Monday, December 31, 2018

2019

நேரம் நல்ல நேரம் J.K.SIVAN
ஐம்பத்தைந்து அறுபது வருஷங்கள் ஓடி ஓடி ஓடாய் தேய்ந்து உழைத்தாகி விட்டது. திரும்பிப் பார்த்தால் ஓடிய இடங்கள் ஓடிய நேரங்கள், மலையாக, கடலாக விரிந்து மலைப்பாக இருக்கிறது. எப்படி என்னை இயந்திரமாக்கினான் இறைவன். உழைப்புக்கு நல்ல ஊதியமும் கொடுத்தான். உயர்வும் கொடுத்தான். இனி ஓட்டப்பந்தயத்தில் கயிற்றை தொட்டாகி விட்டது. வாழ்க்கைப் பந்தயத்தில் ஓட்டம் முடிந்து விட்டது. கைதட்டல் பரிசு முதன்மையாக ஓடியதற்கும் கிடைத்து விட்டது. இனி கால்கள் மெதுவாக நடக்கும் ஓடாது. கப்பல் கரை சேர்ந்து விட்டது. பல தேசங்கள் பல கடல்கள் சுற்றிய கப்பல் கரையில் நங்கூரம் பாய்ச்சி நின்று ஒய்வு பெற்றுவிட்டது. கரை தொட்டதே தவிர தரை தட்டவில்லை. இன்னும் மிதந்து கொண்டு தான் இருக்கிறது. இனி அசைவெல்லாம் ஒரே இடத்திலிருந்து கொண்டு தான்.

இனி என்ன செய்யலாம்? . உழைத்த உடம்பு ஒய்வு ஏற்காதே. கிருஷ்ணன் கண்ணில் பட்டான். நான் இருக்கிறேனே வா நாம் இருவரும் இணைவோம். உனக்கு நான் எனக்கு நீ. அட இந்த பந்தம் ஐந்து வருஷங்களாக வலுத்து விட்டது. ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவை அதே பழைய ஓ ட்ட வேகத்தில் இப்போது கப்பலுக்கு பதிலாக, கம்ப்யூட்டரில் நகர்கிறது. ஒரு நாளைக்கு பதினெட்டு இருபது மணி நேரம் எண்ணற்ற நண்பர்களை, முகம் தெரியா லக்ஷக்கணக்கான அன்பர்களோடு உலகளவில் உறவு கொண்டு அன்புடன் மகிழ்ந்து என்னால் முடிந்த எளிய சேவை செய்ய மனம் ஈடுபட்டு அதில் இப்போது காணும் உற்சாகம், ஊதியம் தேடிய உத்யோகத்தில் ஏனோ காணவில்லையே .

''அடாடா ஒரு வேளை அரிய சந்தர்ப்பத்தை வாழ்வில் இழந்து விட்டோமோ?'' என்று ஒரு கணம் கவலை.

''இல்லேடா பையா, (அவனுக்கு தான் 125 வயதாச்சே, 80 அவனுக்கு பையன் தானே!) உனக்கும் உன்னை சார்ந்தவருக்கும் நீ ஆற்றவேண்டிய கடமையை தானே செய்தாய். அதை நன்றாகவே செய்தவன் நீ என்பதால் உன்னை விட்டு வைத்தேன். அது நிறைவேறி இப்போது நீ என் கட்டுப்பாட்டில் எனக்கு உழைக்கிறாய். உன் நேரம் வீணாக வில்லை. உள்ளே சேர்த்து வைத்துக்கொள்ள அனுமதித்தேன் இவ்வளவு காலம். அதை வெளிக்கொணர்வது இனி உன் வேலை என உன்னை விட்டு வைத்திருக்கிறேன் '' என்கிறான் எதிரே சுவற்றில் கிருஷ்ணன்.

''புரிகிறது கிருஷ்ணா. உனக்கும் உன் அன்பர்கள், என் வாசகர்களுக்கும் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஆம் இன்று 1.1.2019 மற்றும் இன்னும் எத்தனையோ ஜனவரி 1க்கும் சேர்த்து என் மனம் கனிந்த வாழ்த்துக்கள். உழைப்பே உள்ளத்திற்கும் உடலுக்கும் உற்சாகம் - என் எழுத்துக்கள் என் எண்ணங்களின் பிரதிபலிப்பு. அதை அப்படியே வெளிப்படுத்த முடிந்தால் நான் பாக்கியசாலி. பல அன்பர்கள் நண்பர்களை நான் எழுத்தால் மகிழ்வித்தால் அதன் காரணன் நீ தானே கிருஷ்ணா. நீ ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா !


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...