக்கிச் செல்ல வழிசெய்கிறது.

காலையில் வெளியே கிளம்பு  முன், விபூதியை  உடலின் குறிப்பிட்ட சிலபாகங்களில்  பூசிக் கொண்டால், நம்மைச் சுற்றி இருக்கும் தெய்வீக சக்தியை  உள்வாங்க பெரிதும் உதவும்.

விபூதியை எடுக்க  மோதிர விரலையும் கட்டைவிரலையும் மட்டுமே  பயன்படுத்த வேண்டும்.  கோவில் அர்ச்சகர் அதை தான் உபயோகிப்பார் .

வாழ்வை நாம் ஏழு பரிமாணங்களில் உணர முடியும். இந்த ஏழு பரிமாணங்களைக்  குறிக்க உடலின் சக்திநிலையில் ஏழு சக்கரங்கள் உள்ளன.  இவை  நம் சக்தி உடலின் சந்திப்பு மையங்கள். இவை மிகவும் சூட்சுமமானவை. இவை கண்களுக்கு புலப்படாது. அனுபவ பூர்வமாக இந்தச் சக்கரங்களை நாம் உணர முடியுமே தவிர, உடலை இரண்டாக  வெட்டி தேட முடியாது. தெரியாது.

சக்தி மேன்மேலும் தீவிரமாகும் போது, இயற்கையாகவே  சக்தி ஒரு சக்கரத்திலிருந்து அடுத்த சக்கரத்திற்கு உயரும். சக்தியின் தீவிரத்தைப் பொறுத்து தான் நாம் வாழ்வை உணரும் விதம் அமைகிறது. உயர்நிலை சக்கரங்கள் வழியே நாம் வாழ்வை உணர்வதற்கும், அடிநிலை சக்கரம் வழியே வாழ்வை உணர்வதற்கும், சூழ்நிலை ஒன்றாகவே இருந்தாலும், நம் அனுபவம் பெரிதும் வித்தியாசப்படும்.

உடலில் உண்மையிலேயே மிக முக்கியமான பகுதி  மோதிர விரல்தான். அதிகபட்ச நன்மைகளைப் பெற, விபூதியை ள் உங்கள் உடலில் இட்டுக் கொள்ள வேண்டிய இடங்கள், புருவ மத்தி, தொண்டைக்குழி, விலா எலும்புகள் சேரும் மார்புப் பகுதி.  இவைகள் மேல்  தான் விபூதி  அணியவேண்டும் என  காலம் காலமாக நமது முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள்.   இதனால்  இவ்விடங்களின் உள்வாங்கும் திறன் அதிகரிக்கும்.   இதனால் கிடைக்கும் பலன்கள்:

1. அனாஹத சக்கரம் (விலா எலும்புகள் சேருமிடத்தில், நெஞ்சுக்குழியில்) - இவ்விடத்தில் விபூதி அணிந்தால், வாழ்வை அன்பாக உணர முடியும்.

2. விசுத்தி சக்கரம் (தொண்டைக் குழி) - இவ்விடத்தில் விபூதியை பூசுவது   சக்திமிக்கவராக மாற்றும். சக்தி என்றால் உடலளவிலோ, யோசிக்கும் திறத்திலோ  மற்றும் பல்வேறு வழிகளில் ஒரு மனிதன் சக்தி
சாலியாவான். சக்தி உறுதி பெறும்போது, மிக வலிமையாக இருக்கும்போது,   சூழ்நிலையை மாற்றிவிடும் வல்லமை கொண்டிருக்கும்.   ஒன்றும்  செய்யவோ பேசவோ வேண்டாம் . சும்மா அமர்ந்திருந்தாலே இருக்கும்  சூழ்நிலை மாறிவிடும்.  வாழ்வை உணர, தொண்டைக்குழியில் விபூதி அணிய வேண்டும்.

3. ஆக்ஞா சக்கரம் (புருவமத்தி)  யில் அணியும் விபூதி  வாழ்வை ஞானமாகப் பெறுவதற்கு உதவும்.

4.  இரண்டு காதுமடல்களுக்குப் பின்னும் உள்ள எலும்பின் கீழ் இருக்கும், சிறு குழியிலும் விபூதி அணிவது  வழக்கம்.

விபூதி அணிவது ஒரு ஆழமான விஞ்ஞானம்.   அதன் பின்னணி புரியாமல், தெரியாமல்  நெற்றியில் வெறுமனே பட்டை அடித்துக்கொள்வது  வேஷம்.  ஒவ்வொருவனும்  ஒவ்வொருவிதமாக  விபூதி பூசுவான்.  ஒற்றுமை நிலைக்காது.  விபூதி   சிவனோ வேறு எவரோ  அளித்ததல்ல.    விபூதி அணிவது மூடநம்பிக்கை  அல்ல. நம் இந்தியக் கலாச்சாரத்தில், ஆன்மீக பண்பாட்டில், ஒரு மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கு விபூதி ஒரு இன்றியமையாத  உபகரணம்.  ட்டாள்த்தனம். விபூதியை சிவனோ, இந்தக் கடவுளோ, அந்தக் கடவுளோ கொடுத்ததல்ல. இது மூடநம்பிக்கையும் அல்ல. நம் இந்தியக் கலாச்சாரத்தில், ஒரு மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கு விபூதியை ஒரு கருவியாகப் பார்த்தார்கள். இந்த விஞ்ஞானத்தை மீண்டும் உயிர்பெறச் செய்து, நாம் பயன்பெறுவோமாக. பஞ்சாக்ஷர மந்திரம் ஜபித்து வேல் வைத்து  அளிக்கப்பட விபூதி பல வியாதிகளை குணப்படுத்தி இருக்கிறது. பக்தி நம்பிக்கையால் தான் வளர்கிறது.  மஹான்களிடம், ஆச்சார்யர்களிட மிருந்து பெறப்படும் விபூதி சொல்லமுடியாத சக்தி பெற்றது.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...