Tuesday, December 11, 2018

AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம்  J.K. SIVAN 

                                                              
                                                                        பலமிழந்த பீமன்....

''வைசம்பாயனரே,   ஏதோ ஒரு விசித்திர  சம்பவம் நிகழ்ந்தது என்று சொன்னீர்களே, அது என்ன?'' என்றான்  ஜனமேஜயன்.

''ராஜன்,  அது  நடந்தது வ்ரிஷபர்வர் ஆஸ்ரமத்தில்  பாண்டவர்கள் தங்கியபோது.   ஒருநாள் பீமன் அருகிலே வனத்தில்  வேட்டைக்கு சென்றான்.  காட்டுக்குள் வெகு தூரம் சென்று விட்டான்.  அடர்ந்த அந்த பகுதிக்குள்  கந்தர்வர்கள் சித்தர்கள் தேவ  ரிஷிகள்,அப்சரஸ்கள்  மட்டுமே  அனுமதிக்கப்படுவர்.    அவர்கள்  தாராளமாக  உலவும்  இடம்  அது.   மிகவும் ரம்யமாக இருந்ததால் பீமன் உற்சாகத்தோடு அங்கே சென்று விட்டான்.  சகோரம், சக்ரவாகம், குயில்கள் .இன்னிசையில் மயங்கி  பீமன் நடந்து போனான்.  பளிங்கு   நீர் ஓடை யொன்று  அழகாக அவனை  வரவேற்றது.   உல்லாசமாக  பீமன் அதில்  இறங்கி  குளித்தான். அவன் வரவில் மிரண்டு  காட்டு பன்றிகள்,    நரிகள்,ஓநாய்கள் ஆகியவை  ஓடின.  எதிர்த்த காட்டு விலங்குகளை கொன்றான். காடே  கலங்கியது அவன்  வரவில். பதினாயிரம் யானை பலம் கொண்டவன் அல்லவா? அவனை எதிர்த்த சிங்கங்களை அவன் தொடர்ந்த  போது  அவை உயிர்தப்பி தலை தெறிக்க  ஓடின.

 அப்போது  அவன்  கண்ணில்  ஒரு மிகப்  பெரிய பாம்பு  ஒன்று  தென்பட்டது.   ஒரு குகையில் அது   மலை  போல் சுருண்டு உயரமாக படுத்திருந்தது. மஞ்சள் நிற உடலில் கரும் பட்டைகள் நடு நடுவே  வெள்ளை  கோடுகள் , புள்ளிகள். தாமிர வர்ண வயிறு  பாகம்.    நல்ல பசி  அந்த மலைப்பாம்புக்கு.   பீமனை பார்த்ததும்  சந்தோஷம்.  கண் இமைக்கும் நேரத்தில் அது பீமனை தனது உடலால் சுற்றி இறுக்கியது. பலம் மிக்க  பீமனால்  அதனிடமிருந்து விடுபட முடியவில்லை.  பீமன் அதிர்ச்சி  அடைந்தான்.   அவ்வளவு பலம் மிக்க   எதிரி யார் ? நிச்சயம் இது ஒரு மலைப்பாம்பு அல்ல. ஏதோ ஒரு சக்தி வாய்ந்த தேவதை. ராக்ஷ்சனாக இருந்தால் இந்நேரம் கொன்றிருப்பேனே''  என நினைத்தான்.

'' நீ யார்.  என்னைவிட பலசாலி  யாக இருக்கும்  உன்னை மெச்சுகிறேன்.  என்னை உண்பதற்கு முன்  உன்னைப்  பற்றிச்  சொல்''  என்றான்  பீமன்.  எத்தனையோ   ராக்ஷசர்களை கொன்றவன்  நான்.    என்னையே  கட்டிப்போட்ட  நீ  யார்?' 


முதலில் நீ யார் சொல்?

முட்டாள்  பாம்பே, நான்  பீமசேனன்.  பாண்டவ சக்ரவர்த்தி யுதிஷ்டிர மகாராஜாவின்  இளைய சகோதரன். '' உயிர் விடும் முன்பு என்னை தெரிந்து கொள்வது உனக்கு நல்லதே.''

''பாண்டவா ,  பீமசேனா,  உன்னை   அறிவேன்.  நான்  ஒரு மகரிஷி  சாபத்தால்  இங்கு விழுந்தவன்.  ராக்ஷஸன் அல்ல.  உன் முன்னோர்களில் சக்ரவர்த்தி   நஹுஷனைப் பற்றி தெரியுமா?   கேள்விப்பட்டதுண்டா?  ஓஹோ தெரியாது போல் இருக்கிறது.   தெரியாவிட்டால்  பரவாயில்லை.  இப்போது   பார். நான்   தான் அது. அகஸ்தியரை புண் படுத்தி பேசியதால்  அடைந்த  சாபத்தின்  நிலை இது.  இந்திரன் சிம்மாசனத்தில்  இருந்த  நான்  மலைப்பாம்பாக  மாறி பூமியில் விழுந்த சமயம் அவரைக் கெஞ்சினேன். அகஸ்தியர் சமாதான மடைந்து    ''சில காலம் கழித்து நீ  பாண்டவன்  யுதிஷ்டிரனால் சாப விமோசனம் பெறுவாய்''    என்றார்.  காத்திருக்கிறேன்.''  என்றான்  நஹுஷன்.

''ஆச்சர்யமாக இருக்கிறதே  நஹுஷ மஹாராஜா.. என் கொள்ளு கொள்ளு  கொள்ளு  தாத்தா.''.. என்றான் பீமன்.

 அகஸ்தியர் சொன்னது  நன்றாக நினைவிருக்கிறது . ''என்றைக்கு  நீ  உன்னை  விட வலிமை வாய்ந்தவனைப்   பிடித்து  வலிமையற்றவன்  ஆக்குகிராயோ  அப்போது  உன்   சாபம் விலகலாம்''   என்றார். ஆமாம் என்கிறார்கள்  அவருடன்  இருந்த   வேத  ரிஷி  பிராமணர்கள்.

''நஹுஷ  மகாராஜா,  நான்   உங்களிடம் வலிமை இழந்ததை நினைத்தோ,   உங்களுக்கு  இன்று இரையாவதிலோ கொஞ்சமும் கலங்க  வில்லை. யுதிஷ்டிரனுக்கு பக்க பலமாக இருந்து திரௌபதியின்  சபதத்தை நிறைவேற்ற  முடியாமல் இறக்க வேண்டுமே''  என்ற  துயரம் ஒன்று தான்  எனக்கு'' என்றான் பீமன்.

இதற்கிடையில்  வ்ரிஷபர்வர்  ஆஸ்ரமத்தில் யுதிஷ்டிரன்  சில உற்பாதங்களை, அப  சகுனங்களைக்  கண்டான். வெகுநேரம் ஆகியும்    பீமன் மட்டும்  திரும்பவில்லையே என்ற கவலை வேறு.   தானாடாவிட்டாலும் தன்  தசை ஆடும் அல்லவா?

''அர்ஜுனா  நீ  திரௌபதியை ஜாக்கிரதையாக  இங்கே  பாதுகாப்பாயாக.  நகுல  சகதேவர்கள்  பிராமணர்களுக்கு துணையாக   இருக்கட்டும்.  நான்  தௌமியருடன் பீமனைத்  தேடி செல்கிறேன்''

 பீமனின்  காலடி  தடங்கள் தடயங்களைத்  தெரிந்து அதைத் தொடர்ந்து சென்ற யுதிஷ்டிரன்,  பீமன் ஒரு  பெரிய  பாம்பின்  பிடியில் சிக்கி  ஒரு குகையில்  தவிப்பதைக்கண்டு திகைத்தான்.

''ஹே, சர்ப்பராஜன்,   என்  சகோதரனை  விடுவி.  உனக்கு  வேண்டிய ஆகாரத்தை நான்  அளிக்கிறேன் ''  என்றான்  தர்மன்.

''என்  இடத்தில் வருபவற்றை  மற்றுமே நான் உண்பவன். உன் சகோதரன் பீமன்  தானாகவே என்னிடம் வந்தான் . எனது இன்றைய உணவாகப்போகிறவன். நீ   செல். இன்றைக்கு  எனக்கு  இவன்  ஒருவனே போதும்.   இல்லையேல் நீயும்  எனக்கு  இன்றைய உணவாகிவிடுவாய்.''   என்றான்  நஹுஷன்.

 'ஹே  சர்ப்பமே,  நீ  யார்,  உனக்கு என்ன உதவி தேவை சொல். எதில் நீ   திருப்தி அடைவாய்  .அதைச் சொல்.  நான்  யுதிஷ்டிரன், அதை நிறைவேற்றுவேன்.

யுதிஷ்டிரன்  என்ற பெயரே  நஹுஷனைத்   திடுக்கிடச் செய்தது.  ஆச்சரியம்  சந்தோஷ அதிர்த்தி இரண்டுமே அவனை திகைக்க வைத்தது.

''அடடா   தெய்வமே வந்தது போல் வந்தாயே  யுதிஷ்டிரா ..... என்றான் நஹுஷன்.....
தொடரும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...