Friday, December 21, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்  J.K. SIVAN 


                     கடைசி பிரளயம் நடந்தபோது...

விவஸ்வான் மகன்  வைவஸ்வத மனு  ஒரு ரிஷி.   பதினாயிரம் வருஷம்  கடுந்தவம் புரிந்தவர்.  நமது புராணங்களில் ' பதினாயிரம்'  அடிக்கடி வரும் ஒரு சொல்.

ஒருநாள்  சிரிணி  என்ற ஒரு நதிக்கரையில் ஒரு மீன் குஞ்சு அவரிடம் கெஞ்சுகிறது. 

''மகரிஷி,  நான் சக்தியற்ற  சிறு மீன்.  என்னை பெரிய மீன்கள் உண்டு விடும். என்னை அவைகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்'' 

அந்த சிறிய மீன் குஞ்சு மீது கருணை கொண்டு, அதை ஒரு சிறு பாத்திரத்தில் நீரிட்டு  வளர்க்கிறார்.   மீன்   கொஞ்சம் 
பெரிதாகி  விடவே,  அதை ஒரு குளத்தில் விட்டு  சிறிது காலத்தில்  அங்கும் அது பெரிதாகி விடுகிறது.  குளம் போதவில்லை அதற்கு நீந்துவதற்கு.

''குளத்தில்  எனக்கு நகர  இடம் போதவில்லையே.  கங்கையில் என்னை கொண்டு விடுங்களேன்'' என்று கேட்டதால்  மனு அந்த  மீனை  கங்கையில் கொண்டு விடுகிறார். இன்னும்  மீன்  பெரிதாகியாதும்  கடலில் விடுகிறார். சமுத்ரத்தில் உள்ளே செல்லுமுன் அது மனுவிடம் பேசுகிறது 

''மகரிஷி,  பிரளயம் வந்து  உலகமே  அழியப்போகிறது.  உடனே  ஒரு  பெரிய  படகு தயார் செய்து,  சப்த ரிஷிகளுடன், உலகில் மீண்டும்  உயிர் தோன்ற  காரணமாக  சில  விதைகள் , முட்டைகள், ஆதார உயிர்கள் ஆகியவற்றை அந்த படகில் வைத்து காப்பாற்ற வேண்டும்.  உலகில் மீண்டும் உயிர் வகை  தோன்ற  அவை உதவுமே. ஒரு பெரிய  கயிறு தயாராகட்டும். அதை என் மீது சுற்றி படகோடு இணைத்தால்,  பிரளயத்தின் போது  எல்லாம் அழியும் போது  நான்  அந்த படகை  இழுத்துக்கொண்டு படகில் உள்ள  உங்களை  எல்லாம் காப்பாற்றுவேன்.  உணவு  நீர்  எல்லாம்  நிறைய  எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் '' 

 மீன் சொன்னபடியே  மனு  எல்லாம் தயார்செய்து கொண்டபோது பிரளயம் நிகழ்ந்தது. வானமும் பூமியுமாக  ஒரே வெள்ளக்காடு.  அந்த மீனின் வாயிலிருந்து  நீண்ட  கயிறு அந்த படகை  இணைத்து மிதந்தது. மாதக்கணக்கில்  நீரில் மிதந்தது. எல்லாமே  அழிந்து விட்டது,  இந்த படகையும் மீனையும் தவிர.  எங்கும் ஒரே  நீர் மயம்.   ஹிமவான் பர்வதத்தின் உச்சி தெரிந்தது நீர் மேல்  தெரிந்த அதன் உச்சிமேல் மேல்  கயிற்றைக் கட்டினார்  மனு.   படகு நின்றது.  இன்றும்  அந்த இடத்துக்கு   நாவ் பந்தனா (படகு கட்டிய  இடம்)  என்று பெயர்.

அந்த மீன் அப்போது மனுவிடமும் சப்தரிஷிகளிடமும் சொல்லியது.   நான் தான்  பிரம்மா. இனி மனு  உலகை தொடங்குவார். நீங்கள் அவரோடு இணைந்து  தேவர்கள், அசுரர்கள்,  இதர  ஜீவராசிகள்   தோன்ற  உழைத்து  பிரபஞ்சத்தை உருவாக்குங்கள்.  அதற்காகவே உங்களைக்  காப்பாற்றினேன்''  என்று சொல்லி விட்டு  மீன் மறைந்தது.   இவ்வாறு  தான்  ஒவ்வொரு  யுக முடிவிலும் பிரளயம் தோன்றி  அடுத்த யுகம் தோன்றும்  என்றார்  மார்க்கண்டேய ரிஷி.

''யுதிஷ்டிரா,  ''பிரளயத்தில் எங்களைத்தவிர  பிரம்மனாக  தோன்றிய  அந்த  பரமாத்மா  ஒரு சிறு ஆலிலை பாலகனாக  தோன்றி மகிழ்வித்தான்.  நான்  வணங்கினேன்.  எனக்கு  இந்த  யுக  சம்பவங்களை எடுத்துச் சொல்லி  ஒவ்வொரு யுகத்திலும் தான்  என்ன நிறத்தில் வருவேன், எப்படி மானிட அவதாரம் எடுப்பேன், தர்ம பரிபாலனம்,  துஷ்ட நிக்ரகம், சிஷ்ட பரிபாலனம் எப்படியெல்லாம்  நடக்கும்   என விளக்கினார்.

உலகில் மீண்டும் உயிர் துளிர்த்தது.  அந்த  தாமரைக்கண்ணன் ஜனார்தனன் இப்போது  கிருஷ்ணனாக அவதரித்து  உன் உறவினனாக உள்ளதை  கண்டு  நீ  எவ்வளவு புண்யசாலி என்று  மகிழ்கிறேன் ''  என்று மார்கண்டேய ரிஷி கூறினார்.

அருகில் புன் சிரிப்புடன் கவனித்துக்கொண்டிருந்த கிருஷ்ணனை  அனைவரும்  வணங்கினார்கள்.

அப்போது  யுதிஷ்டிரன்,  '' மார்க்கண்டேய  மகரிஷி,  யுகங்களில் உண்டாகும்  மாறுதல்களை  சொன்னீர்கள்.  கலியுகத்தில் என்ன நேரும்?

நாம்  கலியுகத்தில் இப்போது வாழ்கிறோம்.  துவாபர யுகத்திலேயே  கலியுகம் எப்படி காட்சி அளிக்கும். அதில் மனிதர் எப்படி நடந்துகொள்வார்கள்  என்று இப்போதைய நமது வாழ்க்கையை யுதிஷ்டிரனுக்கு மார்க்கண்டேய ரிஷி சொன்னது ஆச்சர்யமாக இருக்கும் அல்லவா?  அதைக் கேட்போமே.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...