Saturday, December 22, 2018

திருவெம்பாவை - 4



ஆர்த்ரா தரிசனம் J.K. SIVAN

 திருவெம்பாவை - 4
மணி வாசகர் 


                      களிக்க  ஒரு களிக் கதை 

''ஒள்நித்தில நகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ!
வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ!
எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத்துயின்றுஅவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கினியானைப் பாடிக்கசிந்துள்ளம்
உள்ணெக்கு நின்றுருகயாமாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயில் ஏலேரெம்பாவாய்.''

மாணிக்க வாசகர் அறிமுகப்படுத்தும் பெண்,  ஒருவேளை அவரே தன்னை பெண்ணாக பாவித்து பேசுகிறாரோ? அந்த பெண் ஒவ்வொரு நாளும் மார்கழி விடியற்காலை  மற்ற பெண்கள் வீட்டுக்கு சென்று வாசலில் கதவை தட்டி அவர்களை எழுப்பி நீராடி சிவன் கோவில் கூட்டி சென்று அவனைப் போற்றி பாட செய்பவள்.


அவ்வாறே  ஒரு வீட்டு வாசலில் நின்று குரல் கொடுக்கிறாள்.  சைவ ஆண்டாள்.  உள்ளே இருப்பவளை நன்றாக தெரியும்.  அவளின் அழகுக்கு அழகு செய்வதே அவளது முத்து வரிசைப் பற்கள். எனவே  தான் ''சைவ ஆண்டாள்''  உள்ளே இருப்பவளை    ''முத்துப்போல  பல்லழகி ''  என்று    TMS   போல்  கூப்பிடுகிறாள்.   ''சூரியன் பொலபொலவென்று புலர்ந்து விட்டானே.  அவனது கிரணம் கொஞ்சம் கொஞ்சமாக இனி   சூடு பெற்று விடுமே. இன்னுமா உனக்கு தூக்கம்.  நாங்கள் எல்லோரும் உனக்காக  காத்திருக்கிறோம். எழுந்து வா. '' 

 ஓ என்  கிளிமொழி தோழியர்களா... அடாடா.. என்னை தேடுகிறீர்களே,   முதலில் உங்களில் இன்னும் யாராவது வராமல் பாக்கியா என்று எண்ணிச்சொல்லுங்கள். அதற்குள் நான் ரெடியாகிவிடுகிறேன்.

''  அடியே  கெட்டிக்கார பெண்ணே.  ஒரு கூட்டத்தில்  தலை எண்ணுவது அவ்வளவு சுலபம்  இல்லை.அங்கு எண்ணிய தலை சட்டென்று  நகர்ந்து இன்னொரு இடத்தில் முளைக்கும். ஒன்று  திடீரென்று குனிந்து கொண்டு காணாமல் போகும் ஒரு தலை அங்கு பாதி இங்கு பாதி என்று ரெண்டாக கணக்கில் வளரும்.  அது கஷ்டமான  வேலையடி  பெண்ணை.   நீ எவ்வளவு சாமர்த்தியக்காரி  எங்களை இந்த தொந்தரவு பிடித்த தலை  எண்ணும் வேலையில்  ஈடுபடுத்தி விட்டும் நாளெல்லாம் நாங்கள் அவஸ்தைப் படும் நேரம் சுகமாக ஒரு தூக்கம் ரெண்டு கனவு காணலாம் என்று பார்க்கிறாயா?   தூங்கி  பொழுதை வீணாக்காதே. தேவர்களே தொழும், விண்ணவர்கக்கே   ''அருமருந்தொரு தனி மருந்தென''  அமிர்தமாக இனிக்கும் சிவனை நெஞ்சுருக மெழுகென நெக்குருகி,   போற்றிப்  பாடி நேரம் அற்புதமாக செலவழி.   அதுவரையில் நான்  தலை எண்ணி குறைந்தால் நீயே   மீண்டும் ஒரு தூக்கம்போடு.   வந்து தலை எண்ணு.  .உள்ளே இருந்த முத்துப் பல்லுக்கு நன்றாக தெரியும். எல்லோருமே கணக்கில் வீக்  (WEAK) என்று. ஆகவே  அவள் படுக்கையை விட்டு இன்னும் நகரவில்லை என்கிறார்  மணி வாசகர்.

அவர்களை அப்படியே தலை எண்ண,  தூங்க, விட்டு விட்டு  நாம்  தலையாய முக்கியம் விஷயம் பேசுவோம்.  இன்று போல்       ஒன்றாயிரண்டா  எத்தனையுவ் வருஷம் மார்கழி திருவாதிரை அன்று    'மார்கழி மாதம்  திருவாதிரை நாள்  வரப்போகுது ஐயே...''  என்ற அதிசயப்பாடகன்  SG  கிட்டப்பா என் செவிகளில்  ஒலித்திருக்கிறது.  என்ன  ரம்யம், எதிர்பார்ப்பு, பிருகா....  வடமொழியில் இந்த நாள்   ''ஆர்த்ரா''    தில்லை வாழ் நடராஜனை  விடியற்காலை  கண் குளிர  சேவிக்கும் நாள். சிவ பக்தர்கள் தூய வெண்ணீறு பூசி, ருத்ராக்ஷம் உடலில் மின்ன,  மனம் மகிழ்ந்து ''ஓம் நமசிவாய, சிவசிவ'' என்று  பஞ்சாக்ஷரம் ஜபிக்கும்  பரமேஸ்வர நாள்.  பனி படர்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்க சீரிஷம் எனும் மார்கழி மாதத்தில், ஆர்த்ரா நட்சத்திரம் இணையும் போது “கர்மா தான் பிரதானமே தவிர பகவான் பெரியது இல்லை'' என்று கூறிய சாங்கிய யோகிகளின்  அஞ்ஞானத்தை  போக்க,   ஈஸ்வரன் முடிவெடுத்தான். தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையைக் கொன்று அதன் தோலை தன் ஆடையாக்கி, உடுக்கு, அக்னி , அரவம் முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்  இது.  சிதம்பரத்தில்  நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம்  அருளிய நாள். 
''ஆ ருத்ரா'  என வியக்க வைப்பது  தான் 'ஆருத்ரா''வோ?   இடது பக்கம்  உமையவள். அவள் கால் நோக்கககூடாது என்று   ''இடது பதம் தூக்கி ஆளும்''  நடராஜன்  அடி பணிவோம். 

''பரமேஸ்வரா  என் மகன் மார்கண்டேயனுக்கு இன்றோடு பதினாறு முடிகிறதே.. வாழ்க்கையின் கடைசி நாள் இன்று அவனுக்கு. போடா மகனே உனக்கு சிவனே துணை'' என  மார்க்கண்டேயன் சிவனை கட்டி தழுவுகிறான்.  இதோ யமன் வந்து விட்டானே.  யமன் வீசிய பாசக்கயிறு   சிவன் மேல் விழ ருத்ராகாரமாக   லிங்கத்திலிருந்து  பொங்கி எழுந்த சிவன்  மறலியை காலால் எட்டி உதைக்கிறான். 

திருவடி சரணம் அடைந்த யமன் புத்துயிர் பெற்று, மார்க்கண்டேயன் சிரஞ்சீவி ஆகிறான்.   சிவனருள் அளித்த களிப்பு தான் திருவாதிரை களியாகியதோ .   திருவாதிரைக்கு ஒருவாய்  களி .  சிதம்பர  நடராஜ தரிசனம் இன்று  காணக்  கண் கோடி வேண்டும்.

உத்தர கோச மங்கையில் அழகு ததும்பும் மரகத நடராஜனை பார்க்காதவர்கள் இதோ இத்துடன் அற்புத மரகதன்  திவ்ய தரிசனம் பெறலாம். வருஷத்தில் ஒருநாள்.

திருவண்ணாமலை முக்தி ஸ்தலம். எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்த, இன்னும் வாழும் மகோன்னத பூமி. நான் நிறைய எழுதுகிறேன் அவர்களை பற்றி. அங்கே மார்கழி அதிகாலை வழக்கம்போல் சில பெண்கள் சிவனைத் துதித்தவாறு மற்ற பெண்களை துயில் எழுப்புவதாக மிக அருமையாக மணி வாசகர் அருளிய திருவெம்பாவை அவரது திருவாசகத்தில் ஒரு பகுதி. மார்கழி குளிருக்கும் பனிக்கும் மகேசனின் பனிமலை வாசத்துக்கும் எவ்வளவு நெருக்கம் பார்த்தீர்களா. பனி குளிர்ச்சியானது. திருவெம்பாவை மனதை குளிர வைக்கிறது. குளிருக்கு உஷ்ணம். உஷ்ணம் எதிலிருந்து வரும்? அக்னி. அக்னி ஸ்தலம் எது ? திருவண்ணாமலை.

பனிமலையிலிருந்து அண்ணாமலைக்கு வந்து விட்டோமே. ஆடலரசன் திட்டம் எல்லாமே. இன்று ஐந்தாவது திருவெம்பாவை பாடலுடன் ஆரம்பிப்போம்.

ஆனந்தமாக இருக்கும் போது தான் நாம் வீட்டில் தையா தக்கா ஆட்டம் எல்லாமே.  ஆனந்தம் என்றாலே நடனம். சிவபெருமான் சதா ஆனந்தத்தில் திளைப்பவர். எனவே தான்  சதானந்தன் .ஆனந்த நடேசன், நடராஜன். கனகசபையில் ஆடும் சபேசன். மொத்த 108 நடனங்களில் 48 நடனங்கள், சிவன் தனியாக ஆடியது என புராணங்கள் சொல்கிறது. 

மார்கழி திருவாதிரை அன்று ஆடிய  பிரசித்தமான ஆனந்த நடனத்தை  தரிசிக்க அநேக லக்ஷம் பக்தர்கள் சிதம்பரத்துக்கும்  எல்லா சிவன் கோவில்களுக்கும் மார்கழி திருவாதிரை (ஆருத்ரா தரிசனம்) போவது  கபாலி என்பவனைக் காண.  கண்கள் கோடி போதாது. களிப்பு என்றால் சந்தோஷம். திருவாதிரை அன்று சிவனுக்கு நைவேத்யம் களி.

திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட நாராயணனுக்கு ஒருநாள் அளவற்ற மகிழ்ச்சி. முகம் முழு நிலவானது. ஆதிசேஷனுக்கு என்ன காரணம் திடீரென்று நாராயணனுக்கு இவ்வளவு சந்தோஷம் என்று புரியவில்லை.

''ஹரி, எனக்கு சொல்லுங்களேன் இன்று ஏன் இவ்வளவு உற்சாகம்.'' என்கிறார் ஆதி சேஷன்.

''சேஷா, அங்கே பார் சிதம்பரத்தில் ஈசன் நடராஜராக இன்று திருவாதிரை நாளில் ஆடும் திருத் தாண்டவத்தை'' என்றதும் ஆதிசேஷன் ஓடுகிறார்.   ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் மாறி, பதஞ்சலி முனிவர் ஆகி தவமிருந்து நடராஜரின் திருநடனத்தை காண வேண்டி, ஈசனை நோக்கி தவம் புரிந்தார்.

‘பதஞ்சலி’ - மெதுவாக ஒரு குரல் கேட்டதும்  கண் திறக்க, எதிரே சாந்தஸ்வரூபனாக சர்வேஸ்வரன். பதஞ்சலியின் கைகள் தொழுதன .

‘பதஞ்சலி! உன்னைப் போலவே, வியாக்ர பாதர் என்பவரும் எனது நடனம் காண தவம் செய்கிறார். எனவே உங்கள் இருவருக்குமே சிதம்பரத்தில் காட்சி தருகிறேன்'' என்கிறார் தில்லை சபேசன்.

திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர்.

தாருகாவன ரிஷிகள் ஒரு மார்கழி திருவாதிரை அன்று முறை யாகத்தில் வெகுண்டெழுந்த ஒரு மதயானை, முயலகன், உடுக்கை, மான் தீப்பிழம்பு ஆகியவற்றை சிவன் மீது திசை திருப்ப, சிவனால் கஜன் சொல்லப்பட்டு அவனது சருமத்தை ஆடையாக அணிகிறார். உடுக்கையும் , மானும், தீப்பிழம்பும் அவர் கரங்களில் ஐக்கியமாகி, முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடியது தான் ஆருத்திரா தரிசனம்.

சேந்தனார் என்பவர் காட்டிற்கு சென்று விறகு வெட்டி, விற்று ஜீவனம் செய்பவர். சிதம்பரம் அருகேயுள்ள ஓர் கிராம வாசி. சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார்.

சோதனையாக ஒரு நாள் விடாமல் மழைபெய்து விறகுகள் ஈரமாகி விற்பனையாக வில்லை. வருமானம் இல்லதாதால் வீட்டில் சமைக்க அரிசி வாங்க காசு இல்லை. வேறு வழி இல்லாமல், வீட்டில் இருந்த கேழ் வரகில் களி செய்து அதிதியாக யாராவது ஒரு சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். நேரம் ஓடிக்கொண்டிருந்ததே தவிர யாரும் தென்படவில்லை. ஏமாற்றத்தாலும் பசியாலும் சேந்தனார் வாட தில்லை நடேசன் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் வருகிறார். ''வாருங்கள்'' என்று முகமும் அகமும் மகிழ கேழ்வரகு களியை சிவனடியாருக்குப் படைத்தார். வந்தவரும் களியை ''ஆஹா பிரமாதம் என்று உண்டு மீதி இருந்ததையும் ''அடுத்த வேலை சாப்பிட இது வேண்டும் '' என்று எடுத்துச் சென்றுவிட்டார். சேந்தனார் கம்பல்சரியாக  (COMPULSORY) முழு உபவாசம் ! .

சிதம்பரம் ஆலயத்தில் அடுத்தநாள் காலையில் வழக்கம் போல் திலைவாழ் அந்தணர்கள் கர்பகிரஹத்தை திறக்க, ''இது என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கு பார்த்தாலும் கேழ்வரகு களி சிந்தி கிடக்கிறது. யாருடைய வேலை இது? '' விஷயம் ராஜா காதுக்கு எட்டியது . ராஜாவுக்கு ஏற்கனவே கனவில் ஒரு சேதி வந்து ஆச்சர்யத்தில் இருந்தான்

''எனக்கு திருவாதிரை அன்று சேந்தன் வீட்டில் அருமையான கேழ்வரகு களி கிடைத்தது '' என்று நடராஜர் கனவில் ராஜாவிடம் சொல்லிஇருந்தாரே.    சிதம்பரம் நடராஜப் பெருமான் தேர்த்திருவிழாவில் ராஜா மும்முரமாக இருந்ததால் சேந்தனைத் தேட இன்னும் ஆள் அனுப்பவில்லை. ஆனால் அந்த தேர்த்திருவிழாவிற்கு சேந்தனாரும் வந்திருந்தார்.

சிவனைத் தேரில் ஏற்றியாகிவிட்டது. ராஜாவும் மற்றவர்களும் தேர் வடம் இழுக்கிறார்கள். மழையினால் சேற்றில் தேர் சக்கரம் அழுந்தி நகரவில்லை. ராஜா வருந்தினான்.

அசரீரி ஒன்று அப்போது எல்லோருக்கும் கேட்டது "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று.

''நானோ ஒரு விறகுவெட்டி, ஒன்றுமே தெரியாதே, எப்படி சிவனுக்கு பல்லாண்டு பாடுவேன்'' என துடித்து சிவனை வேண்டினார்.

அடுத்த கணமே தன்னை அறியாமல் சேந்தனார் கணீர் என்று உரக்க பாடினார். நமக்கு அதிர்ஷ்டம். நல்ல பாடல்கள் 13 கிடைத்திருக்கிறது.

"மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" ............பல்லாண்டு கூறுதுமே" என்று முடிபவை.
ஒருநாள் இதை முடிந்தபோது எழுதவேண்டும்.

பாடி முடித்தார் சேந்தனார். தேர் நகர்ந்தது. அவர் கால்களில் அரசரும், தில்லை அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். ''ஐயா எனக்கு கனவில் சிவன் சொன்னார் '' என்று விஷயம் சொல்ல அனைவரும் மகிழ்ந்தார்கள். அன்றுமுதல் இன்றுவரை திருவாதிரை நாளில் நடராஜருக்கு களி நைவேத்தியம். உளுந்து மாவினால் செய்த களி. 'திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி ' என்ற வார்த்தை இதனால் கிடைத்தது.
  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...