Wednesday, December 26, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J.K. SIVAN
மகா பாரதம்
தவளையும் குதிரைகளும்

மஹா பாரதத்தை படிக்கும்போது யாரை புகழ்வது என்று ஒரு பெரிய பிரச்னை எழுகிறது. வேத வியாசரையா? அவர் ஸ்லோகமாக சொன்னதை எழுதி வைத்து நமக்கு கிடைக்கச் செய்த ஒற்றை கொம்பன் விக்னேஸ்வரனையா, பாரதத்தில் நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகளை முதலில் பரிக்ஷித்துக்கு எடுத்து சொல்லிய சுக ப்ரம்ம ரிஷியையா, பின்னர் ஜனமேஜயனுக்கு அவற்றை அப்படியே ஒரு கமா , முற்றுப்புள்ளி, விடாமல் ஈயடிச்சான் காபியாக எடுத்து சொல்லிய வைசம்பாயன ரிஷியையா, பாரதத்தில் கதை சொல்லும் ரிஷிகள் உக்ரஸ்வரரையா, தௌம்யரையா, மார்கண்டேயரையா மற்றவர்களையா, அவற்றை பல மொழிகளில் விடாமல் மொழிபெயர்த்த வல்லுநர்களையா, அதெல்லாம் இருக்கட்டும் அவற்றை பொறுமையாக படிக்கும் உங்களையா...??? நீங்களே சொல்லுங்கள்

'' இப்போது நீங்கள் படிக்கப்போவது பழைய கால தமிழ் தெலுங்கு பட இயக்குனர் விட்டலாச் சார்யாவுக்கு தெரிந்திருந்தால் நிச்சயம் ஒரு தெலுங்கு படம் பண்ணி தமிழில் டப் செய்து நம்மை தலை நோவச் செய்திருப்பார். நல்லவேளை மார்க்கண்டேயர் கதை விட்டலாசார்யாவிடமிருந்து தப்பி தமிழ்ப்படமாக டப் (dub) ஆகாமல் நம் தலை தப்பியது. யுதிஷ்டிரன் தப்பவில்லையே? அதனால் என்ன, காட்டில் அவனுக்குப் பொழுது போகவேண்டாமா?

இது தான் கதைச் சுருக்கம்:

இக்ஷ்வாகு வம்சத்தில் பரிக்ஷித் ஒரு ராஜா. ஒரு நாள் வேட்டையாட குதிரை மேல் ஏறி ஒரு மானைத் துரத்தினான். மான் அவனை எங்கோ கண்காணாத ஒரு தேசத்தில் ஒரு காட்டில் கொண்டுபோய் விட்டு, அங்கே களைத்து, தாகத்தில் வாடியபோது ஒரு குளம் தென்பட்டது. குளித்து, குடித்து குளக்கரையில் இளைப்பாறி உட்கார்ந்த போது ஒரு அழகி வந்தாள் .

' ஏ பெண்ணே, நீ என்னை மணந்து கொள்'' என்றான்.
''அட எவ்வளவு எளிதாக கேட்டுவிட்டாய் ஒரு கேள்வி . சரி ஆனால் ஒரு நிபந்தனை'' என்றாள் அந்த பேரழகி.
''என்ன அது?''
''தண்ணீரையே நான் பார்க்ககூடாது. சரியா?
''குளிக்க முடியாத'' அந்த அழுக்கியை, இல்லை, அழகியை ராஜா மணந்தான். ராஜ்ய விவகாரம் எதுவும் கவனிப்பதில்லை. மந்திரி மதியூகி இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டுமே?'' என இரவெல்லாம் யோசித்தான்.

மந்திரி மதியூகி ஒரு செயற்கைக் காடு அமைத்து ஒரு குளம் அதில் வெட்டி, அதை முத்து, பவழம் ஒரு வலையில் நிரப்பி மூடி தண்ணீர் தெரியாமல் முத்துக் குளம் போல் ஆக்கி, ராஜா, ராணி இருவரும் அங்கே ஒரு நாள் போய் ராணி அந்த ''முத்துக்' குளத்தில் இறங்க தண்ணீரில் ஆழமாக விழுந்தாள். ராஜா அவளை கரை சேர்க்க நீரில் குதித்தான். ராணி கிடைக்கவில்லை. குளத்தின் ஆழத்தில் ஒரு பெரிய தவளை வாயைத் திறந்துகொண்டு அவனைப் பார்த்தது.

''ஆஹா, இந்த தவளை என் ராணியை விழுங்கிவிட்டதே'' என்று அதைக் கொன்றான் ,

'' இனி என் ராஜ்யத்தில் தவளைகளை எங்கு கண்டாலும் கொன்று என்னிடம் கொண்டுவந்து காட்டவேண்டும்'' என்று உத்தரவு போட்டு. எல்லாத் தவளைகளும் மாண்டு, அதனால் எஞ்சிய தவளைகள் முறையிட, தவளை ராஜன் திடுக்கிட்டு ஒரு முனிவரைப் போல் வேஷமிட்டு பரிக்ஷித்திடம் வந்து தவளைகள் சார்பில் அவற்றின் உயிர் காக்க வாதாடி, கடைசியில் அவனே தவளை ராஜன், அவன் மகள் சுசோபனா தான் ராஜாவின் மனைவியானவள் என அறிந்து, அவளை மீட்டுக் கொண்டுவந்தால் தவளைகள் தப்பும் என பேரம் பேசி, சுசோபனா மீண்டும் பரிக்ஷித்தை அடைகிறாள்.

'' நீ தவளை இளவரசியாக இருந்தும் அநேக ராஜாக்களை இவ்வாறு ஏமாற்றியதால் நம் இனம் பெரிதும் அழிந்ததால், உனக்கு பிறக்கும் பிள்ளை பிராமணர்களை மதிக்கமாட்டான். உயிர் தப்ப மாட்டான் '' என்று தவளை ராஜா தனது பெண்ணுக்கே சாபம் இடுகிறான்.

பரிட்சித் சுசோபனா தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் பிறக்கிறார்கள், சாளா , தாளா , வாளா, என்று . அவர்களில் சாளா அரசனாகிறான். ஒருநாள் வேட்டையாடி தேரில் ஒரு மானைத் துரத்துகிறான். அது வேகமாக ஓடி காட்டில் மறைகிறது.

''வேகமாக தேரை ஒட்டு'' என்று தேர்ப்பாகனை விரட்ட, அவன்

''இந்த குதிரைகளின் வேகம் இவ்வளவு தான். வாம தேவரிஷியிடம் இருக்கும் குதிரைகளாக இருந்தால் எப்போதோ அந்த மான் பிடிபட்டிருக்குமே'' என்று தேர்ப்பாகன் சொல்ல, சாளா மானை விட்டுவிட்டு வாமதேவரிஷியிடம் செல்கிறான். வாமி குதிரைகளை கேட்கிறான்.

''அரசனே, உனக்கு என்னுடைய இரு குதிரைகளை இரவல் கொடுக்கிறேன். உன் மானைப் பிடித்தபிறகு உடனே இந்த குதிரைகளை திருப்பிக் கொண்டுவந்து கொடு '' என்கிறார் வாமதேவர். அவ்வாறே வாக்கு கொடுத்து குதிரைகளை இரவல் பெற்றான்.

''இரு வாமி குதிரைகளையும் பூட்டி தேர் பறக்கிறது, மான் பிடிபடுகிறது.

''ஆஹா என்ன வேகம் இந்த குதிரைகளுக்கு, இவற்றை எதற்காக அந்த ரிஷியிடம் கொடுக்கவேண்டும்'' என்று தானே அரண்மனையில் அந்த குதிரைகளை கட்டி வைத்துக்கொள்கிறான்.

''எங்கே குதிரைகள் திரும்பி வரவில்லையே'' என்று ஒரு மாதகாலம் கழித்து வாமதேவரின் சிஷ்யன் சாளா விடம் வந்து ''ரிஷி குதிரைகளை திரும்ப கேட்கிறார்'' என்று சொல்ல '

''இந்த மாதிரி வேக குதிரைகள் அரசர்களிடம் தான் இருக்கவேண்டும். அதற்கு பதிலாக நிறைய தானியம், தக்ஷணை வாங்கிக்கொண்டு திரும்பு '' என்று ஆத்ரேயன் என்ற அந்த சீடனை அனுப்ப வாமதேவர், கோபத்தோடு நேரே சாளாவிடம்,வந்து வாக்கு வாதம் தொடர, வாமதேவர் நான்கு ராக்ஷசர்களை தவ சக்தியால் வரவழைத்து அவரது ஆணைப்படி ராக்ஷசர்கள் வந்து சாளாவை வெட்டி கூறு போட்டு விடுகிறார்கள். பிறகு தாளா அரசனாகிறான். வாமதேவர் அவனிடமும் ''என் குதிரைகள் எங்கே, கொடு '' என்கிறார். அவனும் தர மாட்டேன் என்கிறான். அவன் மனைவி அவனுக்கு நல்ல புத்தி சொல்லி, கடைசியில் குதிரைகளை திரும்ப பெறுகிறார் வாமதேவ ரிஷி.

''சுபம் சுபம் சுபம்''

மார்க்கண்டேயரின் இந்த குதிரைக் கதை நம்மையே மகிழ்விக்கிறதே. யுதிஷ்டிரன் எப்படி ரசித்திருப்பான்!!!


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...