Friday, December 14, 2018

ADHITHI DANCE ARANGETRAM



நினைவில் நிற்கும் ஒரு நாட்டிய அரங்கேற்றம்
J.K. SIVAN

18.11.2018 ஞாயிறு மாலை மழை இதோ அதோ வருகிறது என்று பயமுறுத்தல் இருந்தாலும் அன்று மாலை மழை வர மறந்து போய் விட்டது. பந்தநல்லூர் பாண்டியன் எத்தனையோ குழந்தைகளை அவரது நாட்யாலயா மூலம் பரத நாட்டிய ராணிகளாக மாற்றுவதில் வல்லவர். அப்படி ஒரு குழந்தையை உருவாக்கி கே. பி. அதிதியை அரங்கேற்றினார்கள் அன்று மாலை. சென்னை லஸ் சர்ச் ரோடு சிவகாமி பெத்தாச்சி சுவற்றில் படமாக நின்று அடடா அதிதி ஆட்டத்தை காண இத்தனை பேரா என்று பார்த்து அதிசயித்தார். சுடசுட அருமையான காபி போண்டாவுடன் வரவேற்று அரங்கத்திற்குள் அழைத்து சென்றார்கள். பிரதீபா கார்த்திகேயன் தம்பதியர் அதிர்ஷ்ட காரர்கள் என்பதில் சந்தேகமில்லை. எப்படி ஒரு ரப்பர் குழந்தையை பெற்றிருக்கிறார்கள். உடம்பு எண்ணமாக வளைகிறது. எட்டு வயதில் இத்தனை சாமர்த்தியமா இது சாத்தியமா என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்க வில்லை. பந்தநல்லூர் வித்தையோ? கலைமாமணி ஸ்ரீகலா பரத் அவர்கள் தலைமை தாங்க நான் சிறப்பு விருந்தினன். விருந்து சிறப்பாகவே இருந்தது.

நான்காவது வகுப்பு மாணவி. 2017 மே மாதமே சலங்கை பூஜை. அப்போது குரு திருவீழிமிழலை திருமதி எஸ். கனகா அம்மாள். அப்புறம் பந்தநல்லூர் பாண்டியன். நிறைய பள்ளி மற்றும் வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்ற அதிதிக்கு பரத நாட்டியம் தணியாத தாகம். 25.11.18 எங்கள் ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் அன்னக்கூடை நிகழ்ச்சியில் கிருஷ்ணன் பாட்டு பாடினது நினைவுக்கு வருகிறது. ஓவியத்திலும் தேர்ச்சி.

அன்றைய நிகழ்ச்சியில் புஷ்பாஞ்சலியுடன் நாட்டையில் துவங்கிய நடனம், அலாரிப்பு, பீம்ப்ளாஸில் விளாசிவிட்டு, ஷண்முகப்ரியாவில் சுப்ரமணிய கௌத்துவம் ஆரம்பித்தபோது நான் எப்படி மைலாப்பூரிலிருந்து என்னைஅறியாமலேயே மயில் மேல் பறந்து முருகனோடு அறுபடைவீடுகளில் இருந்தேன் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. அதிதியின் அற்புத கைங்கர்யம் இது. ராகமாலிகையில் மயன் போல் மாளிகை கட்டியதால் எனக்கு பாரதியின் ''தீராத விளையாட்டுப் பிள்ளை'' யில் விறுவிறுவென்று மேடையில் ஏறி அதிதியின் பின்னலை பின்னின்று கண்ணன் போல் இழுக்க தோன்றியது.
நிகழ்ச்சிக்கு இன்னிசை பொழிந்த கோமதி நாயகம் தன்னை இன்னொரு சீர்காழியாக ''சின்னஞ்சிறு பெண் போலே '' சிந்துபைரவியில் மாற்றிக்கொண்டு அதிதியை வேலை வாங்கினது ஆச்சர்யம். கடைசியாக பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரின் தில்லானா ''பூச்சி, வண்டு'' போல் அதிதியை சுற்றவைத்து மனதை கொள்ளை கொண்டாள் .

மேடையில் பேசும்போது அந்த ரப்பர் குழந்தை அதிதியைப் போற்றி புகழ வார்த்தைஇன்றி தடுமாறியது எனக்கு மட்டுமே தெரியும்.
























No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...